பி.ஆர். ராஜன்
சிறப்புப்பக்கங்கள்

அப்போதும் அவள் கருவுற்றிருந்தாள்

சரவணன் சந்திரன்

சென்னை புறநகர் பகுதியில் பிரமாண்டமாய் வீற்றிருக்கும் அருவி  கருத்தரிப்பு மையத்தின்' தரைத்தளத்திற்கு கீழிருந்த  பெரிய அறையில் பினோதினியும் மற்ற பன்னிரண்டு பெண்களும் தங்களது மகப்பேறு நாட்களை கழித்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் ஒவ்வொருவரும்  வெவ்வேறு  பருவங்களில் பிரசவத்தை எதிர்நோக்கியிருந்தனர். அவர்களில் சிலருக்கு முன்பே ஓரிரு முறை  கருத்தரித்து குழந்தைகளை ஈன்று பெற்றோரிடத்தில் ஒப்படைத்த  அனுபவமிருந்தது.  அனுபவப்பட்டவர்களுக்கு புதிதாக வாடகைத்தாய் அவதாரமெடுத்திருக்கும் பெண்களை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

பினோதினிக்கு இதுவே முதன்முறை. திருமணமாகி இருபது வருடங்களாகியும் குழந்தைப்பேறு வாய்க்காத ஒரு வங்காள தம்பதி தங்கள் குழந்தையை ஒரு வங்காள பெண்மணி கருத்தரித்து பெற்றுத்தர வேண்டுமென்று விரும்பியதால் ஏஜென்சியின் மூலமாக  கொல்கத்தாவில் வசித்து வந்த பினோதினி அழைத்து வரப்பட்டாள்.  இந்த பரந்த தேசத்தின் எந்த புதிய நிலங்களையும் பார்த்து பழகியிராத பினோதினுக்கு சென்னைக்குச் செல்வதில் தயக்கமும் அச்சமுமிருந்தது.  ஆனால் தனது மகள் முன்னியின் பொருட்டு அவள் இந்த புதிய வேலயை ஏற்றுக்கொள்ளும் நெருக்கடியிலிருந்தாள். பிறந்தது முதலே முன்னிக்கு வலிப்பு நோயுண்டு. சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை சடாரென உடல் முறுக்கி கீழே விழுந்து வலியில் துடிப்பதைப் பார்க்க எந்த  தாய்க்குத்தான் மனமொப்பும். அரசு மருத்துவமனைகள் இதை தங்களால் முழுமையாகக் குணப்படுத்த முடியாதென கைவிட்டபின், தனியார் மருத்துவமனைகளை நாடிச்சென்றாள். அவர்கள் கேட்ட பெருந்தொகைக்கு எங்கு செல்வதென்கிற குழப்பத்திலிருந்தபோதுதான் இவளுக்கு பழக்கமான ஒரு பெண்ணின் மூலமாய் ஏஜென்ஸிக்காரன் வந்து சந்தித்தான். முன்னியின் மருத்துவத்திற்கு தேவையான மொத்தத் தொகையும் கிடைத்து விடுமெனவும், சென்னையின் உயர்தர மருத்துவமனையில் அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் ஏஜெண்ட் கூறினார். 

பினோதினி சென்னைக்கு கிளம்புவதற்கு முன் ராஜுவை ஒரு முறை சந்தித்து விட எண்ணினாள்.  அவன் வேலை பார்த்த இடத்திற்கு முன்னியோடு சென்றாள். ராஜு  நெகிழ்ந்து போனான்.

‘சரி இந்த வாரம் லாரி லோடு ஏத்திட்டு வீட்டுக்கு வர்றேன்‘ என்று கூறி சில ரூபாய் நோட்டுகளை முன்னியின் பிஞ்சு விரல்களிடையே வைத்தான். தான் வந்த காரியத்தைச் சொல்லத் தடுமாறிய பினோதினி  ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  சென்னை செல்லவிருக்கும் தகவலைச் சொன்னாள்.  முன்னியின் மருத்துவ செலவுக்காக சென்னையிலிருக்கும் ஒரு பணக்கார தம்பதிக்கு வாடகைத்தாயாக செல்லப் போவதாக அவள் சொன்னபோது தாமதிக்காமல் ராஜு ஆர்வமாய்க் கேட்டான்.

‘நெறைய பணம் கெடைக்குமா?‘

‘ஆமா அப்படித்தான் சொல்றாங்க, முன்னிக்கு ஏற்கெனவே இந்த மாசத்துல ரெண்டு முறை வலிப்பு வந்துட்டுது‘

‘சரி சரி... நெறைய பணம் கெடைக்கும்னா வருசத்துக்கு ஒரு புள்ள பெத்துத் தரலாமே, நல்லா தெடமான ஒடம்புக்காரிதான் நீ' என்று ராஜு சிரித்தான் . அந்த சிரிப்பிலிருந்த கள்ளத்தனத்தைப் புரிந்துகொண்ட பினோதினி கசப்போடு ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

***

பினோதினியின் சின்னஞ்சிறு ஓவியங்கள் அவ்வறையின் சுவர்களை ஆசுவாசப்படுத்தின. அவளுடன்  தங்கியிருந்த பதின்மூன்று பெண்களுக்கும் அந்த ஓவியங்கள் இளைப்பாறலை வழங்கின. அந்த ஓவியங்களின் அடர்த்தியும் இயல்பும் அவர்களை நெகிழச் செய்தன. குழந்தைகளின் முகங்களாய் நிரம்பியிருந்த ஓவியங்களில் மலைகளும், சூரியனும்,  ஆகாயமும்,  அருவியும் பிறந்து கொண்டேயிருந்தன.

‘ஏன் எல்லா மனிதர்களுக்கும் குழந்தை முகம் வரைந்திருக்கிறாய்?'

ஒருமுறை வாடகைத்தாய்களில் மூத்தவளான கீதா கேட்டாள். பினோதினி பதில் சொல்லவில்லை. மருத்துவமனை ஏஜென்ட்டுகளுடன் சேர்ந்து தனது சுற்றுப்புறத்திலுள்ள பெண்களை வாடகைத்தாயாக ஏற்பாடு செய்யும் வேலை செய்து வருபவள் கீதா.  அதற்கு அவளுக்கு கமிஷன் கிடைத்தது. இப்போது கீதாவும் கருவுற்றிருந்தாள். அயல்நாட்டு தம்பதியினரின் குழந்தையை சுமக்கும் பெருமிதம் அவள் முகத்தில் தெரிந்தது.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஒருமுறை அவர்களை பார்வையிட வந்தபொழுது பினோதினியின் ஓவியங்களைக் கண்டு வெகுவாகபாராட்டினார். மாதத்திற்கு இரண்டு தடவைகருவிற்கு சொந்தக்காரர்கள் அவர்களை சந்தித்து தமது கருவின் ஆரோக்கியத்தை உறுதி செய்து சென்றனர். மருத்துவர்கள்  உடனிருந்து அவர்களது சந்தேகங்களுக்கு விடையளித்தனர். ஒவ்வொரு வாடகைத்தாயின் உடல்நலனையும் மனநலனையும் பேணும் வண்ணம் மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். நேரந்தவறாமல் பழச்சாறு, அவித்த முட்டை, கீரை, பால் என்று சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. யோகப்பயிற்சி, தையல் வகுப்புகள், கதை வாசிப்பு நேரம் என்று அவர்களின் நேரத்தை செவ்வனே செலவழிக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டிருந்தன.

பணம் படைத்தவர்களின் வேடிக்கையான செயல்களை நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த  பினோதினிக்கு, முன்னியை பிரசவித்த நாட்களின் நினைவுகள் வந்தன. இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனையின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துத் தொங்கியபடி குழந்தையை வெளியேற்ற முயன்ற தருணங்களை நினைத்துப் பார்த்தாள். வலியும் சோர்வும் கூடியதுதான் மிச்சம் குழந்தை வெளிவரவில்லை.  ‘இது வெளிய வர்றதுக்குள்ள நீ செத்துருவ போல'என்று  கூறிவிட்டு வெளியேறினான் பினோதியின் கணவன் ராஜு.  ஆனால் வெகுநேர போராட்டத்திற்குப் பின் கழிவறையில் சிறுநீர் கழிக்கும் பொழுது வழுக்கிக் கொண்டு வெளியேறிய முன்னியை இரு கைகளில் ஏந்தியபடி அரை மயக்கத்தில் நடந்து சென்று தூங்கிக் கொண்டிருந்த செவிலியை எழுப்பி அவள் கைகளில் முன்னியைக் கொடுத்து விட்டு அருகிலிருந்த மரத்திண்ணையில் மயங்கிப் போனாள்.  பிறந்து அரை மணியாகியும் அழுதிராத முன்னியை பலவித அதிர்ச்சி முறைகள் செய்து அழ வைத்தனர் மருத்துவர்கள். முன்னி பிழைத்துக் கொண்டாள் என்ற பினோதியின் ஆறுதல்  வெகுநேரம் நிலைக்கவில்லை. முன்னியின் பிஞ்சு உடல் மின்சாரம் பாய்ந்தது போல் பதறியது. வலிப்பு நோயின் அறிகுறியாக இருக்கக் கூடுமென்று எண்ணி இரண்டு வாரங்கள் மருத்துவமனையிலேயே வைத்திருந்து அனுப்பினர். உயர் சிகிச்சைக்கு பணம் சேர்த்துக் கொண்டு வருமாறு மருத்துவர் பினோதினியிடம் கூறிய பொழுது பாதங்களின் கீழே பூமி நழுவுவது போல் தலைசுற்றியது. பச்சிளங்குழந்தைக்கு பாலும் சோறும் புகட்டவே திராணியில்லாத அவளுக்கு முன்னியின் நோய் பெரிய விஷயமாக தோன்றவில்லை. ‘முன்னி முதலில் உணவருந்தி பிழைத்திருக்கட்டும் மற்றதை காளி தேவி பார்த்துக் கொள்வாள்' என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

மருத்துவமனையை விட்டு வெளியேறிய கணவன் ராஜு திரும்பி வரவேயில்லை. ராஜுவுக்கும், அவளுக்கும்  வயது இருபத்தைந்திற்கும் அதிகமிருக்காது. தினக்கூலி வேலைக்குச் சென்ற இடத்தில் இருவருக்கும் பழக்கமேற்பட்டு கருவுற்றாள்.  பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ராஜுவிற்கு வாழ்க்கை குறித்த பல திட்டங்கள் இருந்தன. உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் உதவியாளனாகசேர்ந்து படிப்படியாக முன்னேறி ஒரு பதவிக்கு வந்துவிட விரும்பியிருந்தான். பினோதினியோ முன்னியோ அவனது கனவு எல்லைக்குள் வர எப்போதும் அனுமதித்ததில்லை.  

‘இந்தா இந்த ஜுஸ் குடி, புள்ளையோட அம்மா அப்பா பாத்துட்டிருக்காங்க'என்று தாதி கொஞ்சம் சத்தமாக சொன்ன பொழுதுதான் பினோதினி நிகழ்காலத்திற்குத் திரும்பினாள். அவர்களை சரியாக உணவு இடைவேளையின் பொழுது அழைத்து வரவேண்டுமென்று ஏஜென்டுகளுக்கு மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அவளும் முன்னியும் வாழ்ந்த உலகம் எப்போதும்  அவளுக்கு போதுமானதாக இருந்தது. கட்டிட வேலையில் வந்த சொற்ப வருமானமும், சேலைகளில் ஓவியம் தீட்டி பெற்ற பணமும் அவளுக்கும் முன்னிக்கும் வாழத் தேவையான நம்பிக்கையை தந்தன. அவளது ஓவியங்களைப் பார்த்து வியந்த  அயல்நாட்டு பெண்ணொருத்தி,

‘இவை சந்தால் இன பாரம்பரிய ஒவிய வகையைச் சார்ந்தது, இது எப்படி உனக்குத் தெரியும்' என பினோதினியிடம் கேட்டாள். அவ்வோவிய முறையை தனது பாட்டனாரின் கிராமத்தில் வாழ்ந்தபோது கற்றதாகக் கூறினாள். அப்பெண்மணி நாடு திரும்பியதும் பினோதினிக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்துச் சென்றாள். மனிதன் சந்திக்கும் பெருந்துயர்களில் கொடியது ஏதாவது ஒன்றிற்காக காத்திருப்பதுதான். ஏன், எதற்காக,  யாருக்காக காத்திருக்கிறோம் என்று புரியாமல் காத்திரு என்று கட்டளையிட்டுக் கடக்கும் காலத்திடம் என்னவென்று முறையிடுவது. பினோதினி காத்திருந்தாள்.

***

கொரோனா பெருந்தொற்று அயல்நாடுகளைக் கடந்து இந்தியாவில் பரவத் துவங்கிய நாட்களில்  முன்னியுடன் சென்னை வந்து சேர்ந்தாள் பினோதினி.  சென்னையில் வசித்த உறவினரின் பாதுகாப்பில் முன்னியை ஒப்படைத்து விட்டு ஏஜென்ட்டுடன் 'அருவி கருத்தரிப்பு மையம்' வந்தாள்.  உறவினரும் தவறாமல் பணம் கிடைத்து விட வேண்டுமென்கிற நிபந்தனையின் பேரில் முன்னியை வைத்துக் கொள்ள சம்மதித்தனர்.  வாடகைத்தாயாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பான உடற்பரிசோதனைகளெல்லாம் முடிந்து, கருவிற்கு சொந்தக்காரர்களின் மனம் சம்மதித்த பின் மருத்துவமனையின் ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்டாள். நிபந்தனைகளை படித்துக் கொள்ளுங்கள் என்றார் ஏஜென்ட். பினோதினிக்கு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்க மனமில்லை. ‘முதல் தவணை பணம் எப்பொழுது கொடுப்பீர்கள்‘ என்றாள். ‘நாற்பத்தைந்து நாட்கள் முடிந்து கரு நிலைபெற்றுவிட்டதை உறுதி செய்தவுடன் முதல் தவணையை உங்களுக்கு கொடுத்து விடுவோம்‘ என்றார்.

‘இதெல்லாம் முடிந்து நீயும் நானும் சீக்கிரமே வீடு திரும்புவோம் முன்னி‘ என்று நம்பிக்கையோடு கைகளில் வைத்திருந்த காளியின் புகைப்படத்தை முத்தமிட்டாள். நாட்கள் வாரங்களாகின. முன்னியின் நினைவுகளும் கருத்தரிப்பினால் ஏற்பட்ட உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் பினோதினியை நலிவுறச்செய்தன.

பினோதினி  தனது வயிற்றைத் தடவி சிலிர்த்துக் கொள்வதைப் பார்க்கையில்,  ‘இதெல்லாம் செய்யாத, மனசால நெனைக்க ஆரம்பிச்சுட்டா குழந்தைய அதோட அப்பா அம்மா வந்து தூக்கிட்டு போறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்'  என கீதா எச்சரித்தாள்.  பினோதினியின் நெஞ்சு கனத்தது.  இரண்டாம் தவணை பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்திட்டதாக அவளுக்கு நினைவில்லை. ஆனால் பணம் பெற்றுக்கொண்ட பட்டியலில் தன் பெயரிருப்பதைப் பார்த்தபொழுது திடுக்கிட்டாள். கீதாவை அழைத்து விபரத்தைக் கூறினாள். சென்னையின் நம்பிக்கையான தலைசிறந்த கருத்தரிப்பு  மையத்தில் இப்படியான முறைகேடுகள் நிகழ வாய்ப்பே இல்லை என்று   கீதா சமாதானம் கூறினாள்.

‘அப்படியென்றால் நான் வாங்கிய பணம் என்னிடம்தானே இருக்க வேண்டும். என்னிடம் பணமேதுமில்லையே' என்று அழுதாள்.  இரண்டு நாட்களுக்குப் பின் ‘இங்க பாரு, இங்க இருக்குறவங்கலாம் சிரிக்க சிரிக்க பேசுனாலும் அவங்கள நம்ம சொந்தகாரங்களா நெனச்சிரக் கூடாது. எல்லாரும் காசு வாங்கிட்டு வேலை செய்றோம். அத மறந்துராத. உன் உசுருக்கும் பொருளுக்கும் நீதான் பொறுப்பு. எந்நேரமும்  படம் வரஞ்சிட்டிருக்க. உன் பொருள் மேல உடைமைகள் மேல கொஞ்சம் கூட கவனமில்லாம இருந்துட்டு இப்ப பணத்த வாங்கவே இல்லன்னு சொல்ற...' என்று கீதா கடிந்து கொண்டாள். 

முன்னியோ கண்ணெட்டும்  தூரத்திற்கப்பால் இருக்கிறாள். ராஜு என்றொருவன் நினைவுகளிலிருந்து மறைந்தே போனான். இவ்வளவு தனிமையை இதற்குமுன் அனுபவித்திராத வலியில் பினோதினி வெறுமை சூழ சுவரின் ஒரு மூலையில் பருந்துகள் வானில் வட்டமிடும் ஓவியமொன்றை வரைந்தாள். பிற்பகல் நேரத்து சிற்றுண்டியாக அவித்த முளைக்கட்டின பயறு அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. கிண்ணம் முழுவதும் புழுக்கள் நெளிவது போல் தோன்றியது.

அவளது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், கருவின் வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் குறையில்லை என்பதை உறுதி செய்து கொண்டுசென்றுவிட்டனர். பினோதினியை தட்டிக் கொடுத்து ‘வெரிகுட் நல்லா சாப்பிடுங்க' என்றார் உதவி மருத்துவர்.

‘சார் போன தவணை பணம்.....‘ என்று முனகினாள் பினோதினி.

‘அதெல்லாம் உங்களை தவறாமல் வந்தடைந்து விடும். உங்கள் ஏஜென்ட்டை அனுப்புகிறோம். சந்தேகமேதுமிருந்தால் அவரை நீங்கள் கேட்கலாம்' என்று பதில் அளிக்கப்பட்டது.

நவம்பர், 2022