சிறப்புப்பக்கங்கள்

அபிராமிக்காக காத்திருந்தான்

குணா

எம்கே மணி

ஒருவேளை சாரமே இல்லாத படத்தில் நடித்திருந்தாலும் கமல் காதல் காட்சிகளில் கவனம் எடுத்திருப்பார். அவர் தழுவும் பெண்கள் பொம்மைகளாக இருக்க மாட்டார்கள்.குணா மெண்டல் தான். அவனது மூளை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. அவன் கணித்ததைப் புரிந்து கொள்ள நமக்குத் தான் நுண்ணுணர்வு தேவை. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்கிறான் அவன். அதையும் தாண்டி புனிதமான ஒன்றை இந்த

சாதாரண மனிதர்கள் அழித்து முடிக்கிறார்கள்.

ஆனாலும் பாருங்கள், அவன் அபிராமிக்குக் காத்திருந்தான். யார் என்ன சொல்லி மறுத்தாலும் தான் உழல்கிற அசிங்கங்களில் இருந்து வெளியேறி பென்டதால் தவழும் மலை சிகரத்திற்கு கொண்டு செல்ல அவள் வருவாள் என்று தனது டாக்டரிடம் சொல்லும் போது அந்த காத்திருப்பின் உக்கிரத்தை சொல்லி விடுகிறார்கள். அபிராமியை அவன் அறிகிறான். அவளை தெய்வம் காட்டித் தருகிறது. என்ன ஒன்று, அவளைக் கடத்திக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.

அபிராமி தப்பிக்க ஆன மட்டும் முயல்கிறாள். தாக்குதலே நடத்துகிறாள். இந்தப் பைத்தியக்காரனின் காதல் எத்தனை அப்பழுக்கற்றது என்று மனம் கனிகிறாள். குணாவின் ஆசைப்படி பவுர்ணமிக்கு தாலி கட்ட ஒப்புக் கொள்கிறவள் காய்ச்சலுடன் தூங்கும் காட்சி ஒன்றிருக்கிறது.

சட்டென தூக்கத்திலிருந்து விழித்து, இது தான் பவுர்ணமி, இப்போதே அந்தத் தாலியைக் கட்டு என்று நீள்கிற அந்தக் காட்சி தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஓன்று. அதற்கு அப்புறம் முட்டாள்களின் துப்பாக்கிகள் வெகு பிராக்டிக்கலாக வெடித்துக் கொண்டிருக்கும்போது நான் மிசஸ் குணா என்று அபிராமி கூச்சலிடுவதை உலகம் வெகு கூலாக கவனிக்காமல் தனது முந்திரிகொட்டைத்தனங்களைத் தொடர்கிறது.

அபிராமியின் சடலத்தை வாரியெடுத்துக் கொண்டு, புண்ணியம் செய்தனமே மனமே புதுபூங்குவளைக் கண்ணியும் என்கிற அந்தாதியுடன் குணா

சிகரத்திலிருந்து பள்ளத்தாக்குக்குப் பாயும்போது அப்பாடா என்று முதலில் நிம்மதியும் நிதானமாக ஒரு துயரும் எழுகிறதல்லவா? காதல் !  

நவம்பர், 2018.