சிறப்புப்பக்கங்கள்

அன்பால் பிணைக்கப்பட்ட வாழ்வு!

ஓவியர் மணியம்செல்வன்

திருமணமாகி நாற்பத்திஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் ஓவியர் மணியம் செல்வன். தன் கோடுகளால் தமிழ் வாசிப்புப் பரப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ம.செ.விடம் இந்த சிறப்பிதழுக்காகப் பேசியபோது, ‘என் துனைவியாரிடம் முதலில் பேசுங்கள், அவரது பங்களிப்புதான் எங்கள் திருமண வாழ்வில் மிக முக்கியமானது' என்றார்.

நம்மிடம் பேசிய திருமதி ம.செ. பேச்சில் அவ்வளவு கனிவு.

‘‘இவர் என்னுடைய அத்தை பேரன் தான். இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என்பது முன்பே தெரியும். எனவே கல்யாணமாகி புதுஇடம் என்ற அச்சம் இன்றித்தான் நான் இடம் பெயர்ந்தேன். எல்லா வீட்டிலும் இருப்பதுபோல் எல்லாவிதமான கோபம்,தாபம், சந்தோஷங்கள் எங்கள் வீட்டிலும் இருந்தது. எங்களிடையே ஒரு கஷ்டமோ சண்டையோ வந்தாலும் ஒரு சில மணிநேரங்களில் அதை மறந்து, பேசிவிடுவோம். 45 ஆண்டுகள் கடந்த இந்நிலையில்  எங்க வாழ்க்கையுடன் இப்ப இருக்கிற இளம் தம்பதிகளின் வாழ்வை ஒப்பிட்டுப்பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. நான் வளர்ந்தது மூணு அண்ணா, ஒரு தம்பி, அப்பா அம்மா என பெரிய கூட்டுக்குடும்பம். அதில் இருந்த பழக்க வழக்கம், வளர்ந்தவிதம்.. இதுதான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. இந்த காலத்தில் எல்லாரும் வேலைக்குப் போகிறார்கள். ஒரேயொரு குழந்தைதான் பெத்துக்கிறாங்க. அதுங்களை வளர்த்துப் படிக்க வெச்சாலே போதும்னு நினைக்கிறாங்க.. அவ்வளவு செலவு ஆகிறது. பழைய கூட்டுக்குடும்ப சூழல் இல்லாமல் போய்விட்டது. தாத்தா பாட்டி சொல்லும் நல்லது கெட்டது என்கிற வழிகாட்டும் அனுபவம் கிடைப்பதில்லை. ரெண்டு மூணு பேர் ஒரு வீட்டில் இருந்தால்தான் பல்வேறு உணர்வுகள் அதன் அனுபவங்கள் கிடைக்கும். வருசப்பிறப்பு அன்னிக்கு அறுசுவையில் ஒரு பதார்த்தம் செய்வோம். வாழ்க்கைன்னா கசப்பு, இனிப்பு,துவர்ப்பு.. இதெல்லாம் கலந்ததுதான்னு புரிய வைக்கிறதுக்காக. இதை சொல்லிக்கொடுப்பாங்க... இதெல்லாம் கேட்டு வளர்ந்ததுதான் இத்தனை ஆண்டுகால மணவாழ்வின் வெற்றிக்குக் காரணம். வீட்டை நிர்வாகம் ஒழுங்கா பண்ணா எவ்வளவு பெரிய கம்பெனியும் நிர்வாகம் பண்ணலாம்னு சொல்றது உண்மைதான்,' என பொறுமையாக அவர் சொல்லி முடித்ததும் ம.செ. பேசுகிறார். இனிய சங்கீதம் போன்ற மென்மையான குரலில் அவர் பேசியதின் சாராம்சம்:

‘வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதே ஒரு சுகமான அனுபவமாக எங்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு நினைவுகளும் விதைகளாக விழுந்து, விருட்சங்களாக வளர்ந்து நிற்பதைக் காணும்போது பிரமிப்புதான். எனக்கு 16 வயசு ஆனபோது என் தந்தையார் இறந்துட்டாங்க. என் தாயார் அந்த துக்கத்தைக் காட்டிக்காமல் என்னை கல்லூரி படிக்க வெச்சாங்க. திருமணம் ஆகும்போதே நான் ப்ரீலேன்சரா வேலையை தொடங்கிட்டேன். வேலையில் தீவிரமாக நான் மூழ்கிவிடுவேன். அப்போ எங்க அம்மா, என் துணைவியாரை, என் வேலைக்குத் துணையா இருக்கும்படி அனுப்பிடுவாங்க. ஏன்னா, என் தந்தை ஓவியர் மணியம் 1960களில் ஹம்பி, பாதாமி போன்ற இடங்களுக்குப் படம் வரையப் போகும்போது, எங்க அம்மாதான் உடன்பயணம் செய்து, அப்பாவுக்குத் தேவையான உணவை அங்கே கிடைக்கிற பொருட்களை வைத்து தயார் செய்து கொடுத்து ஆதரவாக இருந்திருக்கிறார். அதனால் அவங்களுக்கு இதெல்லாம் புரியும்.

என் மனைவியின் எண்ணங்கள் எல்லாம் என் வேலை சார்ந்ததாக என் வெற்றிகள் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றன. நீங்க நல்லா படம் போடணும்; விருதுகள் வாங்கணும்னே சொல்லிகிட்டு இருப்பாங்க. நான் படம் வரையும்போது வரும் தொலைபேசிகளுக்குப் பதில் சொல்வது; படம் வாங்க வருகிறவர்களுக்கு பதில் சொல்லி படங்களை கொடுத்து அனுப்புவது என அவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். வரையும்போதே ஓவியங்களை அவர் பார்ப்பார்; தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவார். இல்லைன்னா அமைதியாக நகர்ந்துவிடுவார். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்றேன். விகடன் மடிசார் மாமி தொடருக்காக வரையும்போது ஒரு காட்சி. பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை பஞ்சகச்சம் அணிந்திருப்பதாக வரைந்துவிட்டேன். ஓவியத்தைப் பார்த்தவங்க, திருமணத்துக்கு முன்பு நாலுமுழ வேட்டிதான் அணிவாங்க, பஞ்சகச்சம் அணிவது வழக்கமில்லையே என சுட்டிக்காட்ட, உடனே அதைத் திருத்திக்கொண்டேன். படத்தைப் பார்த்த விகடன் எம்.டி பாலசுப்ரமணியன் அவர்கள் சிரித்துக்கொண்டே, இது முக்கியமா நான் எதிர்பார்த்த காட்சி, ஏதோ வரைந்து பிறகு மாற்றி அமைச்சிருக்கீங்க போலருக்கே என்றுகூட கேட்டார். இதைப்போல் பல விதங்களில் அவரது ஆதரவும் பங்களிப்பும் தொடர்ந்து இருந்துகிட்டே இருக்கு. சென்னையிலேயே நடந்தால் கூட அவங்க குடும்ப விழாக்களுக்குக் கூட என்னால் போக முடியாம அவங்களை தனியா அனுப்பியிருக்கேன். அவங்க காலையில் போயிட்டு மாலை திரும்பிடுவாங்க. பசங்க பள்ளிக்கூடம், கல்லூரி விழாக்கள் கூட அவங்களேதான் போவாங்க. நான் போனா, அதிசயமாகப் பார்க்கும் நிலைதான். இதெல்லாம் ஒரு அன்பான உள்ளம் இருந்தால்தான்பண்ண முடியும். அர்த்தநாரீசுவரர் மாதிரி ஒன்றாக மனங்கள் இணைந்தால்தான் இந்த வாழ்க்கை சாத்தியம். ஒரு தடவை எனக்கு அம்மை போட்டு கொஞ்சம் சீரியசா இருந்தது. அப்போ தினமும் சுமார் இருபது நாட்கள் முண்டகண்ணியம்மன் கோவிலுக்குப் போயிட்டு வந்து தீர்த்தம் எடுத்துவந்து தெளிப்பாங்க. அதுமட்டுமல்ல எனக்குத் தெரியவே தெரியாது அவங்க போய் அங்கப்பிரதட்சணம் பண்ணிட்டு வர்றாங்கன்னு.. இதெல்லாம் ஒரு வார்த்தை கூட என்கிட்ட

சொல்லாமல் பண்ணது. அந்த அன்புதான் என்னை வழி நடத்தியது. தன்னையே இந்த குடும்பத்துக்காக அர்ப்பணிப்பதை அவங்க மேற்கொண்டிருக்காங்க. வாழ்க்கை என்கிற பெருங்கடலில் எந்த இலக்கு நோக்கிப் பயணப்பட்டோமோ அந்த இலக்கை வந்து சேர்வது பெரிய விஷயம். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இன்னிக்கு அவங்க என் பக்கத்தில் இல்லைனா எனக்குப் பவர் போனமாதிரிதான். அவங்க சமைத்துப் போடும்போது நீதான் எனக்கு அன்னபூரணி என்பேன். கடவுள் அனுக்கிரகத்தாலும் பெரிவங்க ஆசிர் வாதத்தாலும் அன்பால் பிணைக்கப்பட்ட மணவாழ்வு எங்களுக்குக் கிடைத்தது. இளம் தம்பதிகள் தங்கள் வாழ்வில் நடைமுறைப் படுத்த நான் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் ஏதேனும் உதவினால் பெரிய மகிழ்ச்சி...' என முடிக்கிறார் ம.செ.

ஆகஸ்ட், 2022