சிறப்புப்பக்கங்கள்

அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி!

பொள்ளாச்சி மா. உமாபதி

தமிழகத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க திமுக பங்காற்றவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசுகள் உருவாக்கியதுதான் என்று சிலர் ஒரு புனைவை முன்வைப்பதைக் காணமுடிகிறது.

1967&ல் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் திமுக அஇஅதிமுக கட்சிகளின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் திமுக ஆட்சி 21 ஆண்டு காலமும் அதிமுக ஆட்சி 30 ஆண்டு காலமும் நடைபெற்றுள்ளது.

திமுகழகம் ஆண்ட 21 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி;  மீதி 19 ஆண்டுகளும் கலைஞரின் ஆட்சி. அப்போது தமிழகம் கண்ட வளர்ச்சியின் சுருக்கமான விளக்கம் தான் இக்கட்டுரை. இதுவே அந்த புனைவை தகர்த்தெறியப் போதுமானது.

பேரறிஞர் அண்ணா தன் ஆட்சியில் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதும், சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடி ஆக்கியதும், இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

அதன்பின் கலைஞருக்கு தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பு கிட்டாமல் துண்டு துண்டாக இடைவெளி விட்டுத்தான் ஆட்சிப் பொறுப்பு கிட்டியது. எனினும் அவர் தமிழகத்தின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக திட்டமிட்டு செதுக்கினார்.

கல்வி வளர்ச்சியில் காமராசரின் கனவான 3 கிமீக்கு ஒரு தொடக்கப்பள்ளி; 5 கிமீக்கு  ஒரு நடுநிலைப்பள்ளி 10 கிமீ க்குள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் என்ற இலக்கை கிட்டத்தட்ட எட்டி முடித்தவர் கலைஞர். பள்ளி இறுதிவரை இலவச கல்வி;  சத்துணவில் வாரம் 5 முட்டை;  இலவச பஸ் பாஸ் ஆகியவை தமிழக கல்வி வளர்ச்சியின் அடிக்கற்கள். பள்ளிக்கல்வியில் சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தார். ஆசிரியர்களுக்கு  அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கினார்.

குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பொறியியல் கல்விக் கட்டண உதவி; மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடங்களை வருவோர்க்கு மேற்படிப்பு உதவித்தொகை போன்றவை கல்வி வளர்ச்சிக்கு உதவின.

இந்தியாவில் முதல் வேளாண் பல்கலைக்கழகம், ஆசியாவிலேயே முதல் கால்நடை பல்கலைக்கழகம்,

சென்னையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சியில் பாரதிதாசனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ் இணைய பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைத்ததுடன் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைத்ததால் உயர்கல்வியில் தமிழகம் உயர்ந்து நின்றது. உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தார்.

படிப்பை முடித்து வருவோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிட சென்னையில் டைடல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கினார். அதன் வாயிலாக சென்னையை பெங்களூர், ஹைதராபாத், தில்லி, மும்பை போன்று தொழில்நுட்ப கேந்திரம் ஆக்கியது அவரது ஆட்சிக்காலத்தில்தான்.

திருப்பெரும்புதூர் தொடங்கி காஞ்சிபுரத்திற்கு செல்லும் வழியெல்லாம் ஹூண்டாய் கார் தொழிற் சாலை, செயின்கோபின் கண்ணாடித் தொழிற்சாலை, நோக்கியா, மோட்டோரோலா, ஃபாக்ஸ்கான் செல்போன் தொழிற்சாலைகள், டெல் கம்ப்யூட்டர், தொழிற்சாலை, சாம்சங் டிவி வாஷிங் மெஷின் தொழிற்சாலை, பிலக்ஸ்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, கொமாட்சு தொழிற்சாலை, தேசிய வாகன பரிசோதனை நிலையம், நிஷான் கார் தொழிற்சாலை, அப்போலோ டயர் தொழிற்சாலை என்று எண்ணற்ற தொழிற்சாலைகளைக் காணலாம். இவற்றைச் சுற்றிலும் சிறுகுறு நடுத்தர துணை பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெருகின. தொழில்துறைக்கு திமுக ஆட்சி அளித்த முக்கியப் பங்களிப்பு மேற்சொன்னதுதான்!

பெண் கல்வியை ஊக்குவிக்க, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் ரூ.5000, பத்தாம் வகுப்பு படித்திருந்தால் ரூ 10,000 வழங்கினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கினார்.

சுகாதாரத்துறையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தாலுகா அளவிலான மருத்துவமனைகள், மாவட்ட அளவிலான மருத்துவ மனைகள் என்று மருத்துவ கட்டமைப்புகளை பெருக்கி அதன் மூலம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ வசதி கொண்ட மாநிலம் என்று நிரூபித்தார். மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரி என்பது கலைஞரின் மகத்தான திட்டம். உள்ளடங்கிய கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பணியாற்ற அவர்களின் மேற்படிப்பிற்கு சலுகைகளை வழங்கியதால் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் சிற்றூர்களிலும் மருத்துவ வசதி கிட்டியது. ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிற்றூர்களுக்கும் சாலை வசதி. சிற்றூர் மற்றும் நகர்ப்புறங்களில் வீதிகளை கான்கிரீட் சாலைகளாக அமைத்தார். மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆக தரம் உயர்த்தி 3000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்க காரணமாக இருந்தார்.

சென்னையில் சிறப்பு மிக்க கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், பாடி மேம்பாலம், தாம்பரம் மதுரவாயில் பறக்கும் சாலை, போன்றவை திமுக ஆட்சியில்தான் உருவாகின.  இவையன்றி 20க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் சென்னையில் உருவாக்கினார்

சென்னையைச் சுற்றி 200 அடி வெளிவட்ட சாலை அமைந்தது. ஜப்பான் நாட்டு வங்கி உதவி பெற்று மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வரப்பட்டது.

இப்போதுதான் இந்திய பிரதமர் மோடி அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி என்று திட்டம் தீட்டுகிறார் ஆனால் கலைஞர் அதை அரை நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நடத்திக் காட்டிவிட்டார்.

தமிழக மின் திட்டங்களில் நெய்வேலி இரண்டாம் அலகு மின் திட்டம், தூத்துக்குடி அனல் மின் நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம், காடம்பாறை

நீர் மின் நிலையம் போன்றவற்றை அமைத்ததுடன் காற்றாலை மின் திட்டத்தை தொடங்கி வைத்ததும் கலைஞர் தான்.

தமிழ்நாடு தொழில் துறையின் வளர்ச்சி காண சிப்காட், எல்காட், சிட்கோ, டான்சி, டிக், டாமின், டாஸ்மாக், போன்ற பல நிறுவனங்கள் அமைத்ததுடன் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தை ஐந்து மண்டலங்களில் அமைத்தது திமுக ஆட்சிதான். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி சேரன் சோழன் போக்குவரத்து கழகங்களை உருவாக்கிய பெருமையும் கலைஞரை மட்டுமே சாரும். ஆனால் இன்னமும் உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகத்தில் பெருக்கிய பெருமையை திமுகவுக்குத் தர மறுப்பவர்களை என்னவென்று சொல்ல? 

ஜூலை, 2020.