தமிழ் திரையுலகில் பாடலெழுதி வென்ற முக்கியமான பெண் கவிஞராக நிலை நிறுத்திக்கொண்டிருக்கும் கவிஞர் தாமரை நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் முக்கியமான நிகழ்வு. ஆரம்பத்தில் டி.பி.ராஜலட்சுமி பாடல் எழுதியதாகச் சொல்வார்கள். ரொஷானாரா பேகம் குங்குமப் பொட்டின் மங்கலம் என்ற ஒரே பாடல் மூலம் நினைவுகூரப்படுகிறார். பெண்களின் காதல் உணர்வுகள் ஆண்களால் மட்டுமே சொல்லப்பட்ட நிலையில் பெண்களின் உணர்வுகளை பெண்ணே சொல்ல வந்திருக்கும் வரிகளாக அவரது பாடல்கள் அமைந்திருப்பது சிறப்பு. பொறியியல் பட்டதாரியான தாமரை இனியவளே படத்தில் முதல் பாடலை எழுதினார். 1998-இல் வெளியான புதுமைப் பித்தன் படத்தில் 1-2-98-ல் உன்னைச் சந்தித்தேன் என்ற பாடலை எழுதினார். தேவா இசையில் மிகவும் அழகான வரிகள் உடைய பாடல். இப்படியொரு முதல் வரியை பாடலாக யாரும் யோசிக்கவே முடியாது.
உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்தில் மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா.. பொன்மாலை எங்கள் தோட்டத்தைப் பார்க்கப் பூத்தாயா? என்றும் எழுதினார் தாமரை. இசை எஸ்.ஏ.ராஜ்குமார்.
பின்னர் 2001-ல் வெளியான கௌதம் மேனனின் மின்னலே படத்தில் பாடல் எழுத தாமரைக்கு வாய்ப்பு கிடைத்ததுதான் திருப்பு முனை.
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில் தூங்கினால் போதும் -இந்த வரிகள் ஒரு பெண்ணின் காதலை அப்பெண்ணின் மொழியிலேயே சொல்ல மிகவும் ரசிக்கப்பட்டன. இருவிழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனதே.. பாடலும் குறிப்பிடவேண்டிய பாடல்.
கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் அதன் பின்னர் அவருக்கு நிறைய பாடல்கள். அனைத்தும் அழகான பாடல்களாக அருமையான தமிழில் அமைந்துபோயின.
காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் அவரது வரிகள் பெரும் ஆதர்ச வரிகள் ஆயின. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை என வாரணம் ஆயிரம் படத்தில் அவர் எழுதிய வரிகள் தமிழ் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
முன் தினம் பார்த்தேனே.. பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே.. என்ற வரிகள் அசலான காதல் உணர்வை சிருஷ்டித்தன.
தற்போது ஒரு இடைவெளிக்குப் பின்னால் கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படத்துக்காக கைகோர்க்க அதில் தாமரை எழுதியிருக்கிறார்:
இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோல்
நானுமில்லையே- என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலில்
ஒரு வெள்ளிக் கொலுசு போல
இந்த மனசு
சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல
புது நாணம் மினுங்கும் மேல
-என்கிறார்.
எந்த ஆண் கவிஞராலும் ஒரு பெண்ணின் காதல் உணர்வை இப்படி எழுதிவிட முடியும் எனத் தோன்றவில்லை.
தாமரையினுடையது நேரடியான காதல்மொழி. காதல் உரையாடலாக விரிந்து செல்லும் பூடகமற்ற வரிகள். சந்தேகம் இருந்தால்
அனல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி(வாரணம் ஆயிரம்) பாடலைக் கேட்டுப்பாருங்கள்!.
பிப்ரவரி, 2015.