எம். ஜி. ஆர் உடன் கலைஞர் மு.கருணாநிதி 
சிறப்புப்பக்கங்கள்

அந்த பதின்மூன்று ஆண்டுகள்...

மு.கருணாநிதி

அசோகன்

அற்ற குளத்து அறுநீர்ப் பறவைபோல...  நம்மிடம் செல்வமும் அதிகாரமும் போய்விடும்போது உடன் இருந்தவர்கள் எல்லோரும் விலகிச் செல்வதைக் குறிக்கும் அழகான உவமை. கலைஞர் கருணாநிதி இதை எத்தனைவாட்டி  சொல்லிப்பார்த்திருப்பார் என்று பார்த்தால் கணக்கே இருக்காது எனத் தோன்றுகிறது.

1969 - ல் அண்ணா மறைவுக்குப் பின் முதலமைச்சர், மீண்டும் 1971 - ல் தனக்கெதிராக மிகக்கடுமையான எதிர்ப்பு இருந்தபோதும் மிகப்பிரமாதமான தேர்தல் வெற்றி என புகழின் உச்சியில் இருந்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தவர். 1976 - ல் அவரது ஆட்சி மத்திய காங்கிரஸ்
அரசால் கலைக்கப்பட்டதில் இருந்து அவருக்கு மிகப்பெரிய வீழ்ச்சி காத்திருந்தது. எம்.ஜி.ஆர். ஏற்கெனவே வெளியேறி அதிமுகவைத் தொடங்கி, மிகப் பெரும்பான்மையான வெகு மக்களைக் கவர்ந்திருந்தார்.  அவர் 1972 - ல் கருணாநிதி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை வைத்து இந்திரா அரசு சிபிஐ மூலமாக இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தது. சர்க்காரியா கமிஷன் வைத்து விசாரணை நடந்துகொண்டிருந்தது.  ஆட்சி கலைக்கப்பட்ட அன்றே போலீஸ்காரர்கள் வீட்டுக்குத் தேடி வந்தார்கள். கருணாநிதி சிறை செல்ல தயாரானார். 'நீங்கள் இல்லை. உங்கள் மகன் வேண்டும் 'என்றனர். மறுநாள் வீடு திரும்பிய ஸ்டாலினை சிறைக்கு அனுப்பிவைத்தார். மருமகன் மாறனும் மிசாவில் சிறை சென்றார். மாநிலம் முழுக்க பல தொண்டர்களும் தலைவர்களும்
சிறையில். ஒரு கட்சிக்கு எதிராக மிசா என்னும்
சட்டம் மிருகத்தனமாக அவிழ்த்துவிடப்பட்ட காட்சி அது. பலர் கட்சியை விட்டே கதறிக்கொண்டு ஓடிவிட இதுவும்  ஒரு காரணம். பிறகு எமர்ஜென்சி விலக்கப்பட்டு தேர்தல் வந்தபோது, கருணாநிதி ஜனதா கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கண்டார்.  நாடே இந்திராவின் எமர்ஜென்சியால் ஆத்திரப்பட்டு காங்கிரசைத் தூக்கி எறிந்து ஜனதா கட்சிக்கு பெருமளவில் ஆதரவு அளித்தபோது தமிழ்நாடு மட்டும் திமுக& ஜனதா கூட்டணியைத் தோற்கடித் தது. கை சின்னத்தில் நின்ற இந்திரா காங்கிரஸுக்கு 8 இடங்களும் தனித்துப் போட்டியிட்ட அதிமுகவுக்கு 19 இடங்களும் கிடைத்தன. திமுகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. இது தமிழக மக்கள் எம்ஜிஆர் பின்னால் அணிவகுத்துவிட்டதற்கான
சாட்சி என்றும் இனி திமுகவின் கதி அவ்வளவுதான் என்றும் சொல்ல ஆரம்பித்தனர். இத்தோல்விக்குப் பின்னால் கட்சியின் பொதுச்செயலாளர் நாவலர், மாதவன், ஆதித்தனார் உள்ளிட்ட தலைவர்களும் விலகினர். தனிக்கட்சி கண்ட நாவலர் பின்னர் அதிமுகவில் ஐக்கியமானார்.  மத்தியில் ஆட்சி அமைத்த மொரார்ஜி தேசாய்க்கும் திமுகவால் பிரயோசனம் இல்லை எனச் சொல்லப்பட்டது. உடனே சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது.

திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தனியாகப் போட்டியிட்டது. அதிமுகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் கூட்டணி கண்டன. திமுகவை சில அமைப்புகள் ஆதரித்தன. இந்திரா காங்கிரஸுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்திருந்தது. கருணாநிதிக்கு இரண்டாவது பலத்த சரிவாக திமுக அத்தேர்தலில் தோல்வியை அடைந்தது. 48 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. ஜனதா மட்டும் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் தோல்வியைத் தவிர்த்திருக்கமுடியும். பல இடங்களில் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் கூட்டுத் தொகை  இதையே காட்டியதாகச்
சொல்கிறார்கள்.

மு.கருணாநிதி

எம்ஜிஆர் தமிழக முதல்வர் ஆனார்.  வேறு யாராவது இந்த இடத்தில் இருந்திருந்தால் மிகவும் சோர்ந்துபோயிருப்பர். கருணாநிதி தோல்வியிலிருந்தே வெற்றிக்கான மணிகளைப் பொறுக்கினார். '' 48 உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியான திமுகவின் பின்னால் 43 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 129 இடங்களை வென்ற எம்ஜிஆர் பின்னால் 52 லட்சம் வாக்காளர்களே  உள்ளனர். திமுகவின் பலத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது'' என்றார். அப்போது சென்னையில் இருந்த 14 இடங்களில் 13 இடங்களை திமுக வென்றிருந்தது.

இதன் பிறகு முழுமையான எதிர்க்கட்சியாக திமுகவை கருணாநிதி செயல்படவைத்தார். கருணாநிதியும் திமுக உறுப்பினர்களும் கிட்டத்தட்ட  ஆளுங்கட்சியின் கண்ணில் விரல் விட்டு ஆட்டினர். கருணாநிதியின் நிர்வாகத்திறமையை ஏழாண்டுகாலம் அவர் முதல்வராக இருந்தபோது பார்த்தவர்கள் அவர் எதிர்க்கட்சியாக செயல்பட்ட 13 ஆண்டுகளில் அவரது போர்க்குணத்தைப் பார்த்தார்கள். ஆனாலும் எம்ஜிஆர் உள்ளிட்ட அதிமுக தலைவர்களிடம் சிரித்துப்பேசுவதற்கு அவர் தவறவில்லை! ஒரு கட்டத்தில் எம்ஜிஆருடன் அவர் சிரித்துப் பேசுவது, திமுக கூட்டமொன்றில் அவர் முன்னிலையிலேயே பிரச்னையாகக் கிளப்பப்பட்டு அதற்கு அவர் விளக்கமும் அளிக்கவேண்டியதாயிற்று!

தேர்தலில் தோல்வி அடைந்திருந்த இந்திராகாந்தி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்தார். அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட திமுக முடிவெடுத்தது. அவரால் மிசாவில் திமுகவினர் அடைந்த கொடுமைகளுக்குக் கண்டனம்
தெரிவித்துத்தான் இந்தபோராட்டம்.  இந்திரா சென்ற இடமெல்லாம் கறுப்புக்கொடி காட்டினார்கள். சென்னை விமானநிலையத்தில் இந்திரா இறங்கியபோது ஏராளமான புறாக்களுக்கு கறுப்பு வண்ணம் பூசி பறக்கவிட்டதும் நடந்தது. மதுரையில் இந்திரா சென்றபோது கறுப்புக்காட்டிய திமுகவினர் அவர் மீது தாக்குதலில் இறங்கிய சம்பவமும் நடந்ததாகச் சொல்லப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கறுப்புக்கொடி நிகழ்வின்போது கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சிறைவாசத்தில் கருணாநிதி இருக்கும்போதுதான் மகன் மு.க. ஸ்டாலினுக்கு ஆண்குழந்தை பிறந்திருந்தது. சிறையிலிருந்து தாத்தா கருணாநிதியால் புதிய பேரனுக்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் மட்டுமே எழுத முடிந்திருந்தது. நாற்பது நாட்கள் சிறைவாசம் முடிந்து வெளியானபோது அவர் சொன்னார்: '' நண்பர் எம்ஜிஆர் நாற்பது நாட்கள் எங்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தார்!''

இந்த கறுப்புக்கொடி போராட்டம்  தமிழ்நாட்டில் ஒரு கட்சி பிற கட்சித்தலைவர்களுக்கு காட்டும் போராட்டமாக விரிவடைந்தபோது, ஒரு கட்டத்தில் எல்லா கட்சித்தலைவர்களுமே இது வேண்டாம் என்று கைவிட்டனர்.

1978&ல் கருணாநிதி எழுப்பிய பல பிரச்னைகளில் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் தாயார் அமைச்சரின் காரை எடுத்துக்கொண்டு குதிரைப்பந்தயம் ஆடச் சென்றது பற்றிய பிரச்னையும் ஒன்று. சட்டமன்றத்தில் இதை புகைப்பட ஆதாரத்துடன் அளித்தார் அவர். சம்பந்தப் பட்ட அமைச்சர் சார்பில் சில நாட்கள் கழித்து அதற்காக வருத்தம் தெரிவித்து அவையிலே கடிதம் ஒன்று அவை முன்னவர் நாஞ்சில் மனோகரனால் வாசிக்கப்பட்டது. அமைச்சர் வருத்தம் தெரிவித்து, இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாக எழுதி இருந்தார். எதற்கும் ஆதாரத்தை முன்வைத்து வாதிடுவது கருணாநிதியின் பாணி.

மு.கருணாநிதி

தேனியில் பல ஏக்கர்கள் நிலத்தை அழகிரி பெயரில் கருணாநிதி வாங்கி சொத்து சேர்த்திருப்பதாக அதிமுக அமைச்சர் குழந்தைவேலு ஒருமுறை குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். அப்படி இல்லையெனில் பதவி விலகுவேன் என்றார். கருணாநிதி, தேனியில் இருந்து நில உரிமையாளர்களிடம்  மூலப்பத்திரங்களைத்திரட்டி சபாநாயகரிடம் சமர்ப்பித்தார். குழந்தைவேலு தரப்பில் இருந்தும் பத்திரங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை போலியானவை என்று முடிவெடுக்கப்பட்டது. சொன்ன்படி குழந்தைவேலு பதவி விலகவில்லை! கருணாநிதியும் வலியுறுத்தாமல் விட்டுவிட்டதாக நெஞ்சுக்கு நீதியில் சொல்கிறார்.

1979 - ல் திமுக சம உக்கள் ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு மூவரையும் சட்டமன்றத் தொடர் முடியும் வரை உள்ளே வரக்கூடாது என்று ஆளுங்கட்சி வெளியேற்றியது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக முழுக்கூட்டத்தொடரையும் புறக்கணித்ததுடன் மாநிலம் முழுக்க இவர்களை அனுப்பி ஆளுங்கட்சியை விமர்சனம் செய்துகூட்டங்கள் ஏற்பாடு செய்தார் கருணாநிதி.

மதுரையில் எந்த இந்திரா காந்தியைக் கொலை செய்ய கருணாநிதி முயற்சி செய்தார் என்று வழக்கு போடப்பட்டதோ அதே இந்திராவுடன், எந்த இந்திரா சர்க்காரியா கமிஷன் அமைத்தாரோ, எந்த இந்திரா எமெர்ஜென்சியில் திமுக தலைவர்களை சிறையில் அடைத்தாரோ, எந்த இந்திரா திமுக ஆட்சியைக்கலைத்தாரோ அவருடனே ஒரே காரில் ஏறி அடுத்த மூன்றே ஆண்டுகளில் 1980 - ல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிப் பிரசாரம் செய்யும் அரசியல் முதிர்ச்சி கருணாநிதியிடம் இருந்தது. தான் செய்த எமெர்ஜென்சி தவறுகளுக்காக இந்திரா மன்னிப்புக் கேட்டபின்னர் அவருடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை என்று அவர் கருதியிருக்கலாம். காங்கிரஸுடன் கருணாநிதியின் அணுகுமுறை இதேபோலவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதுவே பின்னாலும் தொடர்ந்தது என்பது வரலாறு. இரு ஆண்டுகளுக்கு முன்பு கறுப்புக் கொடி காட்டிய திமுக இம்முறை விமானநிலையத்தில் இருந்து தங்குமிடம் வரை திரளாக தொண்டர்படையுடன் மாபெரும் வரவேற்பு அளித்தது. வழியெங்கும் தோரணங்கள்! பூச் சொரிதல்கள்! இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் வென்று மீண்டும் திமுகவுக்கு நிமிர்வைக் கொடுத்தது. அதே வேகத்தில் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்து நெருக்கடி கொடுக்கவும் அவர் தவறவில்லை. ஆனால் அதிர்ச்சி காத்திருந்தது! 1980 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் இளையபெருமாள். இவருக்கும் கருணாநிதிக்கும் இணக்கம் இருந்தது. ஆனால் இந்த வெற்றிக்குப் பிறகு இவரை மாற்றிவிட்டு எம்பி சுப்ரமணியத்தை தலைவராக நியமித்தார் இந்திரா. இந்த நியமனத்தையும் இந்திராவை சந்தித்தபோது வேண்டாம் என்று சொல்லி நிறுத்திவைத்தார் கருணாநிதி. அந்த அளவுக்கு அவருடன் நெருக்கம் இருந்தது. ஆனாலும் காங்கிரஸ், எம்.பி.சுப்ரமணியத்தையே மீண்டும் நியமித்து, குட்டையைக் குழப்பியது. புதிய தலைவர் திமுகவுடன் இணக்கம் காட்டவில்லை!

சமமான இடங்களில் இரு கட்சியும் போட்டியிட்டதால் யார் முதல்வர் ஆவது என்று தமிழக காங்கிரஸ்காரர்கள் ஆரம்பத்திலேயே கட்டையைப் போட்டார்கள். நிறைய உள்குத்துகள்... இவற்றையும் திமுக சமாளிக்க வேண்டி இருந்தது.

 ஆனால் இந்த முறை 'என்ன குற்றம் செய்தேன்' என்று ஊர் ஊராகப் போய் நியாயம் கேட்டு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டார் எம்ஜிஆர்.

மு.கருணாநிதி

1980 - ல் ஏற்பட்ட  இந்தத் தோல்வியால் கருணாநிதி வருத்தம் அடைந்தாலும் சுருண்டுபோய்விடவில்லை. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவரது பிறந்த நாள் அன்று சென்னை கடற்கரையிலே கூட்டம். 'தமிழர்களே, என்னை நீங்கள் கடலிலே தூக்கி எறிந்தால் கட்டுமரமாக மிதப்பேன். அதிலே ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால் நான் விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுவேன். நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை பாறையிலே மோதினால் வெறும் கல்லைப் போல் பொடியாகிவிட மாட்டேன். தேங்காய் சிதறுவதுபோல் சிதறி உங்களுக்குத் தின்கிற பண்டமாக மாறுவேன். ஆகவே தமிழர்களே என்னை நீங்கள் எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கே பயன்படுவேன்.'' என்று உரையாற்றினார். தோல்வியால் துவண்டிருந்த தொண்டர்களை, தலைவர்களை ஆறுதல்படுத்த, தனக்கு வாக்களிக்காத பொதுமக்களை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்த, இதைவிட உணர்வுபூர்வமாகப் பேசமுடியுமா?

இலங்கைப் பிரச்னையில் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். 1981 - ல் இது  தொடர்பாக நடத்திய மறியல் போராட்டத்தில் கைதாகி சுமார் 15 நாட்கள் சிறையில் இருந்தார். மாநிலம் முழுக்க இவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களும் மறியல்களும் நடைபெற்றன. அதில் சிலர்
தீக்குளித்த சம்பவங்களும் உண்டு. எப்போது சிறையில் இருந்து வெளியே வந்தாலும் கருணாநிதி தனக்காக தீக்குளித்த தொண்டர்களின் இல்லங்களுக்கு ஆறுதல் சொல்ல செல்லவேண்டியிருக்கும். அந்த அளவுக்கு தமிழ்நாடு முழுக்க திமுக தொண்டர்களிடம் நெருக்கமாக இருந்தார். பழகினார்.

1983- ல் ஈழத்தில் இனப்படுகொலைகள் அதிகமானபோது கருணாநிதியும் அன்பழகனும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தனர். அந்தப் படுகொலைக்கு நீதிகோரி திமுக சார்பில் ஒருகோடி கையெழுத்துகள் ஐநா
சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டதும் நடந்தது. டெசோ என்ற அமைப்பை உருவாக்கி தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்கள்,
சிறைவாசங்கள் என்று அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். திம்பு பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னர் பாலசிங்கம், சந்திரஹாசன்,
சத்தியேந்திரா ஆகியோரை நாடுகடத்த மத்திய அரசு முடிவெடுத்தபோது கருணாநிதி தமிழகத்தில் ரயில் நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புகளில், அறிக்கைகளில் உணர்ச்சிப் பிழம்பு தெறிக்கும். இந்த அழைப்பும் அவ்வாறானதுதான். ''ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று தமிழகத்தில் எந்த ஊரிலாவது ரெயில் ஓடினால் அங்கு தமிழன் இல்லை; திமுக செயல்படவில்லை என்று பொருள்'' என்றது அந்த அழைப்பு. போராட்டத்தின் வெற்றியைப் பற்றி கேட்கவேண்டியதில்லையே.

86 - ல் மதுரையில் அகில இந்திய தலைவர்களை அழைத்து டெசோ மாநாடு ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படுகிறது. இதை யொட்டி இலங்கைக்கு மத்திய அரசு ஒரு குழுவை அனுப்புகிறது. முதல்வர் எம்ஜிஆரும் அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்கிறார். தமிழகத்தில் வெற்றிகரமாக முழு அடைப்பு நடத்துகிறது திமுக. அந்த ஆண்டு தன் பிறந்த நாள் விழாவில் ஈழத்தமிழர்களுக்காக நிதி திரட்டுகிறார். மாலைக்குப் பதிலாக நிதி! இரண்டு லட்சத்து எழுபத்துஐந்தாயிரம் ரூபாய் தேறுகிறது! அதிலிருந்து மறைந்த சபாரத்தினம் குடும்பத்துக்கு இருபத்தி ஐந்தாயிரமும் டெலோவுக்கு ஐம்பதாயிரமும், புலிகளுக்கு ஐம்பதாயிரமும் ஈழமக்கள் புரட்சிகர அமைப்புக்கு ஐம்பதாயிரமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு ஐம்பதாயிரமும் அளிக்கப்படுகிறது!

மு.கருணாநிதி மற்றும் மு. க. ஸ்டாலின்

1984 - ல் எம்ஜிஆர் முதல் முறையாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரைச் சென்று பார்த்ததுடன் நானும் பிரார்த்தனை செய்கிறேன் என்ற தலைப்பில் ஒரு கடிதமும் எழுதினார். அதில் 'இந்த பன்னிரண்டு ஆண்டுகாலப் பகையை நாற்பதாண்டுகால நட்பு பனிக்
கட்டி போல இன்று கரைத்துவிட்டதற்கு அடையாளம் உங்கள் நோய் பற்றிக் கேள்விப்பட்டதும் என் கண்கள் அருவிகளானதுதான்' என்று எழுதி இருப்பார். பின்னர் எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு இங்கே சட்டமன்றத் தேர்தல்
நடந்தபோதும் இதே சென்டிமென்டை பிரசாரத்திலும்
கருணாநிதி பிரயோகித்தார். ஆனாலும் எம்ஜிஆர்தான் திரும்பவும் வெற்றி பெற்றார். அவரது உடல் நலம் பற்றிய அனுதாபம், இந்திரா கொல்லப்பட்ட அனுதாப அலை இரண்டும் அவருக்கு உதவியாய் அமைந்தன.

ஆனாலும் 1986 - ல் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அதில் மகத்தான வெற்றியை திமுக பெறுகிறது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி. ஆளுங்கட்சியை எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறுவது சாதாரணமானது அல்ல.  மீண்டும் ஒரு போராட்டத்துக்குத் தேவையான உந்து சக்தியை திமுக தொண்டர்களுக்கு இந்த வெற்றியின் மூலம் வழங்குகிறார் அவர்.

எதிர்க்கட்சியாக இருந்த இந்த காலகட்டத்தில் இந்தி எதிர்ப்புப்போரையும் முடுக்கிவிடுகிறார். ஜனதா ஆட்சியில் மொரார்ஜியின் முயற்சிக்கு எதிர்ப்பும் 86&ல் காங்கிரஸ் அரசின் முயற்சிக் கான எதிர்ப்பும் குறிப்பிடத்தக்கவை. பின்னதில் அரசியல் சட்டத்தில் உள்ள மொழிப்பிரிவின் நகலை எரிக்கும் போராட்டம் நடத்துகிறார் கருணாநிதி. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் செல்லும் பத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியையும் அதிமுக பறிக்கிறது! இப்போராட்டத்தில் கைதாகும் அவர் பத்து வாரம் கடுங்காவல் சிறைத்
தண்டனை அளிக்கப்பட்டு சிறைக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் சிறை உடைதான்! கடுங்காவல், கைதி உடை! வெளியே தொண்டர்கள் கலங்குகின்றனர். அவர்களில் பல உயிர்த்தியாகங்கள்! விடுதலைக்கு இரு வாரம் முன்பே முதல்வர் எம்ஜிஆர் விடுதலை செய்கிறார்!

நீதி கேட்டு நெடும்பயணம் என்ற நடைப் பயணத்தைப் பற்றிச் சொல்லாவிட்டால் இக்கட்டுரை நிறைவடையாது!

1980 - ல் திருச்செந்தூர் கோயில் வளாக விடுதியில் அறநிலைய உதவி ஆணையாளர் சுப்ரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டார். அதை எதிர்த்து திமுக குரல் எழுப்பி போராட்டம் நடத்தியது. இதை விசாரிக்க நீதிபதி சிஜெஆர் பால் கமிஷனை அரசு அமைக்கிறது. இந்த கமிஷன் அறிக்கையை அரசு தனக்கு சாதகமாக இல்லை என்பதால் வெளியிடவில்லை. இந்த அறிக்கையின் நகல்களைப் பெற்று கருணாநிதியே வெளியிட்டு விடுகிறார்! அதிமுக அரசு சும்மா இருக்குமா? முரசொலி செல்வம், உதவியாளர் சண்முகநாதன், அரசு அதிகாரி சதாசிவம் ஆகியோர் கைதும் செய்யப்படுகிறார்கள். இந்த பிரச்னையை இப்படியே விட கருணாநிதி தயாராக இல்லை! சில காலம் கழித்து இப்பிரச்னைக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நடைபயணம் செல்ல முடிவெடுக்கிறார். நீதி கேட்டு நெடும்பயணம் என்று இதற்குப் பெயரிடப்படுகிறது!  200 கிமீ தூரம்.. எட்டு நாட்கள் பயணம். வழியில் எட்டு பொதுக்கூட்டங்கள்... இது ஆளுங்கட்சிக்கு எவ்வளவு நெருக்கடி அளித்திருக்கும் என்று சொல்லவேண்டியது இல்லை! இப்பயணத்தின்போது மொரக்கோஸ் என்ற இசைக்கருவியை அவர் வாசித்தபடி நடந்ததும் ஆற்காடு வீராசாமி, மோர் என நினைத்து டர்பண்டைனைக் குடித்து மருத்துவமனைக்குச் சென்றதும் கூடுதல் தகவல்கள்.

என்றைக்குமே தன்னை விட்டுப் பிரிந்துபோனவர்கள் திரும்பி வரும்போது அவர்களை அரவணைக்க அவர் தவறியது இல்லை! மதியழகன்,
நாஞ்சில் மனோகரன், என இப்பட்டியல்
நீளமானது. இங்கே வருவதும் பின் அங்கே
செல்வதுமாகவும் இருந்தவர்கள் பட்டியல் மேலும் நீளமானது. எம்ஜிஆர் பிரிந்தபோது அவருடன் பெரும்பாலான தலைவர்கள், பொறுப்பாளர்கள்
சென்றிருக்கவில்லை! ஆனாலும் அவர் திரைப்படங்கள் உருவாக்கித் தந்திருந்த பெரும் ரசிகர்கள் உதவியால் வெல்ல முடிந்தது. மாறாக அதிகாரத்தில் இருந்து வெளித்தள்ளப்பட்ட கருணாநிதி தன்னுடன் திமுகவிலேயே நீடித்த பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் தக்க வைத்தார்! அதற்கு தன் பேச்சையும் செயலையும் அறிவையும் முழுக்கப் பயன்படுத்திப் போராடினார்! உழைத்தார்! ஒவ்வொரு தேர்தலிலும் எப்படியும் வெல்வோம், அதிகாரத்தைப் பெறுவோம் என்று தம்முடன் இருந்தவர்களை நம்ப வைத்தார்! தானும் நம்பினார்! அதனால்தான் வெற்றி பெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளைத் தொடர்ந்து பெறமுடிந்தது.

87 - ஆம் ஆண்டு டிசம்பரில் ஒருநாள் காலை  5.45 மணி அளவில் பயணம் முடித்து ரயிலில் இருந்து இறங்கியவருக்கு முதல்வர் எம்ஜிஆர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஆற்காடு வீராசாமி, டி.ஆர். பாலு இருவரும் சொல்கின்றனர். தமிழக அரசியலில் எம்ஜிஆரும் கருணாநிதியும் இருதுருவங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விடிகாலையிலேயே அவர் ராமவரம்
சென்று எம்ஜிஆரைப் பார்த்து மலர் வளையம் வைத்து திரும்பிவிட்டார். சற்று தாமதமானாலும் அவரால் சென்றிருக்கமுடியாது. அதன் பின்னர் ஏற்பட்ட வன்முறையில் இவரது சிலையே இடித்துத் தள்ளப்பட்டது.

எம்ஜிஆர் மரணத்துக்குப் பின் 1989&ல் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது திமுக வெற்றி பெற்றது. அவர் ஆசையாய் கட்டி 1976 - ல் திறப்பு விழாவுக்கு நாள் குறித்த நிலையில் அவர் இல்லாமலே திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் பதவி ஏற்றுக்கொண்டதன் மூலம் மீண்டும் தன் வருகையை அறிவித்தார் கருணாநிதி!