சிறப்புப்பக்கங்கள்

அதிகாரம் அரசியலுக்கா ? இல்லறவியலுக்கா ?

மாலன்

மனைவி மடியில் படுத்துக் கணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான். அருகில் தூளியில் படுத்திருந்த குழந்தை அதிலிருந்து இறங்கி, எரிந்து கொண்டிருக்கும் குத்து விளக்கை நோக்கித் தவழ்கிறது. மனைவி எழுந்து சென்று குழந்தையைப் பிடிக்க முடியாது.. எழுந்தால் கணவனின் தூக்கம் கலையும். அவள் அக்னி தேவனிடம் வேண்டிக் கொள்ள விளக்கில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு குளிர்ந்து சந்தனம் போலாகிவிடுகிறது நகர்வலம் போனபோது போஜ ராஜன் தான் பார்த்த சம்பவத்தின் ஒரு பகுதியைச் சொல்ல, முழுவதையும் தன் ஞானக்கண்ணால் பார்த்த காளிதாசன் எழுதிய கவிதை.

இத்தகைய ஞானக் கண் கொண்ட காளிதாசன் ஒரு சமயம் மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்து தான் அமர்ந்திருந்த கிளையையே தரித்துக் கொண்டிருந்தவன்! அப்படித்தான் அவன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறான்.

இந்தக் காளிதாசன் மரக்கிளை மீதமர்ந்து அதை வெட்டுபவனாக இல்லாமல், நிலத்தின் மீது நின்று கொண்டு குழிபறிப்பவனாக இருந்திருந்தால்? இந்தக் கேள்வியை எனக்குத் தந்தது திருக்குறள்.

பூமியைத் தோண்டும் போது நமக்கு முதலில் கிடைப்பது புழுதி. அப்புறம்  மண் அதற்குக் கீழ் ஈர மண். பின் தண்ணீர். இன்னும் ஆழம் போகப் போக வெள்ளைக் களிமண் கிடைக்கலாம். ராணிகஞ்ச்சாக இருந்தால் நிலக்கரியும். நெய்வேலியாக இருந்தால் பழுப்பு நிலக்கரியும், சவுதியாக இருந்தால் பெட்ரோலும், கோலாராக இருந்தால் தங்கமும், கிம்பர்லியாக இருந்தால் வைரமும் கூடக் கிடைக்கலாம்.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் தன் மீது நின்றுகொண்டு தன்னையே தோண்டுபவனுக்கு நிலம் ஏதோ ஒன்றைக் கொடுக்கிறது. ஆழமாகக் காயப்படுத்துபவனுக்கு மதிப்பு மிக்க ஒன்றைக் கொடுக்கிறது. மேலும் மிக ஆழமாகக் காயப்படுத்துபவனுக்கு மேலும்  விலைமதிப்பு மிகுந்த ஒன்றைக் கொடுக்கிறது. மனிதர்களுக்கு இந்த குணம் இருக்கிறதா? நம்மைக் காயப்படுத்துபவர்களுக்குப் பதிலாக நாம் என்ன கொடுக்கிறோம்?

அரசியல் விமர்சகனாகக் கட்டுரை எழுதும் போது, அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சில நேரங்களில் மிரட்டல்களைச் சந்திக்க நேர்வதுண்டு. நான் இந்தியா டுடே ஆசிரியராக இருந்த போது அரசியல்வாதி ஒருவரது சொத்துக் களைப் பற்றி எழுதியமைக்காக என் அலுவலகம் தாக்கப்பட்டது. சம்பவத்தை விசாரித்த காவல்துறை அவர்களை என்ன செய்யலாம் என்று கேட்டது. “விட்றுங்க” என்று நான் சொன்னபோது நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்த காவல் அதிகாரியிடம் இந்தக் குறளைச் சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே என் வீட்டில் இருந்தவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்தார். அந்தக் குறள் 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

இந்தக் குறளைப் பொறையுடமை அதிகாரத்தில், இல்லறவியலில் வைத்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இதை அரசியலில் வைத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

ஜனவரி, 2015.