சிறப்புப்பக்கங்கள்

அண்ணாவின் தேர்தல் வியூகமும் கூட்டணி அரசியலும்

சுபகுணராஜன்

1956ஆம் ஆண்டு மே மாதம் 17,18,19,20 தேதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு திருச்சியில் நடந்தது. அதற்கு சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்னால்,1955 ஆம் ஆண்டிலேயே சென்னையில் நடந்த கூட்டத்தில், திருச்சியில் கூடும் மாநாட்டில் நேரடியாகத் தேர்தல் களம் காண்பது குறித்த முடிவை எடுக்குமென்று அறிவித்து விட்டார் அண்ணா. அதற்கான முறையையும் விளக்கியிருந்தார்.

அதாவது, மாநாட்டிற்கு நுழைவுச் சீட்டுப் பணம் கொடுத்து வாங்கும் (ஆம், மாநாடுகளுக்கு, நாடகங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதுதான் திமுக வின் முதன்மையான நிதி ஆதாரம்) கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என அனைவரது சீட்டிலும், திமுக தேர்தலில் நேரடியாகப் பங்கேற்கலாமா அல்லது கூடாதா என்ற கேள்வி இருக்கும். மூன்று நாட்களும் பேசப்படும் உரைகளைக் கேட்டு விட்டு, நான்காவது நாள் காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணிக்குள் பந்தலில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டிகளில் தங்களது விருப்பத்தைத் தேர்வு செய்து போட வேண்டும். அதன்படி நான்காவது நாள் மே 20இல் வாக்குப் பதிவு நடந்தது. மாலையில் கட்சிக் காரர்கள் சிலருடன் அண்ணா அந்தப் பெட்டியின் முன் அமர்ந்து

பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த தோழரொருவர்,' என்ன அண்ணா! முடிவு என்னவாக இருக்குமென எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? கண்டிப்பாக தீர்மானம் வெற்றி பெறும்' என்றிருக்கிறார். அதற்கான அண்ணாவின் எளிமையான பதில் ,   ‘தீர்மானம் நிறைவேறி விடப் போகிறதே, இந்தப் பெரும் பொறுப்பை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதுதான் என் யோசனை' என்றாராம்.( அன்றைய வாக்கெடுப்பில் 58942 தோழர்கள் ஆதரவாகவும், 4203 தோழர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர் ) இதுதான் அண்ணா எனும் மாபெரும் அரசியல் சிந்தனையாளரின் மக்கள் மைய அரசியலின் அடிநாதம்.

அண்ணாவின் இந்த ஆழ்ந்த சிந்தனைக்கும், கவலைக்கும் வலுவான காரணங்கள் எராளம். அண்ணாவின் நீண்ட காலத்திட்டம், திராவிட நாடு பிரிவினை என்பது. அதனை வென்று எடுக்க ஆட்சியதிகாரத்தைப் பிடிக்க முனையும் ஒரு தேர்தல் அரசியல் கட்சி போல மட்டும் யோசித்துத் திட்டமிட முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அண்ணாவின் அரசியல் சிந்தனையின்படி, தனிநாடு கோரிக்கையைப் பெற இரண்டு வழிகளே உண்டு. ஒன்று மக்களைத் திரட்டி புரட்சி செய்து பிரிவினையைச் சாத்தியமாக்குவது. அந்தப் போக்கின் தவிர்க்க முடியாத அங்கம், மக்கள் போராட்டம், அதற்கெதிரான ஆட்சியாளர்களின் வன்முறை என்பதே. அடக்கி ஆளுபவரை தூக்கியெறிய பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டியதாகும். பெரியாரிய திராவிட சிந்தனைகளில் வன்முறை என்பதற்கு ஒருபோதும் இடமில்லை. ஒரு நூற்றாண்டு பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பனர்கள்  மீதான எந்த வன்முறையையும் அனுமதித்ததில்லை என்பதே வரலாறு. பெரியாரின் தளபதியான அண்ணாவுக்கு , திராவிட நாடு கோரிக்கையே, சமூக, பண்பாட்டு, கலாசாரக் கூறுகளில் ஊடுறுவி விட்ட ஆரியப் பார்ப்பன வர்ணாசிரம சிந்தனைகளை  களைந்து, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கோட்பாடுகளின் மீதான திராவிடத் தன்னாட்சியை மீட்டெடுப்பதே. பெரியார் அந்த மாற்றத்தை பண்பாட்டுக் கலாசாரத் தளத்திலே இயங்குவதால் மட்டுமே செயல்படுத்த முடியுமென உறுதியாகக் கருதினார். சமூகமாற்றம் மக்களை மையமிட்டது என்பதால், பெரியாருக்கு  இறையாண்மை மிக்க தேச அரசு எனும் கோட்பாட்டில் அறுதியாக நம்பிக்கையில்லை. ஆனால் அண்ணா அரசியல் பங்கேற்பு, ஆட்சியதிகாரம் ஆகியவற்றின் வழியிலான சமூகமாற்றத்தை முன் மொழிந்தார். இந்த அரசியல் களப் பங்கேற்பு ஆட்சியைப் பிடிப்பதாக மட்டும் இருந்து விட முடியாது. ‘ திராவிடம்' என்ற உணர்வை அரசியல் களத்தின் ‘பொதுமொழி' ஆக்க வேண்டும். அதற்கான பாதை அரசியல் களத்தில் மக்கள் நலன் கருதிய அமைப்புகளைத் தோழமை சக்திகளாக ஏற்பது /மாற்றுவது என்பதாகவே இருக்க முடியும். இந்தச் சிக்கலான அரசியல் போக்கை (Political Strategy) பெரியாரும், அண்ணாவும் கையாண்ட விதம் ஒரு நீண்ட ஆய்வுப் பொருள். அதன் சில பரிமாணங்களை இங்கே பார்க்கலாம். இந்த அரசியல் நகர்வின் விளைவு தோழமை சக்திகளை மட்டுமல்ல, எதிர்த்தரப்பாகக் கருதப்பட்ட காங்கிரசிலும் எவ்வளவு தீவிரமான மாற்றத்தை உருவாக்கியது என்பது வரலாறு. காங்கிரசின் உள்முக மாற்றத்திற்கு பெரியார் எதிர்த் தரப்பில் இருந்து கடுமையான பரப்புரை மற்றும் போராட்டங்கள் மூலம்  வழிவகுக்காமல் போயிருந்தால், முப்பத்து ஏழே வயதான எளிய மனிதர் காமராஜர், 1940 ஆம் ஆண்டில், அதன் தலைவராகியிருக்க முடியாது. 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 23,24 தேதிகளில் ஈரோட்டில் நடந்த, ‘திராவிடர் கழகத் தனி மாகாண மாநாட்டில்' அண்ணா சொல்கிறார், ‘ஓரளவுக்கு முதல் நோக்கம் வெற்றி பெற்றுவிட்டது.வெற்றி தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. டாக்டர் ராஜன் இருக்க ஓமந்தூரார் முதலமைச்சரானதும், ஆச்சாரியாரை வீழ்த்தி விட்டுக் காமராஜர் தலைவரானதும், இந்த வெற்றியை விளக்கும் மகத்தான எடுத்துக்காட்டுகள்' ( பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்: பாகம் 1 பக்கம் 292 ) அதே வழியில் திமுகவின், அண்ணாவின் தேர்தல் அரசியல் கள நுழைவே, 1954 இல் , ‘குலக்கல்வி' ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து இறக்கம் செய்து,' பச்சைத் தமிழன்' காமராஜரை முதல்வராக்கியது என்றால் மிகையில்லை. காங்கிரஸ் அதன் அரசியல் புறச்சுழலிற்கு முகங் கொடுக்க வேண்டியதானது திமுக வின் தீவிர அரசியல் கள ஊடாட்டத்தால் மட்டுமே என்பதே மறுக்க முடியாத உண்மை.

அண்ணாவின் 1956 ஆம் ஆண்டின் திருச்சி மாநாட்டின் ‘தேர்தல் பங்கேற்பு' தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதான சிந்தனைகளுக்கு இன்னும் பல காரணங்களும் உண்டு. ஆம், திமுக 1952 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், 1951 ஆம் ஆண்டின் மதுரைப் பொதுக்குழுத் தீர்மானத்தின் படியான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுபவர்களை அந்தத் தேர்தலில் ஆதரித்துப் பிரசாரம் செய்வது, களப்பணியாற்றுவது என முடிவு செய்து அறிவிக்கவும் செய்தது. மதுரைத் தீர்மானம் நவம்பர் 17,18 தேதிகளில் அறிவிக்கப்பட்டு, சென்னை மாகாணத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்தது. ஆனால் இடைப்பட்ட ஒருமாத காலத்திலேயே, திமுக வின் அறிவிப்பிற்கு ஏகோபித்த வரவேற்பு. திமுக வின் அமைப்பு பலத்தையும், ஆதரவுத் தளத்தையும் அரசியல் களத்திலுள்ளோர் அறிந்து கொண்டிருந்தனர். அண்ணா, கம்யூனிஸ்ட்களை எப்படியாவது தோழமை அமைப்பாக இருக்கச் செய்ய வேண்டுமென விரும்பினார். இந்த விருப்பம் அவரது வாழ்நாள் முழுதும் தொடர்ந்தது. ஆனால், கம்யூனிஸ்ட்களால், ‘திராவிடத் தனியரசுப் பிரச்னையை ஆதரிக்கிறேன்.

சட்டசபை, பார்லிமெண்ட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தத் திமுக கொள்கைக்கு ஆதரவு தரும் வகையில் பணியாற்றி வருவேன்' என்ற தீர்மானத்தை அறவே ஏற்க முடியவில்லை. எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார்கள்.

சென்னை எஸ் ஐ ஏ ஏ திடலில் 1951, டிசம்பர் 13 முதல் 16 ஆம் தேதிவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடந்தது. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக தோழர் ஜீவானந்தம். அண்ணா உரையாற்றுகிறார், ‘ நமது தீர்மானத்தில் கைழுத்திட கம்யூனிஸ்ட் தோழர்கள் மறுத்து விட்டார்கள். இந்த நேரத்திலே பெரியாரை நினைவு கூர்கிறேன். இதே மேடையில் நம் தோழர் ஜீவா இருக்கிறார். நாங்கள் வேறு வேறு இயக்கங்களில் இன்று பணியாற்றுகின்றோம். ஆனால், பெரியாரும், ஜீவானந்தமும், நானும் ஓர் இடத்திலிருந்து பணிபுரியும் வாய்ப்பு எதிர்காலத்திலுண்டு என்ற நம்பிக்கை எனக்குண்டு. கொள்கைச் சந்தையிலே கடை வைத்திருப்பவனல்ல நான் & அவர்களும் அப்படியே . நான் என் கொள்கையை விட மாட்டேன். அவர்களும் விட மாட்டார்கள். விடக் கூடாது. ஆனால், மூவரும் சந்திக்கும் முகாம் ஏற்படத்தான் போகிறது. அது பொதுவுடைமை முகாமாக இருக்கட்டும், சமதர்ம முகாம் என்ற பெயர் இருக்கட்டும், நான் கவலைப்படவில்லை. அதனுடன் ‘திராவிட' என்ற அடைமொழி சேர வேண்டும். திராவிடப் பொதுவுடைமைக் கட்சி என்று சொல்லுங்கள், அதில் நான் முதல் அங்கத்தினன்'( திமுக வரலாறு: க.திருநாவுக்கரசு பாகம் 1 பக்கம் 429) இதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. திராவிட நாடு & திராவிட தேசியப் பயணத்தில் இணைய வாய்ப்புள்ள எந்த அமைப்போடும் நட்புறவு கொள்ளத் தயார். கொள்கைச் சமரசம் அல்ல. அவரவர் கொள்கைகளோடு திராவிட நாட்டை வென்றெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் இணையலாம்.

இந்த மாநாட்டின் உரையிலேயே அண்ணா குறிப்பிடுகிறார், 1952 ஆம் ஆண்டின் தேர்தல் ஒப்பந்தத்தில் 150 பேருக்கு மேல் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களில் ஒரு அய்யர்கூட இருக்கிறார் என்று. அந்தத் தேர்தல் களத்தைப் பயிற்சிக் களமாக்கிக் கொண்டு கடுமையாக  உழைத்தனர் திமுக வினர். கையெழுத்திட்டவர்களில் இரு கட்சிகளும் உண்டு. திரு மாணிக்கவேலர் அவர்களின் ‘காமன்வீல் பார்ட்டி'யும், திரு ராமசாமிப் படையாட்சியார் தலைமையிலான, ‘உழவர் உழைப்பாளர் கட்சி' யுமாகும். இரண்டும் வன்னியர் சங்கங்களாக இருந்து கட்சிகள் ஆனவை. இவர்களுக்காக திமுக தலைவர்கள் கலைஞர், நெடுஞ்செழியன், மதியழகன், சம்பத் ஆகியோர் ஊர் ஊராகச் சென்று பரப்புரை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திமுகவின் அரசியல் களப்பணியில் தனது இன்னுயிர் ஈந்து முதல் களபலி ஆனார் மஜீத் எனும் தோழர். திமுக நிதி திரட்டி அவரது குடும்பத்திற்கு விவசாய நிலம் வாங்கிக் கொடுத்தது. இந்தத் தேர்தலில் திமுகவின் ஆதரவு பெற்றோர் 45 ற்கும் மேலானவர்கள் வென்றார்கள். உழவர் உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும், காமன் வீல் பார்ட்டி 6 இடங்களிலும் வென்றனர்.

சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மை இல்லை. எனவே மந்திரி பதவிக்கு 1952ல் மாணிக்கவேலரும், 1954ல் ராமசாமி படையாட்சியும் விலை போனார்கள். திமுக வுடனான ஒப்பந்தம் காற்றில் பறக்க விடப்பட்டது. ஆனாலும் அதிலும் திராவிட இன உணர்வு கொண்ட,  ஏ. கோவிந்தசாமி போன்றோர் திராவிட சட்டசபைக் கட்சி என்ற அமைப்பாகத் தொடர்ந்தனர். உழவர் உழைப்பாளர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஏ.கோவிந்தசாமி அவர்கள் 1953 துவங்கி திமுக வின் அங்கமாகவே மாறி, தலைநிலையப் பொறுப்பாளரும் ஆனார். அவரே அண்ணாவின் முதல் அமைச்சரவையில் அமைச்சராகவும் ஆனார்.

அண்ணா 1956 ஆம் ஆண்டு திருச்சி மாநாட்டில் தேர்தல் பங்கேற்பு முடிவு எடுக்கப்பட்ட போது, இந்தப் பழைய துரோக வரலாற்றை கருத்தில் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அண்ணா அரசியல் களத்தில் கொள்கையில் காட்டிய தீவிரத்தை தேர்தல் உறவுகளில் காட்டியதில்லை. இந்தப் பழைய துரோக வரலாற்றைக் கூட பெரிதாக திமுகவோ, அண்ணாவோ பேசிடவில்லை என்பதே உண்மை. 1957 ஆம் ஆண்டுத் தேர்தல் களத்திலும் தொடர்ந்து பொதுவுடைமை கட்சியோடு கூட்டணி அல்லது தொகுதி உடன்பாடு கொள்ளவே விரும்பினார். ஆனால் கம்யூனிஸ்ட்களால் அந்த உறவை ஏற்க முடியவில்லை. அவர்களது உணர்விலும், பேச்சிலும், செயலிலும் திமுக தங்களுக்கான இடத்தை, மக்கள் தொகுப்பைக் கவர்ந்துவிட்டது என்ற எண்ணமே வலுவாகப் பதிந்து விட்டிருந்தது. திமுக தங்களது லட்சியத்தை முறியடிக்கும் போக்கைக் கொண்டிருப்பதாகவே கருதியது. இன்னொரு வகையில் பார்த்தால், கம்யூனிஸ்ட்களின் உயர்சாதித் தலைமையின் பார்வை, காங்கிரஸ் கொண்டிருந்ததைப் போலவே, திமுகவினர் ‘கூத்தாடிகள்', ‘ கொள்கையற்றவர்கள்', ‘லும்பன்கள்' என்பதாகவே இருந்தது. இப்போதைய பொதுவுடைமையாளர்களின் தமிழுணர்வு, இன உணர்வு, மாநில உரிமைகள் போன்ற முன்னுரிமைகள் அப்போது வலுப்பெறவில்லை.  இத்தனைக்கும் 1952 தேர்தலில் கூட ஒப்பந்தம் போடப்படாத தொகுதிகளில் கம்யூனிஸ்ட்களை ஆதரிப்போம் என அறிவித்து விட்டு திமுக பரப்புரை மேற்கொண்டது. 1957 ஆம் ஆண்டின் தேர்தலில் திமுக நேரடியாகக் களமிறங்கிய போதும், கடைசி வரை அண்ணா, கம்யூனிஸ்ட்களின் கூட்டணியை எதிர்பார்த்தார். நாகப்பட்டினம் தொகுதியை குறிவைத்து வேலை செய்த கலைஞரே, கூட்டணி கருதி குளித்தலைக்கு நகர்த்தப்பட்டார். நாகப்பட்டினம் தொகுதியில் ஜீவானந்தம் போட்டியிட்டார், ஆனால் கூட்டணி கூடிவரவில்லை. ஆனால் அண்ணாவின் கூட்டணிக் கோட்பாடு மாறவில்லை.  நீதிக்கட்சியிலும், பெரியாருடன் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றில் பயணித்தவர் ராவ் பகதூர் என்.சிவராஜ் அவர்கள். பின்னர் 1944 முதல் பாபாசாகேப் அம்பேத்கரின் அகில இந்திய ஷெட்யூல்ட் பிரிவு கூட்டமைப்பின் தலைமையையும், பின்னர் அவரது குடியரசுக் கட்சியின் முதல் தலைவருமானவர். அவரைத் திமுக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்தார் அண்ணா.   

1957 ஆம் ஆண்டில் திமுக கூட்டணி 15 சட்டமன்றத் தொகுதிகளிலும், 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்று 17% வாக்குகளையும் பெற்றது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட்களும், ராஜாஜியின் சீர்திருத்தக் காங்கிரசும் பின் தள்ளப்பட்டன. ஆனால் சட்டசபை எதிர்க்கட்சி நிலையை சீர்திருத்தக் காங்கிரஸ் சுயேச்சைகளின் துணையோடு பெற்றது. 1959 ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக பெருவெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் ஆதரவோடு வென்ற திமுக, கோவை நகராட்சியின் நகரவைத் தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெல்ல உதவியது. 1962 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னர் ஏற்பட்ட திமுக பிளவு , சம்பத் அணி வெளியேற்றம், திமுகவைப் பலவீனப்படுத்திவிடுமென்றே காங்கிரஸ் எண்ணியது. காமராஜரும் மாபெரும் கோடீசுவரர்களை ஏற்கெனவே வென்ற 15 திமுக தலைவர்களுக்கு எதிராகக் களமிறக்கினார். இப்போதும் அண்ணாவின் கூட்டணி முயற்சி பெரிய அளவில் வெற்றியடையவில்லை. கம்யூனிஸ்ட் தலைமை உதாசீனம் செய்தது. ராஜாஜியின் சுதந்திராக் கட்சியுடனான பேச்சு வார்த்தை முடிவடையாமல், ஆங்காங்கே தொகுதி உடன்பாடு என்ற அளவில் நின்றது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் கம்யூனிஸ்ட்கள் எம்.கல்யாணசுந்தரம் அவர்கள் முயற்சியில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டனர். திமுக இந்த முறை முஸ்லிம் லீக், பார்வர்ட் பிளாக், மற்றும் குடியரசுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. தெற்கே அருப்புக் கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் முத்துராமலிங்கத் தேவரும், வடக்கே வேலூர் தொகுதியில் குடியரசுக் கட்சியின் என்.சிவராஜ் அவர்களும் போட்டியிட்டனர். காமராஜரின் முயற்சியால், 1957இல் வென்ற அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் தோல்வியுற்றனர். தஞ்சாவூரில் தப்பியவர் கலைஞர் மட்டுமே. ஆனால் திமுக 27.5% வாக்குகள் பெற்று சட்டமன்றத் தொகுதிகள் 50 மற்றும் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்று தன்னை ஒரு மாபெரும் அரசியல் கட்சியாக நிறுவிக் கொண்டது.

1967ஆம் ஆண்டில் அண்ணா அமைத்த கூட்டணி இனி ஒருபோதும் தமிழ்நாட்டு அரசியலில் நிகழவே முடியாத அற்புதம். இத்தனைக்கும் திமுக தனித்தே வென்றிருக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. ஆனால் அண்ணா எனும் அரிய அரசியல் ஆளுமையின் பண்பு அந்தக் கூட்டணியில் வெளிப்பட்டது. ஒருமுனையில் சிபிஎம் மறுமுனையில் சுதந்திராக் கட்சி என ஏழு கட்சிகூட்டணி கண்டார் அண்ணா, திமுக, சுதந்திரா, சிபிஎம், பார்வர்ட் பிளாக், முஸ்லிம் லீக், தமிழரசுக் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் இன்னும் பல சுயேச்சைகள் என நீண்டது கூட்டணி.   அவரது கூட்டு, கூட்டணி, கூட்டாட்சி ஆகிய லட்சியவாதங்களின் பரிசோதனைக் களம் அது. அண்ணாவின் இந்தக் கொள்கை ஆழமானது. அது திராவிட நாடு என்ற திராவிடக் கூட்டாட்சிக் குடியரசு துவங்கி தேர்தல் கூட்டணி வரை விரவிப் பரவிக் களம் கண்டது.

அண்ணாவின் தேர்தல் கூட்டணி வியூகம் கொள்கை சமரசத்தை மொழியவில்லை எனினும், ஒரு பரந்த கொள்கை உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. 1937இல் சென்னை மாகாணப் பிரதமராக கட்டாய  இந்திக் கல்வியை முன்மொழிந்த ராஜகோபாலாச்சாரியர், 1950 களின் இறுதிக் காலம் துவங்கி இந்தித் திணிப்பு எதிர்ப்பாளராக, மொழிப் போர் ஆதரவாளராக, தமிழக உரிமைகள் பேசுபவராக ஆனார் என்பது கருதத்தக்கது. அதே நிலைதான் கம்யூனிஸ்ட்கள் உட்பட்ட அனைத்து தேசியவாதிகளிடையேயும். மொழியுரிமை, மாநிலங்களின் அதிகாரம் போன்ற தளங்களில் சில புதிய புரிதல்களிற்குள் அவர்கள் நகர்ந்ததும் நிகழவே செய்தது. பிரிவினைவாதத் தடைச் சட்டத்தால் திராவிட நாடு கோரிக்கையை கைவிட நேர்ந்த திமுகவும் ‘ தேசியவாதத்தை'  கையாள மாற்று வழியான, ‘ மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி ‘ என்ற கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டதும் நிகழ்ந்தது. 

மார்ச் 2021