சிறப்புப்பக்கங்கள்

அண்ணா முதல் இளையராஜா வரை: மாநிலங்களவை நட்சத்திரங்கள்!

ஆர்.முத்துகுமார்

இசைஞானி இளையராஜாவை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தது தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டுக்கு அப்பாலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, இசையையும் தமிழ் சினிமாவையும் இளையராஜாவையும் நேசிக்கும் ஒவ்வொருவரையும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

உண்மையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குப் பல நட்சத்திரங்கள் சென்றிருக்கிறார்கள். சிலர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சிலர் திரைப்படத்துறையில் பங்களிப்பு செய்துவிட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறார்கள். சிலர் அரசியல்வாதியாக இருந்தபடியே தமிழ் சினிமாவுக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலையும் தமிழ் சினிமாவையும் இரு கண்களாகக் கருதியவர்களும் இருக்கிறார்கள். சிலர் தமிழ் அல்லாத வேறுமொழித் திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர்களுடைய ஆணிவேர் தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறது.

அப்படிப்பட்ட நட்சத்திரங்களிடமிருந்து இசைஞானி இளையராஜா முற்றிலுமாக வேறுபடுகிறார் என்று  சொல்வதைவிட அந்த நட்சத்திரங்களிடமிருந்து தனித்து நிற்கிறார் இளையராஜா என்று சொல்வதுதான் பொருத்தம். எப்படி?

0

1962 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தனது சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். என்றாலும், அவர் தலைமையேற்று வழிநடத்திய திமுக 50 சட்டமன்ற உறுப்பினர்களைக் கைப்பற்றியிருந்தது. அந்தப் பலத்தைக் கொண்டு நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வானார் அண்ணா. அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குச் சென்ற முதல் திரை நட்சத்திரம் அண்ணா. என்ன ஒன்று, அண்ணா அடிப்படையில் அரசியல்வாதி. அவருக்கு சினிமா கூடுதல் அடையாளம். அவ்வளவே.

அப்போது மாநிலங்களவையில் முதல் உரையை நிகழ்த்திய அண்ணா, இந்தியாவின் ஒருபகுதியாக இப்போதும் இருக்கும் நாட்டிலிருந்து நான் வருகிறேன். நாங்கள் வேறு இனம். அதற்காக எதிரிகள் அல்ல. நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன், திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அதற்காக நான் வங்காளிகளுக்கோ, மராட்டியர்களுக்கோ, குஜராத்திகளுக்கோ எதிரி அல்ல என்று பேசி அரசியல் அதிர்வுகளைக் கிளப்பினார்.

அண்ணாவுக்கு அடுத்தபடியாக மாநிலங்களவைக்குச் சென்ற திரை நட்சத்திரம் என்று விகடன் பத்திரிகை மற்றும் ஜெமினி படத்தயாரிப்பு நிறுவனங்களின் அதிபரான சுப்ரமணியன் சீனிவாசன் என்கிற எஸ்.எஸ்.வாசனைச் சொல்லவேண்டும். சந்திரலேகா, வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை உள்ளிட்ட படங்களை இயக்கி, ஔவையார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ்.எஸ்.வாசனுக்கு அரசியல் மீது ஆர்வம் உண்டு.

சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மீது ஈர்ப்பு கொண்ட எஸ்.எஸ்.வாசனுக்கு அகில இந்திய அளவில் நேருவுடனும் தமிழ்நாட்டு அளவில் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுடனும் நட்பு இருந்தது. அதன் பலனாக 1964 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்.எஸ்.வாசன். கட்சிக் காரர் என்ற முறையிலும் சினிமாக்காரர் என்ற முறையிலும் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1969 ஆகஸ்டில் மரணம் அடையும் வரை மாநிலங்களவை உறுப்பினராகத் தொடர்ந்தார்.

எஸ்.எஸ்.வாசனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குச் சென்ற திரை நட்சத்திரம் சேடப்பட்டி சூரியநாராயண ராஜேந்திரன் என்கிற எஸ்.எஸ்.ராஜேந்திரன். அந்தக் காலகட்டத்தில் திமுகவிலும் திமுகவுக்கு ஆதரவாகவும் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தது. குறிப்பாக, என்.எஸ்.கே, கே.ஆர்.ராமசாமி, சிவாஜி கணேசன், எம்.ஜிஆர் உள்ளிட்டோரைச் சொல்லலாம். அவர்களில் முக்கியமானவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் திரை நட்சத்திரம் என்ற பெருமை எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு உண்டு.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது மன்னர் மானிய ஒழிப்பு

மசோதாவைக் கொண்டுவந்தார் பிரதமர் இந்திரா காந்தி. மக்களவையில் நிறைவேறிய அந்த மசோதா மாநிலங்களவையில் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதற்குக் காரணம், திமுக மாநிலங்களவை உறுப்பினராக எஸ்.எஸ்.ராஜேந்திரன் வாக்களிக்காமல் தவிர்த்ததுதான்.

ஏன் என்று கேட்டபோது வயிற்றுப்போக்கு என்று காரணம் சொல்லிவிட்டார் எஸ்.எஸ்.ஆர். அது அப்போது பெரிய சர்ச்சையாகப் பேசப்பட்டது. பிறகு திமுக தலைவர் கருணாநிதியுடன் கருத்துவேறுபாடு ஏற்படவே, தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி விலகவேண்டுமென அறிக்கை வெளியிட்டார் எஸ்.எஸ்.ஆர். பிறகு திமுகவிலிருந்து விலகி எம்ஜிஆருடன் சேர்ந்துகொண்டார். அப்படி கட்சி மாறியபோதும் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யாமல், ஆறாண்டுகளுக்கும் அந்தப் பதவியில் தொடர்ந்தார் எஸ்.எஸ்.ஆர்.

கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையை வெளிப்படுத்திய முரசொலி மாறன் 1977 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை மாநிலங்களவைக்குத் தேர்வான அவர், 1989இல் மத்திய அமைச்சராகவும் பதவியேற்றார்.

முரசொலி மாறன் மாநிலங்களவைக்குச் செல்வதற்கு முன்பே இருமுறை மக்களவைக்குத் தேர்வானாவர். ஆம், 1967இல் அண்ணா ராஜினாமா செய்த தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குத் தேர்வானார். பிறகு 1971 தேர்தலிலும் அதே தொகுதியில் வென்றார். ஆனால் 1977 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வெங்கட்ராமனிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகுதான் முரசொலி மாறனை மாநிலங்களவைக்கு அனுப்பியது திமுக.

உண்மையில், அண்ணாவைப் போலவே முரசொலி மாறனும் அரசியல்வாதிதான். சினிமா என்பது கூடுதல் அடையாளம். குலதெய்வம், அன்னையின் ஆணை, தலை கொடுத்தான் தம்பி, சகோதரி, நல்ல தீர்ப்பு உள்ளிட்ட படங்களுக்கு கதாசிரியராகவும், எங்கள் தங்கம், பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும், மறக்க முடியுமா, வாலிப விருந்து உள்ளிட்ட படங்களின் இயக்குனராகவும் திரைத்துறையில் பங்களிப்பு செய்தவர் முரசொலி மாறன்.

இந்த இடத்தில் பதிவுசெய்யவேண்டிய முக்கியமான செய்தி, தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குச் சென்ற திரைப்படக் கலைஞர்களுள் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்றவர் முரசொலி மாறன் மட்டுமே.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது சொந்தத் தொகுதியான திருவையாறில் தோற்றுப்போனார் என்பது மட்டுமே இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திருக்கும் செய்தி. ஆனால் எண்பதுகளில் சிவாஜியை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்து கௌரவப்படுத்தியிருக்றார் இந்திரா காந்தி.

இந்திரா காங்கிரஸில் இருந்த சிவாஜிக்கு உரிய அங்கீகாரம் தர விரும்பினார் இந்திரா காந்தி. அந்தச் சமயத்தில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இந்தி திரைப்பட நட்சத்திரம் நர்கீஸ் மரணம் அடையவே, அவரது இடத்துக்கு மற்றொரு பெருங்கலைஞரான சிவாஜியை நியமித்தார் இந்திரா காந்தி. அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து முதலில் மாநிலங்களவைக்குச் சென்ற நட்சத்திர நியமன எம்பி சிவாஜி. ஆம், அண்ணா, எஸ்.எஸ்.வாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முரசொலி மாறன் ஆகிய நால்வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்.

எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கியபோது அதில் சேராமல் ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை எண்பதுகளின் மத்தியில் கட்சியில் சேர்த்தார் எம்ஜிஆர். அத்தோடு, சத்துணவுத்திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் என்பன போன்ற பதவிகளைக் கொடுத்த எம்ஜிஆர், திடீரென ஜெயலலிதாவை அதிமுக

சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்கினார்.

கட்சியில் சேர்த்த கையோடு ஜெயலலிதாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை எம்ஜிஆர் கொடுத்தது அப்போது கட்சியில் வியப்பை ஏற்படுத்திய அதே வேளையில் கடும் புகைச்சலையும் ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது அண்ணா அமர்ந்திருந்த அதே 185 ஆம் எண் இருக்கையை தனக்காகக் கேட்டுவாங்கினார் ஜெயலலிதா.

அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவின் அடைமொழி புரட்சித்தலைவி அல்ல, சிந்தனைச் செல்வி. அவருக்கென்று தனி கோஷ்டியே இயங்கியது. எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போதும், அதை முன்னிட்டு ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்தபோதும் தொடர்ந்து எம்.பியாகவே இருந்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபடியே போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டார் ஜெயலலிதா.

அந்தத் தேர்தலில் அதிமுக ஜெயலலிதா அணி தோல்வியடைந்தபோதும் பிரதான எதிர்க்கட்சி என்ற தகுதி அந்த அணிக்கே கிடைத்தது. அதனால் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தனது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குச் சென்ற மற்றொரு திரைப்பட நட்சத்திரம் வைஜெயந்திமாலா. வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, சித்தூர் ராணி பத்மினி, தேன் நிலவு, பெண், அதிசயப்பெண், பாக்தாத் திருடன் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்த இவர்  சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். லடுக்கி, நாகின், சிதாரா, தேவ்தாஸ், சாதனா, ஜிந்தகி,  சங்கம் என்று பல இந்திப்படங்களில் நடித்தவர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான வைஜெயந்தி மாலா ஏற்கெனவே 1984 தேர்தலில் திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்து ஜனதா  கட்சிக்கு மாறிய இரா.செழியனையும், 1989 தேர்தலில் திமுகவின் ஆலடி அருணாவையும் வீழ்த்தி இரண்டு முறை மக்களவை உறுப்பினராகியிருந்தார். அவரை 1993ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு.

வைஜெயந்தி மாலாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குச் சென்ற திரை நட்சத்திரம் சோ. திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என்று பன்முகத்திறமையை வெளிப்படுத்தியவர் சோ ராமசாமி. பார் மகளே பார் படம் தொடங்கி பல படங்களில் நடித்த சோ, தேன் மழை என்ற படத்தில் நடித்ததோடு அந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனமும் எழுதினார்.

எம்ஜிஆருடன் எங்கள் தங்கம், சிவாஜியுடன் அவன் ஒரு சரித்திரம், ஜெய்சங்கருடன் நான் யார் தெரியுமா, ஜெயலலிதாவுடன் வந்தாளே மகராசி, ரஜினிகாந்துடன் ஆறிலிருந்து அறுபது வரை, கமல்ஹாசனுடன் சினிமா பைத்தியம் என்று பல படங்களில் நடித்திருக்கிறார். சோ இயக்கிய முகமது பின் துக்ளக் திரைப்படம் வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேரப் பெற்ற படம். துக்ளக் இதழின் ஆசிரியராக இருந்த சோ ராமசாமியை 1999ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

சோ ராமசாமியைத் தொடர்ந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட நட்சத்திரம் நடிகர் சரத்குமார். 1998 மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சரத்குமாரை 2001ல் மாநிலங்களவை உறுப்பினராக்கி டெல்லி அனுப்பியது திமுக. பிறகு திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் திமுகவில் இருந்து விலகியதோடு, எம்பி பதவி முடிவடைவதற்கு இரண்டு மாதங்களே எஞ்சியிருந்த நிலையில் அதை ராஜினாமா செய்தார்.

திமுக சார்பில் சரத்குமாரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய அதே சமயத்தில் அதிமுக சார்பில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரனை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர் எஸ்.எஸ்.சந்திரன். திமுக விலிருந்தபடி அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித் தவர் என்றபோதும், எஸ்.எஸ்.சந்திரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா.

எஸ்.எஸ்.சந்திரனைத் தொடர்ந்து நடிகை ஹேமமாலினி மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் பிறந்து இந்தித் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய நட்சத்திரம் ஹேமமாலினி. இது சத்தியம் என்ற தமிழ்ப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் மட்டுமே நடித்த ஹேமமாலினி, பிறகு இந்தி சினிமாவுக்குச் சென்று பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார். அதற்கான உதாரணம்தான் ஷோலே.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்ப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்காமல் இருந்த ஹேமமாலினியை தான் இயக்கிய ஹே ராம் படத்தில் நடிக்கவைத்தார் கமல்ஹாசன். அவரை 2003ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது பாரதிய ஜனதா கட்சி. பிறகு 2011ல் கர்நாடகத்தில் நடந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் ஹேமமாலினியை நிறுத்தி வெற்றிபெறச் செய்தது பாஜக. ஆம், முதன்முறை நியமன எம்பியாக மாநிலங்களவைக்குச்  சென்ற ஹேமமாலினி, இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவைக்குச் சென்றார்.

நடிகை ஹேமமாலினியைத் தொடர்ந்து நடிகை ரேகாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு. நடிகர் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி தம்பதியின் மகளான பானுரேகா என்கிற ரேகா பணியாற்றியது முழுக்க முழுக்க இந்தி திரையுலகில்தான். குறிப்பாக, கல்யுக், நமக் ஹராம், சில்சிலா, உத்சவ், ஜீவன் தாரா, லஜ்ஜா, மிஸ்டர் நட்வர்லால், பியார் கீ ஜீத் போன்ற படங்கள் ரேகாவுக்குப் பெருவெற்றியைக் கொடுத்த படங்கள். தமிழ்ப்படங்களில் ரேகா நடிக்கவில்லை என்றாலும் அவர் பிறந்தது தமிழ்நாட்டில் என்பதால் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குச் சென்ற நட்சத்திரங்கள் பட்டியலில் ரேகாவுக்கு நிச்சயம் இடமுண்டு.

இந்தி நடிகை ரேகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பெருங்கலைஞரும் இசையமைப்பாளருமான இளையராஜாவை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக்கியிருக்கிறது நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. அந்தச் செய்தியை மக்களுக்கு முதலில்  சொன்னவர் பிரதமர் நரேந்திர மோடி.

தலைமுறைகளைக் கடந்து இளையராஜாவின் அற்புதமான படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப்படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துபவை. அவரது படைப்புகளைப் போலவே அவரது வாழ்க்கைப் பயணமும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்டவியலாத சாதனைகளைப் படைத்திருக்கிறார் இளையராஜா. அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருவதாக உள்ளதென்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துகளோடு சேர்ந்து சில விமர்சனப் பார்வைகளும் வரத்தவறவில்லை. குறிப்பாக, அரசியல் ரீதியிலான சர்ச்சையைச் சொல்லவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியானது. அந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதிய இளையராஜா, அம்பேத்கர், மோடி என்ற இரண்டு ஆளுமைகளையும் ஒப்பிட்டு  எழுதி இருந்தார்.  இதைத் தொடர்ந்து இளையராஜாவின் மீதான விமர்சனக்கணைகள் ஒருபக்கம் வீரியமெடுத்த நிலையில்தான், இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பதாக 2022 ஜூலை முதல் வாரத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி.

 அண்ணா தொடங்கி இளையராஜா வரை பலரும் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குச்  சென்றிருந்தாலும், அவர்கள் அனைவரிடமிருந்தும் இளையராஜா தனித்து நிற்பவர்.

முந்தைய நட்சத்திரங்கள் அனைவருக்குமே அரசியலுடன் நேரடித் தொடர்பு உண்டு. ஆனால் இளையராஜாவுக்கு ஆரம்ப காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு இருந்தது. ஆனால் சினிமாவுக்குள் நுழைந்தபிறகு அரசியலுடன் எந்தவொரு தொடர்பையும் இளையராஜா வைத்திருக்கவில்லை.

அந்த வகையில், அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு நேரடித் தொடர்பும் இல்லாதவர் என்ற தகுதியில் இந்திய மாநிலங்களவைக்குச் செல்லும் முதல் தமிழ்நாட்டுத் திரை நட்சத்திரம் இசைஞானி இளையராஜா!

ஆகஸ்ட், 2022