சிறப்புப்பக்கங்கள்

அண்ணா தெரிந்து வைத்திருந்த எம்ஜிஆரின் மகிமை!

ராவ்

தேர்தல் பிரசாரத்தைக் கேட்க ஏழை மக்கள் ஓடோடி வந்து மணிக்கணக்கில் சாலைகளில் காத்திருந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் ஒருவரே! இரு கைகளைத் தூக்கி கும்பிட்டவாறும் வாழ்த்துகளை முழக்கியவாறும் ஏழைத் தாய்மார்கள் எம்.ஜி.ஆர். பேச்சைக்கேட்க குழுமிய காட்சிகள் ஆச்சரியமானவை! அவரை அப்படியே நம்பினார்கள்.

ஒரு காட்சி-

எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த தேர்தல். சேலத்தில் க.ராசாராம் திமுக வேட்பாளர். சேலம் கண்ணன் அதிமுக வேட்பாளர். ராசாராம் ஒரு சிறு கும்பலுடன் ஓட்டுக்கேட்டவாறு வருகிறார். எதிரே ஒரு ஜீப்பில் ஒலிபெருக்கி, ‘‘ புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மெயின் ரோடில் பிரசாரம் செய்ய சற்று நேரத்தில் வருகிறார்'' என்று அலறியது. அவ்வளவுதான்! ராசாராம் தனியாக நின்றிருந்தார். அவருடன் வந்த சிறு கும்பலும் கொடிகளைக் கீழே போட்டுவிட்டுப் பறந்துவிட்டது!

அந்த தேர்தலிலேயே திமுக தன் தேனீத் தொண்டர்களை இழந்துவிட்டது! அவர்கள்தான் போஸ்டர் ஒட்டுவதும் பேனர்களைக் கட்டுவதும் சிங்கிள் டீ குடித்துவிட்டு பலனை எதிர்பாராமல் தேர்தல் வேலை செய்தவர்கள்! இப்போது எல்லாமே கான்ட்ராக்ட் ஆகிப்போனது!

சென்னை மாநகராட்சி தேர்தலிலேயே எம்.ஜி.ஆரின் வேன் பிரசாரம் சாதனை புரிந்திருந்தது. முதல் வேன் பிரசாரம் ஆரம்பித்ததே அவர்தான். ‘வேட்டைக்காரன் வருகிறான். ஜாக்கிரதை' என்று காமராஜர் பேசினார். சென்னை ரிப்பன் கட்டடம் திமுக வசமானதற்கு எம்ஜிஆர் பங்கும் உண்டு!

அண்ணா எம்ஜிஆரின் இந்த ‘விசேஷ மகிமைகளை; புரிந்து வைத்திருந்தார். 1967 பொதுத்தேர்தல் நெருங்கிய சமயத்தில் நடந்த கட்சி மாநாட்டில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை தருவதாக எம்ஜிஆர் அறிவித்தார்! ‘‘லட்ச ரூபாய் வேண்டாம்! உங்கள் முகம்போதும். உங்கள் முகத்தை மக்கள் பார்த் தாலே அது வோட்டுகளாக மாறிவிடும். வெற்றி குவிந்துவிடும்! உங்கள் முகத்தைக் காட்டுங்கள் போதும்'' என்று லட்ச ரூபாயை வாங்க மறுத்துவிட்டார்.

எம்ஜிஆர் உண்மையிலேயே ஏழை எளிய மக்களிடையே அன்பு காட்டியவர்.

1964&இல் எம்ஜிஆரைப் பேட்டி எடுக்க ராமாவரம் சென்ற விகடன் துணை ஆசிரியர் பரணீதரன் என்னையும் கூட அழைத்துச் சென்றார். எனக்குத் தமிழ் சுருக்கெழுத்து தெரியும் என்பதுதான் காரணம்.

நாங்கள் அங்கே சென்றபோது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாநகராட்சி திமுக மேயர் குடும்பத்துடன் கும்பிட்டவாறு விடைபெற்றவண்ணம் நின்றிருந்தார்.

 சாதிவாரியாக மேயர் பதவி சுழற்சி முறையில் வந்த நாட்கள். புதிய மேயர் வசதியற்ற பின்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவரது மொத்த குடும்பத்தினருக்கும் விருந்து அளித்து புதிய வேட்டி சட்டைகள் பட்டுப்புடவைகள் குழந்தைகளுக்கு சாக்லேட் பாக்கெட்டுகள்!

‘ஐயா! எப்போதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள். ஒருபோதும் யாரிடமும் பணம் வாங்காதீர்கள். நல்ல பெயர் எடுங்கள். அண்ணா பெயரையும் கட்சி பெயரையும் காப்பாற்றுங்கள்' என்று வழி அனுப்பினார் எம்ஜிஆர்.

அவருக்கு கட்சியோடு நேரடியான தொடர்பு இல்லாதது போலவே எண்ணியவர் ஏராளம். ஆனால் எம்ஜிஆரைப் பார்க்க கட்சித் தொண்டர்கள் தினமும் வந்தபடியே இருந்தனர். வந்தவர்கள் விருந்துடன் உபசரிக்கப்படுவார்கள். அவர்களிடம் ஊர் நிலவரம் எல்லாம் கேட்டு அறிவார்.

‘‘இது காமராஜர் பாணியில் இருக்கிறது'' என்று பத்திரிகையாளர் சோலை கூறுவது உண்டு. அவரை வெளியேற்றினால் கட்சி பாதிக்காது என்கிற கணக்கு தப்பாகிப் போன ரகசியம் இதுதான்.

தேர்தல் பிரசாரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் அவரைப் பார்க்கவும் அவர் பேச்சைக் கேட்கவும் கூடினார்கள்.

அதிமுக பிரிந்த பிறகு நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அறிமுகம் இல்லாத மாயத்தேவரை நிறுத்தினார். இரட்டை இலை  முதன்முறையாக அறிமுகம். புகழ்பெற்ற உதயசூரியனை இலை மறைத்துவிட்டது!

மாபெரும் வெற்றி எம்ஜிஆருக்கு! அவருக்குக் கூடும் கூட்டம் பற்றி சில தலைவர்கள் காமராஜரிடம் அலட்சியமாகப் பேசியபோது, ‘அதெல்லாம் சரியில்லை; இது திமுக வா எம்ஜிஆரா என்கிற தேர்தல் மாதிரி ஆகிவிட்டது!'' என்றார் காமராஜர்.

மதுரை திண்டுக்கல் பகுதிகளில் குடிசைப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்காக குழாயடிச் சண்டை போடும் பயங்கர சண்டை காட்சிகளைப் பார்த்த எம்ஜிஆர் வருத்தப்பட்டிருக்கிறார். குடிசை மக்கள் எளிதில் குடி நீர் பெற வசதி செய்யப்படும் என்பதே அவர் முதல் உறுதிமொழி! அவர் கடைசிவரை குடிசைவாசிகள் குடி தண்ணீர் பெறவும், ரேஷன் கடைகளில் காத்திருக்காமல் பொருட்களை வாங்கிச்செல்லவும் ஏற்பாடு செய்வதில் குறியாக இருந்தார்.

ஏழை மக்கள் தேர்தல் பிரசாரத்தில் அவர் முகத்தை நம்பிக்கையோடு பார்த்தார்கள். அவர்களது நம்பிக்கையை நிறைவேற்ற அவர் விரும்பவே செய்தார்.

சென்னை நகரில் குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது சத்யா ஸ்டூடியோ காம்பவுண்ட் சுவரில் பத்து குழாய்கள் பொருத்தி எந்நேரமும் குடி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். குடிசைமக்கள் குடங்களில் தண்ணீர் பிடித்தவாறு இருப்பார்கள்! அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர்!

இப்போது வேன் பிரசாரத்தில் எல்லா தலைவர்களுக்கும் கூட்டம் கூடுவதன் உண்மை நிலவரம், அதற்கான செலவு எல்லாம் ஊர் அறிந்தவை!

எம்ஜிஆர் ஓர் அதிசயம்!  அவருடைய பிரசாரமும் மக்கள் அவரை மதித்த விதத்தையும் இன்று யாருடனும் ஒப்பிடவே முடியாது.

திமு கழகத்தின் வேர்களாகத் திகழ்ந்த அடித்தட்டு மக்களுடன் எம்ஜிஆருக்கு இருந்த தொடர்பே அவரது பெரும்பலமாக இருந்தாலும் அது வாக்குகளாக மாறாது என நினைத்தவர்கள் உண்டு.

சென்னையில் இருந்த மத்திய உளவுத்துறை டெல்லி மேலிடத்துக்கு  சர்வே செய்து அனுப்பியதில் எம்ஜிஆர் வெற்றி உறுதி என்றே சொல்லப்பட்டது! பிரதமர் இந்திரா காந்திக்கு எம்ஜிஆருக்கு ஆதரவாகக் கூடிய கூட்டங்களின் புகைப்படங்களை பத்திரிகையாளர் மணியன் அளித்தார்! இந்திரா புகைப்படங்களைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

கட்சிக்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவுக் கரம் நீட்டியது! பிரதமர் இந்திரா உத்தரவுப்படி மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம், ஆகியோர் எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்புகொண்டு அவரது கட்சிக்கு வடிவம் கொடுக்க துணை நின்றனர்.

எம்ஜிஆரிடம் நல்ல பிறவிக்குணங்கள் நிறைய. எல்லா தலைவர்களையும் அறிஞர்களையும் மதிப்பார். அவர்களுடன் தொடர்ந்து ஒரு விதத்தில் தொடர்பில் இருப்பார்.

ஆகவே பல கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற தடைகள் இருக்கவில்லை! வலது கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம், இடது கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி,  சுதந்திரா கட்சியில் ஹெச்வி ஹண்டே, மபொசி. எல்லாருமே அவர் பக்கம் சாய்ந்தார்கள்!

கட்சிக்கு வெளியேயும் நிறைய தூதர்களை அவர் வைத்திருந்தார். சோலை, மணியன் இன்னும் பலர்! அவர்கள் விவசாய சங்க தலைவர் நாராயண சாமி நாயுடு, முஸ்லிம் லீக் தலைவர்கள் என்று  சகலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை எம்ஜிஆர் பக்கம் அழைத்து வந்தார்கள்! எம்ஜிஆர் தோட்டத்தில் விருந்துகள் நடந்தவாறே இருந்தன!

திமுக ஆட்சியில் இருந்தததால் முதலில் அங்கு இருந்த தலைவர்கள் எம்ஜிஆர் பக்கம் வரவில்லை!

தூதர்களாக இருந்த பத்திரிகையாளர்கள் முயற்சியால் நாஞ்சிலார், மதுரை முத்து, ஆகியோர் எம்ஜிஆர் பக்கம் உடனே வந்தனர். திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அன்பழகன் தவிர மற்ற தலைவர்கள் எம்ஜிஆர் பக்கமே.

அவரது இன்னொரு உத்தி சாதி சங்கங்களில் இருந்து யாரையும் தூக்கி நிறுத்த தயாராக இல்லாதது!

சாதிகளைப் பற்றி கவலைப்படாமல் தேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தினார்! வெற்றிகளையும் குவித்தார்!

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சாதித் தலைவர்கள் யாரும் தேர்தலில் செல்வாக்கு பெறமுடியவில்லை!

தன் செல்வாக்கால்தான் வெற்றிகள் கிடைப்பதாக அவர் எங்கும் தம்பட்டம் அடித்துக்கொண்டது இல்லை! வெற்றிக்கு உதவியதாக தன் கட்சியில் இடம் பெற்றிருந்த அத்தனை தலைவர்களிடமும் வெகுவாக நன்றி பாராட்டினார்! அவர்களுக்கு தன் மனக்கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருந்தார்! வெற்றி பெற்றதும் அவர்களை அலட்சியப்படுத்தியது இல்லை!

அவரது கூட்டணியில் இருந்து பிரதமர் இந்திரா ஒருமுறை விலகினார்! ஆனால் மீண்டும் அவருடன் கூட்டணி வைக்கவே விரும்பினார். காரணம் டெல்லி தலைமையை மதிக்கிற அவரது அணுகுமுறை. அதற்காக ஒரேயடியாக டெல்லிக்கு புகழ்மாலையும் சூட்டியதில்லை! இந்த அணுகுமுறையால் காங்கிரஸ் தலைமை அவரிடம் ஜாக்கிரதையாக நடந்துகொண்டது. அரசியலில் எம்ஜிஆர் வென்றதற்கு பிரபல நடிகர் என்பது மட்டும் ஒரு காரணம் அல்ல.

அரசியல் கட்சியை வழி நடத்தத் தேவையான, தலைமைப் பொறுப்புக்கு வேண்டியதான அனைத்துப் பயிற்சிகளையும் அவர் பெற்றிருந்தார்! இதனால்தான் அவர் தேர்தல்களில் தொடர்ந்து 'வெற்றிகொண்டானாகத்'  திகழ்ந்தார்!

மார்ச் 2021