சிறப்புப்பக்கங்கள்

அண்ணா தந்த அடித்தளம்

திராவிட ஆட்சி

நாஞ்சில் சம்பத்

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத அளவுக்கு 1967-ல் அண்ணா ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கித்தந்துள்ளார். காங்கிரஸ் கட்சி மீண்டு வரமுடியாத அளவுக்கு அண்ணா அவர்கள் இந்த அரும்பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார். ஆல் போல் பரந்து, அருகுபோல் வேரோடி, ஆலை அதிபர்களாலும் பண்ணை பிரபுக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. முதல் காரணம் அண்ணா உருவாக்கிய அற்புதமான அடித்தளம். இரண்டாவது காரணம் மொழி சார்ந்து காங்கிரஸ் கட்சி ஒரு நாளும் சிந்தித்தது இல்லை. அண்ணா மொழிசார்ந்து சிந்தித்து அதற்கான அடிப்படையை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார். மூன்றாவது காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்தின் மீதும் மேலாதிக்கம் செலுத்தியே வந்திருக்கிறது. அவர்கள் கட்சியானாலும் கூட. அதனால்தான் ஆந்திராவிலும் அவர்கள் அடிபட்டார்கள். தன்னுடைய கட்சி என்றாலும் மாநிலத்தில் இருக்கின்ற தலைவர்களை கிள்ளுக்கீரையாகக் கருதுகிற ஆதிக்க மனோபாவம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது. அதனால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் கூட அடிவாங்கினர். நான்காவது மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாமல் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். அதை உடைத்து நொறுக்கத்தான் அண்ணா மாநில சுயாட்சி என்ற தீபத்தை ஏற்றிவைத்தார். அந்த தீபம் இன்று எரிந்துகொண்டிருக்கிறது. அதை அணையாமல் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றி வருகிறது. அதனால் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தில் இனிமேல் காலூன்ற எந்தக் காலத்திலும் வாய்ப்பே இல்லை. கூவம் பாவத்தைப் போக்கினாலும் போக்கும். கள்ளிப்பால் கண் நோயை நீக்கினாலும் நீக்கும். பட்டப்பகலில் வட்ட நிலவைப் பார்த்தாலும் பார்க்கலாம். பொதிகழுதை மெட்டமைத்துப் பாடினாலும் பாடலாம். ஓலமிடும் கடல் ஊமையானாலும் ஆகலாம். ஆனாலும் பாஜக போன்ற வகுப்புவாதக் கட்சிகளும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும் தமிழ்நாடு என்ற நந்தவனத்தில் தழைப்பதற்கும் பிழைப்பதற்கும் வாய்ப்பே இல்லை.

மலரக்கூடாது என்று மறுக்கப்பட்ட மொட்டாய், தாயின் மார்பகத்தில் பாலருந்தக்கூடாது என்று விலக்கப்பட்ட கன்றாய், இருந்த தமிழர்களுக்கு வகுப்புவாரி உரிமை என்கிற சமூக நீதியை, கொடையாகத் தந்தது திராவிட இயக்கம்தான். மனிதனை மனிதன் தீண்டக்கூடாது என்ற மிலேச்சத்தனத்தைக் கடைப்பிடித்த சூழலை மாற்றி எல்லோரும் ஓர் நிலை என்று சொன்னது திராவிட இயக்கம்தான். தெருவுக்குத் தாசிகள்சிலர் இருப்பர்; தேவனுக்குத் தாசி எதற்கு என்று கேட்டு தேவதாசி முறையை ஒழித்தது திராவிட இயக்கம்தான். இப்படி மானுடம் சிரிக்கவும் மனிதம் பூத்துக்குலுங்கவும் மனிதாபிமானம் நிலைபெறவும் சிந்தித்த கட்சி திராவிட இயக்கம்.

அண்ணா ஏற்றிவைத்த மாநில சுயாட்சி தீபத்தை அதிமுகதான் காப்பாற்றி வருகிறது என்றேன். புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய  வளர்ச்சி மன்றத்தில் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் உரையாற்றும்போது அவர் முகவுரையைத் தொடங்கிய உடனேயே மணி அடித்தார்கள். உடனே  ஆணாதிக்க அரசியலின் கொடி ஓங்கிப் பறக்கிற இந்த காலகட்டத்தில், இது எனக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல; ஏழு கோடி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று சொல்லி அரங்கத்தை விட்டு வெளியேறினார்கள். பண்டித நேருவின் காலத்தில் காமராஜர் முதல்வராக இருந்த நேரத்தில் தமிழகத்துக்குக் கிடைத்த கொடை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன். உலகமயமாக்கலில், தனியார் மயமாக்கலில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை விற்பது என்பது பிள்ளை விளையாட்டாக  இன்றைக்கு  மாறிவிட்ட சூழலில் அதனுடைய பத்துசதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு காங்கிரஸ் ஏகாதிபத்தியம் முடிவெடுத்தபோது மத்திய அரசு விற்பதற்குத் தயார் என்றால் அதை மாநில அரசு வாங்குவதற்குத் தயார் என்று இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்கை வாங்கியது அதிமுகழகம்தான். அதுபோல சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் காங்கிரஸ் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால் அப்படி பயிற்சி கொடுக்கக்கூடாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவிலும் எங்கும் கொடுக்கக்கூடாது என்று தன்னுடைய ஆளுமையால் அதைத் தடுத்து நிறுத்தியதும் அம்மாவும் அண்ணா திமுகவும்தான்! இன்றைக்கு சேவை சரக்கு வரி மசோதா, ஒரே வரிவிதிப்பு பாஜக கொண்டுவந்திருக்கிற சூழலில் 90000 கோடி ரூபாய் மாநிலத்துக்கு இழப்பு, இதை ஈடுகட்டாமல் அதை ஆதரிப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி, அதை காங்கிரசும் திமுகவும் கூட ஆதரித்த நிலையில் எதிர்த்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததும் அதிமுகதான்!

(நாஞ்சில் சம்பத் அதிமுக பேச்சாளர். நம் செய்தியாளரிடம் பேசியதில் இருந்து எழுதப்பட்டது).

டிசம்பர், 2016.