சிறப்புப்பக்கங்கள்

அச்சத்தை தைரியமாகக் கையாள்வது...

அந்திமழை இளங்கோவன்

எங்கள் நண்பரின் நண்பர் அவர். பெயர் டேவ் என வைத்துக்கொள்வோம். அடிக்கடி தொழில்ரீதியாக பயணம் செய்கிறவர். அட்லாண்டிக் சிட்டிக்கு சமீபத்தில் போயிருந்தார். வேலை முடிந்து விமானம் ஏறும் முன் சற்று நேரம் கிடைக்கவே அங்கிருந்த பாருக்குப் போனார். ஒரு டிரிங்க் முடித்த நிலையில் அழகிய பெண்ணொருத்தி அவரை நோக்கி வந்தாள். உங்களுக்கு ஒரு ட்ரிங்க் நான் வாங்கித் தரலாமா என்றாள். ஆள் சற்று அசந்த நிலையில் சரி என்றார். அப்பெண் போய் இரண்டு டிரிங்குகள் வாங்கி வந்து அவருக்கு ஒன்றைத்தந்தாள். அவர் நன்றி சொல்லிவிட்டு ஒரு ஒரு மிடறு அருந்தினார்.

அவருக்கு விழிப்பு வந்தபோது அவர் ஒரு குளியலறைத் தொட்டியி்ல் படுத்திருந்தார். அவரைச் சுற்றி ஐஸ் போட்டிருந்தார்கள். எப்படி இங்கே வந்தோம் எனக் குழம்பி எழ முயன்றபோது, பக்கத்தில் ஒரு போனும் குறிப்பும் இருந்ததைக் கண்டார்.  அதில் அசையாதீர்கள், 911 க்கு அழையுங்கள் என்று இருந்தது. அவர் குளிரில் விறைத்த விரல்களுடன் போனை எடுத்து 911க்கு அழைத்தார்.

ஆச்சர்யமாக எதிர்முனையில் போனை எடுத்த பெண்ணுக்கு இவர் சொன்ன நிலை பரிச்சயமாக இருந்தது. ‘உங்கள்  கீழ்முதுகுக்குப் பின்னால் மெதுவாக, கவனமாகத் தடவிப்பாருங்கள்.  ஏதேனும் குழாய் உள்ளதா?’ என்று கேட்டார் ஆபரேட்டர்.

மிரட்சியுடன் தடவினார். ‘ஆமாம் ஒரு குழாய் இணைக்கப்பட்டுள்ளது’

“சார் பதற்றப்படாதீர்கள். உங்கள் கிட்னியில் ஒன்று திருடப்பட்டுள்ளது. இது உடலுறுப்பு திருடர்கள் கைவரிசை. அசையாதீர்கள். இதோ மருத்துவக் குழு வந்துகொண்டிருக்கிறது’ என்றார் அந்த ஆபரேட்டர்.

இது அழகிய பெண்ணை நம்பி ரிஸ்க் எடுத்து ஒரு ட்ரிங்க் சாப்பிட்டு கிட்னி இழந்தவரின் கதை ( Made to stick என்ற புத்தகத்தில் இருந்து)

ரிஸ்க் என்பது பயத்தை தைரியமாகக் கையாள்வது. (ரிஸ்க் என்றால் தமிழில் இடர்கோள் எனச் சொல்கிறார் கவிஞர் மகுடேசுவரன்)

முதன்முதலில் 35000 அடி ஆழமான மரியானா ட்ரெஞ்ச் கடல் பகுதியில் நீர்மூழ்கியில் சென்று சாதித்த ஆழ்கடல் நீச்சல்வீரர் டான் வால்ஷ். அவர் சொல்கிறார்: ‘ ஒரு ஸ்கூபா டைவராக இல்லாதவரைக்கும் நீங்கள் ஆழம் என்பது பற்றி கவலைப் படவே தேவையில்லை. ஒருவர் குளியல் தொட்டியில்கூடமூழ்கி செத்து விடலாம். நீர்மூழ்கிகள் போன்ற மூடப்பட்ட அறைக்கலன்களில் இருக்கையில் நாம் என்ன செய்கிறோம் என்று நன்கு உணர்ந்தவராகவும் அச்சமில்லாதவராகவும் இருக்கவேண்டும். எல்லாவற்றிலும் ரிஸ்க் உள்ளது. திறமை அதிர்ஷ்டம் இரண்டின் விகித்தையும் பார்க்கவேண்டும். திறமை 50% ஐ விட அதிகமாக இருக்கவேண்டும்”

பேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க்,

 ‘ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய ரிஸ்க். உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. இதில் உறுதியாகத் தோல்வி அடையக்கூடியது என்று ரிஸ்க் எடுக்காமல் இருப்பதைத்தான் சொல்லவேண்டும்’ என்கிறார்.

சந்திரனில் இரண்டாவதாக கால் வைத்தவர் ஆல்ட்ரின். மிகப்பெரிய ரிஸ்க் எடுத்தவர்.

 ‘ பாதுகாப்பு, ஏதாவது தவறாகப் போய்விட்டால் சமாளிப்பது ஆகியவற்றில் எப்போதும் கவனம் தேவைதான். ஆனால் அனைவராலும் கவனிக்கப்படும் பைலட் ஒருவருக்கு அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பது மிக முக்கியம். தவறு செய்யாமல் இருப்பது, எதன் மீதும் மோதி விடுவதை விட அதிமுக்கியம். அபாயத்தை நினைத்துக் கொண்டிருக்கும் மனதால் தெளிவாகச் செயல்பட முடியாது’ என்கிறார்.

1969-இல் சந்திரனில் முதன்முதலாக கால்வைத்த அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் இறங்கி 19 நிமிடங்கள்கழித்து ஆல்ட்ரின் நிலவில் காலடி வைத்தார். இவர்கள் நிலவில் கால்வைத்த முதல், இரண்டாவது மனிதர்கள் என வரலாற்றில் இடம் பெற்றனர். நிலவில் கால்வைத்ததும் ஆல்ட்ரின் சொன்ன வார்த்தை ’அழகான காட்சி’ என்பதாகும்.

நீல் ஆம்ஸ்ட்ராங் இடது காலைத்தான் நிலவில் முதலில் வைத்தார். ‘மனிதனுக்கு ஒரு சின்ன கால் அடிதான் இது. ஆனால் மனித குலத்துக்கு இது பெரும் பாய்ச்சல்’ என்றார் அவர்.

இது வரை 12 பேர் நிலவில் இறங்கி உள்ளனர். எல்லொருக்கும் அது பெரிய ரிஸ்க்தான்! ஆனால் முதலில் ரிஸ்க் எடுத்து இறங்கிய ஆர்ம்ஸ்ட்ராங் பெயரைத்தான் உலகம் அதிகம் நினைவில் வைத்திருக்கிறது. இந்த சிறப்புப் பக்கங்களில் சில ரிஸ்க் அனுபவங்களைக் காண்போம்.

அந்திமழை இளங்கோவன்