சிறப்புப்பக்கங்கள்

அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

Staff Writer

கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அரசுப்பள்ளிகளைப் பற்றிய கூடுதல் கவனமும் அப்பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைப் பற்றிய ஊடக கவனமும் அதிகரித்துள்ளதைக் காணலாம்.  தமிழகம் முழுக்க பின் தங்கிய மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் கவனத்தை ஈர்த்தார்கள். இவர்களை ஒருங்கிணைக்க, கவனத்துக்குக் கொண்டுவர ஆசிரியர்களே இணைந்து உருவாக்கிய அமைப்புதான் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு பணிபுரிய வந்த ஆசிரியை சு. உமா மகேஸ்வரியின் முயற்சியில்தான் இந்த அமைப்பு உருவானது.

2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ‘அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்' என்ற வாட்ஸப் குழுவாகத்தான் இது உருவாகி இருக்கிறது.

‘அப்போது நூறு பேரை மட்டும்தான் குழுவில் இணைக்கும் வசதி இருந்தது. நான் இயக்குநரகத்தில் பணியாற்றியதால் மாநிலம் முழுவதும் என்னைப் போன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளம் கண்டு அந்த குழுவில் இணைத்தேன். ஒவ்வொருவரும் தங்கள் பள்ளிகளில் தாங்கள் செய்துவரும் பணிகளை கற்பித்தல் முறைகளை ஆரோக்கியமான முறைகளில் பகிர்ந்துகொள்ளும் குழுவாகத்தான் அது இருந்தது. அது ஆசிரியர்கள் பள்ளி சார்ந்த விஷயங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள தயங்கிய காலம். அவர்களை தங்கள் நற்பணிகளை தயங்காமல் பகிர்ந்துகொள்ள இந்த குழு ஊக்கம் அளித்தது. முகநூலிலும் இந்த குழுவைத்  தொடங்கியபோது ஏராளமான ஆசிரியர்கள் முன்வந்து இணைந்தார்கள்,'என்கிறார் உமாமகேஸ்வரி.

அது வரை நேரில் ஒருவரை ஒருவர் பார்த்திராத இந்த ஆசிரியர்கள் நேரில் சந்திக்க முடிவு செய்து திருச்சியில் கூடினர். இதற்கான ஏற்பாடுகளை பிற ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைத்தவர் உமாமகேஸ்வரியின் கணவரான கோபாலகிருஷ்ணன். இவர் ஒரு பொறியாளர். அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் அமைப்பில் உமாமகேஸ்வரியை அக்கா என சக ஆசிரியர்கள் அழைக்க, இவரை உரிமையுடன் மாமா என்று அழைக்கும் அளவுக்குப் பழக்கம்.

‘சுமார் 150 பேருக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருச்சியில் கலந்துகொண்டனர். சிறந்துவிளங்கும் ஆசிரியர்களைப் பற்றி மேடையில் அறிமுகம் செய்வித்தோம். இளம் ஆசிரியர்கள் அவர்களைக் கண்டு உந்துதல் அடைந்தனர்.  பல முக்கிய ஆளுமைகளை, கல்வித்துறை செயல்பாட்டாளர்களை நிகழ்வில் உரையாற்றச் செய்தோம். அந்த மூன்று நாட்களில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு விழிப்புணர்வுப் பயிற்சிகள், பறவைகள் பார்த்தல் பயிற்சி போன்றவையும் இடம்பெற்றன. அடுத்த கல்வியாண்டை உற்சா கத்துடன் தொடங்க இந்த விழா உதவியதாக பலர் தெரிவித்தனர்.

பிறகு இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பின் சார்பில் ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சிகளை வழங்கினோம். கிராமப் பள்ளிகளில் கணினி இருந்தாலும் அதைப் பயன்படுத்த பழுதுநீக்க ஆசிரியர்களுக்குத் தெரிந்திராது. இந்த பயிற்சியில் மென்பொருள், வன்பொருள் இரண்டுவகை கையாளல் பயிற்சிகளும் வழங்கினோம். இங்கு கற்றுக்கொண்டு சென்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பல பள்ளிகளுக்கும் உதவியாக உருவெடுத்தனர். பின்னர் இதே பயிற்சி அரசால் வழங்கப்பட்டது,

இந்த அமைப்பின் மூலமாக  ஏராளமான வசதி யற்ற மாணவ மாணவிகளுக்கு நிதிதிரட்டி உதவி செய்தோம் என்பது பெரும் மனநிறைவு அளித்தது. வாசிப்பை மாநிலம் தழுவிய மாணவர் இயக்கமாக மாற்ற நாங்கள் முன்னெடுப்பு செய்தோம். க்ரியா பதிப்பகம் சார்பாக  சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டன. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு தும்பி இதழுக்கான கட்டணமற்ற சந்தாக்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்ற ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பொதுப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டனர்.

புயலில் சிக்கி கடலூர் பகுதி சின்னாபின்னமானபோது எங்கள் அமைப்பின் ஆசிரியர்கள் மூலமாகத்தான் பெருமளவு நிவாரணப்பொருட்கள் திரட்டி அளிக்கப்பட்டது என்பது இன்றும் பெருமை அளிக்கிறது. அங்கே வார் ரூம் போல் அமைத்து பணிபுரிந்தனர். இதைத் தொடர்ந்து அகரம் அமைப்பு எங்கள் அமைப்பின் ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட பள்ளிகளைப் பார்த்து உதவிகளை மேற்கொண்டது.

கொல்லிமலை, திருநெல்வேலி, தஞ்சை, ஈரோடு போன்ற இடங்களில் எங்கள் ஆசிரியர்களின் கூடல் விழாக்கள் நடந்துள்ளன. இதற்கான செலவுகளை எங்கள் குழு உறுப்பினர்களே பகிர்ந்துகொண்டனர். கல்வி சார்ந்த உரையாடல்கள், ஆளுமைகளின் உரைகள் போன்றவை இடம்பெறுவதாக இந்த விழாக்கள் வடிவமைக்கப்பட்டன.

பள்ளி ஆசிரியர்களுக்கு மைசூர் போன்ற இடங்களில் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு செல்வதில் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கிராமங்களில் இருந்து சென்னைக்கு பயிற்சி என்றால் சுய ஆர்வத்துடன் யாரும் வந்துவிடமாட்டார்கள். ஆனால் இந்தகுழுவின் மூலமாக பலரை இந்த பயிற்சிகளுக்கு வர ஊக்கமளிக்க முடிந்தது,' என்கிறார் உமா மகேஸ்வரி. அரசுப் பள்ளிகளில் சிறந்த முறையில் தனித்துவமாக செயல்படுகிறவர்களைப் பற்றி தொடர்ந்து ஊடகங்களிலும் நூல்களிலும் ஆவணப்படுத்தும் முயற்சியையும் செய்துவரும் உமா மகேஸ்வரி, இப்போது குரோம்பேட்டை அரசு மேனிலைப்பள்ளியில் பணியாற்றுகிறார். பள்ளிக்கல்வி தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துகளையும் வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வருகிறார்.

(இதழில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களின் கருத்துகள் தொகுப்பு: முத்துமாறன், தா.பிரகாஷ்)

நவம்பர், 2022