தேர்தல் காலமென்றால் கட்சி சார்ந்த பாடகர்கள், கலைக்குழுக்களுக்கு தனிக் கவனம் பிறக்கும். இந்த சிறப்புப் பக்கங்கள் பகுதியில் சில கட்சிசார்ந்த கலைஞர்கள் பற்றி...
இறையன்பன் குத்தூஸ்
தி.மு.க.வின் நட்சத்திரப் பாடகர்
பத்து வயதிலிருந்தே நான் பாடுகிறேன் என்கிற இறையன்பன் குத்தூஸ், தி.மு.க.வின் பிரச்சாரப் பாடகராகி 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. பூர்வீகம் நெல்லை என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை, திருவல்லிக்கேணிதான்! பள்ளிப் பருவத்திலேயே இவர் பாடுவதைக் கேட்டு நண்பர்கள் உசுப்பிவிட, தனக்குள் ஒரு பாடகன் இருக்கிறான் என்பதை குத்தூஸ் உறுதிப்படுத்திக்கொண்டார். திரைப்படப் பாடல்களாகவே இவர் பாடிக்கொண்டிருக்க, இவரின் தந்தையோ நாகூர் அனீபாவின் பாடல் கேசட்டுகளை வாங்கிக்கொடுத்து அறிமுகம்செய்கிறார். அதை அப்படியே பிடித்துக்கொண்டார்.
”1984ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதியில் தளபதி (மு.கஸ்டாலின்) போட்டியிட்டார். அப்போது கலைஞர், மற்ற தலைவர்கள் வரவேண்டும். அப்போதெல்லாம் விடியவிடிய பிரச்சாரம் நடத்தலாம். எப்படியும் இரண்டுமூன்று மணி நேரம் ஆகிவிடும்; அதுவரை என்ன செய்வது என்ற நிலைமை, அப்போது, என்னுடைய மாமனார் ஆயிரம்விளக்கு நிர்வாகி உசேன், ‘மருமகன் பாடுவான்; அவனைப் பாடச் சொல்லலாமா’ எனக் கேட்க, தளபதியும் ஒப்புதல் சொல்ல, முதல் முறையாகப் பிரச்சார மேடையில் ஏறினேன். அப்போ இறைவணக்கப் பாடல்கள்தான் எனக்கு அதிகம் தெரியும். இசைமுரசு நாகூர் அனிபாவின் பாடல்கள் சிலவற்றை அடிக்கடி கேட்டதில் நல்ல மனப்பாடம் ஆகியிருந்தது. தெரிந்த பாடல்களை எல்லாம் அன்றைக்கு மேடையில பாடினேன். இரவு 10 மணிக்குத் தொடங்கினேன். பாடி முடிக்க நள்ளிரவு 1 மணி ஆகிவிட்டது. மூன்று மணி நேரம் வேறு வழியில்லாமல், பாடிய பாடல்களையே பாடி தொண்டர் கூட்டத்தைச் சமாளித்தோம். ஒருவழியாக தலைவர் கலைஞர் வந்ததும் என் பாடல் முடிந்தது.” என அன்றைக்கு நடைபெற்ற நிகழ்வை இம்மிபிசகாமல் சொல்கிறார், குத்தூஸ்.
மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா எனக் கேட்டால் சிரிக்கிறார். இவரைப் பொறுத்தவரை, தன் கடன் பாடுவதே என்கிற பாணி, அத்தோடு, தன் பணியை நிறுத்திக்கொள்கிறார்.
”கணிசமாக அனீபா பாடிய பாடல்கள், கவிதைப்பித்தன் போன்ற கட்சிக் கவிஞர்கள் எழுதிய பல பாடல்களைப் பாடுவேன். என் மாமனார் உசேன் அவர்கள்தான், பாடல்களை உருவாக்கும் வேலையைச் செய்வார். அந்தப் பக்கம் நான் போவதே இல்லை.” என ஒதுங்கியவராக இருக்கிறார்.
”1992 வாக்கில் இருக்கும், சமூக நீதிப் பேரணி, நகரின் பல இடங்கள் வழியாக மெரினா கடற்கரையில் முடிவடையவேண்டும். இசைமுரசு அனீபாவுக்காக தனி வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் வழியில் அவரைப் பாடவேண்டாம்; கூட்டத்தில் மட்டும் பாடினால் போதும் என தலைமையில் சொல்லிவிட்டார்கள். வாகனத்தில் நான் பாடியபடி சென்றேன். மயிலாப்பூர் டிடிகே சாலை சந்திப்பைக் கடக்கும்போது, ’வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா, ’ பாடலைப் பாடினேன். அது, எம்ஜிஆரும் மற்றவர்களும் கட்சியிலிருந்து வெளியேறி்யபோது உருவான பாடல். அங்கு நின்று பேரணியைப் பார்த்தபடி இருந்தார்கலைஞர், அந்தப் பாடலைத் திரும்பவும் பாடுமாறு சொன்னார் அவருடன் இருந்த அப்போதைய சென்னை மாவட்டச்செயலாளர் டி.ஆர்.பாலு அண்ணன். நானும் பாடினேன். நிறைவாக சீரணி அரங்கில் கலைஞர் பேசியபோது, பேரணியில் அனீபாவின் குரலைப் போலவே ஒருவரின் பாடல் என என்னைக் குறிப்பிட்டு பாராட்டினார்.
மறுநாள் கலைஞரைப் பார்க்க ஆசைப்பட்டு அறிவாலயம் போனேன். அங்கு தலைவர் என்னிடம், ‘அனீபா மாதிரியே பாடுறியே உன் குரலே இப்படித்தானா இல்லை பாட்டுக்காகக் குரலை மாத்திக்கிறியா’ என்று கேட்டார். அப்போது அருகில் இருந்த டிஆர்.பாலு, குரலே அப்படித்தான் என்க, உடனே கலைஞர், ‘குரல்ல மட்டும் இல்லய்யா, கொள்கையிலயும் அனீபா மாதிரி இருக்கணும்’ எனச் சொன்னது இன்றைக்கும் காதில் கேட்டபடி இருக்கிறது.” என கருணாநிதியுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
” கவிதைப்பித்தனின் ஆசை ஆசை பாடலை தலைவர் கலைஞர் கேட்டு ரசிப்பார். அதில் வரும் ‘உன் தலையில் மீண்டும் சுருள் முடி தவழ்வதைப் பார்த்திட ஆசை’ என்கிற வரியை, அவ்வளவு ரசித்துக் கேட்பார். அவரோடான இன்னொரு மறக்கமுடியாத நிகழ்ச்சி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கருப்புசாமி பாண்டியன் ஆகியோர் கட்சியில் சேர்ந்தபோது, ஆயிரம்விளக்கில் ஒரு கூட்டம், அவர்கள் ஒவ்வொருவரிடமும் என்னை கலைஞர் அறிமுகம் செய்துவைத்ததை மறக்கவேமுடியாது.” என நெகிழ்கிறார்.
கருணாநிதி காலம் தொடங்கி உதயநிதி காலம்வரை என மூன்று தலைமுறைகளாகப் பாடிவரும் குத்தூஸ், சுமார் 300 பாடல்கள்வரை பாடியிருப்பேன் என்கிறார். ஏப்ரல் 19இல் நடக்கும் தேர்தலுக்காக ஜனவரியிலேயே தொடங்கி பிப்ரவரி கடைசிக்குள் பாடல் தயாரிப்பை முடித்துவிட்டார்கள். கடைசி நேரக் கொசுறு வேலைகள் பாக்கி இருந்தன, நாம் அவரைச் சந்திக்கும்போது!
எந்தத் தேர்தல் என்றாலும் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரின் பிரச்சார வாகனத்துக்கு முன்னால் இறையன்பன் குத்தூஸ் ஒரு வாகனத்தில் பாடியபடி செல்வது நீண்ட கால வழக்கமாக இருக்கிறது. இறைநம்பிக்கையாளர்களின் பாணியில் சொன்னால், அது ஒரு செண்டிமெண்ட்!
கட்சி கொடுக்கின்ற பணம்தான் எங்களின் பயண செலவு!
தரையில பாடுவோம்,
மேடையில பாடுவோம், வண்டியில போயிகிட்டே பாடுவோம்…
சி.பி.எம். மேடையில் 35 ஆண்டுகள்!
தரையில பாடுவோம், மேடையில பாடுவோம், வண்டியில போயிகிட்டே பாடுவோம். கட்சி சொல்ற எடத்துக்கு பாடப்போவோம். எங்களுக்குனு தனி வண்டிக் கூட கிடையாது” என இயல்பாக பேசத் தொடங்கினார் புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி.
பின்னர் உரத்த குரலெடுத்து,
”ஆம வட உளுந்த வட தம்பி தவள வட… வகவகையா மோடி தாத்தா சுட்ட வட…” – என்ற வைரல் பாடலை பாடிக்காட்டி தனது 35 ஆண்டுகால கலைப் பயணத்தின் சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
“1989 சட்டப்பேரவைத் தேர்தல் என்று நினைக்கிறேன், நெல்லிக்குப்பம் தொகுதியில் சி.கோவிந்தராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு பிரச்சாரம் செய்வதற்காக தோழர்கள் ஜீவா, முருகன் இருவரும் சேர்ந்து ’செம்மலர் கலைக்குழு’வை உருவாக்கினார்கள். அப்போது நான் புதுவை ‘பான்லே’விலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டேன். என்னுடைய திறமையை அறிந்திருந்த சி.பி.எம். தோழர்கள் செம்மலர் கலைக்குழுவில் சேர்த்துவிட்டனர்.
அந்த சமயத்தில்தான் இடதுசாரி கலைஞர் சப்தர் ஹஷ்மி தாக்கப்பட்டு இறந்துபோனார். அவரின் நினைவாக செம்மலர் கலைக்குழு, சப்தர் ஹஷ்மியாக பெயர் மாற்றம் பெற்றது.
கட்சியின் வழிகாட்டுதல்படி நான் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றச் சென்றேன். அங்குதான் இன்று வரை என்னுடன் பயணிக்கும் செல்வம், சேகர், உமா, அமரநாதன், விநாயகம், பிரபு ஆகியோரைக் கண்டெடுத்தேன்.
எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள்தான் புதுகை பூபாளம் கலைக்குழுவினர். அவர்களை குடுமியான் மலையில் முதல் முறையாக சந்தித்தோம். அப்போது எங்களின் நிகழ்ச்சியைப் பார்த்து அசந்துபோன பிரகதீஸ்வரன் எங்களுடன் பயணப்படலானார்.” என நெகிழ்வுடன் பேசியவர், கலைக்குழுவின் செயல்பாட்டை சொல்லத் தொடங்கினார்.
“கலைக்குழு என்பது பொழுதுபோக்கிற்கானது அல்ல; அரசியல் செயல்பாட்டுக்கானது என்பதை வீரய்யன் போன்ற கட்சித் தோழர்கள் உணர்த்தினார்கள். அதோடு, பத்திரிகை படிப்பது, தலைவர்களின் மேடைப் பேச்சைக் கேட்பது போன்றவை எங்களை இன்னும் தயார்ப்படுத்தின. எங்களின் பாடலும் நையாண்டியும் அரசியலை மையப்படுத்தியதாகத்தான் இருக்கும்.
அரசியல் மேடைகள் மட்டுமல்லாது, த.மு.எ.க.ச. நிகழ்வுகள், அம்பேத்கர் – பெரியார் விழாக்கள், கோயில் திருவிழா மேடைகளிலும் நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இதில் கோயில் திருவிழாக்களில் மூடநம்பிக்கை பாடல்களைப் பாடமாட்டோம். மாதத்துக்கு குறைந்தது பத்து பதினைந்து நிகழ்வுகளாவது கிடைக்கும். நிகழ்வுகளுக்கு வாங்கும் தொகையை ஏழு பேரும் சமமாகப் பிரித்துக் கொள்வோம். அன்றிருந்து இன்று வரை அதுதான் எங்களின் நடைமுறை.” என்றவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு பாடப்போன அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“ஒருமுறை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் என்ற ஊரில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். அங்கு வந்த டி.எஸ்.பி. ஒருவர் பாடிக் கொண்டிருந்த மைக்கை பிடுங்கிக் கொண்டு, “தவில் வாசிப்பதுக்கெல்லாம் அனுமதியில்லை” என்றார். எங்கள் குழுவிலிருந்த சேகர் வாயாலேயே தவில், பம்பை, உடுக்கை எல்லாம் வாசிப்பார். அப்போது அவர் வாயாலேயே தவில் வாசித்தார். டி.எஸ்.பி.யால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த சம்பவத்தை, எல்லா பத்திரிகைகளும் கட்டம் கட்டி மறுநாள் செய்தி வெளியிட்டன. இப்படி ஏராளமான அனுபவங்கள் எங்கள் கலைக்குழுவுக்கு உண்டு.
ஒரு தேர்தலில் வைகோ எதிர் கூட்டணியில் இருந்தார். காரைக்காலில் வைகோவைக் கண்டித்து ஒரு பாடல் பாடிக் கொண்டிருந்தோம். அந்த பாட்டின் ராகம், வரிகளைக் கேட்டு ம.தி.மு.க.வில் மாநில அளவிலான பொறுப்பிலிருந்த ஒருவர் எங்களைப் பாராட்டி நூறு ரூபாய் கொடுத்தார். எங்கள் பாடல் எதிர்க்கட்சியினரையோ, எதிர்க் கொள்கையுடையவர்களையோ கோபம் கொள்ளச் செய்யாது; மாறாக சிந்திக்க வைக்கும்.
பொதுவாக தேர்தலுக்கு முன்னர், எங்கள் கட்சி சார்பில் கூட்டம் நடத்துவார்கள். கவிஞர்கள் பாடல் எழுதி வருவார்கள். அதை மெருகேற்றி, பின்னர்தான் மெட்டமைத்துப் பாடுவோம். தேர்தலுக்கென்று உருவாக்கப்படும் பாடல்கள் பொதுவாக கூட்டு முயற்சிதான். இந்த தேர்தலுக்கு ”மதுரை ராயப்பன்” என்ற பாடலை உருவாக்கியுள்ளோம்” என்று நிறைவு செய்தார்.
பட்டையைக் கிளப்பிய
பாவம் பிரம்மா!
மதுரையை மையமாகக் கொண்ட கலைக்குழு கார்மேகம் கலைக்கூடம். இந்தக் குழு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தது.
ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த கார்மேகம்தான், இந்தக் குழுவின் இயக்குநர். 2016ஆம் ஆண்டில் மக்கள்நலக் கூட்டணிக்காக இந்தக் குழு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அகில இந்திய மாநாடு மதுரையில் 2017 நவம்பரில் நடைபெற்றது. அப்போது, இந்தக் குழுவினர் ‘பாவம் பிரம்மா’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அது பெரும் வரவேற்பைப் பெற்றது.
நாடகக் கலைத் தன்மை கெடாமலும், சமகாலத்துக்கு ஏற்றபடியும் ஒரு நிமிட துளி நாடகங்களை, முகநூலில் வெளியிட்டு வருகிறார்கள், இந்தக் குழுவினர்.
மண்டபத்துக்குள்ள போய் தப்பிச்சோம், கட்சிக் கொடியப் பாத்து அடிச்சாங்க!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி அளவுக்கு கலைக்குழுக்கள் இல்லையென்றாலும்கூட, பகுதியளவில் ஆங்காங்கே பல்வேறு பிரச்சாரக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. வடசென்னையில் கொடுங்கையூர் பாபு என்றால், அகில இந்திய தலைவர்கள்வரை அவ்வளவு பிரபலம், மறைந்த இந்திரஜித் குப்தாவரை பாராட்டு பெற்றவர். ஜீவா கலைக்குழு, இந்திரா கலைக் குழு என பல குழுக்களும் அவரவர் பங்குக்கு பிரச்சாரத்தில் பங்கேற்கின்றன. மாநிலம் முழுக்கப் பிரச்சாரம் செய்வது, திருச்சி பாரதி கலைக் குழுதான். அதிகமில்லை ஜெண்டில்மேன் என்பதைப் போல 5 முதல் 8 பேரைக் கொண்ட குழுவாகத்தான் இவர்கள் இயங்குகிறார்கள். இதோ, இந்தத் தேர்தலிலும் தயாராகிவிட்டோம் என உற்சாகம்காட்டுகிறார்கள், பாரதி கலைக் குழு தோழர்கள்.
“நிற்கும் தொகுதியில் புதிய வேட்பாளராக இருந்தால் அவரின் வாக்குறுதிகளையும் சிட்டிங் எம்.பி.யே மீண்டும் நின்றால் அவர் செய்த செயல்களைச் சேர்த்தும் கூட்டணியால் வரும் நன்மைகளையும் சுருக்கமாகப் பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவோம். தலைவர்களின் பேச்சோடு இந்தப் பாடல்களின் வீச்சும் மக்களிடம் போய்ச்சேரும். இந்த முறை பத்தாண்டு கால மோடி ஆட்சியை விமர்சித்தும் குடியுரிமைச்சட்டம் போன்றவற்றில் அதற்குத் துணைபோன அ.தி.மு.க.வைச் சாடியும் பாடல்கள் இடம்பெறும்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எங்கள் பிரச்சாரத்தில் மறக்கமுடியாத நிகழ்வு என்றால், 91-ஆம் ஆண்டு திருச்சி, திருவெறும்பூரில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது இராஜீவின் மரணச் செய்தி வந்துவிட்டது. ஊர் முழுக்க களேபரம், நாங்களும் தப்பிக்க ஓடினோம். ஒரு தோழரின் கல்யாண மண்டபத்துக்குள் புகுந்துகொண்டோம். எங்களை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள். மூச்சுவிடாமல் சமையலறைக்குள் ஒளிந்துகொள்ள வேண்டிய நிலை, தாக்கவந்த கும்பல் வெளியில் பூட்டைப் பார்த்து திரும்பியபோது, கட்சிக் கொடிக் கம்புகளைப் பார்த்து அங்கிருந்த எங்கள் வாகனத்தை அடித்து உடைத்துப்போட்டுவிட்டுப் போனது. இப்போது போல அப்போது தொடர்பு வசதி இல்லை. டூ வீலர் வைத்திருப்பதே பெரிது. ஊரே அடங்கிப்போய் இருக்க, உணவு இல்லாமல் பக்கத்தில் சிஐடியு அலுவலகத்துக்குப் போய், பிறகு பாதுகாப்பாக வீடுபோய்ச் சேர்ந்தோம்.”என விவரிக்கிறார், கலைக்குழுவின் முக்கிய அங்கத்தினரான லெனின்.
திருமா காலம்!
தேர்தல் நேரங்களில் பிரச்சாரங்களுக்கு கலைக்குழுக்கள் தீவிரமாக இயங்கும். பல கலைஞர்கள் அணிஅணியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கின்றனர். விடுதலைக் கலை இலக்கியப் பேரவை அவர்களை ஒருங்கிணைக்கிறது. புகழ்பெற்ற குரலிசைக் கலைஞர்கள், தோலிசைக் கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை ஆற்றுகின்றனர்.
கையக் கட்டி
நாம வாயப்பொத்தி
குனிஞ்சி நின்னதெல்லாம்
தம்பி அந்தக் காலம்
----------------------------
நாங்க அடங்க மறுப்பது இந்தக் காலம்
சேரிகள் நிமிர்ந்தது திருமாக் காலம்
சீறும் சிறுத்தக் காலம்
கவிஞர் இளையகம்பனின் இந்தப்பாடலை மேடையில் யார் பாடினாலும் சரி பாடலாக ஒலித்தாலும் சரி உணர்வெழுச்சியின் உச்சிக்குச் செல்வார்கள் சிறுத்தைகள். அவர்களின் உடலில் நடக்கும் வேதிமாற்றம் அவர்களை இயக்கப்பணிகளுக்காக உந்தும் சக்தியாக மாறிவிடும். இந்தப்பாடலின் துள்ளல் இசையும் வரிகளும் மக்களைத் திரட்டும். கவிஞர் வெண்ணிலவன் அவர்களின் ‘திருமா பதிகம்’ ஆழ்ந்து கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும். வெண்ணிலவன் எழுதிய பாடல் தலைவரின் அம்மா பாடுவது போல கேட்போர் நெஞ்சம் விம்மும். ’போராளித்தலைவன்தான் எங்கள் திருமா..’ என்னும் பாடலும் அப்படித்தான்.
இந்தத்தேர்தலில் கலை வியூகமே அமைக்கப்படுகிறது. புதிய புதிய பாடல்கள். தலைவரின் உரைகளே பாடல்களின் கருப்பொருளாக மாறுகின்றன. கூடுதலாகப் பானைச் சின்னத்தை முன்வைத்து பாடல்கள் உருவாக்கப்படுகின்றன.
மக்கள் கவிஞர் இன்குலாப்பின் மனுசங்கடா பாடலைத்தான் இயக்கத்தின் பாடலாக தலைவர் அவர்கள் அறிவித்தார்கள். ஆந்திராவின் புரட்சிப்பாடகர் கத்தார் அவர்களுக்கு கட்சி விருதினைக் கொடுத்து அவரை கௌரவப்படுத்தினார் தலைவர் அவர்கள்.
இந்த நாடாளுமன்றத்தேர்தலில் இருபது கலைக் குழுக்கள் இயங்குகின்றன. இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் இருக்கும் பனிரெண்டு சட்டமன்றத்தொகுதிகளையும் கலைக் குழுக்களால் ஆக்கிரமிப்போம் . மக்களின் மொழியில் அவர்களின் வீதிகளில் வீடுகளில் எங்கள் கலைஞர்களின் எண்ணங்களும் வண்ணங்களும் போய்ச்சேரும்.
யாழன் ஆதி,
விடுதலை கலை இலக்கியப்பேரவை
வணக்கங்க மோடி!
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் வெளியிடப்பட்ட ‘வாங்க மோடி.. வணக்கங்க மோடி’ என்ற பாடல் அதன் அழகான கொங்குமண்டல பாஷைக்காக பரவலாக ரசிக்கப்பட்டது. அந்த பாடலில் பாஜகவின் முக்கிய தமிழகத் தலைவர்கள் அனைவருமே தோன்றினர். இதைத் தயாரித்தவர் கோவையைச் சேர்ந்த பாஜக கலைகலாச்சாரப்பிரிவு மாநிலச் செயலாளர் உமேஷ் பாபு.
“இந்த வாங்க மோடி… வணக்கங்க மோடி என்ற முதல் வரியைத் தந்தவர் எங்கள் வானதி அக்காதான். கொங்கு பாஷையில் மோடியை வரவேற்கும் விதத்தில் இருக்கவேண்டும் என்று அவர் சொன்னதும் மீதி வரிகளை நானும் என் நண்பர் மருத்துவர் செவ்வேல் அவர்களும் எழுதினோம். ரவி மேனன் இசையமைத்தார். ஒரே நாளில் பாடல் பதிவும் செய்துவிட்டோம். அதை காணொலியாகக் கொண்டுவரலாம் என்று சொன்னதும் அன்றைய தினம் பெரும்பாலான பாஜக தலைவர்கள் கோவையில் இருந்ததால் அவர்கள் அனைவருமே ஒத்துழைத்து காணொலிிப் படப்பிடிப்புக்குத் தோன்றினர். இரண்டே நாளில் இந்த பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த இரு நாள்களில் மோடி கோவைக்கு வந்தபோது இந்த பாடல் மிகப் பொருத்தமாக இருந்தது” என்று சொல்கிறார் உமேஷ்பாபு.
கோ பேக் மோடி என்று எதிர்க்கட்சிகள் உக்கிரமாக இருந்தபோது வாங்க மோடி என்று கொங்கு வழக்கில் ஒலித்த இந்த பாடல் அந்த தேர்தலில் சற்று பாஜகவினருக்கு இளைப்பாறுதலைத் தந்தது குறிப்பிடத்தக்கது.
அத்வானியைத் தூக்கிப்போய், கலைஞரை விட்டு விட்டார்கள்!
இரட்டையர் நையாண்டிக் குழுவாக அறியப்படும் புதுகை பூபாளம் குழுவினர், சில தொலைக்காட்சிகளில் பணியாற்றி, தொடர்ச்சியாக, திரைப்பட முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர். ஆனாலும் நையாண்டியை மட்டும் இவர்கள் விடுவதாக இல்லை; இதுவே இவர்களின் அடையாளம்.
”1991ஆம் ஆண்டிலிருந்தே உள்ளூர் அளவில் கலைக்குழுவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினேன். 96ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தில் கலை நிகழ்ச்சிகள் செய்துவருகிறோம். முன்னர் பூபாளம் நாடகக் குழுவாகத்தான் இருந்தது. நாடகத்துக்கு இடையில் இந்த நையாண்டி இருந்தபோதும், 2000ஆமாவது ஆண்டுவாக்கில் இதைத் தனியாகச் செய்யலாமென முடிவெடுக்க முடிந்தது. தொடர்ந்து அரசியல் நடப்புகளைப் பார்த்தபடியே இருக்கவேண்டும். அரசியலாக ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கும்போது, பல கஷ்டநஷ்டங்கள் வரத்தான் செய்யும். சோற்றுக்கே வழியில்லாத காலமும் வந்தது. குடும்பத் தரப்பில் ஒத்துழைப்பும் சிரமம்தான். இதனால் வரக்கூடிய இழப்பு எனக்கும் வந்தது. இன்றைக்கு நிலைமை தலைகீழ். நாம் செய்வதை சரிதான் என உறவுகள் மரியாதையோடு அணுகுகிறார்கள். அடிப்படையான விசயம், உறுதியான அரசியலில் இருப்பதுதான்.” என நறுக் சுருக்கென நம்மிடம் சொன்னார், பிரகதீஸ்வரன்.
எழுத்தறிவைப் பரப்பும் அரசின் மக்கள் இயக்கமான அறிவொளி இயக்கத்தின்போது, பத்தாவது மாணவரான செந்திலும் பூபாளம் குழுவில் இணைந்துகொண்டார்.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பு த.மு.எ.க.ச.விலிருந்து வந்தாலும் இப்போது இவர்கள் தனித்த குழுவாக- அரசியலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் மேடைகளில் வீச்சு காட்டுகிறார்கள்.
”எனக்கு 1997 புதுக்கோட்டை இடைத்தேர்தல்தான் முதல் பிரச்சாரம், அதுக்குப் பிறகு மதுரை மோகன் எம்.பி. தேர்தலுக்கு மூணு முறை நிகழ்ச்சி நடத்தியிருக்கோம். இரவு 12 மணிவரைக்கும் அப்போவெல்லாம் நிகழ்ச்சி போகும். சுதந்திர தினப் பொன்விழா ஆண்டுல புதுக்கோட்டை மாவட்டம் முழுசுமா ஆயிரம் நாடகங்கள் போட்டோம். பகல்ல பள்ளிகள், இரவுல அதே ஊர்ல மக்களுக்குனு நல்ல வரவேற்பு. அதுல வந்த துணிவுதான். இனிமே இதுதான் வாழ்க்கைனு ஆயிருச்சு. எனக்கு இந்தக் கலைல முன்மாதிரின்னா மறைந்துபோன மதுரை ஓம் முத்துமாரிதான். பாட்டும் ஆட்டமும் வசனமுமா சும்மா பிச்சு ஒதறுவாரு. இப்போ என்னதான் விஞ்ஞான வளர்ச்சி, செல்ஃபோன்லயே எல்லாம்னு சொன்னாலும், கிராமப்புறங்கள்ல மக்கள் கூடுகை இன்னும் அப்படியே இருக்கு. பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளுக்கு மக்கள் திரள்வது தொடருது. எங்களப் பொறுத்தவரை, அரசியல்ல அப்டேட்டா இருந்துக்குவோம். அவங்களுக்குப் புரியுற மொழியில, தொனியில பேசும்போது அவங்கள்ல ஒரு ஆளா ஏத்துக்கிறாங்க. அரைச்ச மாவையே அரைக்காம போன தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்கும் இடையில நடந்த முக்கியமான நடப்புகளையெல்லாம் ரசிக்கும்படியா சுவையா தரும்போது எல்லா தரப்புமே ரசிக்கிறாங்க, எதிர்க்கட்சிகள் உட்பட. கள்ளக்குறிச்சில ஒரு முறை நிகழ்ச்சியில அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருத்தர் கைகுலுக்கி பாராட்டினாரு. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில சந்திச்ச பா.ஜ.க. தமிழிசை, எங்களைத்தான் திட்டுறீங்க; ஆனாலும் பாக்கும்படியா இருக்குனு சொன்னாங்க. இப்போ கவர்னரா இருக்கிற சி.பி.ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சியில் ஒரு முறை பார்த்து, எளிய மக்கள்கிட்ட கொண்டுசேக்குறீங்கனு குறிப்பிட்டுப் பாராட்டினாரு.
புதுக்கோட்டைல ஒரு முறை கலைஞர் பிரச்சாரக் கூட்டம். 9 மணிக்கு நாங்க நிகழ்ச்சி தொடங்கினோம். 12மணி ஆகிருச்சு. அவரு 12.05-க்குதான் வந்தாரு, கையை மட்டும் காட்டிட்டு போயிட்டார். இவ்ளோ நேரம் யார் நிகழ்ச்சி நடத்தினாங்கனு கேட்டு பாராட்டியிருக்கார். இதப் போல பட்டுக்கோட்டையில ம.தி.மு.க.வுக்காக 9 மணி தொடங்கி 11 மணிவரை நிகழ்ச்சி செஞ்சோம். மேடையில அவரும் பாராட்டுனாரு.” என விவரித்த செந்திலுடன், கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்காக கலைநிகழ்ச்சி செய்ததற்காக உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு வந்து பாராட்டியதைக் குறிப்பிடுகிறார், பிரகதீஸ்வரன்.
பல்வேறு அமைப்புகளின் தலைவர்களின் பாராட்டுகளோடு, சில தாக்குதல்களையும் இந்த அணி எதிர்கொண்டிருக்கிறது. மதுரை எம்.பி. தேர்தலில் ஒரு மேம்பாலத்துக்குக் கீழே மோகனுக்காகப் பரப்புரையில் இருந்த இவர்களை, பாலத்தின் மேலிருந்து ஒரு கும்பல் பொருள்களை வீசித் தாக்கியிருக்கிறது. வடசென்னை எம்.பி. தொகுதியில் அப்போது தி.மு.க.வை எதிர்த்து சிஐடியு அ.சவுந்தரராசன் போட்டியிட்டபோது, அத்வானியைக் கலைஞர் தூக்கியபடி செல்வதாக மாறுவேடம் போட்டிருக்கிறார்கள். அத்வானி வேடமிட்டிருந்தவரை தி.மு.க. தரப்பு தூக்கிக்கொண்டுபோயிருக்கிறது. கலைஞராக வேடமிட்டிருந்த செந்தில் நல்வாய்ப்பாகத் தப்பியிருக்கிறார்!
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எனச் சொல்லாமல் சொல்கிறார்கள், பூபாளம் குழுவினர்.
பாடல்கள் தயார்!
பொதுவாக, எங்கள் கட்சியில் பிரச்சாரம் தொடங்கும் இடங்களில் மக்களைக் கூட்டுவதற்காக, கலை நிகழ்ச்சிகளை நடத்துவோம். பெரும்பாலும் தொழில்முறைக் கலைக்குழுக்களையே இதில் ஈடுபடுத்துகிறோம். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கலைஞர்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். காணை சத்தியராஜ், திருப்பூர் கலாராணி போன்ற பலர் எங்கள் கட்சியின் கலைஞர்கள். அவர்களே தனியாக கலைக்குழுக்களையும் நடத்துகிறார்கள். கட்சியின் பிரச்சாரம் என்றால் ஈடுபாட்டோடு பங்கேற்பார்கள். வழக்கமாக, சினிமா மெட்டில் பாட்டுகளைப் பாடுவது என இல்லாமல், இந்த முறை தெருக்கூத்து வடிவத்தில் பிரச்சாரத்தை எடுத்துச்செல்லத் திட்டமிட்டிருக்கிறோம். நான்கு பேர் உரையாடுவார்கள், நடுநடுவே பாடல்கள் பாடுவார்கள், கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியின் பாதிப்புகள் குறிப்பாக பண மதிப்பிழப்பு போன்றவற்றையும் 15 இலட்சம் வங்கியில் போடுவது போல கொடுத்த வாக்குறுதிகளைச் செய்யாதது, மோடி ஆட்சியின் ஜனநாயகவிரோத நடவடிக்கைகள், காங்கிரஸ் ஆட்சிகளின் சாதனைகள், இந்தியா கூட்டணியின் இளம் தலைவர் இராகுல்காந்தியின் தேர்தல் வாக்குறுதிகள், பெண்கள், தொழில்முனைவோர், இளைஞர்கள் என பல தரப்பினருக்கும் காங்கிரஸ் தரும் கேரண்டிகளை எடுத்துச்சொல்லக்கூடிய வகையிலான கவிஞர் இளைய கம்பனின் பாடல்களும் தயாராகிவிட்டன. பிரச்சாரத்தில் இவை கனமாக ஒலிக்கும்’’
கே. சந்திரசேகரன்,
தலைவர்
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு
தொகுப்பு : தமிழ்க்கனல், தா. பிரகாஷ்