எடப்பாடி பழனிச்சாமி 
சிறப்புப்பக்கங்கள்

வாக்காளப் பெருமக்களே... இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?

Staff Writer

அது 1991-96. அ.தி.மு.க ஆட்சி.

‘ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுக்கூட்டத்தில் தி.மு.க பேச்சாளர் வெற்றிகொண்டான் பங்கேற்பார்' என அறிவிப்பு வெளியானது. 'எப்படியும் அம்மா ஆட்சிக்கு எதிராகத்தான் பேசுவார்; வெற்றிகொண்டானுக்கு பதிலடி கொடுத்து நல்ல பெயரை வாங்க வேண்டும்' என அதிரடிக்குத் தயாரானார், ஸ்ரீவில்லிபுத்தூரின் மகுடம் சூடாத மன்னனாக இருந்த தாமரைக்கனி. ரயில் நிலையத்தில் வைத்தே, வெற்றிகொண்டானின் கார் மீது கடப்பாரை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் படுகாயத்தை எதிர்கொண்டார், வெற்றிகொண்டான். அன்று முதல் இறப்புக்கு ஓரிருஆண்டுகள் முன் வரையில் தி.மு.க.வின் கொள்கை களை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதில் தனக்கென ஒரு கூட்டத்தை அவர் வைத்திருந்தார்.

‘அ.தி.மு.க எதிர்ப்பு' என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து களமாடியதன் விளைவாக, மரணிக்கும் தருவாயிலும் 66 வழக்குகளை சுமந்து கொண்டிருந்தார், வெற்றிகொண்டான். எந்தவிதமான பதவியையும் அனுபவிக்காமலும் அவர் இறந்துபோனார். இது ஒரு காலம்.

இன்று நடப்பது என்ன?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ‘மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க கூட் டத்தில் பங்கேற்பார்' என ஒரு பேச்சாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது.

'சம்பந்தப்பட்டவர் இறந்து நான்காண்டுகள் ஆகிவிட் டதே?' எனப் பதறியடியே கூறப்பட, ‘அப்படியா.. பெயரை நீக்கிவிடுகிறோம்' எனப் பதில் கிடைத்து உள்ளது. ஆனாலும், மறு ஆண்டும் அவரது பெயர் பேச்சாளர் பட்டியலில் இடம் பிடித்ததுதான் கொடுமை என நம்மிடம் வருத்தம் பகிர்ந்தார் பேச்சாளர் ஒருவர்.

‘ஒரு பேச்சாளர் உயிரோடு இருக்கிறாரா... இல்லையா?' என்பதையே கட்சி நிர்வாகிகள் அறிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் பேச்சாளர்களின் நிலை இருக்கிறது என்பது எவ்வளவு பெரும் துயரம்.

அதைவிட பேச்சாளர்களை வாட்டிய சம்பவம் இது. 2021 சட்டமன்ற தேர்தல். கட்சியின் தலைமை நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட பேச்சாளர்களிடம், 'நீங்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவேண்டாம். கோடை விடுமுறையை கொண்டாடுங்கள்' எனக் கூறி தலைக்கு பத்தாயிரம் ரூபாயை கொடுத்தனுப்பியுள்ளனர். இதன் பின்னணியில் ‘தேர்தல் வியூக நிபுணரை' கை காட்டினார்கள். அவர் அறிவுறுத்தலின் பேரில் இப்படியொரு முடிவு எடுப்பட்டதாகவும் தகவல். மக்களிடம் கட்சியின் கொள்கை, தலைவரின் செயல்பாடு, மக்களிடம் தலைவர் சொல்ல நினைக்கும் கருத்துகளை மாவட்டம்தோறும் கூட்டங்களை நடத்தி கொண்டு சென்றது, பேச்சாளர்கள்தான். ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டமும் இந்தி திணிப்பும் தி.மு.க என்ற இயக்கத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, தமிழகத்தில் முடிவுக்கு வந்ததற்கு காரணம், திராவிட இயக்கப் பேச்சாளர்களின் தெருமுனைக் கூட்டங்கள்தான்.

அதன் வளர்ச்சி உச்சத்தை அடைந்த காலத்தில் தி.மு.கவின் பிரசார பீரங்கியாக எம்.ஜி.ஆர் இருந்தார். பிரபல நடிகராக இருந்தாலும் தி.மு.க மேடைகளில் அதிகளவில் பங்கேற்று, கட்சியை வளர்த்தெடுத்தார். அவர் தி.மு.கவை விட்டு வெளியேறியபோது, அவருடன் பல நிர்வாகிகள் சென்றார்கள். அதன்பிறகு, தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளிலும் ஏராளமான புதிய பேச்சாளர்கள் வளர்ந்தார்கள். கழகப் பேச்சாளர்கள் அணி என்பது ஒரு கலாச்சாரமாக வளர்த்தெடுக்கப்பட்டது.

ஒரு கட்சியின் முதுகெலும்பாக பேச்சாளர்களைப் பார்த்த காலங்கள் இருந்தன. கொடிக்கம்பமும் பொதுக்கூட்டமும்தான் கழகங்களை வளர்த்தன. நன்னிலம் நடராஜனோ, வெற்றி கொண்டானோ.. தீப்பொறி ஆறுமுகமோ பேசுகிறார்கள் என்றால் மூன்று மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் அடித்துவிடுவார்கள்.

ஒன்றரை மாத காலம், பெட்டிக் கடைகளிலும் சுவர்களிலும் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும். அந்த நோட்டீஸ் மூலம் ஒரு மாதம் கட்சியை வளர்ப்பார்கள். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நன்கொடை வாங்குவார்கள். கூட்டத்துக்கும் உரிமையோடு வந்து மக்கள் அமர்வார்கள். விடிய விடிய உட்கார்ந்து பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு ரசித்தார்கள்.

சற்று ஆபாச நெடி வீசினாலும் அதை ரசித்துக் கொண்டாடும் காலம் இருந்தது. அதே பாணியை தற்போது கடைப்பிடிக்கப் போய் தேசிய மகளிர் ஆணையம் வரையில் சைதை சாதிக் எதிர்கொண்ட சிக்கல்களும் வெகுபிரசித்தம். அன்றைக்கு பேச்சாளர்கள் மூலம் கட்சியின் கொள்கைகளும் மக்கள் மத்தியில் சென்றடைந்தன. பேச்சாளர்களுக்கு மக்களே பணம் கொடுத்தார்கள். இன்று கூட்டத்துக்கு வருவதற்கே பணம் கொடுத்து கூட்டி வரவேண்டிய நிலை.

இன்றைய காலகட்டத்தில் எந்தத் தொழில்முறைப் பேச்சாளருக்கும் எந்தக் கட்சியிலும் அங்கீகாரம் இருப்பதாக தெரியவில்லை. அதை தொழிலாகவே செய்து வந்தவர்கள் எல்லாம், அதிகாரமுள்ள பதவிகளுக்கும் வரவில்லை. திருச்சி சிவா, குத்தாலம் அன்பழகன், கோவி.செழியன் உட்பட்ட சிலருக்கே பதவிகள் கிடைத்தன.

தற்போது, ஆண்டுக்கு ஒரு பொற்கிழி வாங்கும் அளவுக்கு பேச்சாளர்களின் நிலை மாறிவிட்டது. பெரும்பாலான பேச்சாளர்கள்,சிரமத்தில்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள். கூட்டத்தைக் கேட்க வரும் மக்களை ஏஜென்சிகள் மூலம் அழைத்து வரப்படுவதால், அவர்களும், ஏழு மணி ஆனாலே இருக்கையைவிட்டு எழுந்து சென்றுவிடுகிறார்கள்.

‘தெருமுனைகளில் கட்சியை வளர்ப்பதைவிடவும் ஆன்லைனே போதுமானது' என கட்சிகள் நினைக்கத் தொடங்கியதன் காரணமாக, திராவிடக் கொள்கை களை வளர்த்தெடுக்கும் பேச்சாளர்கள் அருகிப் போய்விட்டனர். பயிற்சிப் பாசறைகளை நடத்து வதைவிடவும் ‘பேச்சாளன் எப்படியிருக்கிறான்' என்பதை கவனிக்கவும் கழகங்கள் தவறிவிட்டன என்ற வருத்தம் இருக்கிறது.

திமுகவில் கடந்த சில தேர்தல்களில் தலைமைப் பேச்சாளராக மு.க. ஸ்டாலின் தான் மாநிலம் முழுக்கச் சென்று முழங்கிவந்தார். இந்த தேர்தலில் அந்த பளுவை உதயநிதி குறைக்கக்கூடும். திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவருமே நல்ல பேச்சாளர்கள்தாம் என்பது அக்கட்சியின் பலம்.

பேச்சாளர்கள் பலவிதம்.. சம்பளம் பல ரகம்!

தற்போது தி.மு.க பேச்சாளர்களில் வி.பி.ராஜன், ஈரோடு இறைவன், கோவி செழியன், குத்தாலம் அன்பழகன், சூர்யா வெற்றிகொண்டான், புலவர் நன்மாறன், தஞ்சை கூத்தரசன், பொன்னேரி சிவா, கந்திலி கரிகாலன், சைதை சாதிக், தமிழன் பிரசன்னா எனப் பலர் உள்ளனர். இவர்களை கிரேடு 1,2,3 என வகைப்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சமீபகாலத்துக்கு முன்வரை கிரேடு 1 பேச்சாளர் என்றால் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகளுக்குச் சென்று ஒரு மணிநேரம் பேசலாம். இவர்களுக்கு 15,000 ரூபாய் பணம் கிடைக்கும். கிரேடு 2 என்றால் சிறப்பு பேச்சாளருக்கு துணையாக செல்வார். இவருக்கு 5,000 ரூபாய். கிரேடு 3 என்பது மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பேச்சாளர்கள். இவர்களுக்கு 1,500 ரூபாய் கொடுப்பது வழக்கம்.இப்போது இந்த தொகையில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்.

‘ அம்மா (ஜெயலலிதா) உயிரோட இருந்த வரைக்கும் அடிக்கடி பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள். அதனால், தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கும் பேச வாய்ப்பு கிடைக்கும். இன்னைக்கு நிலைமை அப்படியல்ல. பொதுக்கூட்டங்களும் பிரசார கூட் டங்களும் குறைந்துவிட்டதால் வருமானமும் போய்விட்டது. ஆனாலும் உயிர் இருக்க வரைக்கும் அ.தி.மு.க.தான், இரட்டை இலைதான்' -  ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த தலைமைக் கழக பெண் பேச்சாளர் பாரீஸ் ராஜாவின் வார்த்தைகளாக ஊடகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பகிரப்பட் டவை இவை.

அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருந்தவரையில், மாவட்டம்தோறும் பேச்சாளர்களை அழைத்து கூட்டங்களை நடத்தி வந்தனர். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், உள்ளூர் நிர்வாகிகள், பேச்சாளர்களுக்கு கணிசமான தொகையை கொடுத்து கவுரவிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

2016 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்களில், ஜெயலலிதா, தம்பிதுரை, ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, வேணுகோபால், அன்வர் ராஜா, பி.குமார், விஜிலா சத்யானந்த், எஸ்.ஆர். விஜயகுமார் உட்பட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தப் பட்டியலில் த.மா.கா.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நாஞ்சில் சம்பத், நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், சிங்கமுத்து, வையாபுரி, தியாகு, குண்டுகல்யாணம், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றன.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் ஆகியோர் இடம்பெறவில்லை. அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்கு இவர்கள் ஆளாகியிருந்ததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. அதன் காரணமாகவே, நத்தம் தொகுதியில் இருந்து விலகி, ஐ.பெரியசாமியை எதிர்த்து ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு தோற்றதாகவும் தகவல் வெளியானது.

அதுவே, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது மேற்கண்ட பட்டியலில் இருந்த பலரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. நடிகை விந்தியா, குண்டு கல்யாணம், சிங்கமுத்து, ஆர்.வி.உதயகுமார், ரவி மரியா ஆகியோர் தவறாது இடம் பிடித்தனர். கூடவே, இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், அஜய் ரத்தினம், வெண்ணிற ஆடை நிர்மலா, காதல் சுகுமார் போன்றோரும் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தனர்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் பிரசார மேடைகளில் திரைக் கலைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களில் ராமராஜன் உட்பட்ட பலர், எம்.ஜி.ஆர் மீதான விசு வாசத்திலும் ஜெயலலிதா மீதான அபிமானத்திலும் பிரச்சாரம் செய்து வந்தனர். இதற்காக, திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் களமிறக்கப்பட்டார், ராமராஜன். ஆனால், அடுத்து வந்த காலங்களில் பொருளாதாரரீதியாக மிகுந்த சிரமத்துக்கு ஆளானார். அவரின் துயரைத் துடைக்க அ.தி.மு.க சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.

தற்போது அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களாக பத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பேச்சாளர்கள் பட்டியலில் அக்கட்சி வைத்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதியில் தொடங்கி நடிகை விந்தியா, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் ஐக்கியமான கல்யாண சுந்தரம் வரையில் பொதுக் கூட்ட மேடைகளை அலங்கரிக்கின்றனர்.

இவர்களில் நட்சத்திர பேச்சாளர்களாக இருந்தால் ஐம்பதாயிரம் ரூபாய் வரையில் தரப்படுகிறதாம். உள்ளூர் பேச்சாளர்களுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையில் வழங்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் பேச்சா ளர்களைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

‘தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சமூக வலைதளங்களில் மட்டும் கட்சியின் கிளைக் கழகத்தை வளர்க்காமல் வீதிகள்தோறும் மக்களிடம் பேசும்போதுதான் கட்சி வளரும்; எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருந்தவரையில் கிடைத்த மரியாதை எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில் தொடர வேண்டும்‘ என்பதே அ.தி.மு.க பேச்சாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிமுகவில் பெரிய ஆச்சர்யமாகப் பார்க்கப்பட் டது கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி மேற்கொண்ட பிரச்சாரம். தானொரு விவசாயி என்று முன்வைத்துக்கொண்ட அவர் மாநிலம் முழுக்க சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டார். எளிமையான மொழியில் ஒரு கிராமவாசியைப் போல் பேசி வாக்கு கேட்டார். 66 இடங்களில் அதிமுகவால் அப்போது வெல்லவும் முடிந்தது. இந்தத் தேர்தலில் அதிமுகவில் ஸ்டார் பேச்சாளராக அவர்தான் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரஸ் கட்சியிலும் ஒரு காலத்தில் மிகப்பெரிய பேச்சாளர்கள் இருந்தனர். இப்போது அங்கும் இதே நிலைதான். கட்சியின் மூத்த தலைவர்களும் பொறுப்பில் இருப்பவர்களும்தான் பேச்சாளர்கள். ப.சிதம்பரத்தைத் தவிர்த்து இன்றைய தேதிக்கு அக் கட்சியில் கூட்டத்தைக் கட்டிப்போடும் அளவுக்குப் பேசுகிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர். பாமகவில் அன்புமணி ராமதாஸ், ஓய்வு ஒழிச்சலின்றி தேர்தல் பிரச்சாரத்தில் சுற்றி வரக்கூடியவர். அவரும் சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். இடதுசாரியில் தலைவர்கள் எல்லோருமே நன்றாகப் பயிற்சி பெற்ற பேச்சா ளர்கள்தான். புதிதாகக் கட்சிப் பொறுப்புக்கு வருகிறவர்களும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இன்றைய தமிழக அரசியல் களத்தில் மிகச்சிறப்பாகப் பேசக்கூடியவர் தொல்.திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் சார்பாக ரவிக்குமார், சிந்தனைச் செல்வன், வன்னியரசு, ஆளூர் ஷாநவாஸ் போன்றோரை இந்த பிரச்சாரக் களத்தில் பார்க்கமுடியும்.

நாம் தமிழர் கட்சிக்கு சீமானின் உரைகளே பலம். மனிதர் கையை மடக்கி ஆக்ரோஷமாகப் பேசுகிறவர். நாடக பாணியைக் கையிலெடுத்துப் பேசும் திராவிடப் பேச்சாளர்களின் உத்தி. அவரது பேச்சில் இருக்கும் காரச்சுவை, பார்வையாளர்களைக் கட்டிப்போடுவது.

கழகப் பேச்சாளர்களும் வழக்குகளும்

கழகங்களில் பேச்சாளராக இருப்பதில் ஓர் ஆபத்து, இப்போதெல்லாம் எக்குத்தப்பாகப் பேசி னால் ஆதாரத்துடன் பிடித்து வழக்குப் போட்டு விடுகிறார்கள். இல்லையெனில் கட்சியில் இருந்து கட்டம் கட்டிவிடுகிறார்கள். நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவானது. தொடர்ந்து, கைது நடவடிகைக்கும் ஆளானார். இவர் மீது ஆளுநர் ஆர்.என்.ரவியை அவதூறாக பேசிய வகையிலும் வழக்கு ஒன்று பதிவானது. இதனால் தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.

இதேபோல் பேச்சாளர் சைதை சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் பதிவானது. டெல்லியில் உள்ள மகளிர் ஆணையத்துக்கே சென்று, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார், சைதை சாதிக். கூட்டத்தில் உணர்ச்சிவயப்பட்டு பேசிவிட்டு பின்னர் ‘அவதூறாக இனி எவரையும் பேச மாட்டேன்' என அந்தப் பேச்சுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்ளும் காட்சிகள் இப்போது சகஜமாகிவிட்டன!