பால்யத் தோழமை- முகவுடன் கி.வீரமணி 
சிறப்புப்பக்கங்கள்

மறக்க இயலாத மாட்டுவண்டிப் பயணம்!

கி.வீரமணி

ரோட்டு குருகுல வாச மாணவர்கள் நாங்கள். கலைஞர் இளம் வயதிலேயே ஒரு சிறந்த அமைப்பாளராக இருந்தவர். தஞ்சை மாவட்டத்தில் 1946 இல் திராவிட மாணவர் கழக சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்ள நானும் தந்தை பெரியாரால் அனுப்பப்பட்டேன்.

இருக்கிறதிலேயே சின்னப் பையனாக இருக்கும் நான் மேஜையில் ஏறி நின்றுதான் பேசுவேன்.

சிறுவன் என்பதால் இரவில் பேச தாமதமானால் இடையில் தூங்கிவிடுவேன். கலைஞர் அப்பகுதியில் நடக்கும் கூட்டங்களில் எங்களுடன் கலந்துகொள்வார். அப்படி ஒருமுறை நெடும்பலம் அருகே புஞ்சை சங்கேந்தி என்ற  என்ற கிராமத்தில் கூட்டம். பேசிவிட்டு இரவு ஒருவரின் வீட்டுத் திண்ணையில் படுத்துவிட்டோம். அது கோடை காலம். விடிகாலையில் முதல் பேருந்தில் ஏறி திருத்துறைப்பூண்டி போகவேண்டும். எங்களுடன் கலைஞரும் படுத்திருந்தார். இரவு இரண்டரை மணி இருக்கும். எங்களை அவர் எழுப்பிவிட்டார்.‘ஒரே கொசுக்கடி... தாங்க முடியவில்லை. எப்படித் தூங்குகிறீர்களோ தெரியவில்லை? என்னால் தூங்கவே முடியவில்லை; நாம் இரவோடு இரவாக திருத்துறைப்பூண்டி போய்விடுவோமே' என்றார்.

நிகழ்ச்சி அமைப்பாளரிடம் கேட்டபோது இரவில் பேருந்து ஏதும் இல்லை என்றார். வேறு என்ன வசதி இருக்கிறது என்று கேட்டால் பக்கத்து வீட்டில் மாட்டுவண்டி இருக்கிறது என்றார்கள். அதைப் பூட்டச் சொல்லி அது எங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. அதில் மேற்கூரை ஏதும் இல்லை. இருபுறமும் முளைக்குச்சிகள் செருகப்பட்டிருக்கும். அதிலே நாங்கள் நான்கு பேர் ஏறிக்கொண்டு ஒருவர்மேல் ஒருவர் தூங்கி விழுந்துகொண்டே ஆடி அசைந்து பயணம் செய்தோம். கலைஞர் அப்போது பேண்ட் அணிந்திருப்பார். நாங்கள் மூன்றாம் வகுப்பு ரயில் பயணிகள் போல் பயணம் செய்தோம். அப்போதைய கிராமத்துசாலைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.

ஒருவழியாக விடிகாலை ஐந்து மணி அளவில் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருக்கும் நாங்கள் போய்ச்சேரவேண்டிய இல்லம் போய்ச் சேர்ந்தோம். அந்த வீட்டில் யாரையும் எழுப்ப எங்களுக்கு மனமில்லை. கலைஞர் வண்டியைத் திருப்பி அனுப்பிவிட்டார். அப்படியே எல்லோரும் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டோம். காலையில் அந்த வீட்டுக்காரர்கள் எங்களைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்துபோனார்கள். வந்த நேரத்தில் எழுப்பி இருந்தால் வீட்டுக்குள் வசதியாகப் படுத்திருக்கலாமே என அவர்கள் கடிந்துகொண்டனர். இல்லை அந்நேரம் உங்களை எழுப்பக்கூடாது என்பதால் வெளியே படுத்துக்கொண்டோம் எனச் சமாளித்தோம்.

 இதுபோல் அந்தக் காலகட்டத்தில் இயக்கக் கூட்டங்களுக்காக பல கடினமான பயணங்களில் அவருடன் சென்றுள்ளேன். அக்காலகட்டத்தில் என்னை சைக்கிளில் ஹேண்டில்பாரில் உட்கார வைத்து பல மைல் தூரம் மிதித்து, கூட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கலைஞர். எனக்கு அன்றும் சரி; இன்றும் சரி சைக்கிள் ஓட்டத் தெரியாது என்ற உண்மையை  சொல்லியே ஆக வேண்டும்!

அச்சமயம் தவமணி ராசன், பேராசிரியர், நாவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட திராவிட மாணவர் கறுப்புச்சட்டைப் படை  மாநாடு திருத்துறைப்பூண்டியில் ஒரு தியேட்டரில் காலை நேரத்தில் நடந்தது. அதில் ‘திருவாரூர் மு கருணாநிதி'யும் கலந்துகொள்வதாக ஏற்பாடு. நானெல்லாம் பேச்சாளராக இருந்தாலும் கலைஞர் வரும்போது அவரை அழைத்துவருவதற்காக ரயில் நிலையத்துக்குச் சென்று சென்று இருந்தோம். எல்லோரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்த நண்பர்கள். இவர் மாநாட்டுத் திறப்பாளர். திருவாரூரில் இருந்து அவர் வரவேண்டும். இவர் ரயிலில் இருந்து சோர்வாக இறங்கினார். கையைப் பிடித்து இறக்கினோம். கறுப்பு நிற ஷெர்வானி அணிந்திருந்தார். அறைக்கு வந்தவுடன் சட்டையைக்கழற்றினார். உடல் முழுக்க கொப்புளங்கள். எனக்கு அம்மை போட்டுள்ளது. நான் வராமல் இருந்தால் நன்றாக இருக்காது.

சொன்னாலும் வீட்டில் விடமாட்டார்கள். அதனால்தான் ஷெர்வானி அணிந்து நன்றாக மறைத்துக்கொண்டு வந்துவிட்டேன், நான் பேசிவிட்டு உடனே சென்றுவிடுகிறேன் என்றார். அவர் தனியாக இருந்துவிட்டு பேசிச்சென்றார். எவ்வளவு உடல்நலக்குறைவு இருந்தாலும் உணர்வுடன் வந்து பேசிச்சொல்வார். அங்கே கண்டியூர் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் இந்தியை எதிர்த்துப் பேசியபோது மேடையிலேயே அவர் மயங்கி விழுந்துவிட்ட சம்பவமும் உண்டு.

1967 தேர்தல் முடிவுக்குப் பின்னர் தந்தை பெரியார் எனக்கு தோல்வி அனுபவம் முதல்முறை அல்ல. இதை எப்படி வெற்றிகரமாக ஆக்கிக்கொள்வது என்பது எனக்குத் தெரியும் என்று எழுதினார். அதன் பின்னர் அண்ணா சென்று பெரியாரை சந்தித்து இணக்கம் ஏற்பட்டது எல்லோருக்கும் தெரியும்.  அண்ணா பெரியாரை  சென்று சந்திக்கவேண்டும் எனக் கூறியபோது, இவ்வளவு கடுமையாக எதிர்த்தவரைச் சென்று சந்திப்பதா என  கட்சியிலேயே சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அண்ணாவுக்கு மிக உறுதியாக இருந்து ஆதரவு தெரிவித்தவர் கலைஞர். அதை பின்னாளில் எங்களிடம் கலைஞர் கூறி இருக்கிறார். பெரியாரை சந்திக்கப் போவது ரகசியமாக வைத்திருந்து, திருச்சியில் அந்த சந்திப்பு, அன்பில் தருமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

திருச்சியில் தமிழ் காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசி இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அதைப் பெரிய பிரச்னையாக மாற்ற முயன்றார்கள். அதைச் சரிசெய்ய திமுக பிரமுகர் கபாலி ஏற்பாட்டில் மந்தைவெளி அருகே பெரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய கலைஞர் தனக்கே உரிய பாணியில், தமிழை கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த மொழி என்கிறார்கள். அதற்குப் பொருள் ஆதிகாலத்து மொழி என்பதே. அதைத்தான் பெரியார் மேல்போக்காக காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியிருக்கிறார் எனப் பேசினார். ஆனால் பெரியார் பேச வந்தபோது கலைஞர் சொன்னதைச் சுட்டிக் காட்டி, ‘ இதுபோல் கருணாநிதி சொன்னார். நான் காட்டுமிராண்டி மொழி என்று ஏன் சொன்னேன்? இது திருத்தப்படவேண்டிய மொழி என்பதால் சொன்னேன். அவர் ஒப்பனையெல்லாம் பண்ணி சொன்னார். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்,' என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். இரவு எங்களுக்கு உணவு கபாலி இல்லத்தில் ஏற்பாடாகி இருந்தது.  கலைஞர் சிரித்துக்கொண்டே..'அய்யா என்றால் அய்யாதான்.. நாம் எப்படித்தான் விளக்கம் சொன்னாலும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார்!' என்றார். தந்தை பெரியாரோ,' மொழியைப் பற்றிய என் கருத்து என்பது... ஒரு பழைய கட்டடம் வெகு நாட்களாக  உள்ளது என்றால்... அது ரிப்பேர் பார்க்கப்படவேண்டியது என்றுதானே அர்த்தம்!' என்று பதில் சொன்னார்.

அண்ணா அவர்கள் மறைந்தபிறகு யார் முதல்வர் பொறுப்புக்கு வருவது என்ற சூழல் இருந்தபோது நாவலர் போன்ற மூத்தவர் இருக்கையில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதா என்ற இரட்டை மனநிலை குழப்பம் கலைஞர் அவர்களிடத்து நிலவியது. ஆனாலும் கோ. சி. மணி போன்ற சிலர் அவரை அப்பதவிக்கு நீங்கள் தான் வரவேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போதிருக்கும் சூழலில் கலைஞர்தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்ற தொலைநோக்கு  பெரியாரிடம் இருந்தது.

‘நீங்கள் போட்டியிடவேண்டும், இது என் கட்டளை' என நான் சொன்னதாக அப்படியே போய்ச் சொல்லுங்கள் என என்னிடம் சொல்லி அனுப்பினார். இதன் முடிவு தெரிகிற வரை  நான் காத்திருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். எதையும் கடைசிவரைக்கும் பார்ப்பவர் பெரியார். அன்று நாகப்பட்டினத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள பெரியார் சென்றுவிட்டார். அங்கே மாலையில் ஒரு பொதுக் கூட்டம் அதை முடித்துவிட்டு திரும்பவேண்டும். அதே நாளில்தான் முதல்வரை தேர்வு செய்யும் தேர்தல் நடப்பதாகத் திட்டமிட்டிருந்தார்கள். அவருக்கு தேர்தல் முடிவை தொலைபேசி மூலம் தெரிவித்தேன். மறுநாள் காலையில் அய்யா வந்தபிறகு அவரை அழைத்துக்கொண்டு கலைஞர் அண்ணா நினைவிடம் சென்று  மாலை அணிவித்து மரியாதை செய்வித்தார்.

கலைஞரைப் பொருத்தவரை நகைச்சுவை உணர்வு அதிகம். அவருக்கு முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் சென்றிருந்தோம். அவருக்கு மயக்க மருந்து கொடுத்திருந்தார்கள். அதில் இருந்து மீள்கிறபோது தண்ணீர் கேட்டால் கொஞ்சமாக கொடுக்கச் சொல்வார்கள். இது வழக்கமான முறைதான். கலைஞருக்கும் அப்படியே செய்யுமாறு கூறப்பட்டது. அவர் மயக்கத்தில் இருந்து விடுபட்டதும் தண்ணீர் கேட்க, நாக்கை நீட்டச் சொன்ன செவிலியர் அவருக்கு சில சொட்டுகள் மட்டுமே  கொடுத்துள்ளார். திரும்பவும் கலைஞர் கேட்க, அதே போல் சில சொட்டுகள் மட்டுமே தாப்பட்டன.  உடனே கலைஞர் கேட்டிருக்கிறார்: அம்மா... உன் பெயர் என்னம்மா? காவிரியா? இதைக் கேள்விப்பட்டு புன்னகை புரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாதவர் இருக்கமுடியாது. மயக்கமருந்தில் இருந்து மீண்டு வருகிறபோதும் சென்ஸ் ஆப் ஹ்யூமர்! அதுவும் அரசியலை நினைத்துக் கொண்டு... இது ஆச்சரியப்படுத்தக்கூடிய ஓர் இயல்பு.

அவருடன் சந்திக்கும்போது பழைய விஷயங்களை எல்லாம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். கண்ணதாசனைப் பற்றிய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அவர் நினைவுகூர்வார். அது கலைஞர் முதல்வர் ஆவதற்கு முந்தைய காலகட்டம். கண்ணதாசன் ஒருமுறை எல்லோரும் இருக்கையில் தான் பாண்டிச்சேரியில் வரும் தேர்தலில் நிற்கப்போவதாகச் சொல்லி இருக்கிறார். கலைஞர், ‘யோவ் கவிஞரே.. உம்மால் பாண்டிச்சேரியில் நிற்க முடியாது' என சீரியஸாகச் சொல்லி அவரைச் சீண்டியிருக்கிறார். ‘ ஏன், நான் அங்கே போய் நிற்கமாட்டேன்,' என நினைக்கிறீர்களா என்று கவிஞர் பதில் கேள்வியை அப்பாவித்தனமாகக் கேட்டுள்ளார். மீண்டும், ‘பாண்டிச்சேரிக்கும் போனால் உங்களால் நிற்கமுடியாது' என கலைஞர் சொல்லிவிட்டு சிரித்து இருக்கிறார். இதன் உள்ளர்த்தம் புரிந்து மற்றவர்களும் சிரிக்க ஆரம்பிக்க, சற்று தாமதமாகப் புரிந்துகொண்ட கண்ணதாசனும் மிகவும் ரசித்து சிரித்துள்ளார்.

நெருக்கடி காலத்தில் அவரது உள்ள உறுதிதான் கட்சியைக் காப்பாற்றியது. அவருடைய கடிதங்கள் நூலாக வெளியானபோது அதை வெளியிட்டு நான் பேசினேன். அப்போது இப்படி நான் சொன்னேன்: ‘முழுமையான கலைஞரை முதலமைச்சராக இருக்கையிலோ கலைத்துறையில் இருக்கையிலோ காண முடியாது. எதிர்ப்புகளை சந்திக்கையில்தான் முழுமையான கலைஞர் வெளிப்படுவார்' அதற்கு எவ்வளவோ உதாரணங்களை நாம் பார்த்துள்ளோம்.

பெரியார் மரணமடைந்தபோது அவருக்கு அரசு மரியாதை கொடுக்க டக்கென்று அவர் முடிவெடுத்த நிகழ்வு ஒன்றே போதும். அது நாங்கள் யாரும் கேட்காமல் அவரே எடுத்த முடிவு. அது தொடர்பான சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே அது புதிய செய்தி அல்ல. ஈவிகே சம்பத் அப்போது காங்கிரஸில் இருக்கிறார். காமராஜர் அப்போது சம்பத்திடம் சொன்னாராம்: ‘கருணாநிதி செய்தது மிகப்பெரிய செயல். நானே முதலமைச்சராக இருந்திருந்தாலும் இதைச் செய்ய யோசித்திருப்பேன். அந்த துணிச்சல் அவருக்கே உரியது!' -இது சம்பத் அவர்கள் மணியம்மையாரிடம்  பகிர்ந்துகொண்ட செய்தி.

கலைஞர் அவர்களை கடைசிக் காலங்களில் சந்தித்தபோது கைகளைப் பற்றிக்கொண்டே ஒரு குழந்தைபோல் அவர் சொன்னார்: ‘கூட்டத்துக்குப் பேசப் போவோமா?' அவர் இருந்த உடல்நலச் சூழலில் இதைச் சற்றும் எதிர்பாராத நானும் ‘வாங்கய்யா போகலாம்' என்ற பதிலை மட்டுமே சொல்ல முடிந்தது!

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)