ஓவியம்: பி.ஆர்.ராஜன்
சிறப்புப்பக்கங்கள்

தொக்கம்

சிறப்புப் பரிசு ரூ.2500 பெறும் கதை

நெய்வேலி பாரதிக்குமார்

ஆச்சி இப்படி மூக்கைய்யா வீட்டுத் திண்ணை வரைக்கும் இழுத்துக் கொண்டு வரும் என்று தங்கப்பாண்டி கொஞ்சம்கூட நினைக்கவில்லை. ஆனால் ஆச்சிக்கு பாசம் எவ்வளவு அதிகமோ அதைவிட பிடிவாதம் ரொம்ப அதிகம்.

ஆச்சியின் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த தண்டட்டி வெய்யிலின் விரல்கள் பட்டு மின்னலை விசிறிக்கொண்டிருந்தது.. தங்கப்பாண்டி பக்கம் திரும்பி “கொஞ்சம் பொறுத்துக்க ராசா கூட்டம் கொறைஞ்சிகிட்டே இருக்கு.. பாத்துடலாம்” என்று தன் கரடு பாய்ந்த கரங்களால் அவனை வருடினாள். முள்வேலியில் ஒரு துணுக்கு எடுத்து உடலில் வருடுவது போல இருந்தது. ஆனால் அது தங்கப்பாண்டிக்கு எப்பொழுதும் சுகமான வருடல். அரித்த இடத்தில் சொரிவது போல.. ஆச்சியின் பாசம் கொஞ்சம் வன்மையானது. ஆனால் தப்பவே விரும்பாத அன்பின் வலை ஆச்சியுடையது. இந்த வயதிலும் தங்கபாண்டிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வக்கணையாக செய்து தருவாள். அப்பாவின் கோபம் அதி பயங்கரமானது. அவர் தாண்டவமாடும்போதெல்லாம் ஆச்சிதான் அவரோடு மல்லுக்கட்டுவாள். தாயில்லா பிள்ளை என்று எல்லாவற்றிலும் ஆச்சியின் செல்லம் அதிகம். ”எனக்கு ஒண்ணுமில்லே ஆச்சி சொன்னா கேக்க.....” முடிப்பதற்குள் வயிற்றிலிருந்து ஏதோஒன்று உருண்டு வாய் வரை வந்தது போல ஒமட்டியது. ஒவ்வே என்று அவனையறியாமல் குரல் கொடுத்தான்.   ”பாத்தியா ஒண்ணுமில்லை .ஒண்ணுமில்லைன்றே இப்படி ஒமட்டறே” பதறிப்போய் எழுந்து அவன் தலையைப் பிடித்துக்கொண்டாள். தங்கப்பாண்டிக்கு தலை சுற்றியது. இரண்டு நாட்களாக சரியான ஆகாரமில்லாமல் கிறக்கமாக இருந்தது..

”வுடு ஆச்சி எனக்கு ஒண்ணுமில்லை.. நீயும்தான் காலையிலேர்ந்து எதுவும் சாப்புடலை ரெண்டு நாளா பசியே இல்லைன்றே அப்ப ஒன் வயித்துலேயும் யாரோ மருந்து வச்சிட்டாங்களா..? ஒனக்கும் தொக்கம் பாத்துரலாமா?”        ”இப்படி ஏகடியம் பேசக்கூடாது.. நா கெழ மட்டை நீ எளங்குருத்து ரெண்டும் ஒண்ணு ஆவுமா?..செத்த பேசாம இரு கண்ணு... மூக்கையன் கில்லாடி எப்பேர்ப்பட்ட கல்லு,மருந்து, மாயம்னாலும் ஊதி எடுத்துடுவான். இருவது வருசமா சுத்துப் பட்டி கிராமத்துல் இருக்கற சனம் பூரா அவனாலதான் நடமாடிக்கிட்டு இருக்கு.. கெட்டிக்காரன்”

”ஏன் ஆச்சி வசியம் பண்ணுன மருந்தையும் எடுத்துருவாரா” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த நடுத்தர வயது அம்மணி கேட்டாள்.

“அவன் கிங்கரன் வசியம் மட்டுமா? செய்வினை, பில்லி, சூனியம் எதுவா இருந்தாலும் ஒன் கண்ணுக்கு முன்னால கொண்டு வந்து நிறுத்துவான். உசிலம்பட்டி லச்சாதிவதி லட்சுமண செட்டிக்கு எவனோ நைசா சோத்துல வைரக்கல்லை வச்சி குடுத்துருக்கான். செட்டி சரியான நேரத்துல இங்கிட்டு வந்துட்டாரு. கரைஞ்சிருந்தா செட்டி பரலோகம்தான் தம்மாத்துண்டு குழாயி அத வாயில வச்சி ஊதி எடுத்துட்டான்.எமன் ஏமாந்து போயி கொல்லைப்பக்கமா எருமையை ஓட்டிக்கிட்டு ஓடியே போயிட்டான்னு ஊரு பூரா பேச்சு” அவ்வளவுதான் ஆச்சியைச் சுற்றிலும் வைத்தியரைப் பார்க்க காத்திருந்த கூட்டம் காதுகளை வசதியாகத் திருப்பிக்கொண்டு அவள் பக்கம் நகர்ந்தது. கேட்பதற்கு ஆள் இருந்தால் ஆச்சியின் சொற்களுக்கு ஒவ்வொரு உறுப்பாக மெல்ல முளைக்கும். சிறகுகளும் கிளைக்கும். அவ்வளவுதான் அசந்த நேரத்தில் எல்லோரது கண்ணெதிரிலேயே வார்த்தைகள் ‘விருக்’கென்று விண்ணில் பறக்கும். .

“மெய்யாலுமா?”

“அட இப்ப உக்காந்திருக்கிறியே இம்மாம்பெரிய வீடு.. இந்த திண்ணை.. ஏதுங்கறே? எல்லாம் உசிலம்பட்டி செட்டியாரு கெட்டிக்குடுத்தது. சும்மாவா? பல லட்சம் கோடிக்கு அதிபதி.. உசுரு போனா பொட்டிக்கடையில வாங்கிற முடியுமா?”

“அதுக்கும் முன்னால?”

“மூக்கையனுக்கு வீடு ஏது? வேப்ப மரத்தடியில உக்காந்து கிளி சோசியன் மாதிரி தொக்கம் பார்த்துக்கிட்டு இருந்தான். உள்ளூரு சனத்துக்கு அவன் அருமை அப்ப தெரியலை வண்டி கட்டிக்கிட்டு மருதையில் இருந்து சாரி சாரியா வந்து வவுத்துவலி, வெனை வெச்சிட்டாங்க, சூனியம் வெச்சிட்டாங்கன்னு சனம் குவியுது.. அப்பறமில்லை டிகிரி ஏறிப்போச்சு மூக்கையனுக்கு”

“அந்த ஆளுக்கு காலு வெளங்கலைன்னு எங்க ஊருப்பக்கம் பேசிக்கிட்டாங்க”

‘உஷ்’ என்று வாயில் விரல் வைத்து சத்தத்தைக் குறைக்கச் சொன்னாள் ஆச்சி.

பிறகு ரகசியக்குரலில் “அது ஒரு ஆக்சிடெண்ட். ரெண்டு காலுமேலேயும் வண்டி ஏறிப்போச்சு அதுலதான் வேப்ப மரமே கெதியா கெடந்தான். காலுக்கு வைத்தியம் பண்ணப்போன எடத்துலதான் தொக்கம் எடுக்கக் கத்துக்கிட்டான்னு பேச்சு.. ஒண்ணு போச்சுன்னா ஒண்ணு வரும்னு சொல்லுவாங்கல்லே”

“கொஞ்சம் பேசாம் இருங்கம்மாசும்மா தொணதொணன்னுக்கிட்டு..” என்று அதட்டினான் மூக்கையாவின் உதவியாளர் ஒருவன்.மூக்கையாவுக்கு ஆறு உதவியாளர்கள். எல்லோரும் முரட்டுத்தனமாகத்தான் இருப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போதே அச்சமாகத்தான் இருந்தது தங்கப்பாண்டிக்கு.. மூக்கையாவைப் பார்க்கப்போகும் முன் அவர்கள்தான் சில கேள்விகள் கேட்பார்கள். அவர்களை எதிர்கொள்வதே பெரும் சவாலாகத்தான் இருக்கும் என்று ஹரிகிருஷ்ணன் பயமுறுத்தி இருந்தான். போதாதற்கு பக்கத்து வீட்டு வேலுச்சாமி வேறு ‘மூக்கையனிடம் எதுவும் தப்பாது கிடுக்கிப்பிடி போட்டு கண்டுபிடித்துவிடுவான்’ என்று ஏகத்துக்கும் திகிலேற்றி இருந்தான்.

எல்லாம் இந்த மாணிக்கம் பயலால் வந்த வினை,, அவன்தான் ஒண்ணும் ஆகாதுன்னு பழக்கத்தை தொற்ற வைத்தான். இரண்டு நாட்களாக வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி.....இன்னொரு பக்கம் செடிக்கு தண்ணீர் ஊற்றும் பூவாளி கணக்காக வயறு பிடுங்கி அடித்தது. வாயில் எதையும் வைக்க முடியவில்லை. அப்பாவை நினைத்தால் இன்னும் நடுங்கியது. ஒருமுறை பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சினிமாவுக்குப் போனதை யாரோ அவரிடம் போட்டுக்கொடுத்துவிட காட்டாமாணி குச்சியை எடுத்து விளாசித் தள்ளிவிட்டார் அதுவும் மாணிக்கம் பயலால வந்த வினைதான். அவனோடு பழகுவதற்கும் முன் இப்படி எல்லாம் துணிச்சல் வந்ததில்லை.. ஆனால் அவனிடமிருந்து தப்ப முடியாது ஒரேஒரு வறுத்த மணிலாப்பயிரை ருசித்துவிட்டால் அடுத்த கணமே மணிலா பயிறு நிரம்பியத் தட்டை விரல்கள் எப்படித் தேடுமோ அப்படி அவனைத் தேடத் தொடங்கிவிடும் மனம்.

மாணிக்கம்தான் முதன்முதலில் அந்த மாதிரி படங்கள் நிறைந்த புத்தகத்தை யாருக்கும் தெரியாமல் வகுப்பில் எடுத்து வந்து அரைகுறையாகக் காட்டினான். மிச்சத்தை மணியக்காரர் தென்னந்தோப்பில் காட்டுகிறேன் என்று ஆசைகாட்டி பள்ளி முடிந்ததும் அங்கு அழைத்துச் சென்றான். தென்னந்தோப்பு காய்ப்பு இல்லாத காலங்களில் மதிய நேரத்தில் கூட பயமாக இருக்கும். அந்தி சாயும் நேரம் என்றால் லேசாக வீசும் காற்று கூட காதருகே வந்து அச்சுறுத்தும். ஆனால் இம்மாதிரி தோப்புதான் எல்லா குஜாலுக்கும் ஏற்ற இடம் என்று கண்ணடித்துச் சொல்லுவான் மாணிக்கம். புத்தகத்தை அத்தனை சுலபத்தில் பிரித்துக்காண்பித்துவிட மாட்டான். ஏகத்துக்கும் ஆட்டம் காட்டுவான்.

“சீக்கிரம் காமிடா லேட்டா போனா அப்பா, தோலை உறிச்சி தொங்க வுட்டுருவாரு”

“போடா பயந்தாங்கொள்ளி.. இப்படி இருந்தா ஒண்ணையும் அனுபவிக்க முடியாது. ஸ்பெஷல் க்ளாஸ்.. ஹோம் வொர்க் அப்படின்னு அட்சி விடனும்”

“சரிடா சரிடா சீக்கிரம் காமி” என்று அவசரப்படுத்தினான் தங்கப்பாண்டி.

ஒவ்வொரு பக்கமாக மெதுவாகப் புரட்டிக் காண்பித்தான்.

“என்ன டென்ஷன் ஆவுதா?”

“ஆமாடா”

“இந்தா இதை பத்து வச்சு ரெண்டு இழுப்பு இழு.. எல்லா டென்ஷனும் பறந்துடும்” என்று பையில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்டினான்.

“என்னடா இது பொசுக்குன்னு நீட்டறே.. இதெல்லாம் வேணாம்.. எங்கப்பா காதுக்கு போச்சு கொடலை உருவி மாட்டுக்கொட்டாயில மாலையா மாட்டிருவாரு”

“சுத்த வெண்ணையா இருக்கே.. ஒங்கப்பாரு காதுலயா ஊதப்போறே? எவன் பாக்குறான் இங்க? ஒருத்தனும் வரமாட்டான்.. சும்மா பத்த வை மாப்ளே பயமெல்லாம் பஞ்சா பறந்துடும்”

சொன்னதோடு அல்லாமல் தானே பற்ற வைத்து அவன் வாயில் செருகினான். இருமல் தொண்டை எல்லாம் பரவி உணவுக்குழாயில் நிரம்பி புகைந்தது.

“கர்மம் எப்படிடா குடிக்கறே இதை.. ஒரு மண்ணும் இல்லை.எதுக்குடா குடிக்கறே?”

“உலகமே அதைக் கண்டுபிடிக்கிறதுக்காகத்தான் இன்னும் புகைச்சிக்கிட்டு இருக்குது இதுவரைக்கும் யாரும் கண்டுபிடிக்கலை.. ஆனா மாப்ளே ஒரு கெத்து வரும் பாரு”

இரண்டாவது சிகரெட்டை இருமல் வராமல் குடிப்பதே பெரும்பாடாக இருந்தது.

“இப்பதாண்டா நீ ஆம்பளை.. குத்துக்காலு போட்டு உக்காராம அப்படி அசால்ட்டா கால் மேல கால் போட்டுக்கிட்டு குடிச்சுப்பாரேன் ஒரு தெனாவெட்டு வரும் பாரு”

மாணிக்கம் சொல்லும்போது திரையின் அபிமான கதாநாயகர்களெல்லாம் கண்முன் வந்து போனார்கள்.. அப்பாவின் முகம் மறைந்து போனது.

வாரத்தில் இரண்டொரு நாட்கள் இப்படியாகத் தோப்பில் கழிந்தது. பேசிப்பேசியே ஹரியையும் ஒரு நாள் அழைத்து வந்துவிட்டான் மாணிக்கம்

“இவனை ஏண்டா கூட்டிட்டு வந்தே.. இவன்கிட்டதாண்டா சமயத்துல எங்கப்பா என்னையப்பத்தி துப்பு ஆராய்வாரு.. அப்படியே போட்டுக் குடுத்துடுவான்டா” ரகசியக்குரலில் மாணிக்கத்திடம் சொன்னான் தங்கப்பாண்டி..

“அதுலதான் நம்ம ராஜதந்திரமே இருக்கு.. நாம ஒரு தப்பு பண்றோம்னா எவன் நமக்கு ஆப்பு வைப்பான்னு நெனைக்கறமோ அவனையும் கூட்டுல சேர்த்துக்கனும். அப்பதான் போட்டுத்தள்ள மாட்டான். அப்புறம் சிகரெட்டை ஒருத்தனா வாங்கி கட்டுப்படியாவலை மாப்ளே ரெண்டு பேரை பழக்கிவிட்டாத்தானே ஓசியில நாலு வாங்கி குடிக்கமுடியும்” என்று விகாரமாகச் சிரித்தான் மாணிக்கம்.

அடப்பாவி என்று அவனை ஒருகணம் திரும்பிப் பார்த்தான்.

“சரி சரி மொறைக்காதே எங்க சித்தப்பா சிங்கப்பூர் போயிட்டு போன வாரம்தான் வந்தாரு. அவரு நாலு பெர்ஃயூம் பாட்டில் எடுத்து வந்தாரு இந்தா உனக்கு ஒண்ணு” இப்படித்தான் அவன் மீது கோபம் வரும்போதெல்லாம் எப்படியாவது நைச்சியம் பண்ணிவிடுவான்.

“டேய் பாட்டிலே செமையா இருக்கு”

“அதான் சிங்கப்பூரு.. அவர்கிட்டேர்ந்து ஒரு சிங்கப்பூர் சிகரெட் பாக்கெட்டை லவட்டிட்டேன்.” என்று தன் சட்டைப்பையில் இருந்து அழகான சிகரெட் பெட்டியை எடுத்தான்.

“டேய் இதெல்லாம் ரொம்ப தப்பு”

“இதை எல்லாம் வாங்கி குடிக்கனும்னா ஃபிளைட் ஏறி சிங்கப்பூர்தான் போகனும் கையில கெடைச்ச தங்கத்தை தவற விடலாமா?” சிகரெட்டை வெளியில் எடுத்து பெட்டியின் மீது தட்டிக்காண்பித்தான்

ஒரு கண்ணை மூடிக்கொண்டு “என்ன வேணுமா? வேணாம்னா பரவாயில்லை ஹரி அங்க நாக்கைத் தட்டிக்கிட்டு உக்காந்திருக்கான். நாளைக்கு வெற்றி தியேட்டர்ல மேட்னி டிக்கெட் , ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித் தர்ரீயான்னு கேட்டேன் ஓகேன்னு சொல்லிட்டான் அதனால அவனுக்கு கூட ரெண்டு சிகரெட்” என்று கால்களை ஆட்டிக்கொண்டுக் கேட்டான்.

இந்திய சிகரெட்டுகள் வெள்ளையாகவே பார்த்துப்பழகிய தங்கப்பாண்டி அது மெரூன் நிறத்தில் மெலிதாக இருந்தது பார்க்கக் கவர்ச்சியாக இருந்தது.

“சரி குடு”

“இந்தா இப்ப உனக்கும் திருட்டுல பங்கு உண்டு வச்சுக்க”

“என்னடா சொல்றே?”

“என்ன நொன்னடா சினிமாவுல எல்லாம் பார்த்ததில்லே.. ப்ளான் போடறவன் ஒருத்தன். லவட்டறவன் ஒருத்தன். அப்படித்தான்..இதுவும் சரி சரி ரொம்ப டெர்ரர் ஆகாதே மேட்னி முடிச்சிட்டு மீனாட்சி பவன்ல டிபன் வாங்கி குடுத்துடு என்ன சரியா?” என்றபடி அந்த சிகரெட்டைக் கையில் கொடுத்தான்.

மூக்கையா வீட்டுத் திண்ணையில் முதல் கட்ட விசாரணை நடக்கும். அதில் வியாதி, ஊர், வருட வருமானம் வாகன வசதி எல்லாவற்றையும் கேட்பார்கள். அதன் பிறகு உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீர், எலுமிச்சை சாறு, துளசித் தண்ணி, பழச்சாறு, மோர் என்று ஆளுக்கு தகுந்தாற்போல தருவார்கள். கையில் வாங்கிச்சென்ற வெற்றிலைப்பாக்கு வாழைப்பழம், பூ இவற்றை வைத்து சூடம் ஏற்றிக் கும்பிடவேண்டும். அதன் பிறகே மூக்கையாவின் தரிசனம் கிடைக்கும். 500 ரூபாய் தட்சிணை வைத்தபிறகு மூக்கைய்யா ஒரு ஜாண் அளவு குழாயை எடுத்து ஒரு முனையை தன் வாயில் வைத்துக்கொண்டு மறுமுனையை நோயாளியின் வாயில் வைத்து உறிஞ்சுவது போல செய்வார். பிறகு தன் வாய்க்கு வந்து விட்ட சிறு கல், சிறு தகடு, கயிறு,தலைமுடி என்று எடுத்து “இனி சரியாகி விடும்” என்பார். ஒரு சிலருக்கு ஒரே நாளில் இரண்டு மூன்று முறை எடுப்பார்.. சிலரை இரண்டொரு நாள் வரச்சொல்வார். இதற்கு பெயர்தான் தொக்கம் எடுத்தல், வெளியூரிலிருந்துதான் அதிகக் கூட்டம் வரும். மூக்கையாவால் ஊருக்குள் தேநீர்க்கடை. பெட்டிக்கடை, சிறிய உணவு விடுதி என புதிது புதிதாகக் கடைகள் தோன்றின.

ஹரிகிருஷ்ணன் எப்படியோ மோப்பம் பிடித்துக்கொண்டு தங்கப்பாண்டியைத் தேடி மூக்கைய்யா வீட்டுக்கே வந்துவிட்டான். ஆதரவாக அமர்வது போல தங்கபாண்டியின் பக்கத்தில் உட்கார்ந்தான். பிறகு மெல்லிய குரலில் “மாணிக்கம் உடம்பு ரொம்ப கெடுபிடியா இருக்காம். டவுன் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க.. குளுக்கோஸ் ஏத்துறாங்களாம்”

“சும்மா இருடா நானே குடலு புடுங்கி கொத்தவரங்கா மாதிரி கெடக்கேன் நீ வேற பேதியை கெளப்புறே... மூக்கைய்யா கண்டுபிடிச்சிடுவாராடா?”

“அந்த ஆளு எம்டன்டாவயித்துல எது கெடந்தாலும் ஊதியே எடுத்துடுவாராம்எங்க அப்புச்சி சொன்னிச்சு.. அவந்தான் குடுத்தான்னு நீ ஏண்டா கஞ்சா அடிச்சே?”

“டேய் யோக்கியம் வாயை மூடு... அன்னிக்கு நீ ஸ்கூலுக்கு வரலை. ஒன் மாமன் வூட்டுக் கல்யாணம்னு ஒன்னை ஊருக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க அதனால தப்பிச்சே இல்லைன்னா இன்னிக்கு ஆசுவத்திரியிலோ இல்லை எங்கூட வயித்தைப் புடிச்சுகிட்டோ கவுந்து கெடந்திருப்பே. என்னமோ காந்திக்கு கொள்ளுப் பேரன் மாதிரி பேசறாரு”

“போன மாசம் திருமங்கலத்துலேர்ந்து ஒர்த்தன் வந்திருக்கான். உள்ளேர்ந்து கஞ்சாப் பொடியை உறிஞ்சி எடுத்து அவன் கையிலேயே குடுத்துட்டாராம்”

“எட்டி ஒதைச்சேன்னு எட்டு ஊரு தாண்டி வுழுவே. மவனே நானே கிலியில கெடக்கேன்.. இன்னும் ஊதிக்கிட்டே இருக்கே.. வாயைக் கழுவுடா மொதல்லே”

அந்த நேரம் “தம்பி நீ உள்ள போகலாம்.. சவுந்தரபாண்டி மவந்தானே நீனு” என்று கேட்டான் மூக்கையாவின் உதவியாளர். எப்படியோ அடையாளம் கண்டுபிடிச்சிடறாங்க என்று மனதுக்குள் சலித்தபடி ஆச்சியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

மூக்கையா மேலே சட்டை எதுவும் அணியாமல் பெரிய மெத்தை ஒன்றில் அமர்ந்திருந்தார். மழுங்கடிக்கப்பட்ட முகம், நெற்றியின் இந்தப்புறத்திலிருந்து அந்தப்புறம் வரை திருநீறு பட்டையாக பூசப்பட்டிருந்த்து. கருத்த பெருத்த உடலுக்கு பொருத்தமில்லாமல் இரண்டு கால்களும் மெலிந்து செருகப்பட்டதுபோல் இருந்தன. மூக்கையாவை வெளியில் அதிகம் பார்க்கமுடியாது. எப்பொழுதாவது வெளியில் வந்தாலும் காரில் செல்வதுதான் அவர் வழக்கம்.

அருகில் அழைத்து “என்ன பிரச்சினை?” என்றார்.

“புள்ளை ரெண்டு நாளா எதுவும் சாப்பிடலை அய்யா.. எதைத் தின்னாலும் ஒரே வாந்தி.. இல்லைன்னா நோவு கண்ட ஆடு மாதிரி கழியுது.. புள்ளை தொவண்டு போச்சு அய்யா”

“சரி வாயைத் தொற தம்பி”

அச்சத்துடன் வாயைத் திறந்தான். அருகில் வந்து உற்றுப்பார்த்தார். இமைகளைப் பெரிதாக்கி கண்களைப் பார்த்தார். பிறகு அவன் கைகளைப் பற்றி நாடி பிடித்தார். சிறிது நேரம் கண்களை மூடி பிரார்த்தித்தார்.

மறுபடி “வாயைத் திற” என்று சொல்லி தன்னிடமிருந்த சிறு குழாயின் ஒரு முனையை அவனது வாயில் வைத்து தலையை ஆட்டி ஆட்டி காற்றை உறிஞ்சுவது போல உறிஞ்சினார். பிறகு தன் வாயில் இருந்து சிறு கற்களை எடுத்தார்.

“ஒண்ணுமில்லை. செரிக்காத ஒண்ணுதான் கல்லா கெடக்கு.. இன்னும் ரெண்டு தரம் தொக்கம் எடுத்தா பூரா வந்துடும்” ஒரு உதவியாளனை அழைத்து மறுபடி உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரை எடுத்து வரச்சொல்லி தங்கபாண்டியிடம் குடிக்கச்சொன்னார்.

”இங்கேயே என் கூட .இரு இன்னும் ரெண்டு தரம் எடுத்துடலாம். ஆச்சி நீங்க கொஞ்சம் வெளியில இருங்க” என்று அனுப்பினார். உதவியாளனிடம் சைகையால் ஏதோ சொன்னார். சில நிமிடங்களில் அவருக்கான சாப்பாடு வந்தது.

அறையில் இருந்த எல்லோரையும் அனுப்பிவிட்டு தங்கபாண்டியை மட்டும் அருகில் அழைத்தார்.

“எத்தினி நாளா இந்தப் பழக்கம்?” என்று குரலைக் கடுமையாக வைத்துக்கொண்டு கேட்டார். தங்கபாண்டிக்கு உள்ளுக்குள் கருந்தேள்ஊர்வது போல இருந்த்து.

“எந்தப் பழக்கம் அய்யா?”

“அடிச்சு பேத்துருவேன்.. சவுந்திர பாண்டிகிட்ட சொல்லட்டா?”

அவ்வளவுதான் தங்கபாண்டிக்கு வயிறு ராட்டினத்தில் சுற்றியது போல கலங்க ஆரம்பித்துவிட்ட்து. கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர்ப் பெருகி வழிந்த்து.

“பல்லுல காரை.. வாயில நாத்தம்.. எனக்குத் தெரியாதா? சொல்லு”

“ஒரு தரம்தான் குடிச்சுப்பாருன்னு கஞ்சாவை ஃபிரெண்டு குடுத்துட்டான். தெரியாம குடிச்சிட்டேன் அப்பாருகிட்ட சொல்லிடாதீங்க அடிச்சுத் தொங்கப்போட்டுருவாரு”

“ஓ கஞ்சா வேறயா? நான் சிகரெட் குடிக்கறதைக் கேட்டேன்”

’அப்ப நாமளாதான் ஒளறிட்டமா.. இந்தாளு கண்டுபிடிக்கலையா?” மனதுக்குள் நொந்துகொண்டான் தங்கப்பாண்டி.

“இந்தக் காலு ரெண்டையும் பாத்தியா?” மூடியிருந்த போர்வையை விலக்கிக் காண்பித்தார். கோரமாக இருந்தது. கால்கள் இரண்டும் கறுப்பு புடலங்காய் போல துவண்டு மடிந்திருந்தன.

“எப்படி ஆச்சு தெரியுமா? உனக்கு வாய்ச்ச மாதிரிதான் எனக்கும் ஒருத்தன். அவந்தான் சாராயம் குடிக்கப் பழக்குனான். புத்தி பேதலிச்சுப்போச்சுன்னா நல்லவன் மொகம் கண்ணுக்குத் தெரியாது. ஈனப்பயலும் ஈத்தரையும்தான் பசக்குன்னு வந்து ஒட்டிக்குவான்”

ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்தார். பிறகு மறுபடியும் தங்கபாண்டிக்கு உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரைக் கொடுத்தார்.. குடிக்க கஷ்டமாக இருந்தாலும், அவருக்குப் பயந்து ஒரே வாயில் குடித்துமுடித்தான்.

“பல்லு வெளக்கறதுக்கே அவனுக்கு பட்டைச்சாராயம் வேணும். மொதல்ல வாங்கிக்குடுத்துப் பழக்குனான். அப்புறம் நம்மகிட்டயே கறந்து மூணு மடங்கா குடிச்சிடுவான். அதுக்குள்ள நாம பழக்கத்துக்கு அடிமையாயிடுவோம். அப்படித்தான் ஆயிட்டேன். இங்க தடை பண்ணிட்டாங்கன்னு பார்டர் தாண்டி கேரளா போயி குடிச்சோம். ஊரு வந்தா கெடைக்காதுன்னு மூக்கு முட்டக்குடிச்சோம். ரெண்டு பேரும் குடிச்சுட்டு ஆளில்லாத நடுரோட்டுல இருட்டுல கெடந்திருக்கோம். எவனோ வண்டிக்காரன் ஏத்திட்டுப் போயிட்டான். கூடக்கிடந்தவன் ஸ்பாட்டுலேயே காலி.. எனக்கு ரெண்டு காலும் இப்படி ஆயிடுச்சு. பார்டர் தாண்டுற அளவுக்கு இருந்த உடம்பு இப்ப பாத்ரூம் கூட தனியா போவ முடியாது”

அவரது கண்களில் இருந்து அவரையறியாமல் கண்ணீர் வழிந்தது.

“வயசுலதான் சேக்காளிங்க கெடைப்பாங்க நல்ல தண்ணியில நம்ம வேர் பரவுச்சுன்னா பூக்கும் காய்க்கும். நல்லதா கெடைக்கும். நச்சுத்தண்ணியில நம்ம காலு பாவிட்டா எல்லாம் அழுகிடும். பொம்பளைப் புள்ளைங்க கூட பழகிடலாம். அவளைக் கெட்டுவியோ கெட்டமாட்டியோ ஆனா அவ நம்மளை நல்லவனாக்கத்தான் பார்ப்பா... குடிக்காதே, சிகரெட் புடிக்காதேன்னு கெடுபுடி பண்ணுவா. அவளுக்கு பயந்தாச்சும் கெட்டப்பக்கம் போவ மாட்டே. ஆம்பளைப் பசங்களை கூட்டாளியா சேக்கறச்சே கவனமா இருக்கனும்யா. ஒர்த்தன் நம்மளை மலை மேல ஒசத்தி வச்சிடுவான் அதே சமயம் இன்னொருத்தன் பாதாளத்துல தள்ளி வுட்ருவான், நாமதான் சூதானமா இருந்துக்கனும்”

சரிதான் என்று தங்கபாண்டிக்குத் தோன்றியது. ஆமென்று தலையாட்டினான்.

“சுத்தி நிக்கறானுங்களே இந்தப் பயலுக எல்லாம் எனக்கு அசிஸ்டண்டுன்னா நெனச்சுக்கிட்டு இருக்கே? எல்லா பயலுகளும் வேவு பாக்கறானுங்க. இவனுங்கதான் மொள்ள மொள்ளமா பிசினசுக்கு கொண்டு வந்தது. எனக்கு கொஞ்சம் மேஜிக் தெரியும். கண்ணு அசங்கற நேரத்துல கை வேற வேலை பாத்துடும். அதைப் பார்த்துதான் வேப்ப மரத்தடியிலேர்ந்து இங்க தூக்கிட்டு வந்து பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. இங்க வர்றவங்களைப் பத்தி முன்னமே துப்பு குடுத்துடுவானுங்க அதை வச்சித்தான் பொருளை எடுக்கறேன். எனக்கும் வயித்தைக் கழுவனும்லே?”

“ஒரு செட்டியார் வாயிலேர்ந்து வைரக்கல்லு எடுத்தீங்கன்னு சொன்னாங்க”

“அந்த செட்டி வேசம் போட்டவன் இப்ப ஆரணிகிட்ட எங்கயோ கூத்து கட்டிக்கிட்டு இருக்கான்னு கேள்வி. வைரம் மாணிக்கம் கண்ணாடிக் கல்லு எது வேணும்னாலும் எடுக்கலாம். தெறம வேணும் அவ்வளவுதான். கஞ்சாவை, சிகரெட்டைத் தொடாதே. தொட்டா உங்கப்பன்கிட்ட சொல்லி உரிச்சிடுவேன் நான் சொன்னா எல்லாரும் கேள்வி கேக்காம

நம்புவாங்க ... இங்க நாம பேசுனதை நீ சொன்னா ஒரு பய காதுல போட்டுக்க மாட்டான்.. அதனால... நீ புத்தியா பொழச்சிக்கனும்னுதான்.இதை எல்லாம் சொன்னேன்.” என்று தன் இடுப்பருகே போர்த்தியிருந்த் போர்வையை அகற்றினார். அங்கிருந்த தட்டில் பலவகையான பொருள்கள் இருந்தன. அதில் பளபளவென்று கண்ணாடி போல மின்னிய கற்கள், தகடு, தலை முடி, முட்டை ஓடு, வாழை நார், அரக்கு நிறப்பொடி என யாவும் இருந்தன.

 ஆளாளுக்கு தகுந்தாற்போல் எடுக்கும் சாமர்த்தியம் மூக்கையாவுக்கு இருந்தது. தனக்கும் நல்லதை தேர்ந்தெடுக்கும் சாமர்த்தியம் வேண்டும் என்று தோன்றியது. தலைசுற்றல் குறைந்து தங்கப்பாண்டிக்கு மெல்ல மெல்லத் தெளியத் தொடங்கியது..

நெய்வேலி பாரதிக்குமார்

நெய்வேலி பாரதிக்குமார் என்கிற புனைப்பெயரில் எழுதிவரும் ச.செந்தில்குமார், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் முதன்மை மேலாளராக  (Chief Manager) பணிபுரிகிறார்.

நான்கு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கவிதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல், ஏழு கட்டுரை நூல்கள் ஒரு நாடக நூல், எடிசனின் வாழ்க்கை வரலாற்று நூல்  உட்பட மொத்தம் 18 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டிலில் மின்நூல் ஒன்று வெளிவந்துள்ளது.  இதுவரை 50-க்கும் மேற்பட்ட  இலக்கியப் போட்டிகளில்    பரிசுகள் பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.