நெல்லை இருட்டுக் கடை 
சிறப்புப்பக்கங்கள்

தமிழ்நாட்டின் இனிப்பு வகைகள்

அ. முத்துக்கிருஷ்ணன்

தமிழ்நாடு முழுவதும் 30 வருடங்களாக குறுக்கும் நெடுக்குமாக அலைந்து வருகிறேன், இடைத்தீனிகள், இனிப்புகளின் மீது எனக்கு எப்பொழுதும் பெரும் விருப்பம் உண்டு. உணவுகள் சமைக்க ஒரு திறன் வேண்டும் எனில் இனிப்புகளுக்கு கூடுதல் சிறப்புத் திறன்கள் வேண்டும், பக்குவம் வேண்டும். இனிப்புகள், இடைத்தீனிகள் கடும் உழைப்பை மட்டும் அல்ல நுட்பங்கள் கோருபவை. அதனால் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விதம்விதமான தீனிகள், இனிப்புகள் உருவாகியுள்ளன. அவை அந்த நிலத்தின் பருவம், விளைச்சல், கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

நாஞ்சில் நாட்டில் ஏத்தங்காய் வற்றல், உப்பேறி, பலாக்கொட்டை உருண்டை, பூவரசன் இலை கொழுக்கட்டை, அவல் வரட்டல், பலாப்பழ இனிப்பு தோசை, உள்ளி வடை, அச்சுமுறுக்கு, முந்திரிக்கொத்து, மனோகரம், கருப்பட்டி அதிரசம், சுத்துமுறுக்கு, அரிசி சீடை, நேந்திரம்பழம் அப்பம், பலாக்காய் சிப்ஸ் என தனித்த ருசியுடன் நம்மை அழைத்தபடி இருக்கும்.

நெல்லையில் இருட்டுக்கடை அல்வா, சாந்தி ஸ்வீட்ஸ் கடைகளில் அலைமோதும் கூட்டத்தைத் தாண்டி நாம் கொஞ்சம் ஊருக்குள் எட்டிப்பார்த்தால் அங்கே கருப்பட்டி பாயாசம், மடக்குப் பணியாரம், பனை ஓலை கொழுக்கட்டை, கருப்பட்டி அல்வா, பனங்கற்கண்டு லட்டு மண்ணின் வாசனையுடன் சுண்டி இழுக்கும்.

காயல்பட்டினத்தில் தம்மடை, எள்ளுருண்டை, ஓட்டுமா, சீப்பணியம், வெங்காயப் பணியம், தேங்காய்ப்பால் முறுக்கு, கலகலா, சீப்பு முறுக்கு என வீட்டுச் சுவையுடையவை காத்திருக்கும். திருச்செந்தூர் சுக்குக் கருப்பட்டிச் சில்லு, தூத்துக்குடியில் மக்ரூன்களும், மூதலூரில் மஸ்கோத் அல்வாவும், வில்லிபுத்தூர் பால்கோவாவும், சாத்தூர் எம்.எஸ். சண்முக கருப்பட்டி மிட்டாயும் என இனிப்பை அடுத்து காரம் வேண்டும் என்பதால் கீழ ஈராலில் சேவு அல்லது அருப்புக்கோட்டை அரிசிச் சேவை நீங்கள் தேர்வு செய்யலாம்.

திண்டுக்கல் கிருஷ்ணய்யர் ஜிலேபி, வேட சந்தூர் பேனியா, மணப்பாறை முறுக்கு, கோபால்பட்டி பால் பன், மதுரை பிரேம விலாஸ் அல்வா, ஜம் ஜம் மோதிச்சூர் லட்டு, கீழக்கரை தொதல், பனியம், கலகலா, வட்டலப்பம், வெள்ளரியாரம், தண்ணீர் பனியம், அச்சு பனியம், ஓட்டுமாவு, கருப்பட்டி பழ ஹல்வா, புடி மாவு, சீப்பணியாரம், வெள்ளை கவுணி அரிசி இனிப்புகள் பிரமாதமாக இருக்கும்.

செட்டிநாடு கை முறுக்கு, தேன்குழல் முறுக்கு, முள் முறுக்கு, மகிழம்பூ முறுக்கு, கார முறுக்கு, பெரண்டை முறுக்கு, கார தட்டை, சீடை, சிறு சீடை, பொறி சீடை, சீப்பு சீடை, இனிப்பு சீடை, கலகலா, மனகோலம், மாவுருண்டை, அதிரசம், திரட்டுப் பால், கம்பு உருண்டை, மக்கா சோள உருண்டை, எள்ளு அடை என இந்தப் பகுதி பலகாரங்களைச் செய்வதிலும் அதனை நீண்ட நாட்கள் முறையாக பாதுகாத்து வைக்கும் செயல்முறைகளிலும் இவர்கள் வல்லவர்கள்.

கோவை அன்னபூர்னா சோன் பப்டி, சாக்லேட் பர்பி, அத்திப் பழ அல்வா, பேடா சாக்லேட், ஸ்பாஞ்ச் அல்வா எல்லாம் சாப்பிட்டு விட்டு அவர்களின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் க்ரீம் பன்னை மறந்திட வேண்டாம். சேலம் குப்தா ஸ்வீட்ஸ் ஒரு இனிப்பு உலகம், அவர்களிடம் காஜு கத்லி தொடங்கி ஏராளமான இனிப்பு வகைகள் நேர்த்தியுடன் கிடைக்கும்.

தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் சந்திர கலா, சூரிய கலா, காரைக்கால் குலாப் ஜாமூன், ஆற்காடு மக்கன் பேடா, காவேரிப்பட்டிணம் ஜமுனா பால்கோவா, திருச்சி யானை மார்க் பெரிய பூந்தி, திருவையாறு அசோகா என இவை எல்லாம் அந்த அந்த ஊரின் அடையாளங்கள் என்றால் மிகையில்லை.

இப்படி தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு 50 கிமீ தூரத்திற்கும் அதன் உணவுகளில் பல்வேறு மாற்றங்களும் தனித்தன்மைகளும் இருக்க மெல்ல மெல்ல இவை எல்லாம் புழக்கத்தில் இருந்து மறைந்து எங்கு பார்த்தாலும் லட்டு, மைசூர்பா, பாதுஷா, மிக்சர் என்று சுருங்கிப்போனதை கண்கூடாக பார்த்தவன் நான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் மீண்டும் சந்தைக்கு வந்து நிமிர்ந்து நிற்பதை பார்க்க மகிழ்ச்சியாகவும் உள்ளது. சீனியை மையப்படுத்திய பெரு நிறுவன மிட்டாய்களுக்கு சவால் விடும் வகையில் கருப்பட்டி மிட்டாய்க்கடைகள் சென்னை முழுவதும் நின்று எதிர்த்து விளையாடுவது நல்லதொரு மாற்றமாக தெரிகிறது. புதிய உணவுகளை நாம் வரவேற்கும் அதே நேரம் இந்த நிலத்தில் உருவான முக்கிய ருசிகளை, வாசனைகளைத் தாங்கி வந்தவற்றையும் கொண்டாடி மகிழ்வோம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram