இனிப்புத் தீவிரவாதி! ஓவியம்: ரவி பேலட்
சிறப்புப்பக்கங்கள்

இனிப்பில் வாழ்பவன்

பா.ராகவன்

ஊருக்கும் உலகுக்கும் ஆறிலொரு சுவையாக நிலைபெற்றிருக்கும் இனிப்பை நான் வாழ்க்கை முறையாக்கிக் கொண்டு எத்தனை காலமாகிறது என்று சரியாக நினைவில்லை. முதலில் எனக்கு இனிப்பு பிடிக்கும். பிறகு இனிப்பை மிகவும் விரும்பினேன். அதற்கும் பின்பு அளவு கடந்து உண்ணத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் இனிப்புத் தீவிரவாதி ஆனேன்.

தீவிரவாதம் என்றால் மறைந்திருந்து செய்வது. ஆனால் செய்பவன் ஒளியலாமே தவிர செயல் வெளிப்படையாகத்தானே இருக்கும்? சென்ற டிசம்பரில் ஜெயமோகனை கோயமுத்தூரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவின்போது சந்தித்தேன். ஆளைக் கண்டதும் அவர் கேட்ட முதல் கேள்வி, ‘இன்னும் இனிப்பு சாப்ட்டுகிட்டுத்தான் இருக்கிங்களா? ஓவரா சாப்டுறிங்கன்னு செல்வா சொன்னார்.’

ஒரு விஷயம் ஏன் நமக்குப் பிடிக்கிறது என்பதற்குக் காரணங்கள் கிடையாது. பிடிக்காமல் போவதற்குத்தான் அதெல்லாம் இருக்கும். இனிப்பைப் பொறுத்தவரை நான் அதன் ஆராதகன் ஆனதற்கு அடிப்படை, அதை அதிகம் உண்ணக்கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டதுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அது நியாயம்தான். அதிக சர்க்கரை, அதிகச் சிக்கல். ஆனால் எது அதிகம், எவ்வளவு அதிகம்? அதை யாரும் சொல்வதில்லை.

மிகச் சிறிய வயதுகளில் ஆண்டுக்கொரு முறை குடும்பத்தோடு திருப்பதிக்குச் செல்வோம். பனி, குளிர், தூக்கக் கலக்கம், காத்திருப்பு, அதனால் வருகிற தலைவலி, கால்வலி, பிறகு வேங்கடாசலபதி தரிசனம் எல்லாம் முடிந்த பின், அப்பா லட்டு வாங்கி வருவார். தெரிந்தவர்களுக்கு விண்டளிக்க ஒரு லட்டு. தரிசனம் நல்லபடியாக முடிந்துவிட்டதை அங்கேயே அமர்ந்து குடும்பத்தோடு கொண்டாட ஒரு லட்டு. நியாயமாக அது அந்த அளவோடு நின்றிருக்க வேண்டும். ஆனால் அவர் என்னை அறிவார். எனவே குடும்பத்துக்கு ஒரு லட்டு, எனக்குத் தனியே ஒரு முழு லட்டு என்று வாங்கி வருவார். நான் குடும்ப உறுப்பினரென்பதை உறுதி செய்ய அந்த லட்டில் என் பங்கைக் கேட்டு வாங்கித் தின்றுவிட்டு, எனக்கெனத் தரப்பட்ட முழு லட்டையும் உட்கார்ந்து நிதானமாக பூந்தி பூந்தியாக ருசித்து மென்று தின்ற பிறகே எழுந்திருப்பேன். வேங்கடாசலபதி அந்நாள்களில் எனக்கு லட்டினுள்தான் இருந்தான்.

எண்ணிப் பார்த்தால், என் இனிப்பு வெறியின் ஊற்றுக்கண் திருப்பதி லட்டுதான் என்று தோன்றுகிறது. அரசியல் கொழுப்புகள் கலக்காத தூய்மைக் காலத்து லட்டு.

ஆனால் லட்டினும் எனக்கு ஜாங்கிரி என்றால் இஷ்டம். வாசனையில்லாத எண்ணெயில் பொரித்து, நல்ல நெய்யில் ஊறப் போட்ட ஜாங்கிரி. பார்சல் சாப்பாடு வாங்கி வந்து உண்பது போல கால்கிலோ ஜாங்கிரி வாங்கி வந்து விரித்து வைத்துக்கொண்டு உண்டு தீர்த்த காலம் உண்டு.

புரசைவாக்கத்தில் முன்னொரு காலத்தில் மோட்சம் என்றொரு திரையரங்கம் இருந்தது. குறுக்குப் பாதையில் மோட்சமடைய விரும்புபவர்கள் அங்கே செல்வார்கள். நான் சுற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். மோட்சம் திரையரங்குக்குப் பின்புறச் சாலையில் சிறிது தூரம் சென்று இடப்புறம் திரும்பினால் ஒரு சிறிய கடைவீதி வரும். இப்போது பெயர் மறந்துவிட்டது. நெரிசல் மிக்க இடம். அந்தச் சந்தில் ஒரு சிறந்த சேட்டுக் கலைஞர் மாலை வேளைகளில் கடைக்கு வெளியே வாயகன்ற வாணலி வைத்து ஜிலேபி போடுவார். அவரது தர்ம பத்தினியான பெண் சேட்டுக் கலைஞர் அல்லது சேட்டுப் பெண் கலைஞர் சற்றுத் தள்ளி அதே போன்ற இன்னொரு வாயகன்ற வாணலியில் பாலைச் சுண்ட வைத்து மலாய் பால் ஆக்கிக்கொண்டிருப்பார். உடைத்த முந்திரி, பிஸ்தா, உலர்ந்த வெள்ளரி விதைகளை அள்ளி அள்ளி எடுத்து அவர் பாலின்மீது வீசிக் கிளறும் காட்சி அந்நாளில் அளித்த பரவசத்துக்கு நிகரே கிடையாது.

மாலை ஒரு ஏழு மணி சுமாருக்கு அந்தப் பக்கம் போனால் அந்தக் கடை வாசலில் குறைந்தது இருபது பேர் நிற்பார்கள். இரண்டு ஜிலேபிகளைத் தின்றுவிட்டு, ருசி மாற்றிக்கொள்ள ஐம்பது கிராம் பக்கோடா வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஒரு மலாய் பாலையும் குடித்துவிட்டுப் போவார்கள்.

ஆனால் நான் கலைஞன் அல்லவா? முதல் பணியாக சேட்டுத் திருமதியைச் சிநேகிதமாக்கிக் கொண்டேன். அது எனக்குச் சிரமமாக இல்லை. அப்போது நான் குமுதத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வாரம்தோறும் இதழ் வெளியானதும் என் மேசைக்கு வரும் அன்பளிப்புப் பிரதியை எடுத்துச் சென்று சேட்டு தெய்வத்துக்குக் கொடுப்பேன். அவருக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா (ஆனால் நன்றாகத் தமிழ் பேசுவார்), குமுதம் படிப்பாரா, வேறு யாரிடமாவது தந்துவிடுவாரா, கிழித்து ஜிலேபிதான் மடிப்பாரா என்று எனக்குத் தெரியாது. ஒரு மாபெரும் பத்திரிகையாளன் உன் கடையின் வாடிக்கையாளன் என்பதை உணர்த்திவிட முடிந்ததுதான் என் வெற்றி.

அதற்குப் பரிசாக அவர் நான் போகும்போது எனக்கு மட்டும் ஒரு சிறிய ஸ்டூலை எடுத்துப் போட்டு உட்காரச் சொல்வார். அவ்வளவுதான் எனக்கு வேண்டியது. ஏனென்றால், நின்றவாக்கில், நகர்ந்தவாக்கில் மென்று விழுங்குவதெல்லாம் இனிப்புக்குச் செய்யும் துரோகம். ஒரு கலைஞன் அதைச் செய்ய மாட்டான். நான் உட்கார்ந்து உண்பேன். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று தொடங்கி ஏழு அல்லது எட்டு ஜிலேபிகள் வரை தின்று தீர்த்துவிட்டுச் சிறிது அமைதி காப்பேன். மற்றவர்களைப் போல பக்கோடா மென்று இனிப்புச் சுவையை அகற்றுவது எனக்குப் பிடிக்காது. ஏனெனில், பக்கோடாவும் ஒரு கலைப் பொருள். அதற்கொரு மரியாதை உண்டு. எனவே எப்போது ஜிலேபி சாப்பிடச் சென்றாலும் ஒரு ரூபாய் எலுமிச்சை ஊறுகாய் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு செல்வேன். ஒரு ஜிலேபி. ஒரு சொட்டு ஊறுகாய்ச் சாறு. இன்னொரு ஜிலேபி. இன்னொரு சொட்டு ஊறுகாய்ச் சாறு. மூன்றாவது ஜிலேபி. மேலுமொரு சொட்டு ஊறுகாய்ச் சாறு.

இவ்வண்ணம் ஜிலேபியை நிறைவு செய்துவிட்டு ஓர் இடைவெளிக்குப் பிறகு ஒரு கோப்பை மலாய் பால் அருந்தி எழுந்தால் வீடு சென்று சேரும்வரை நினைவில் அது இனித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு பிறவி சென்னைக்காரனாக இருப்பதன் வசதி என்னவெனில், மண்ணின் இனிப்பு என்பதாக ஒன்றனுக்கு மனம் ஏங்காது. எக்காலத்திலும் நமக்கு இங்கே கிடைப்பதெல்லாம் வந்தேறி வகையறாக்கள்தாம். ஆனால் மழையைப் போல, ஒளியைப் போல, காற்றைப் போல இனிப்புக்கு என்னிடம் பாகுபாடில்லை. எதையும் நிராகரிக்கும் கெட்ட காரியத்தை என்றுமே செய்ததில்லை.

குரோம்பேட்டை ரயிலடிக்கு வெளியே முன்பெல்லாம் திருநெல்வேலி அல்வாவை வேனில் கொண்டு வந்து வினியோகம் செய்வார்கள். டாஸ்மாக் பிறக்காத அக்காலத்தில் பேட்டையில் ஒரே ஒரு பெரிய சாராயக்கடை மட்டும் உண்டு. அது அண்ணா சிலையை அடுத்து இருக்கும். நற்குடி மக்கள் குடித்துவிட்டு, வெளியே வந்து அல்வா வாங்கித் தின்பார்கள். பிறகு தள்ளுவண்டி சுண்டல் கடையில் ஒரு பிளேட் சுண்டலையும் முடித்துவிட்டுப் புறப்பட்டுச் செல்வார்கள்.

தினமும் அக்காட்சியைக் காண்பேன். உண்மையிலேயே எனக்கு அது புரியாத புதிர்தான். மது ஒரு போதை என்றால், அல்வா இன்னொரு போதை. இரண்டும் எப்படிச் சேரும்? எனக்குப் புரிந்ததேயில்லை. சுண்டல் கடையில் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்குப் பொரித்தெடுக்கும் மசால் வடைகள் சிலவற்றை வாங்கிக்கொண்டு அல்வா வண்டிக்குச் செல்வேன். இங்கு ஸ்டூல் போட யாரும் கிடையாது. நெரிசல் மிக்க ரயிலடி வாசலில் அதற்கு இடமும் கிடையாது. நின்றுதான் உண்ண வேண்டும். விசுவாமித்திரன் ஒற்றைக் காலில் நின்ற வண்ணம் தவம் புரியும் தோற்றம் ஒன்று மனத்தில் எழும். அல்வா உண்பதும் அத்தகையதுதான்.

நமது மக்களுக்கு அடிப்படையில் அல்வா உண்ணவே தெரியாது. 420 பீடா மெல்வது போலவும் பான்பராக் போட்டுக் குதப்புவது போலவும் அல்வா தின்போரைக் கண்டால் நூறடி நகர்ந்து நிற்பேன். அல்வா உண்ணச் சில இலக்கணங்கள் உள்ளன. முதலாவது, எப்போது அல்வாவைத் திறக்கிறோமோ, அதற்குக் குறைந்தது ஆறு மணி நேரம் முன்னதாக வேறெதுவும் உண்ணாதிருந்திருக்க வேண்டும். முதல் விள்ளல் அல்வாவை வாயில் இடுவதற்கு முன்னால் ஒரு துண்டு மசால்வடையைக் கடித்து மென்று விழுங்கினால் அல்வா மேலும் ருசிக்கும்.

திருநெல்வேலிக்காரர்கள் மசால் வடைக்கு பதிலாக மிக்சரைப் பயன்படுத்துவார்கள். என்ன சிக்கலென்றால் அவர்கள் அல்வாவுக்கு ஜோடி சேர்க்கும் மிக்சரில் ருசியே இராது. வைக்கோலை வறுத்து வைத்தாற்போலிருக்கும். ஆனால் ஒன்றும் சொல்லிவிட முடியாது. அம்மண்ணின் அமைப்பு அப்படி. என்னைப் பொறுத்தவரை அல்வாவுக்குச் சரியான இணை மசால்வடைதான். அது கிடைக்காதபட்சத்தில் மிளகுவடையைப் பயன்படுத்தலாம்.

இருக்கட்டும். அல்வாவின் முதல் விள்ளலை எடுத்து வாயில் இடுகிறோம். அதன் மிருதுத்தன்மையை மட்டும் நாவின் நுனியால் வருடிக் கொடுத்துவிட்டுப் பிறகு மேலண்ணத்தில் கொண்டு ஒட்டிவிட வேண்டும். எச்சில் ஊறும் நேரம் கணக்கு. ஊறியபின்பு மெல்லத் தொடங்கும்போதுதான் உதரம்வரை இனிக்கும்.

இவ்வண்ணமே மோத்தி லட்டுக்கொரு இலக்கணம், பால்கோவாவுக்கொரு இலக்கணம், ரசமலாய்க்கொரு இலக்கணம், தேங்காய் போளிக்கொரு இலக்கணம் என்று தொல்காப்பிய கனபரிமாணத்தில் இலக்கணக் கையேடு ஒன்று என்னிடம் உள்ளது. நானே உருவாக்கியதுதான்.

போளி என்றதும் நினைவுக்கு வருகிறது. மேற்கு மாம்பலம் வெங்கடேசுவரா போளிக் கடையில் நானொரு வாழ்நாள் சந்தாதாரி. இரண்டு தேங்காய் போளி, இரண்டு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டுப் போனால் ஏகாந்தமாக இருக்கும் என்று ரிடையரான மாம்பலத்து மாமாக்கள் சொல்வார்கள். ஒரு மாற்று சிபாரிசு செய்கிறேன். யாராவது முயற்சி செய்து பாருங்கள்.

அதே ஆரிய கௌடர் சாலையில் அயோத்யா மண்டபத்துக்கு எதிரே பக்தவத்சலம் தெரு முனையில் ஒரு பெரியவர் தள்ளு வண்டியில் வடை, போண்டா, பஜ்ஜி வகையறாக்களை விற்றுக்கொண்டிருப்பார். அவரிடம் இரண்டு உருளைக்கிழங்கு போண்டாக்களை வாங்கிக்கொண்டு போளிக் கடைக்கு வர வேண்டும். ஒரு கடி உருளைக்கிழங்கு போண்டா. ஒரு கடி தேங்காய் போளி. இரண்டையும் சேர்த்து மெல்லும்போது கிடைக்கும் ருசி அபாரமாக இருக்கும். போளிக் கடையிலேயே உருளைக்கிழங்கு போண்டா இருக்குமே என்பீரானால் நீங்கள் கமர்ஷியல் மனம் படைத்தவராகிவிடுவீர். கலை மனம் ஐம்பதடி தொலைவை நடந்து கடக்கச் சோம்பாது.

எல்டாம்ஸ் ரோடு பார்வதி பவன், பாண்டிபஜார் கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அசோக் நகர் குப்தா பவன், வடபழனி மித்தாய் மந்திர், அங்கிங்கெனாத மித்தாய் போன்ற தலங்கள் இனிப்புகளுக்கு நம்பகமான இடங்கள். சமீப காலமாக திருசூலத்தில் திறந்திருக்கும் கீதம் ரெஸ்டரண்டில் பலாப்பழ குனஃபா என்றொரு இனிப்பு வகை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதை உண்பதே ஒரு சாகசம்.

பெரியதொரு வட்டத் தட்டில் பலாச்சுளைகளை அரைத்துச் சாறைப் பரப்பிவிடுவார்கள். அதன்மீது குனஃபா என்கிற ரஸ்க் போன்ற ஒரு அயலகப் பதார்த்தம் இருக்கும். பெரிய வட்ட வடிவில் நமது அதிரசங்கள் நான்கைச் சேர்த்து அடுக்கினாற்போல. அந்த குனஃபாவின்மீது மீண்டும் பலாச்சுளைகளைச் சீவித் துருவி தேங்காய்ப் பூபோலக் குவித்து வைத்து, அதன் கொண்டையில் ஒரு கிரிக்கெட் பந்தளவு ஐஸ்க்ரீமையும் வைத்துக் கொண்டு வந்து தருகிறார்கள்.

ஐஸ்க்ரீம் மெல்ல உருகி ஒழுகி தட்டை நிறைக்கும்வரை பொறுமையாக இருந்துவிட்டுப் பிறகு, ஊறிய குனஃபாவை மெல்ல மெல்ல விண்டெடுத்துப் பலாச் சாறோடும் ஐஸ் க்ரீமுடனும் சேர்த்து உண்டு பார்த்தால் ஒரு பக்கம் பாற்கடல் தெரியும். மறுபக்கம் பரமாத்மாவே தெரிவான்.

இந்தப் பலாப்பழ குனஃபாவுக்கும் இடையிடையே ஒரு சொட்டு ஊறுகாய்ச் சாறு இருந்தால் அருமையாக இருக்கிறது. ஆனால் அது ரொம்பப் பழைய ஊறுகாயாக இருந்துவிடக் கூடாது. அது முக்கியம்.

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை மதிய உணவை பாண்டிபஜார் கிருஷ்ணா ஸ்வீட்ஸில்தான் வைத்துக்கொள்வேன். கால்கிலோ மைசூர்பா அல்லது கால்கிலோ நெய் ஜாங்கிரி. முடித்துவிட்டு மெட்ராஸ் காப்பி ஹவுஸில் ஒரு காப்பியும் அருந்தினால் இன்பம் பேரின்பமாகும்.

இத்தனை இனிப்புத் தின்பவனுக்கு சர்க்கரை வியாதி இல்லையா என்பீரானால், இல்லை. என் அப்பா நாற்பது வயதில் நீரிழிவு நோய்க்கு ஆளாகி, எண்பது வயதில் தனது இறுதிக்காலம் வரை ஒரு சொட்டு இனிப்பையும் ருசிக்காமல் விரதம் காத்துப் போய்ச் சேர்ந்தவர். அவரது வாரிசு எனக்கு ஏன் இன்னும் பிதுரார்ஜித சொத்தாக அது வந்து சேரவில்லை என்ற கேள்விக்கு பதில் கிடையாது.

இன்றில்லை. ஒருவேளை நாளை எனக்கும் சர்க்கரை வியாதி வரலாம். ஆனால் அது பற்றிய அச்சமோ கவலையோ எனக்கில்லை. எப்போது வந்தாலும் அக்கணமே இனிப்பை முற்றிலும் நிறுத்திவிட என்னால் முடியும்.

இனிப்பு மட்டுமல்ல. எதுவுமே வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாமென்றால் வேண்டாம் என்றிருக்க முடிந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.

நான் செய்வேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram