படம்: சண்முகானந்தன்
சிறப்புப்பக்கங்கள்

பசுமையோடு இணையாத சிவப்பு வெறும் கனவுதான்!

உயிர் சண்முகானந்தம்

பறவைகள், பாலூட்டிகள், ஊர்வனங்கள், பூச்சிகள், கடல் வாழ்விகள், இரவாடிகள் என எண்ணிலடங்காத பல்லுயிர்களோடு இப்புவியை மனிதன் என்கிற உயர் வகை பாலூட்டியும் பகிர்ந்துக் கொண்டுள்ளான். இவ்வுயிரினங்கள் வாழ்வதற்கேற்ற வாழ்விடமும் (நீர், நிலம், காற்று) இப்புவியில் தகவமைந்துள்ளது.

அந்தவகையில், இப்புவியில் பரிணமித்துள்ள உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. இது சிலந்தி வலையின் நுட்பத்தை ஒத்தது. சுற்றுச்சூழலின் நுட்பமான உயிரினச் சங்கிலியில் ஏதோவொரு பாதிப்பு ஏற்படுமானால், அதனுடைய பாதிப்பு வேறொரு இடத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

அதுபோன்ற நிகழ்வுகளை கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதச் சமூகம் சந்தித்து வந்துள்ளது.

பயணப்புறா, மொரீஷியஸ் தீவின் டோடோ, நியூசிலாந்தின் யானைப் பறவை, தைலசின், வடக்கு வெள்ளை காண்டாமிருகம், காலபகாஸ் தீவின் பேராமைகள் என இப்புவிப்பரப்பை விட்டு முழுமையாக அழிந்தவற்றை நீண்ட பட்டியலிடலாம்.

இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் புலவெளிக் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட கானமயில் (Great Indian Bustard), வரகுக் கோழி (Lesser Florican) போன்ற காட்டுயிர்கள் இன்று நம்மிடையே இல்லை. வட இந்தியப் பகுதிகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய பாலூட்டியான சிவிங்கிப்புலி (Cheetah) சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து, இன்று முற்றாக அழிந்த காட்டுயிராகும். இன்று வட இந்தியாவில் ஒன்றிய அரசால் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் சில சமீபத்தில் இறந்துள்ளன.

சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டிருந்த புலிகள் இன்று, மூவாயிரத்திற்கும் குறைவாக உள்ளன. ஆசிய யானைகள், சிறுத்தைகளும் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.இந்திய நிலப்பரப்பில் ஆசிய யானைகளின் பெரும்பாலான வலசைப் பாதைகள் (Elephant Corridor) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

1980களில் பல இலட்சங்களில் தமிழகத்திற்கு (தென்னிந்தியப் பகுதிகளுக்கு) வருகை தந்துக் கொண்டிருந்த வலசை பறவைகள், இன்று சில இலட்சங்கள் என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளன. உலகளவில் வலசைப் பறவைகளின் வலசைப் பாதைகள் பெரும் அழிவுக்குள்ளாகியுள்ளன.

இந்திய சுதந்திரத்திற்குப் பின், நாளது வரை காடுகளின் பரப்பளவு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தமிழகத்தில் 29,000க்கும் மேற்பட்டிருந்த நீர்நிலைகளில் பெரும்பாலானவை இன்று காணாமல் போயுள்ளன. அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அல்லது வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன.

கனிம வளக்கொள்ளை, நீர் வணிகம், கடற்கரையோர கனிம வளக்கொள்ளை,, நகரமயமாக்கம், போர், உள்நாட்டுக் கலகம், வெள்ளம், நிலச்சரிவு, ஆற்றுமணல் கொள்ளை, கார்பன் வணிகம், மூல வளங்கள் மாசடைதல், கடல் மட்டம் உயர்தல், காலநிலை மாற்றம், மறைநீர் கருத்தாக்கம் என காரணிகளை பட்டியலிடலாம்.

பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர், அனைத்து உயிரினங்களுக்குமான நீர், நிலம், காற்று என மூல வளங்கள் யாவும் இன்று மாசுபட்டுள்ளன. அல்லது அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள இயற்கை, காட்டுயிர்கள் மீது நடத்தப்படும் ‘செயற்கை பேரிடருக்குப் பின், ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ தான் காரணியாக உள்ளது.

இச்சிக்கல்களுக்கு ‘நாகரிக’ மனிதன் தான் காரணமாக உள்ளான் எனும்போது, ‘எந்த மனிதன்’ என்ற கேள்வியும் உடன் எழுகிறது.

உலகில் 10 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள பெரும் பணக்காரர்களும், பெரு நிறுவனங்களும் என்பது தான் பதிலாக அமைகிறது.

வளர்ந்த நாடுகள் அடுத்த தலைமுறைக்கு தேவையான மூல வளங்களான நீர், நிலம், காற்றை பாதுகாத்துக் கொள்ள, ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீனமெரிக்கா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளிலுள்ள இயற்கை வளங்களை மீட்டெடுக்க இயலாத நிலைக்கு கொள்ளையிட்டு அழிக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளிலுள்ள அரசுகளும் பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றன.

இதனால் மூன்றாம் உலக நாடுகளிலுள்ள மூல வளங்கள் (இயற்கை வளங்கள்), காட்டுயிர்கள் மட்டுமின்றி இவற்றுடன் இணைந்த பழங்குடிகள், எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவை யாவும் ் ‘செயற்கைப் பேரிடர்’கள் என்பதை உணர வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் இயற்கை, காட்டுயிர்கள் மற்றும் பழங்குடிகள், எளிய மனிதர்கள் மீது தொடுக்கப்படும் ‘போர் அற்ற போராக’ உள்ளது.

‘நாம் வாழும் காலத்தைப் பொறுத்தவரை, எவ்வகையிலேனும் இலாபமீட்டுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட முதலாளியச் சமூக அமைப்பு முறையும், அதனோடு சேர்ந்த அரசியல் சக்திகளும் தான் மனித குலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் அளவிற்கு இயற்கையை அழிப்பதிலும்,  சுற்றுச்சூழல் கேடுகளை, மாசுகளை உருவாக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன’ என மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, முதலாளித்துவத்தின் செயல்பாடுகள் புவிக்கோளத்தின் உயிரின இருப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் இன்றைய மூன்றாம் உலக நாடுகளின் எளிய உழைக்கும் மக்கள், சூழலியலாளர்களுக்கான பணியைக் குறிப்பிடுகையில், ‘புவிக்கோள் குறிப்பிட்ட தனிநபர்களின் தனியுடைமையாக இருப்பதென்பது ஒரு மனிதன் இன்னொருவனின் தனியுடைமையாக இருப்பது போலவே அபத்தமானதாகத்தான் தெரியும். ஒரு முழுச் சமுதாயமோ, ஒரு தேசமோ, ஏன் ஒரே காலகட்டத்தில் நிலவுகின்ற சமுதாயங்கள் அனைத்துமோ புவிக்கோளத்தின் உடைமையாளர் அல்ல. புவிக்கோளத்தின் மீது இவற்றுக்கு அனுபோக உரிமை, அதில் எந்த அடிப்படையான மாற்றமும் செய்யாமல் அதை அனுபவிக்கும் உரிமை மட்டுமே உண்டு. இவை பழங்கால ரோமன் சமுதாயத்தில் குடும்பங்களின் மூத்த ஆண்கள் குடும்பச் சொத்தை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாக ஒப்படைத்துச் சென்றது போலவே, அடுத்து வரும் தலைமுறைகளிடம் இந்தப் புவிக்கோளை இன்று மேம்படுத்தப்பட்ட நிலையில் ஒப்படைத்துச் சென்றாக வேண்டும்’ என மூலதனத்தில் காரல் மார்க்ஸ்  பேசியுள்ளார்.

அந்தவகையில், இன்றைய நவீன உலகில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை வளக்கொள்ளையை முதலாளித்துவத்தின் உற்பத்தி முறைகளில் தான் காண வேண்டும்.

முதலாளித்துவத்தின் எல்லையற்ற சுரண்டலுக்கும், உற்பத்தி முறைக்கும் மாற்றாக ‘திட்டமிட்ட பொருளாதார முறை’ தான் தீர்வாக அமையும். அதுதான் மனித குலத்திற்கும், இயற்கை வளங்களுக்குமான முழுமையான விடுதலையாக அமையும். மனித-இயற்கை உறவும் அறிவியல்பூர்வமாக அமையும்.

அந்தவகையில், ‘பசுமையோடு இணையாத சிவப்பு வெறும் கனவு தான்’ என்பதை இன்றைய முற்போக்காளர்கள் உணரவேண்டும்.

(உயிர் சண்முகானந்தம்,காட்டுயிர் எழுத்தாளர்)