சிறப்புப்பக்கங்கள்

ஒரு பைக்கன்ட வீரகதா!

அதிஷா

ஒரு புல்லட் வாங்கி ஊரெல்லாம் ஓட்டி கெத்து காட்ட வேண்டும் என்பது எனக்கு சிறுவயது லட்சியம். புல்லட் மட்டும்தான். 80ஸ் 90ஸ் கிட்ஸ் எல்லோருக்குமே இந்த மோகமும் தாகமும் கட்டாயம் இருந்திருக்கும்.

பள்ளி வாத்தியாரோ, ஊர் பெரியவரோ, பஞ்சாயத்து ஆளோ, இளந்தாரிகளோ, சண்டியர்களோ, ஊருக்குள் யாரு கில்லியோ என ஒவ்வொரு ஊரிலும் தலா ஒருவரோ இருவரோ நிச்சயம் புல்லட் வைத்திருப்பார்கள். அதை தினமும் வாசலில் நின்று வெற்றுடம்புடன் துடைப்பது அக்காலத்து அன்றாடம். இப்படி புல்லட் வைத்திருப்பவர்களுக்கு அதுவே பட்டப்பெயர் ஆகிவிடுவதும் உண்டு! தமிழ்நாட்டில் புல்லட் பாண்டிகள் ஏராளம்!

புல்லட் ஓட்டுபவர்களை பார்த்திருக்கிறீர்களா… அகன்ற தோள்கள், வலிமையான புஜங்கள், கர்லா கட்டை போன்ற கால்கள், பெரிய மீசை, கருகருவென உடலெல்லாம் ரோமங்கள் என கம்பீரமாக இருப்பார்கள். இந்த புல்லட் ஓட்டுவதால் கம்பீரம் வந்துவிடுகிறதா அல்லது கம்பீரமுள்ளவர்தான் புல்லட் வைத்திருக்கிறாரா என 15 வயதில் அடுத்த சந்தேகம் எழத்தொடங்கிய போதுதான் என்னுடைய புல்லட் லட்சியம் வலுப்பெற்று புல்லட் வெறியாக மாறியது!

என்னைக்காச்சும் நாமளும் பெரிய மனுஷன் ஆவுறோம் கம்பீரத்தை வாங்குறோம் என முடிவெடுத்துக்கொண்டேன்! காலம் உருண்டோடியது. பெரிய மனுஷன் ஆனதும் முதலில் புல்லட் வாங்க முடியவில்லை. ஸ்ப்ளெண்டர்தான் முடிந்தது. அது சத்தம் போடாது, கெத்தாக இருக்காது. ஆனால் மாடு போல உழைக்கும். கொஞ்சம் பணம் சேரவும் மாட்டை விற்றுவிட்டு சிங்கத்தை வாங்க முடிவெடுத்தேன்!

புல்லட் வரப்போகிறது, ஊரெல்லாம் நம்மை பார்த்து மிரள போகிறது, அப்படியே இரண்டு கிலோமீட்டருக்கு முன்னாலேயே வேட்டிகள் இறங்கப்போகிறது என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். புல்லட்டுக்கு பணம் கட்டினேன். முன்பணம் மட்டும்தான் மீதி இன்ஸ்டால்மென்ட்!

புல்லட் வீட்டுக்குள் வந்து நிற்கவும், முதல் வேலையாக காது கிழிஞ்சு ரத்தம் வரும்படி புடுபுடு போடுகிற பெரிய சைலன்ஸர்,  முன்னால இருக்குற மக்கார்டில் ஒரு சிங்கம் பாய்கிற சிற்பம் என வண்டியை தயார் செய்தேன். ஹேண்டில் பார் இன்னும் கொஞ்சம் அகலமா வளைவா… ரோட்டில் இறங்கி ஓட்டினால் அப்படியே எல்லோருமே நம் பைக் அழகையே பார்ப்பதாக அதன் புடுபுடுவை கேட்பதாக ஒரு மனப்பிராந்தி. வண்டி ஓட்டும்போது ஆர்ம்ஸ் இரண்டும் இரண்டு இன்ச் பெரிதானது போல நெஞ்சும் விரிவடைந்து உடலெல்லாம் பல்க் ஆனதுபோல ஒரு பிரமை.

பைக்கை எடுத்தாலே யாரையாவது சண்டைக்கு இழுத்து தூக்கி போட்டு வெளுக்க வேண்டும் போல ஒரு வெறி! ரோட்டில் செல்லும் மற்ற பைக்குகளை பார்க்கும்போது ஒரு இளக்காரம். ஹெய்ய்ய் தம்பி உரசிராத உசுருபோயிடும் ஓர்ர்ரமா போப்போ... 

பைக் வந்த பிறகு ஆளே மாறிட்ட என்று யாராவது சொல்லிவிட்டால் போச்சு! தோள்களை சுழற்றிக்கொண்டு அப்படியா இருக்கு… நான் எப்பயும் போலதான் மாமா இருக்கேன் என ஒரு சீனைப்போடுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. சாலைகளில் பெண்கள் எதிரில் வந்தால் என்னமோ பெண்கள் எல்லாம் புல்லட் வண்டியில் வருகிற இந்த சகலகலாவல்லவன் காதல் இளவரசனுக்காக ஏங்கிக்கொண்டிருப்பது போல ஒரு எண்ணம் வந்து விடும்.  உடலை நிமிர்த்தி வைத்துக்கொண்டு கண்டுங்காணாமல் கெத்தாக போவதில் ஒரு உணர்வெழுச்சி! 

இதுவரைக்கும் லட்சியப்பயணம் இன்பமாகவே போய்கொண்டுதான் இருந்தது. ஒரு வாரத்திற்கு பிறகுதான் உண்மை நிலவரம் புரியத்தொடங்கியது. அந்த சிங்கத்தின் மீது நாம் எலி போல இருக்கிறோம் என்பது கொஞ்ச கொஞ்சமாக புரியத்தொடங்கியது. என்னடா இளச்சுட்ட, உனக்கு இந்த வண்டி செட்டாகல மச்சான், கால் எட்டுதாடா, எங்கே சென்டர் ஸ்டான்ட் போட்டுக்காட்டு என கலாய்க்கத்தொடங்கிய போதுதான் உண்மைகள் உணரத்தொடங்கியது.

புல்லட்னா கம்ஃபர்ட் என்பார்கள். சென்னை மாதிரி பெருநகர டிராபிக்கில் இத்தனை கனமான வண்டியை ஓட்டுவது நமக்கு நாமே பண்ணிக்கொள்கிற கருத்தடை ஆபரேஷன் போன்றது. வண்டி நம்மை சுமப்பது போல இருந்தாலும் அடிக்கொருமுறை அடிக்கிற ப்ரேக்கில் ஆதி அந்தமெல்லாம் ஆடி… வண்டி நம்மை சுமக்கவில்லை இந்த 300 கிலோ எருமைகெடாயை நாம்தான் சுமக்கிறோம் என்பது புரியத்தொடங்கும்!

வண்டியை ஒரு நாள் போலீஸ் பிடித்தது. எல்லா டாகுமென்ட்ஸ் இருந்தும் ஃபைன் போட்டார்கள் எதுக்குங்க என்று கேட்டால், சைலன்சர் சத்தம் அதிகமாக வருகிறது என்றார். அதை பிடுங்கிப்போட சொன்னார்கள். சைலன்ஸருக்கு தண்டனை உண்டு என்பதே அப்போதுதான் தெரியும். இத்தனை டெசிபல்தான் சைலன்சர் இருக்கவேண்டுமாம். என் சிங்கத்திற்கு த்ரோட் ஆபரஷேன் பண்ணினேன். டிஎம்எஸ் குரல் மாறி பாகவதர் குரல் போல ஹஸ்கி வாய்ஸில் புய்ங் புய்ங் என சத்தம் வரத்தொடங்கியது.

சரி என்ன இருந்தாலும் புல்லட்னா கெத்துதான். மரியாதைதான் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதுவும் இல்லை. ஊரில் இருக்கிற பாதிபேர் புல்லட்தான் வைத்திருக்கிறார்கள் என்பது புல்லட் வாங்கிய பிறகுதான் புரியத்தொடங்கியது. ஊரில் பத்துபேரில் எட்டுபேர் புல்லட் வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் சாலையில் போகும்போது அடிக்கடி தென்பட்ட புல்லட்டுகள் நாட்பட நாட்பட சாலை முழுக்கவே புல்லட் ஓடுவதைப்போல தெரியத்தொடங்கியது. அதுவும் அழுக்குபிடித்து, சீட் கிழிந்து… டேய் புல்லட்டு மரியாதைய ஏன்டா கெடுக்குறீங்க என்று கதறல் கேட்கும். அடேய் 90ஸ் கிட்ஸ் என்று வெறியானது. வீதிக்கு ஒரு புல்லட் ஷோரும் வைத்திருக்கிறார்கள். புல்லட் வைத்திருப்பதால் ஒரு பெருமையும் இல்லை எருமையும் இல்லை என்பது புரிய தொடங்கிய போது, வண்டி சர்வீஸுக்கு தயாராகி விட்டது. 

யானை வளர்த்திருக்கிறீர்கள். புல்லட் ஒரு இரும்பு யானை. இந்த யானைக்கு தீனி போட்டு மெயின்டெயின் பண்ணுவதற்குள் டங்குவாரு அவிழ்ந்துவிடும். மைலேஜ் என்றால் என்ன என்பதே இந்த வண்டிக்கு தெரியாது என்பது வண்டி வாங்கிய பிறகுதான் தெரிந்தது. எவ்வளவு பெட்ரோல் ஊற்றினாலும் இரண்டு நாளில் தீர்ந்துவிடும்! இதுக்குமேலே என் ரத்தத்தைதான் ஊத்தணும் என்று புல்லட்டிடம் கதறுவேன். ஊத்து ப்ரோ என்பதுபோல புடுபுடுவென கொக்கரித்து சிரிக்கும்!

ஒருபக்கம் ட்யூ கட்டவேண்டும். இன்னொரு பக்கம் லிட்டர் லிட்டராக பெட்ரோல் வேறு போடவேண்டும். இதற்கு நடுவில் மூன்று மாசத்துக்கு ஒருமுறை சர்வீஸ் விட்டால் பெருங்குடல் சிறுகுடலை எல்லாம் உருவிவிடுவார்கள். சார் ஒரு சின்ன நட்டுதான் போயிடுச்சு மாத்தணும் என்பார்கள்.. எவ்ளோண்ணே என்றால் இரண்டாயிரம் மூவாயிரம் என்பார்கள். ஏன்டாப்பா நூறு இருநூறுக்குலாம் ஸ்பேர் பார்ட்ஸே இல்லையா இந்த யானைக்கு என்று விசாரித்தால், புல்லட்னா சும்மாவாண்ணே என்பார்கள். அடேய் அது சும்மாத்தாண்டா என வெறியேறும்!

சரி சினிமாவில் காட்டுவதுபோல லாங் ட்ரைவ் போகலாம் என்று கிளம்பினால் இது குடுக்குற மைலேஜூக்கு தாத்தாவோட தாத்தா சொத்தையெல்லாம் வித்துதான் பெட்ரோல் போட வேண்டும் என்கிற உண்மை புரியும்! நம்ம தாத்தா சேர்த்த சொத்தே தந்தையார் மட்டும்தான் தந்தையாரின் சொத்து நான் மட்டும்தானே.

புல்லட் என்பது சாதித் திமிர் போலத்தான். அதனால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லை. சொல்லப்போனால் செலவுதான் என்பதை உணரும்போது அது தேவையான அளவுக்கு நம்மை அடித்து வீழ்த்தி நடுத்தெருவில் நிறுத்தி இருக்கும், அப்போது ஸ்ப்ளென்டரின் அருமை புரியும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram