பக்கத்துத் தெருவில் திகுதிகுவென மாட்டுக்கொட்டகையில் இருந்த வைக்கோல் போர் பற்றிக் கொண்டு எரிய, அதை அணைக்க மணி அடித்துக்கொண்டே ஃபயர் எஞ்சின் வேகமாக வந்து சேர்ந்தது. ஊரே அதகளமாக இருக்கையில் நானும் என் நண்பர்கள் இருவருமாகச் சேர்ந்து மூவர் பம்மிக் கொண்டிருந்ததை இப்போது நினைத்தால்கூட சிரிப்புத்தான் வருகிறது.
கண்ணன், தாமு, நான் ஆகிய மூவரும் சிறுவயதில் ஜிகிரி தோஸ்துகள். கில்லி, பம்பரம், பட்டம் விடுதல் போன்ற வீரவிளையாட்டுகளில் இணைபிரியாதவர்கள்.
இதில் ஒரு வீர விளையாட்டில் ஈடுபட்டுத்தான் இப்படி பதுங்கிக் கொண்டிருந்தோம். சென்னை பைலட் தியேட்டர் அருகே எங்கள் ஏரியாவுக்கு அருகே கொலைகாரன் பேட்டையில் அசோக் என்ற பட்டம் விடும் பிஸ்தா இருந்தார். அவர் பல விதங்களில் பறக்கவிடுவார். ஒருமுறை மனித வடிவில் பட்டம் பறக்கவிட்டார். தெருவே மூக்கில் விரலை வைத்தது.
அதைக் கண்டு எங்கள் மூவர் குழு பரபரத்தது. எதாவது பண்ணியே ஆகணும். கடைசியில் சீனாக்காரர்களின் லேண்டர்ன் போல ஒன்று செய்து பறக்கவிட தீர்மானித்தோம். அட்டையை வெட்டி ஒட்டி, சுற்றிலும் சிவப்பு வண்ணத்தில் கிளாஸ் தாள் ஒட்டி, உள்ளே ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்து, மாடிக்குப் போய் பட்டத்தைப் பறக்கவிட்டோம். இரவு ஏழரை மணிக்குமேல் பறக்கும் இந்தப் பட்டத்தைத் தெருவே வேடிக்கை பார்க்கிறது. ஆனால் யாருக்கும் நாங்கள் தான் விடுகிறோம் என்று தெரியாது. மேலே சிவப்பாக ஒரு வெளிச்சம் பறப்பதுகண்டு அனைவருக்கும் ஆச்சர்யம். அந்தோ பரிதாபம் அச்சமயம் பார்த்து காற்று வேகமாக அடிக்க, நூல் அறுந்துகொண்டது. பட்டம் தடுமாற, மெழுகுவர்த்தி எரிந்த வண்ணம் பக்கத்துத் தெருவில் இருந்த மாட்டுக் கொட்டகையில் வைக்கோல் போரிலா விழவேண்டும்?
புரிகிறதா ஆரம்பத்தில் நான் சொன்னது… எல்லாம் முடிந்த பின் ஒன்றும் தெரியாத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, சமாளிக்க நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே…ம்ஹூம்!!!
ஒ, ஒளிப்பதிவாளர்