ரமேஷ் வைத்யா 
சிறப்புப்பக்கங்கள்

நீ சாப்புடு ரமேசா...

ரமேஷ் வைத்யா

அன்பு கொண்ட நண்பன் வீட்டில் சாப்பிட ஒப்புக்கொண்டு, அதே காரணத்தால், ‘இதற்கு செத்தேபோய்விடலாம்’ என்று தோன்றிய கதை. சாப்பாட்டின் ருசி காரணமல்ல.

தேனிக்கு நான் வரவிருப்பதாகத் தகவல் தெரிந்ததும் நண்பன் மந்தன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போன் போட்டான். ‘நம்ம வீட்டுல எறங்கிடுப்பா. சாப்பிட்டுட்டு உன் வேலையைப் பாக்கப் போ. ரெண்டு நாளும் இங்கதான் சாப்பாடு.’

அன்றாடமே கடையில் ரெண்டு இட்லியோ, ஒன்றரை வறிக்கியோ சாப்பிடும் எனக்கு வீட்டுச் சாப்பாட்டு அழைப்பை ஒப்புக்கொள்வதில் மறுப்பு இருக்கவில்லை. இந்த என் சம்மதத்தில் ஒரு சின்ன சில்லறைத்தனம் ஒளிந்திருக்கிறது என்று கருதுகிறேன். எந்தச் சல்லித்தனமும் நம்மைச் சாய்க்காமல் விடாது என்கிற பேருண்மையை அறியும் தருணமாக அது விளங்கப் போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது.

நுழைந்ததுமே மிகுந்த அன்போடு வரவேற்றான். முகமெல்லாம் சிரிப்பு. “குளிச்சுட்டு வந்துரு. டிஃபன் பண்ணச் சொல்றேன். என்ன வேணும்னு சொல்லிட்டுப் போ” என்றான்.

“ஏப்பா, என்னயப் பத்தி ஒனக்குத் தெரியாதா? வறிக்கிப் பாய்ட்டு வாங்கி மூணு நாள் திங்கிறவென். எதாச்சும் ஒண்ணு பண்ணச்சொல்லு.”

“எதாச்சும்ங்கிற பதிலுக்காப்பா மெனக்கெட்டுக் கேள்வி கேக்குறேன்?” என்றான். வாக்கியம் கொஞ்சம் ரசமிக்க தந்திரமாக இருக்கிறதில்லையா… அவன் டெலி சீரியல் வசனகர்த்தா.

“சரி குறிப்பாவே பதில் சொல்றேன். என்னென்ன ஐட்டம்லாம் என்னோட சாய்ஸ்?”

“இட்லி, தோசை, உப்புமா, பூரி, சப்பாத்தி.”

அவன் சொல்வதை முழுசாகவா கேட்க முடியும்? கடைசியாகக் காதில் விழுந்ததைச் சொன்னேன். “சப்பாத்தி.”

“சப்பாத்தியும்?” என்றான்.

என் மனதில், சப்பாத்தியும் சப்ஜியும், சப்பாத்தியும் டாலும், சப்பாத்தியும் குருமாவும், சப்பாத்தியும் சர்க்கரையும், சப்பாத்தியும் (ஃப்ரிட்ஜில் வைத்த) குழம்பும் என்றெல்லாம் ஆப்ஷன்கள் ஓடின. எந்த இழவைச் சொல்வது? சமைப்பவரைக் கஷ்டப்படுத்தக் கூடாது. “சர்க்கரையும்” என்றேன்.

“ப்ச்… சைடு டிஷ் கேக்கலப்பா… சப்பாத்தி தவிர்த்து வேற என்ன வேணும்?”

“உன்னோட மெனுவுல சப்பாத்தி இருந்துச்சே. இப்ப அதைத் தவிர வேற ஒண்ணச் சொல்லணுமா?”

“ஐயா, சாமீ! சப்பாத்தி இருக்கு. அதுக்கு மேல…” என்றான்.

“சப்பாத்திக்கு மேலன்னா? கேக் மேல ஐசிங் பண்ற மாதிரியா?”

“நீ வேணும்னே வம்பு பண்ற மாதிரி இருக்கு. சப்பாத்தி ஒரு ஐட்டம். இன்னொரு ஐட்டம் என்ன வேணும்னு கேக்குறேன்” என்றான். அவன் குரலில் மெல்லிதயத்தின் நல்லியல்பு வரவழைக்கப்பட்டிருந்தது.

அச்சத்தோடு, “ரெண்டு டிஃபன் நான் சாப்பிடணுமா?” என்றேன். அவன் திரும்பி, “சப்பாத்தியும் இட்லியும் போதும்மா” என்றான். “நீ குளிக்கப் போப்பா.”

தலை துவட்டி வரும்போதே சாப்பாட்டு மேசை தயாராக இருந்தது. கலவையான வாசனைகளோடு. நான் அந்த மேசையைப் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். நால்வர் அமர்ந்துண்ணும் அந்த மேசையில் ஒரு வட்டத் தட்டுக்கு இடம் விட்டு சின்னச் சின்னப் பாத்திரங்கள் நிரம்பியிருந்தன. நான் அமரவும் அந்தக் காலியிடத்தில் தட்டு அமரவும் சரியாக இருந்தது. ‘எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’ வேகத்தில் தட்டில் நான்கு இட்லிகளும் இரண்டு சப்பாத்திகளும் இறங்கின.

சமையலறையிலிருந்து சப்பாத்தி வறுபடும் வாசனையோடு, “நிதானமாச் சாப்பிடுங்கண்ணா. சப்பாத்தி ரெடியாகுது” என்ற குரலும் வந்தது. லா.ச.ரா. பாணியில் சொன்னால் ‘என் நெஞ்சில் ஒரு ஹெக்’.

“தக்காளி கொத்ஸு, கறிவேப்பிலைச் சட்னி இருக்குப்பா. சின்ன வெங்காய சாம்பாரும் பண்ணியிருக்கா. மொளகாப் பொடி இருக்கு. எது போட்டுக்குறே?” என்றான் மந்தன். இதையும் அவன் அன்போடுதான் கேட்டிருந்தான். ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் ஒவ்வாமையால்தான் நான் வங்கி, ரயில்வே பரீட்சைகளில் தோற்று, தட்டுகெடுகிறேன். மந்தனின் அன்பும் ஆப்ஜெக்ட். இம்முறை முதல் ஐட்டத்தைச் சொல்வோம். “தக்காளி கொத்ஸு.”

“ஏம்ப்பா, கறிவேப்பிலைச் சட்னி பிடிக்காதா?”

நான் குடித்துவிட்டுப் பல பேரை வம்பிழுத்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. தலையை உலுப்பிக்கொண்டு, “ராசா, எனக்கும் கறிவேப்பில சட்னிக்கும் தகராறா? கேக்குறியேன்னு ஒண்ணைச் சொன்னேன். சட்னியும் வையி” சாப்பிடத் தொடங்கினேன்.

பக்கத்திலேயே நின்றவன் ஒரு பாத்திரத்தைத் திறந்து, அன்போடு, இன்னும் ரெண்டு இட்லி-களைக் கையகப்படுத்தினான். நான் தட்டின் மேல் கவிழ்ந்து படுத்தேன். “போதும்ப்பா.”

“நாலு இட்லி எப்பிடி ரமேசா போதும்?”

“யாருக்குப் போதாது?”

“ஒனக்குத்தான்” என்றவன் கருணையைக் கூட்டினான், “நீதானே சாப்பிடுறே?”

“எனக்குப் போதும்னு எனக்குத் தெரியுமில்லையா?” மந்தன் குரலின் கருணையில் பாதியளவு கூட என் குரலில் வாய்க்கவில்லை. எனக்குப் பயிற்சி போதவில்லை.

“ஓகே, நீ மூட் அவுட்ல இருக்க போல. ஒரே ஒரு இட்லி வைக்கிறேன். சாப்டு, சப்பாத்தி கொண்டு வரேன்” என்று சமையலறைக்குப் போனான்.

எனக்குள் வெடித்த எரிமலை 332 க்யூபிக் கிலோ மீட்டருக்கு லாவா உமிழ்ந்திருக்கும். ஆனால், பிற்பாடான பேச்சில் சொற்களாகத்தான் வெளிப்பட்டது.

“தம்பி மந்தா, சாப்புட ஒக்கார வச்சுட்டு சாகடிக்கிறியேப்பா. போதும்னு சொன்னா விட மாட்டியா?” என்று தொடங்கினேன்.

“சாப்புடச் சொன்னது இவ்வளவு பெரிய குத்தமா?”

“என்ன குத்தம்னாவது தெரிஞ்சுக்க. போதும்னு சொன்னதுக்கப்பறம் இன்னும் கொஞ்சம் போட்டுக்கன்னா என்ன அர்த்தம்? நான் போலியானவன்னு நீ சொல்றேனு அர்த்தம். எனக்கு இன்னும் வேணும் போல இருக்கு, ஆனா, போதும்னு பொய்யாச் சொல்றேன், அதை அப்பிடியே விடக்கூடாதுன்னு நீ நினைக்கிறதா அர்த்தம். அப்பறம், நீ என்னை மதிக்கவே இல்லைன்னு அர்த்தம். போதும்னு சொன்ன என் வார்த்தைக்கு என்ன மதிப்பு? முதல்ல நீ என்னை எதுக்காக உங்க வீட்டுல சாப்புடக் கூப்புட்ட? என்னை மகிழ்ச்சிப்படுத்துறதுக்காக. ஆனா, எனக்குப் பிடிக்காத, முடியாத விதத்துல என் வயித்துல திணிச்சா நான் கஷ்டம்தான் படப்போறேன். இப்ப எனக்கு மெடிகல் ஷாப்புக்குப் போகணும். இது உன்னோட நோக்கத்துக்கே விரோதமானது இல்லையா? நான், இன்னிக்கெல்லாம் வேலை பார்க்குறதுக்குச் சாப்புடுறதா, இல்ல ஆஸ்பத்திரியில கெடந்து வாந்தி எடுக்குறதுக்குச் சாப்புடுறதா? அப்பறம் பாரு, சாப்புடச் சொன்னதுக்கு இவ்வளவு பேசுறானே, இவன் சைக்கோன்னு சொல்லுவ. என் கேரக்டரையே படுகொலை பண்ற வேலை அது. எனக்குக் குற்றவுணர்ச்சியத் தூண்டுற வேலை.”

மௌனமாக இருந்தான். ஏற்றுக்கொண்டானா? எதிர்த்து நிற்பானா?

“அப்ப நாளைக்கிக் காலையில சாப்புட வருவியா, மாட்டியா?”

“வார்த்த மாறமாட்டேன். சாப்புட்டுத்தான் சாகணும்னு இருந்தாலும் எனக்கு சத்தியம்தான் முக்கியம்” என்றேன்.

மறுநாள் பூரி கிழங்கு ஏற்பாடாகியிருந்தது.

முந்தைய நாளைவிட இரு மடங்கு கருணையோடு நிலவினான் மந்தன்.

“இது பூரிப்பா. இது கெழங்கு. வேணுங்கிறதைப் போட்டுக்கோ” என்றான் பணிவன்புடன். இரு பூரிகளை நான் தட்டில் வைத்துக்கொண்ட நேரத்தில் தண்ணீர்ச் செம்போடு சாப்பாடு மேசைக்கு வந்தார் மந்தனின் துணைவியார்.

க்றீச்சிட்டான் மந்தன், “ஏய் பானூ… அவனை எதாவது சாப்புடச் சொன்ன… கன்னம் கின்னமெல்லாம் பழுத்துப் போயிடும். போயிடு அந்தப் பக்கம். சாப்பாட்டு மேசப் பக்கமே வந்துராத. கெழங்கு கெழங்கு எல்லா எழவையும் அவனே வச்சுப்பான். போயிடு சொல்லிட்டேன்” என்று உறுமியவன் என்னைப் பார்த்து அமைதியாகச் சொன்னான்:

“நீ சாப்டு ரமேசா.”            

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram