லொள்ளு சபா சுவாமிநாதன் 
சிறப்புப்பக்கங்கள்

மேலே வாப்பா!

லொள்ளு சபா சாமிநாதன்

இயக்குநர் மகேந்திரன் ‘கைகொடுக்கும் கை’ படம் எடுத்தபோது அவர் தேடிக்கொண்டிருந்த ஒரு பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொன்னார்கள். இதைக் கேள்விப்பட்டதும் அவர் வீட்டுக்கு போனேன், அவர் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து என்னமோ எழுதிக் கொண்டிருந்தார்.

அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு ‘நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவன் சார்… உங்க படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை சார்’ என்றேன்.

என்னை நன்றாகப் பார்த்தவர், ’அப்படியா…. மேல வானு’ சொன்னார்.

அடுத்த நிமிடம் எதையும் யோசிக்காமல் பக்கத்தில் இருந்த மாடிப்படியில் கிடுகிடுனு ஏறி மேலே போனேன். அங்கே போனதும் சார் என்னை நடிக்கச் சொல்லி பார்ப்பார்.. என்ன நடிக்கலாம் என்று யோசனை என் மனதில் ஆர்வமாக ஓடியது.

மேலே போய்ப் பார்த்தால் கேட் மூடியிருந்தது. அங்கிருந்தே ‘சார் பூட்டியிருக்கு சார்’ என்றேன்.

 ’யோவ் கீழே வாயா… எதுக்குயா மேல போன….’ என அவர் கோபத்துடன் சத்தம் போட்டதை நான் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை.

‘நீங்கதானே மேல வாங்கனு சொன்னீங்க. நடிச்சி காட்டத்தான் கூப்டுறீங்கனு மேல வந்தேன்’ என்றேன்.

நீ லூசா.. இல்ல நான் லூசா என்கிற மாதிரி உற்றுப்பார்த்தார்.

பிறகு ‘இது மார்ச் மாதம்… உன்னை மேல அதாவது மே மாதம் வாப்பானு சொன்னேன்’ என்றார். லேசாக அவர் முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்த நிலையில் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

விழுந்து விழுந்து நானும் சிரித்தேன்… அவரும் சிரித்தார்.

லொள்ளு சபா சாமிநாதன், நடிகர்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram