“அதிகாலை பொழுதுகளில் கோவில்பட்டியின் எந்த தெருவிற்குள் நடந்து சென்றாலும் வேர்க்கடலை வறுக்கும் சத்தமும் அதன் மணமும் கலந்து வருவதை தவிர்க்கமுடியாது.. கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கடலைமிட்டாய் உற்பத்தி செய்து வருகிறார்கள். இதில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதில் ஒரு கடைதான் எங்களுடையது’’ என்று கோவில்பட்டி கடலைமிட்டாய் வரலாறை ரத்தின சுருக்கமாக பேசினார் சக்திவேல். இவரது தாத்தா எம். நடராஜன் தொடங்கிய கடைதான் இது! ஆஞ்சநேயர் விலாஸ்!
‘தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த தரமான வேர்க்கடலையை விலைக்கு வாங்கி அதன் தோலை நீக்கி சீர்செய்து, பிறகு சுத்தமான நாட்டுவெல்லம் சேர்த்து கடலைமிட்டாய் தயாரிக்கிறோம். அதேபோல கடலைமிட்டாய் செய்யும் தொழிற்நுட்பம் கோவில்பட்டி தொழிலாளர்களுக்கு கைவந்த கலை என்பதால் நாங்கள் இப்போதும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதில்லை,’ என கடந்த 75 ஆண்டு கடலைமிட்டாய் வியாபார வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்தார் எம்.என். சக்திவேல்
‘சாதாரண கடலைமிட்டாய், ஏலக்காய் கடலைமிட்டாய், கருப்பட்டி கடலைமிட்டாய் என்று ரகம்வாரியாகத் தயாரிக்கிறோம். சுமாராக ஒருநாளைக்கு இரண்டு டன் சரக்கு ரெடியாகும். என்னுடைய தலைமுறையில்தான் கடலைமிட்டாயை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். அதேபோல எங்கள் ஊர் சில பகுதிகளில் திருமணத் தாம்பூல பைகளில் எங்களது கடலைமிட்டாயைப் போட்டுக் கொடுக்கிறார்கள். இதனால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் பொறுப்புடன் செயல்படனும் என்கிற அக்கறையும் வருகிறது’ என்றார் சக்திவேல். இவரது மகன் கேசவனும் நிர்வாகத்தில் செயல்படுகிறார்!