இன்றைக்கும் பேருந்துப் பயணம் என்றாலேயே கிலிதான் எனக்கு. அதுவும் நீண்ட தூரப் பயணங்கள். எத்தனை லட்சம் கொடுக்கிறேன் என்று சொன்னாலும் சரி…. வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு விடுவேன். அப்படியும் வேறு வழியின்றி பயணப்படும் நேரங்களில் நான் படும்பாடு என்பதை விடவும் என்னால் நடத்துநரும் ஓட்டுநரும் படும்பாடுதான் பெரும் பாடு. முக்கால் மணி நேரப் பயணத்துக்கே மூச்சா முட்டிக்கொண்டு வந்து விடும். இதில் தொலைதூரப் பயணம் என்றால்...
திருப்பூரில் இருந்து கோவை வரும் ஒருமணி நேரப் பயணத்துக்கே கருமத்தம்பட்டியில் இறங்கி ”கடமையை” முடித்துவிட்டு அடுத்த வண்டி ஏறியவன் நான். அப்புறம் கோவை டூ சென்னை என்றால் கேட்கவா வேண்டும்?.
இதற்காகவே பஸ் புறப்படு்வதற்கு சில நிமிடங்கள் முன் கழிப்பிடங்களில் நின்று முக்கு முக்கென்று முக்கிக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் ஒன்று முதல் நூறுவரை எண்ணுவதுமுண்டு. நூறுக்குப் பிறகு மறுபடியும் ஒன்றிலிருந்து… அந்த சனியனோ அப்போதும் எட்டிப்பார்க்காது. ஒருவழியாய் ஏறித் தொலைத்து பத்துகிலோ மீட்டர்கூட தாண்டியிருக்காது. அப்போதுபோய் டிராவல்ஸ் டிரைவரிடமோ கண்டக்டரிடமோ ஒற்றைவிரல் நீட்டிக் கேட்டால் எப்படி இருக்கும்?
“பஸ் அவ்வளவு நேரம் நின்னுச்சல்ல சார்… அப்ப என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க…?” என்று மொத்த பஸ்ஸே கேட்குமளவுக்கு கேட்பார்கள். நூறு எண்ணிகிட்டு இருந்தேன்…ன்னு சொல்லவா முடியும். கடுப்பின் உச்சத்தில் பஸ்ஸை ஓரங்கட்டி “போங்க சார்…. போங்க… போய்ட்டு சீக்கிரம் வாங்க….” என்று ”ராஜமரியாதையோடு” இறக்கி விடுவார்கள். நாமும் சுமையை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் ஏறும் நேரமாய்ப் பார்த்து “பஸ் இனி ஆத்தூர் வரைக்கும் எங்கியும் நிக்காது… இடையில யாரும் கேபினுக்கு வந்து தொந்தரவு பண்ணாதீங்க” என்று குரல் கொடுப்பார். மொத்த பயணிகளும் நம்மை ”பெருமிதத்தோடு” பார்க்கும் பார்வை இருக்கிறதே… அடடா.
பிற்பாடுதான் இதில் நான் என் ”தொழில்நுட்ப அறிவை”ப் பயன்படுத்த ஆரம்பித்தேன். பேருந்து ஏறும்போதே பெட்ஷீட்டோடு ஓரிரண்டு பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வாங்கி பேண்ட் பாக்கெட்டிற்குள் பதுக்கி வைத்துக் கொள்வதுதான் அது. இனி வழியில் யாரையும் எப்போதும் கெஞ்ச வேண்டாம்… மன்றாட வேண்டாம்… மண்டியிட வேண்டாம்… கவர் உள்ளிருக்கும் தைரியத்தில் கர்வம் பொங்கும்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல். பக்கத்தில் இருப்பவர் கூட வரும் நண்பனாய் இருந்தால் ஓக்கே. ஆனால் வேறு ஆளாய் இருந்தால்? அதுவும் அந்த ஆள் சீக்கிரமே தூங்குகிற ரகமாக இருக்க வேண்டும். ஆனால் ஆசாமி மிஷ்கின் மணிரத்னம் மாதிரி “நள்ளிரவு நாயகர்”களாக இருந்தால் தொலைந்தோம். அதற்கு கண்டக்டர் காலிலேயே விழுந்து விடலாம். பக்கத்தில் இருப்பவர் தூங்கிவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியவுடன் ஒரு குண்டு வைக்கப்போகிறவரின் அசாத்திய அறிவுடனும் நெளிவு சுழிவுடனும் காரியத்தில் இறங்க வேண்டும்.
அப்புறமென்ன….
”வண்டி பத்து நிமிசம் நிக்கும்… டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்.” என்கிற குரல் ஒலிக்கும்போது ஏதோ லேப் டெஸ்ட்டுக்கு வந்தவனைப்போல கம்பீரமாக கவரோடு அல்லது கவர்களோடு புதர் தேடிப் போக வேண்டியதுதான்.
நமது நாடு பொருளாதாரத்திலும் தொழில் நுட்பங்களிலும் ஓகோவென்று அமோக “வளர்ச்சி” கண்டுவிட்ட பிறகு என்னைப் போன்ற “சுயசிந்தனையாளர்களுக்கு” சிரமம் கொஞ்சம் குறைவுதான். அந்த வளர்ச்சிப்போக்கை சிக்கெனப் பிடித்துக் கொண்டு நம் மேம்பட்ட “நுண்ணறிவை” கொஞ்சம் விரிவுபடுத்தினால் போதும். பிராப்ளம் சால்வ்டு.
இப்போதெல்லாம் படுத்துக் கொண்டே பயணிக்கும் ஸ்லீப்பர் பேருந்துகள் வந்துவிட்டபடியால் நம்ம காட்டில் மழைதான். இந்த பேருந்துகள் தரும் வசதிகள் ஒருபுறம் இருந்தாலும்… பாலிதீன் கவர்களை பயன்படுத்தக் கூடாது என்கிற சுற்றுச்சூழல் மீதான எனது அக்கறையும் என்னை வேறுவிதமாக யோசிக்க வைத்தது.
இப்படித்தான்… பாழாய்ப்போன பாலிதீனுக்கு விடைகொடுத்து வாட்டர் பாட்டிலுக்கு பாதை மாறிய கதை ஆரம்பமானது.
இப்போதெல்லாம் பஸ்ஸுக்கு டிக்கெட் வாங்குகிறேனோ இல்லையோ வாட்டர் பாட்டில் வாங்கிவிடுகிறேன். ஆனால் இதிலும் அதீத ஆபத்தான விஷயங்களும் இருக்கிறது என்பதுதான் வருத்தமான உண்மை. சிங்கிள் ஸ்லீப்பரில் காரியம் முடிந்ததும் பஸ் டீ காபிக்காக நிற்கும் வரை அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய தலையாய பணி நம்மைச் சார்ந்தது. தப்பித்தவறி பக்கத்தில் இருப்பவர் ”சார்… ப்ளீஸ் கொஞ்சம் தண்ணி தரமுடியும்களா…?” என்று கேட்டுத் தொலைத்தால்…. தொலைந்தோம்… சாரி தொலைந்தார்.
ஆறு மாதம் முன்பு கோயம்பேட்டில் என்னை பஸ் ஏற்றிவிடுவதற்காக வந்து கொண்டிருந்த திருச்சிற்றிம்பலம் மாதவன்… “தோழர் வர்ற வழீல உங்குளுக்கென்னாவது வாங்கீட்டு வர்றேன்… என்ன வாங்கீட்டு வரட்டும்?” என்றார்.
ஒரு வாட்டர் பாட்டில் தோழர் தண்ணியில்லாம… என்றேன் ஈனசுவரத்தில். அவர் என் பேரன்புக்குரியவர் மட்டுமல்ல ஓர் உயர் அதிகாரியும்கூட.
இவன் கிறுக்கனா… இல்ல கிறுக்கன் மாதிரி நடிக்கிறானா என்கிற சந்தேகமே வந்துவிட்டது அவருக்கு. தண்ணியில்லாம தண்ணி பாட்டில் கேட்கிறானே எதுக்காக இருக்கும் என்கிற சந்தேகத்தோடே வந்து சேர்ந்தார். அவர் கையில் ஒரு தண்ணீர் பாட்டில். நீர் தளும்பத்தளும்ப.
சரி கிளைமேக்ஸுக்கு வருவோம்.
குருவே இந்த ரகம் என்றால் சீடர்கள் எந்த ரகத்தில் இருப்பார்கள் என்பதற்கு ஒரே ஒரு சேம்பிள்.
கால் நூற்றாண்டுக்கு மேலாய் என்னுடனேயே குப்பைக் கொண்டிருப்பவன் மகேஷ். தொழில் நுட்பத்தில் இந்த இந்தியாவை தூக்கிவிட்டால் மட்டும் பத்தாது… அந்த அமெரிக்காவையும் தூக்கி நிறுத்த வேண்டும் என்று அங்கு போனவன்.
அவனுக்கு இந்த பாலிதீன் கதைகளெல்லாம் அத்துப்படி.
இடைப்பட்ட காலத்தில் பஞ்சம் பொழைக்க அவன் அங்கு போய் விட்டபடியால் இந்த பாட்டில் குறித்த மேம்பட்ட அறிவியல் அறிவை நான் அவனுக்கு புகட்ட முடியவில்லை.
கடந்தமுறை தமிழகம் வந்தவனை சென்னைக்கு பஸ் ஏற்றிவிட்டவன் மயில்வண்ணன் எனும் இன்னொரு மகான்.
”கவலப்படாதீங்க மகேஷ்… கைவசம் பாட்டில் இருக்கல்ல…. தலைவன் வழியப் பின்பற்றுங்க….” என்று வெற்றித்திலகமிட்டு அனுப்பி வைத்திருக்கிறது இது.
நம்ம அமெரிக்க மேதைக்கும் போகிறவழியில் அதே போல வந்திருக்கிறது… அதன் பிறகுதான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பாட்டில் எடுத்தது….
பிடித்தது….
முடித்தது….
எல்லாம் ஓகே.
ஆனால் இத்தனை லிட்டர் டவுன்லோட் ஆகியும் பாட்டில் வெயிட்டா இல்லையே என்கிற சந்தேகத்தில் பாட்டிலைத் தூக்கிப் பார்க்க….
அப்போதுதான் அந்த மாபெரும் மர்மம் விலகியிருக்கிறது.
அது வேறொன்றுமில்லை…..
மூடியைத் திறக்காமல் மூச்சா போயிருக்கிறது அந்த மூதேவி.