சிறப்புப்பக்கங்கள்

இஸ்லாமிய தமிழ்: உலகியலும் ஆன்மிகமும்

முனைவர் பீ.மு. அஜ்மல்கான்

பொதுவாக இறைக்கொள்கைகளைப் பேசும் தமிழ் இலக்கியங்களை பக்தி இலக்கியங்கள் சமய இலக்கியங்கள் என இருவகைப்படுத்தலாம். சமய இலக்கியம் என்பது ஒவ்வொரு சமயங்களில் உள்ள பண்பாடு, கலாசாரம் பழக்க வழக்கங்களைக் கொண்டு படைக்கப்படுவது. உதாரணத்துக்கு இஸ்லாமிய சமயத்தில் உள்ள பழக்கவழக்கங்களை கலாசா ரத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிற்றிலக்கியங்கள் வந்துள்ளன. நாவல்கள் சிறுகதைகள் வந்துள்ளன.

ஆனால் பக்தி இலக்கியம் என்பது ஆன்மிகத்தை மட்டுமே மையமாகக் கொண்டது. உதாரணத்துக்கு மஸ்தான் சாகிபு பாடல்கள் போன்ற சூபி வகை இலக்கியங்கள் என்பவை பக்தி இலக்கியமாகும். இவை முழுக்க முழுக்க ஆன்மிகம் பேசக்கூடியவை.

இஸ்லாமிய சமயத்தைப் பொருத்தவரை ஆயிரக்கணக்கான இலக்கியங்கள் உள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் சார்பாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய நூல் விவர அட்டவணை என்ற வெளியீட்டில் நூல் பெயர், காலம் ஆசிரியர் பெயர் எல்லாமே அளித்துள்ளோம். அதை ஆசிரியராக இருந்து நான் தான் தொகுக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். அதில் 4000 தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பட்டியலிட்டுள்ளோம்.

ஆரம்ப காலகட்டத்தில் வெளியான இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் இஸ்லாம் மதக் கருத்துகளை தமிழகத்தில் பரப்புவதற்காக உருவானவை. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவை நிறைய உருவாயின. சமயத்தைக் கருவியாகக் கொண்டு தமிழ் வளர்ந்தது. சமயங்கள் தமிழைக் கருவியாகக் கொண்டு வளர்ந்துள்ளன. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. எல்லா மதத்துக்கும் இது பொருந்தும்.

இஸ்லாமிய சமயத்தைப் பொருத்தவரையில் ஆரம்பகாலத்தில் வணிகம் செய்யவந்த பல இஸ்லாமியர்கள் இங்கே குடியேறினார்கள். இந்தச் சமூகத்தில் அவர்கள் கலந்தபின்னர் இங்குள்ளவர்களிடம் இஸ்லாமிய சமய கருத்துகளைப் பரப்பவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் ‘அரபுத் தமிழ்‘ பயன்படுத்தினார்கள். இதில் வெளியான படைப்புகள் பக்தி, இறைக்கோட்பாடு சார்ந்தவை. அரபுத் தமிழின் தனிப்பட்ட தன்மை என்னவெனில் இதன் ஒலியும் மொழியும் தமிழாக இருக்கும். எழுத்துரு அரபியாக இருக்கும்.

இதற்கு அடிப்படையாக ஒரு தேவை இருந்தது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலான இஸ்லாமியக் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு அரபு படிக்கத் தெரியும். தமிழ் படிக்கத் தெரியாது. மதரஸாவில் சிறுவயுதிலேயே அரபு படித்து குர் ஆன் ஓதக் கற்றிருப்பார்கள். அதனால் அவர்களால் அரபு படிக்கமுடியும். இவர்களிடம் இஸ்லாமிய இறைக் கோட்பாடுகளைப் பரப்புவதற்குத்தான் அரபுத் தமிழ் என்பது அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நிறைய காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் இஸ்லாம்சமயம் சார்ந்து வரத் தொடங்கின. இன்றுவரை வந்துகொண்டுள்ளன. இதில் இருக்கக் கூடிய கடவுள் கோட்பாட்டின் முக்கிய அம்சம், இந்த வாழ்க்கை என்பது உலகியல் சார்ந்தது. அதில் ஆன்மிகமும் இருக்கும் லௌகீகமும் இருக்கும் என்பதே. இஸ்லாமில் துறவறம் என்பது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. லௌகீக வாழ்க்கை என்பது இந்த உலக வாழ்க்கைக்கு அடித்தளமாகக்கருதப்படுகிறது. இந்த உலக வாழ்க்கையில் நன்மையைச் செய்வதன் மூலமாக மறுமையில் நீ நன்மையைத் தேடிக்கொள் என்று இறைவன் இஸ்லாமில் சொல்கிறான். இது அடிப்படைத் தத்துவம். இறைவனையே முழுக்க முழுக்க சார்ந்து இருந்து, அதே சமயம் இவ்வுலக வாழ்க்கையில் தீமையைச் செய்வாயேயானில் மறுமையில் நன்மையைப் பெறமுடியாது. இதுதான் கடவுள் கோட்பாடு. இதைத்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.

 சீறாப்புராணம் உமறுப்புலவரால் எழுதப்பட்ட ஒரு காப்பியம். பெருமானார் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைதான் அதன் கருப்பொருள். இதில் கடவுள் கோட்பாடு இந்த உலக வாழ்க்கையில் இருக்கக்கூடிய நன்மை தீமைகளை இணைத்துத்தான் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவுகள் அனைத்துமே இம்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இதன் நிகழ்வுகளை எவ்வாறு நிகழ்த்தவேண்டும் என்று இறைவன் முறையிடுகிறான் என்ற அடிப்படையில் சொல்லப்படும்.

முகம்மது நபி (சல்) அவர்களுக்கு முதன்முதலில் ஹிறாக் குகையில் இருக்கும்போது அல்குர்ஆனின் ஆரம்பத் திருவசனங்கள் அருளப் பட்டன. இவ்வாறு முதன்முதல் அருளப்பட்ட திருமறையின் திரு வசனங்கள் இவை என உமறுப்புலவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்குயர் மறையின் வள்ளல் விளம்பவிண் ணவர்கள் கோமான்

இக்குறவு எனும்சூ றத்திலி ருந்தைத் தாயத் தின்ப

மெய்க்குற மாலம் யஃல மெனுமட்டும் விளம்பு வீரென்

 றொக்கலி லுயிரின் மிக்கா யுறுநபிக் குணர்த்தி னாரால்

(நபிப்பட்டம் பெற்ற படலம்)

இதன் பின்னர் இறை அறிவிப்பு எதும் இன்றிச் சில நாட்கள் கழித்தன. நபிகள்பெருமானார் சிந்திக்கலானார். பின்னர் ஜிபுறீல் (அலை) அவர்கள் தோன்றியதன் மூலம் போர்வையானார் எனப் பொருள்படும் 'முஸ்ஸம்மில்' என்னும் சூறாவில் உள்ள சில வசனங்கள் அருளப்பட்டன. இவ்வாறு அறிவிக்கப்பட்டதனால் இன்னல் தீர்ந்து மகிழ்ந்தார்கள் முகம்மது நபி (சல்) அவர்கள் என இவ்வாறு உமறுப்புலவர் பாடியுள்ளார்.

தன்னுடற் குயிரெனுத் தகைமைத் தாகிய

பொன்னகர்க் கிறைசொலும் புனித வாசகம்

என்னயஞ் சுவையினும் கவிந்த பாகென

நன்னபி செவிப்புக தடுக்க நீங்கினார்

(தொழுகை வந்த வரலாற்றுப் படலம்: 33)

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றார் பாரதியார். செவி கைப்ப என்றார் திருவள்ளுவர். இதையே உமறுப்புலவரும் கூறியிருக்கிறார்கள்.

இதேபோல் இஸ்லாம் சமயம் சார்ந்து 16 முழுமையான காப்பியங்கள் வந்துள்ளன. அத்தனை காப்பியங்களும் வெவ்வேறான இஸ்லாம் வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. வேறுபட்ட பாத்திரப்படைப்புகளின் வாழ்க்கை மூலமாக சமயக் கோட்பாடுகளைக் கொண்டுவருவார்கள். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் இது ஒரு பகுதி.

இறப்பு இல்லாதவன் அல்லாஹ். தொடக்க மற்றவன். நடுவில்லாதவன். முடிவு இல்லாதவன். முதல்வனானவன். தோல்வியோ சோம்பலோ அற்றவன். எல்லாவற்றையும் படைக்கிறவன்; அருள் புரிபவன்; அரியவன்: எவருடைய உதவியும் தேவையற்றவன்; எல்லோருக்கும் கிருபை புரியும் பண்புள்ளவன்; எல்லாம் வல்லவன்; ஆற்றலில் குறைவற்றவன்; அறுசு என்னும் 'சிங்காதனத்தில்' அமர்ந் திருப்பவன்; என்னும் கருத்துகளைக் கொண்ட ஒரு பாடல் இவ்வாறு திருமணக்காட்சி என்ற காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது.

முஞ்ச லற்றவன் முதனடு வீறிலா முதல்வன்

அஞ்ச லற்றவன் அனைத்தையும் படைத்தரு ளரியோன்

 கெஞ்ச லற்றவன் கிருபைசால் புடையவன் சினக்கும்

எஞ்ச லற்றவ னறுசின்கீ ழாகமே யிருக்கும்'.

(கிளிக்கூட்டின் வண்ணப்படலம் : 27)

17, 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு வருபோது மஸ்தான் சாகிபு, பீர் முகமது அப்பா போன்றவர்களின் சூபி தத்துவப் படைப்புகள் வருகின்றன. இவை முழுக்க ஆன்மீகத்தைப் பேசுகிறவை. வாழ்க்கை பற்றிய நிகழ்வுகள் அதில் இருக்காது. முழுக்க முழுக்க பக்தி இலக்கியம்.

பீர் முகமது அப்பா, தனக்கே உரித்தான ஞானப்பார்வையில் அல்லாஹ்வை நோக்கியதால் அவன் தந்தையும் தாரமும் அற்றவனாகக் காட்சித் தருகின்றான். எனினும்கூடத் தம்மை நாடி வருபவருக்கு தமக்கே உரித்தான கருணையை அளிப்பவனாவான். அவனுக்கு அன்னையோ மகனோ கிடையாது. ஆனால் இவ்வுலகத்தவர்க்கு இரணம் வழங்குவதும் அவனே. உலகின் தீமைகளைத் தீர்த்- தருளுபவனும் அவனே. யார் யாருக்கு என்னென்ன தேவையோ அவற்றை அறிந்து உதவிசெய்பவனும் அவனே. அவன் முடி- வில்லாதவன் அத்தகையோனிடத்துத் தமக்கு இழிவு வராமல் காக்கும்படி வேண்டுகின்றார்.

தந்தையிலி தாரமிலி தானவனு நீயே

தன்மைகொடெ வர்க்கும் ஒருதாபரமு நீயே

மைந்தரிலி அன்னையிலி மன்னவனு நீயே

மண்ணிலடி யார்க்கு இரணம் வழங்குவது நீயே

சிந்தைதனி லிடறுதனை தீர்த்தருள்வை நீயே

தேட்டமறிந்து எனக்கு உதவி செய்பவனு நீயே

அந்தமிலி நீ எனக்கோர் இழிவு வராமலே

ஆதியே யான் உன் அடைக்கலம் தானேன்

ஞானப்புகழ்ச்சியில் பீர் முகமது அப்பா இவ்வாறு அல்லாவிடம் அடைக்கலம் புகுகிறார்.

ஏற்கெனவே கோடிட்டுக் காட்டியபடி இஸ்லாமிய சமய இலக்கியங்களில் உலகியல் செயல்பாடு இருக்கும். உலக வாழ்க்கையில் எது நன்மை? அந்த நன்மையை எப்படி நிகழ்த்தவேண்டும் ஆகியவற்றை தெளிவாகவே சொல்லிச் செல்வார்கள். திருக்குரானில் சொல்லப்பட்ட இறைக்கோட்பாடுகளை எளிமைப்படுத்தி இஸ்லாமிய சமய இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் சொல்கின்றன.

(முனைவர் பீ.மு. அஜ்மல்கான், முன்னாள் துறைத் தலைவர், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம்)

ஜூன், 2023