பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் கேரளத்தைத் தாக்கும்போது, சில ஊடகங்கள் இங்கே 35 அணைகள் உள்ளன, அவற்றின் அளவுக்கு அதிகமான நீர்த்தேக்கமும் ஒருவேளை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். இது முற்றிலும் தவறான புரிதல். கேரளத்தில் உள்ள பெரிய அணைகளின் எண்ணிக்கை 80. இங்குள்ள நடுத்தர, சிறு அணைகளின் எண்ணிக்கை 200. சுமார் 280 அணைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருக்கும் மாநிலம் கேரளம்.
கேரளத்தின் மொத்தப் பரப்பளவு 36000 ச.கிமீ. இது இந்திய நிலப்பரப்பின் ஒரு சதவீதம். இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதம் தான் கேரள மக்கள் தொகை. இம்மாநிலத்தின் சராசரி அகலமென்பது 36 கிமீ. இப்படியொரு நிலப்பரப்பில்தான் இத்தனை அணைகள் நீர் நிரப்பி நிற்கின்றன. உலகத்தில் வேறெங்குமே இதைக் காண இயலாது. இப்படியொரு நிலையை உருவாக்கும் தைரியம் உலகின் எந்த ஆட்சியாளர்களுக்குமே இருக்காது. வேறொரு நாட்டில் இப்படி நடந்திருந்தால் அந்த ஆட்சியாளர்கள் தண்டிக்கப் பட்டிருப்பார்கள். இங்கோ இது பற்றி ஒரு சிறிய விசாரணைகூட நடக்கவில்லை. எப்படி இந்தளவுக்கு வெள்ளம் வருகிறது, எப்படி இங்கே அடிக்கடி நிலச்சரிவு நடக்கிறது என்பதைப்பற்றி யாருமே இங்கே விசாரிக்கவோ விவாதிக்கவோ இல்லை.
கேரளத்தில் அடிக்கடி நடக்கும் சிறு நிலநடுக்கங்கள் பற்றி யாருமே பேசுவதில்லை. அணைக்கட்டுகள் உருவாக்கும் நீர்தேக்க அழுத்த நிலநடுக்கங்கள் (reservoir induced seismicity) இவை. இவற்றால்தான் பல பெருவெள்ள நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. கேரளத்தின் நில அடுக்குகள் மிகப் பலவீனமானவை. இங்குள்ள மேற்கு மலைத் தொடரின் 14000 ச.கி மீ அடிக்கடி நிலச்சரிவும் மலைச்சரிவும் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலப்பகுதி. அரபிக்கடலை நோக்கி 70 டிகிரி சரிந்த, அதிர்வுகளைத் தாங்க்கும் ஆற்றல் குறைந்த மிக மென்மையான நில அமைப்பு. இப்படியொரு இடத்தில் 280 அணைக்கட்டுகள் மட்டுமன்றி 8500 கருங்கல் சுரங்கங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தற்போதைய அரசாங்கம் ஆட்சி பிடிக்கும்முன் வெளியிட்ட கொள்கை அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் தனியார் சுரங்கங்கள் அனைத்தையும் மூடுவோம் என்றார்கள். ஆனால் இன்று தனியார் கற்சுரங்கங்கள் மிக சுதந்திரமாகச் செயல்படும் இடமாக கேரளம் மாறிப்போயிருக்கிறது.
பிறமாநிலங்களில் மக்கள் குடியிருப்பில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சுரங்கங்கள் அமைக்கப்படவேண்டும் என்பது விதி. கேரளத்தில் இது 250 மீட்டர் ஆக இருந்தது. ஆனால் இப்போது குடியிருப்பில் இருந்து 50 மீட்டரிலேயே சுரங்கங்கள் உள்ளன என்பதே உண்மை.
மூன்று கோடி மக்கள் கொண்ட கேரளத்தில் ஒரு கோடியே 20 லட்சம் வாகனங்கள் உள்ளன. அதில் ஒரு லட்சம் ஜேசிபி எந்திரங்கள். 20 லட்சம் மண், கல் அள்ளிச் செல்லும் கனரக லாரிகள். இவை அனைத்தும் இன்னும் ஒரு பத்தாண்டுகாலம் இங்கே இயங்கினால் இந்த மலைகள் முழுக்க காணாமல் போய்விடும் என்பதை உணர வேண்டும்.
உலகத்தில் அதிகமாக மதில் சுவர்கள் கொண்ட மாநிலமும் கேரளம்தான். இங்கே 30 லட்சம்
கி. மீ, தூரத்துக்கு மதில்கள் உள்ளன. ஒவ்வொரு 5 செண்ட் நிலப்பரப்புக்கும் 20-25 மீட்டர் நீளத்துக்கு மதில்கள் கட்டி எழுப்பி உள்ளனர். இவற்றைக் கட்ட பயன்படுத்தப்பட்ட செங்கல், சிமென்ட், கற்கள், கம்பிகள் இருந்தால் இம்மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் வீடு கட்டிக்கொடுத்துவிடலாம்.
இங்கே ஒரு கோடி குடும்பங்களுக்கு ஒரு கோடி முப்பது லட்சம் வீடுகள் உள்ளன. 5 முதல் எட்டு வீடுகள் வரை கட்டிவைத்திருக்கும் தனிநபர்கள் எண்ணிக்கை இங்கே மிக அதிகம். அதே சமயம் பல லட்சம் ஏழைகள் இங்கே தலைசாய்க்க இடமின்றி சாலையோரங்களில் வாழ்கின்றனர்.
அமெரிக்காவில், வளைகுடாவில், பிரிட்டனில் வசித்துக்கொண்டு அனாவசியாமாகப் பூட்டி வைத்திருக்கும் இந்த வீடுகளைக் கைப்பற்றி வீடற்றவர்களுக்கு வழங்குவதுதான் இன்றைய தலைமுறை செய்யவேண்டிய மிக முக்கியமான காரியமாகும். விற்பனைக்கு கட்டப்பட்ட 28 லட்சம் கட்டடங்கள், வீடுகள் விற்கமுடியாமல், வாடகைக்கு விடமுடியாமல் இங்கே வெறிச்சோடி இருக்கின்றன. ஆனால் இம்மாநிிலத்தின் ரியல் எஸ்டேட் லாபி கேரளம் முழுக்க கட்டடங்கள் கட்டி எழுப்பிக்கொண்டே இருக்கிறது. அதை அரசு, வசதி வளர்ச்சி என்று பெயர் சூட்டி விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறது. இவர்களது மூடத்தனங்கள் இத்துடன் முடிந்தனவா? இல்லை.
பெருவெள்ள சமயத்தில் கேரள மின்துறை அமைச்சர் சொன்னார், அதிரப்பள்ளி ஆற்றின் குறுக்கே அணை கட்டியிருந்தால் அதில் நீரைத் தேக்கி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி இருக்கலாம் என்று. இன்னொரு அமைச்சரோ கேரளத்தில் உள்ள அனைத்து அணைகளின் உயரத்தையும் 20 அடி உயர்த்தவேண்டும் என்று கூறினார்.
அணைகளில் நீர்த்தேக்கத்தால் ஏற்படும் நிலச்சரிவு ஆபத்துகள் பற்றி எந்த ஆய்வும் செய்யாமல் மேலும் அவற்றை உயர்த்தவேண்டும் என பொறுப்பற்று சொல்கிறார்கள். விஞ்ஞான அணுகுமுறை கொண்டவர்களும் சூழலியல் ஆய்வாளர்களும் தாம் இப்படிப்பட்ட விஷயங்களில் இறுதி முடிவு எடுப்பவர்களாக இருக்கவேண்டும்.
அத்துமீறல்களை மனிதன் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது வயநாடு போன்ற பேரிடர்களை சிவப்புக் கம்பளம் போட்டு அழைப்பது அல்லாமல் வேறு எதுவுமில்லை. இந்த அறிதல் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டால் மட்டும்தான் சூழலியல் பேரழிவுகளிலிருந்து கேரளம் தப்பிக்க முடியும்.
(ஜான் பெருவந்தானம், கேரள சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்)
தமிழில் : ஷாஜி