சிறப்புப்பக்கங்கள்

உங்கள் நண்பனா காவல்துறை?

கே.சந்துரு

உங்கள் நண்பன்' என்ற தலைப்பில் 1960களில் தமிழக காவல்துறை சார்பாக  விளம்பரப் படம் ஒன்று சென்னையிலுள்ள குடியிருப்புகளில் நடமாடும் வண்டியின் மூலம் திரையிடப்பட்டது.

அதில் முதல் முறையாக காவல்துறையின் துப்புத் துலக்கும் பிரிவில் மோப்பம் அறியும் நாய்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒரு நாய் அப்படத்தில் தனது திறமைகளையெல்லாம் காட்டியதைப் பார்த்து மக்கள் வாயைப் பிளந்தார்கள். அப்பொழுதுதான் முதல் முறையாக சென்னை காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டு என்று இங்கிலாந்து நாட்டில் அழைக்கப்படும் காவல் பிரிவுடன் ஒப்பிட்டுக் கூற ஆரம்பித்தார்கள்.

அந்த மாயையெல்லாம் வெகுநாள் நீடிக்கவில்லை.  1973க்கு முன்பு நடைமுறையிலிருந்த குற்றவியல் நடைமுறைச் சட்டம் காவல்துறை ஆணையருக்கு குற்றவியல் நடுவர் அதிகாரத்தை வழங்கியிருந்தது. நடைமுறையில் காவல் ஆணையர் எந்தவொரு கைதிக்கும் ஜாமீன் வழங்கியதில்லை. ஒவ்வொரு நாளும் சென்னையில் கைது செய்யப்பட்ட கைதிகளின் ஜாமீன் மனுக்களை அவர் ஒரே நிமிடத்தில் தள்ளுபடி செய்து தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விடுவார். அதற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மறுபடியும் ஜாமீன் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற வேண்டும். இந்த நாடகத்தையெல்லாம் முடிவு கட்டும் வகையில் 1973ல் புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட நடுவர் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதுடன் கைது செய்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் முன்ஜாமீன் தாக்கல் செய்வதற்கும் சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த 50 ஆண்டுகளில் காவலர்கள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து வேலைகளிலேயே பெரும்பான்மையாக ஈடுபடுத்தப்பட்டார்கள். தொழிலாளர் போராட்டங்களில் கொத்துக் கொத்தாக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்--பட்டனர். ஆனால் கிரிமினல் குற்றங்களை துப்புத் துலக்கி அதன் மூலம் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் நடைமுறையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.

70களின் ஆரம்பத்தில் இடதுசாரி தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்று மிகப்பெரிய அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. 90களில் மத அடிப்படைவாதத்தை ஒடுக்குகிறோம் என்றும், புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொடா சட்டத்தின் மூலம் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டன. இது தவிர இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் அவ்வப்போது ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப காவல்துறையும் அசைந்தாடியது.

மனித உரிமை பிரச்னைகளைப் பற்றி உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிட ஆரம்பித்து சில வழிகாட்டு நடைமுறைகளை வகுக்க ஆரம்பித்த பின்னர்தான் காவல்துறையை கண்காணிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. 1991-ம் வருடம் முதன்முறையாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.மிஸ்ரா பாட்னா உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். அவர் ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்க ஆரம்பித்த பின்னர்தான் அந்த திசையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன.

1992ல் சிதம்பரம் பத்மினி வழக்கிலும், அதன் பின்னர் கம்மாபுரம் பார்வதி வழக்கிலும், செஞ்சியில் ரீடாமேரி வழக்கிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. குற்றத்தை துப்புத் துலக்குவதற்காக சி.பி.ஐ  விசாரணை கோரிய போது நீதிபதி மிஸ்ரா அதற்கு அனுமதி அளிக்க மறுத்ததுடன், தமிழ்நாட்டிலுள்ள காவல் அதிகாரிகளில் ஒருவர் மீது கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்குப் பிறகே சிதம்பரம் பத்மினி வழக்கில் காவல் அதிகாரி லத்திகா சரணும், கம்மாபுரம் பார்வதி வழக்கில் ஐ.ஜி.பெருமாள்சாமியும், ரீடாமேரி வழக்கில் ஐ.ஜி.திலகவதியும் சிறப்பு  விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். ஐ.ஜி.பெருமாள்சாமியின் பெயர் ஜெய்பீம் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதோடு, அந்த ரோலில் பிரகாஷ்ராஜ் பட்டையைக் கிளப்பியதனால் இன்று இந்தியா முழுதும் அறியப்பட்ட அதிகாரியாக ஐ.ஜி.பெருமாள்சாமி திகழ்ந்து வருகிறார்.

இந்த மூன்று வழக்குகளிலுமே ஆட்கொணர்வு மனுவில் சிறப்பு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு குற்றம் துப்புத் துலக்கப்பட்டு பின்னர் கொலை கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் சிறைத் தண்டனை பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நியாயமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் சில காவல் துறை உயர் அதிகாரிகளிடம் தோன்ற ஆரம்பித்தது. மக்கள் மத்தியில் அப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுதல்களும் குவியத் தொடங்கியது.   மனித உரிமை சம்பந்தமான கோரிக்கைகள் நேரடியாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உயர்நீதி மன்ற கண்காணிப்பில் அவ்வழக்குகள் நடைபெற ஆரம்பித்ததனால் சட்டத்தை மீறும் காவலர்களுக்கு பய உணர்வு ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் நீதிபதி பி.எஸ்.மிஸ்ரா காவல் ஆணையரை நீதிமன்றத்தில் கடுமையாக கண்டித்த பிறகு அதற்கு எதிராக காவலர்கள் போர்க்கொடி எழுப்பினர். மிஸ்ராவிடமிருந்து அவ்வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தைப் பிடுங்க வேண்டுமென்ற கோரிக்கை தலைமை நீதிபதியிடம் வைக்கப்பட்டது. நீலவதி பெஹ்ரா வழக்கில் உச்சநீதிமன்றம் காவலர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உயர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறியபிறகுதான் பல மனித உரிமை மீறல் வழக்குகள் உயர்நீதிமன்றத்திலேயே நேரடியாக தாக்கல் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான வழக்குகளில் உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளித்தது மட்டுமின்றி அந்தத் தொகையை அரசு முதலில் வழங்கி பின்னர் சம்பந்தப்பட்ட காவலர்களின் சம்பளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட ஆரம்பித்தனர். இதற்குப் பிறகே காவலர்கள் மத்தியில் ஓரளவுக்கு கட்டுப்பாடுகள் ஏற்பட ஆரம்பித்தன.

இருப்பினும் சட்டத்திற்குப் புறம்பாகவே செயல்படக்கூடிய அதிகாரிகளை மாற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. அதில் சிலர் அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் நேரடித் தொடர்பில் இருந்துகொண்டு தாங்கள் விரும்பியபடி செயல்பட ஆரம்பித்தனர். என்கவுன்டர் மூலம் கொலை செய்யும் நிகழ்வுகள் சாதாரணமாக நடைபெறத் தொடங்கியது. ஒரு சிலர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டு அரசு ஆதரவு வழங்கப்பட்டது. வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் பல ஆதிவாசி மக்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு சிலருக்கு கர்நாடக நீதிபதி சதாசிவம் கமிஷன் இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. 

பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன், வைகோ, சுப வீரபாண்டியன் இப்படிப் பலரை ஜெயலலிதா அரசு கைது செய்து சிறையிலடைத்து வேடிக்கை பார்த்தபோது, அவர்களுக்கு நீதிமன்றத்தில் நிவாரணம் கிட்டியது. ஆனாலும் பொய் வழக்குகளுக்கு துணை போகமாட்டோம் என்று சில காவல் அதிகாரிகள் தைரியமாகவோ (அ) மறைமுகவாகவோ செயல்பட்ட பல நிகழ்ச்சிகள் உண்டு. தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் பரந்தாமன் மீது அவர் வெடிமருந்துகளை தனது தோட்டத்தில் வைத்திருந்தார் என்று பொய் வழக்கை ஜோடித்து அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சித்தனர். ஒப்புதல் வாக்குமூலம் எழுதிய காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் அந்த வாக்குமூலத்தை நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தாமதப்படுத்தியதனால் ஒப்புதல் வாக்குமூலம்  சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பரந்தாமனும் பத்து வருடம் கழித்து நீதிமன்றத்தால் நிரபராதியாக விடுவிக்கப்பட்டார்.

இது போன்று அவ்வப்போது சில காவல் அதிகாரிகள் சட்டப்படி செயல்படுவதும், அதையும் மீறி சில கருப்பு ஆடுகள் காட்டாட்சியை அவிழ்த்துவிட்டதும் காவல்துறை வரலாற்றில் எப்பொழுதுமே நிகழ்ந்து வந்துள்ளன. இந்தியக் காவல்பணியைச் சேர்ந்தவர்களுக்கு பதவி காலத்திலும் மனித உரிமை பற்றிய பட்டறிவு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தாலும் அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தங்களுடைய வாழ்க்கை வளத்தைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் அதிகாரிகள் இருக்கும்வரை சட்டத்தின் ஆட்சிக்கு உத்தரவாதமில்லை.

கே.சந்துரு

மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்