சிறப்புப்பக்கங்கள்

"தொப்புள் கொடியை வெட்டினேன்! "

மருத்துவர் தணிகைவேல்

அமெரிக்காவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆன பின் தான் என் துணைவியார் கருவுற்றார். நாங்கள் இருவருமே வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து ஒரு வழியாக 2006–இல் நியூ ஜெர்சியில் நிலை பெற்றிருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் நாட்கள் ஓடின. கொஞ்ச நாட்கள் என் பெற்றோரும் அவர்களின் விசா முடிந்தபின்னர் துணைவியாரின் பெற்றோருமாக வந்து துணைக்கு இருந்தார்கள்.

எதிர்பாராத ஓர் அதிர்ச்சி இடையில் காத்திருந்தது. ஐந்து மாதத்திலேயே துணைவியாரின் கருப்பைவாய் விரிவடைய ஆரம்பித்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. வழக்கமாக அவருக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் இது ஹை ரிஸ்க் பிரக்னென்சி என்று வேறு ஒரு நிபுணரைப் பரிந்துரைத்தார். அவர் பெயர் ஆகு செகுசி. அவர் ஒரு ஆப்ரோ ஆப்பிரிக்கர். மிகச்சிறந்த மனிதர். அக்கறையுடன் கவனித்துக்கொண்டார், அதனால்தான் இன்னும் அவர் பெயர் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.  துணைவியாருக்கு கருப்பைவாய் திறந்துவிடாமல் இருக்க தையல் போடப்பட்டு, அவர் படுத்தவாக்கிலேயே இருந்தாகவேண்டிய சூழல். எந்தவிதமான அழுத்தமும் இருக்கக்கூடாது என்பதால் அவர் படுத்தே இருக்கவேண்டும். எங்களுக்கு வராத வந்த மாமணி போல் வந்த கர்ப்பம் என்பதால் மருத்துவர்கள் சொன்னதை எல்லாம் நாங்கள் கடைபிடித்தோம்.

பிரசவத்தின்போது உடனிருக்கிறீர்களா என்று மருத்துவமனையில் கேட்டார்கள். நானும் சரி என்று சொல்லி கூடவே இருந்து துணைவியாருக்கு தைரியமூட்டினேன். நார்மல் டெலிவரிதான். ஆண் குழந்தை. குழந்தை பிறந்ததும் என்னிடம் தொப்புகள் கொடி வெட்டச்சொன்னார்கள். நானே தான் வெட்டினேன். குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் நாங்கள் அதுவரை பட்ட அவஸ்தைகள் எல்லாம் பனிபோல் விலகி ஓடிவிட்டன. அவனது பிஞ்சுக்காலில் மை தடவி, ஒரு சுவடு மாதிரி பதிய வைத்துத் தந்தார்கள். இன்னும் அதை வைத்திருக்கிறோம். அவனது தொப்புள் கொடியை பாதுகாத்து கொஞ்சநாள் வைத்திருந்தோம். இப்போது அது எங்கோ காணாமல் போய்விட்டது.

வீட்டுக்கு குழந்தையை காரில் கூட்டிவரும்போது அமெரிக்க வழக்கப்படி, பேபி சீட்டில் அமர வைத்து,  பத்திரமாகக் கூட்டி வந்தோம். வீட்டுக்கு வந்தபின் என் மாமியார் ஆரத்தி எடுத்து கண்ணேறு கழித்து உள்ளே தூக்கிச் சென்றார். வீட்டுக்குள் நாங்கள் இந்தியர்கள் ஆகிவிட்டோம். இன்று எங்கள் மூத்தமகன் கல்லூரி செல்லத் தயார் ஆகிவிட்டான்! எல்லாம் கனவுபோல் கடந்து சென்றிருக்கிறது.