என்னென்றும் புன்னகை Image by jcomp on Freepik
சிறப்புப்பக்கங்கள்

50 புன்னகைத் தருணங்கள்

Staff Writer

அந்த ஐநூறு ரூபாய்!  - நடிகர் இளவரசு

‘யாருப்பா நீ!' என்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. நான் காரை ஓட்டி வந்து அவர் வீட்டில் அவரை விட்டுவிட்டுக் கிளம்பும் நேரம் அது.

‘சார், நான் கண்ணன் சார் அசிஸ்டண்ட்' என்றதும் ஆழமாகப் பார்த்தார்.

 ‘உள்ளே வா' என்று அழைத்து அவர் வீட்டுக்கு உள்ளே செல்ல, பவ்யமாக பின் தொடர்ந்தேன்.

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின்போதே ஒளிப்பதிவாளர் கண்ணன் அவர்களிடம் நான் உதவியாளராகச் சேர்ந்துவிட்டேன். இது முதல் மரியாதை படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம். இயக்குநருக்கு ஓட்டுநர் இல்லாத சமயம் நான் தான் கார் ஓட்டப்போவேன். அச்சமயம் மூன்று நாளாக நான் தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அதை கவனித்தவர்தான் என்னை விசாரித்துவிட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

‘இந்தா, இதை வெச்சுக்க. உனக்கு எப்ப செலவுக்கு காசு வேணும்னாலும் தயங்காம என்கிட்ட வந்து கேளு' என்றவாறு என்கையில் 500 ரூ தாள் ஒன்றைத் திணித்தார்.

அவருக்கு கார் ஓட்டுவதையே பாக்கியமாக நினைத்துக் கொண்டு இருந்த எனக்கு, அவர் கையால் பணம் கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. இந்த மகிழ்ச்சியோடு அந்த ரூபாய் நோட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே ஜெமினி மேம்பாலம் அருகே இருக்கும் அவரது இல்லத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் இருக்கும் என் அறை வரைக்கும் நடந்தே சென்றேன்! எண்பதுகளில் 500 ரூபாய் என்பது பெரிய மதிப்பு மிக்கது! அதைவிட நான் ஆராதித்த இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து பெற்ற தருணம் எனக்கு பெரும் மகிழ்ச்சியானது!

சட்டென்று மாறுவது வானிலை - அன்பாதவன்

அஅது 2014.. பின்பனிக்கால பிப்ரவரி. வங்கியின் ஆடிட் இன்ஸ்பெக்‌ஷன் பிரிவில் காஞ்சிபுரத்தில் முகாம். அஹமதாபாத்திலிருந்து அன்போடொரு தமிழ்க்குரல் அழைத்து, ‘அதிர்ஷ்டக்கார நண்பரே.. அயலகப் பணிக்காக துபாய்க்கு

தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள்.. நல்வாழ்த்துகள்' என்றது.

‘அய்யா.. இது என்ன புதுப்புலி.. மெய்யா பொய்யா‘ குழப்பத்தில் மெய்யாலுமே காஞ்சி விடுதியில் காலாட்டி கழித்தேன் உறக்கமில்லா இரவை. விடிந்ததும் அன்று குட் மார்னிங் தானே.. அதிகாரப்பூர்வ புறாவின் ஓலை உறுதி செய்ய..ஒரு மாதிரி கலவையான கவலை.

அந்த நாளும் வந்தது! வழியனுப்ப வந்த  குடும்பம் விடைபெற்றுக் கிளம்ப விமான நிலையத்தில் யாரும் ‘இந்தி தெர்யாத்தா ஒன்க்கு' எனக் கேட்காமல் கனிமொழி பேசி உள் அனுப்ப,போக வேண்டிய விமானம் தாமதமாம். நான் விமானத்தில் அமர்வதற்குள் குடும்பம் நாலுமணி நேரப் பயணத்தில் வீடு சேர்ந்துவிட்டது.

முன்னிரவு விமானம் நள்ளிரவில் வந்து சேர, ராவோடு ராவாக இறங்கி விழித்தால் ஒளிமய துபாய்! அறைக்கு வந்து அசந்து தூங்கி காலையில் காலாற நடந்தேன்.. அடடாவோ அடடா... எதிரே ஒரு திரையரங்கில் கமலின் உத்தமவில்லன்.. வெள்ளிக்கிழமை விடுமுறையாதலால்  பொங்கு தமிழர் கூட்டம் எங்கும் பரவி துபாய்க் காற்றில் தேமதுர தமிழோசை..

கால் கடந்த பாதையில் காஃபி சுகந்தம்.. ஆஹா.. நம்மூரு சரவணபவன்... இன்னும் நடக்க தன்யனானேன்... கண்ணில் பட்டது நாடார் மளிகை.. வாசலில் தமிழிதழ்கள்.. தினசரிகள்..

சட்டென்று மாறிய வானிலையால்... ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..' பாடியபடி அறைக்குத் திரும்ப, கண்ணாடியில் தெரிந்தான் 'கவலையில்லாத மனிதன்'

எகானமி டு பிஸினஸ் கிளாஸ்!  சுமதிஸ்ரீ

2016ம் ஆண்டு, ஆப்ரிக்காவில் ‘ஜாம்பியா‘ நாட்டுக்கு சொற்பொழிவுக்காக அழைக்கப் பட்டிருந்தேன்.  ஜாம்பியா, உகாண்டா ஆகிய இரு நாடுகளுக்கும் சொற்பொழிவிற்காக அழைக்கப்பட்ட முதல் பேச்சாளர் நான் தான்...

பயணத்திற்கு ஒரு வாரம் முன்பு நான் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. கடைசி நேரம் என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. உடன் யாரையும் அழைத்துப் போக, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய கால அவகாசம் இல்லை. என் மருத்துவர். பயணம் செய்யலாம், தைரியமாக போய் வாருங்கள் என சொன்னார்...இருபது மணி நேரப் பயணத்தில், உடலில் அசதியும், மனம் முழுக்க ஒரு சோர்வும் இருந்தது.

ஜாம்பியாவில் நான் பேசிய நிகழ்ச்சிக்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பெண் அதிகாரி ஒருவரும்,சிறப்பு அழைப்பாளராக  வந்திருந்தார். அவருக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாது. என் பேச்சின் சில பகுதிகள் அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லப்பட்டன. நான் பேசிய விதம், குரல் ஏற்ற இறக்கம், உடல் மொழி, பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டியது... இதெல்லாம் அவருக்கு என்ன உணர்த்தியதோ தெரியவில்லை... மேடைக்கு வந்த அவர்,

சிறப்பாகப் பேசிய இந்த பெண், இந்தியாவிற்கு திரும்பிப் போகும்போது, எங்கள் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில், ஆதண்டிணஞுண்ண் ஞிடூச்ண்ண் இல் பயணம் செய்யலாம் என்றார்.  ஜாம்பியா போகும் போது, எகானமிக் வகுப்பில் சென்றவள், இந்தியாவிற்கு திரும்பி வரும் போது, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில் பிசினஸ் க்ளாஸில் வந்தேன்.

என் வாழ்வில் மிக மகிழ்வான தருணங்களில் அதுவும் ஒன்று!

காட்சியில் மகிழ்ச்சி ! ஷீலா ராஜ்குமார்

தமிழ்த் திரைத்துறையில்  நடிகையாக பயணத்தைத் தொடங்கி சொற்பமான கதாபாத்திரங்களையே விரும்பி ஏற்று நடித்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக ‘டுலெட்' படத்தின் ‘அமுதா' பாத்திரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கோவா திரைப்பட விழாவில் ஒரு பார்வையாளராக திரையில் இருக்கும் அமுதாவை ஷீலாவாக நான் பார்த்த தருணம் என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது. சில மாதங்கள் கழித்து சென்னைத் திரையரங்குகளில் படம் வெளியான போது பல பெண்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து பேச வார்த்தைகளற்று

நெஞ்சோடு ஆரத்தழுவிக் கொண்டார்கள். அந்த அரவணைப்பில் நான் அவர்களுடைய அமுதாவை உணர்ந்தேன். ஒரு நாள் என் தாய் வயதுள்ள ஒருவர் படம் முடிந்ததும் வெளியே நின்றிருந்த என்னருகில் வந்து நெடுநேரம் என்னை பார்த்தபடியே இருந்தார். நானே பேச்சுக் கொடுத்தேன். பொலபொல வென்று உடைந்து அழுதுவிட்டார்.  பக்கத்தில் இருந்த ஃபுட் கோட்டிற்கு அழைத்துச்

சென்று இருவரும் காஃபி சாப்பிட்டோம். அவர் கதையைக் கேட்டேன். அவர் ஒரு முன்னாள் உதவி இயக்குநரின் மனைவி. என் அமுதாவை விட அவருடைய அமுதாவின் கதையைக் கேட்டு உண்மையில் உள்ளுக்குள் அழுதேன். ஆனால் அவருக்கு ஆறுதல் சொல்ல முடிந்ததே பெரும் நிறைவளித்ததாக உணர்ந்தேன்.

மலையாளத்தில் ‘கும்பளங்கி நைட்ஸ்' திரைப்படத்தில் நடித்த போது மலையாளத் திரையின் மிகச் சிறந்த நடிகரான சௌபினோடு நடித்த முதல் நாள் படப்பிடிப்பு மிகச் சிறந்த அனுபவம். அக்காட்சியைப் படமாக்கும் போது நடிகர்கள் நாங்கள் படப்பிடிப்பு தளத்திலேயே பேசிப் பேசி இயக்குநர் விருப்பத்தை ஒரு காட்சியாக உருவாக்கினோம். கண்முன்னால் நடந்த அபூர்வ மேஜிக் தருணம் அது. ஆனால் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் அத்தருணம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது!

என் நூலகத்துக்கு!   போகன் சங்கர்

வாழ்வின் சந்தோஷமான தருணம் என்று யோசிக்கும்போது, ஒருவர் சந்தோஷம் என்றால் என்ன என்று வரையறுத்துக்கொள்ள வேண்டியவராகிவிடுகிறார்.வேலை கிடைப்பது, காதல், கல்யாணம், குழந்தைப் பேறு போன்றவை எல்லோருக்கும் பொதுவான சந்தோஷங்கள். ஒரு கலைஞனுக்கு, அவனுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பாக அது இருக்கலாம். அல்லது அவனுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம், விருது. ஒரு விஞ்ஞானிக்கு அவன் தீவிரமாக தேடிக்கொண்டிருந்த ஒன்றிற்கான விடை. அதுவே கணிதவியலாளனுக்கு ஒரு சூத்திரமாக இருக்கும். எழுத்தாளனுக்கு அது என்னவாக இருக்கக் கூடும்? யோசிக்கையில் பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கும் விஷயங்களில் ஓர் எழுத்தாளனுக்குக்  கிடைக்கிற  மகிழ்ச்சி முழுமையானதில்லை. அதில் அவனுக்கே உரித்தானது என்று எதுவும் இல்லை.

இது எழுத்தாளர்களுக்கு  மட்டுமே உரியது என்றில்லை. ஒரு மலையேற்ற வீரர் ஏன் உயிரைப் பணயம் வைத்து அவ்வளவு தூரம் செல்கிறார் என்று யாராலும் விளக்க முடிவதில்லை. நிறைய பேர் இந்த ‘முழுமையான நிறைவு பெற்ற' ஒரு தருணத்துக்காக தங்கள் வாழ்க்கையையே இழந்திருக்கிறார்கள். நானிந்த  மகிழ்ச்சியான தருணம்  என்பதை கலப்பிடமில்லாத பூரண நிறைவு பெற்ற தருணம் என்று எடுத்துக் கொள்கிறேன். மற்ற சந்தோஷமான விஷயங்களில் பிறர் பங்கு உண்டு. இது நான் மட்டுமே பூரணமாக இருந்த ஒரு கணம் பற்றியது.

அப்போதும் இப்போதும் எனக்கு கலப்படமற்ற மகிழ்ச்சியைத் தருவதாய் புத்தகங்கள்தான் இருந்திருக்கின்றன. தேடிய புத்தகத்தை எங்கோ விபத்தாய்க் கண்டடைய முடிவது; வாங்க முடிவது; பரிசாய் வருவது தருகிற சந்தோஷம் வேறு எதுவும் தருவதில்லை. என்னுடைய முதல் வேலை தந்த முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நான் நேராக நெல்லையில் இருந்த ஒரு புத்தகக் கடைக்குப் போனேன். அப்போதுதான் தி.ஜானகிராமனின் எல்லா நூல்களும் மறுபதிப்பாக ஐந்திணை பதிப்பகம் மூலமாக வந்து இறங்கியிருந்து காட்சிக்கு அடுக்கப்பட்டுக்கொண்டு இருந்தன. நான் விலையை விசாரித்தேன். என்னுடைய சம்பளத்தில் அடங்குகிறதாக அது இருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இனி நான் வாங்க விரும்புகிற புத்தகங்களை நானே வாங்க முடியும்! மிச்சம் அதிகம் இல்லை. பரவாயில்லை. நான் எல்லாவற்றையும் ஒரு கயிறால் கட்டி வாங்கிக்கொண்டு பேருந்தில் வீட்டுக்குப் போனேன்.  ‘‘நூலகத்துக்கு வாங்கிப் போகிறீர்களா?''என்று ஒருவர் கேட்டார். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னேன் ‘‘ஆமாம். எனது நூலகத்துக்கு!''

அமைச்சர் ஆனேன்! - நயினர் நாகேந்திரன்

சிறு வயதிலிருந்தே அரசியலில் சாதிக்க வேண்டும், அமைச்சர் பதவியின் உயரத்திற்குச் செல்ல வேண்டுமென்கிற உணர்வு எனக்குள் இருந்தது. அதில் குறிப்பாக, அமைச்சர் முத்துசாமி போக்குவரத்துத் துறை அமைச்சராக செயலாற்றிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அதிலிருந்து போக்குவரத்து அமைச்சர் என்கிற பொறுப்பின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடும், ஆவலும் ஏற்பட்டது. அத்துறையில் இருந்த பல்வேறு முக்கிய நபர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்களாக மாறினார்கள். பிறகு நான் அரசியலில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.  மே மாதம் 19, 2001 அன்று புரட்சித் தலைவி முதல்வர் ஜெயலலிதா அழைத்து எனக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பை வழங்கினார். சிறு வயதிலிருந்து எனக்குள் இருந்த கனவு, அதுவும் நான் விரும்பிய துறைக்கே அமைச்சர் ஆனேன். அந்த நிகழ்வே என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்!

பாடலும் இசையும் - என்.டி.ராஜ்குமார்

சங்கடமான சூழ்நிலைகள் என்று கேட்டிருந்தால் நான் மிகவும் எளிதாக பலவற்றைச் சொல்லிவிடமுடியும். ஆனால்  நீங்கள் கேட்பது மகிழ்ச்சியைப் பற்றி... எனவே அதிலிருந்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பாடும்போதும், குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்கும்போதும்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மாணவர்களுக்குப் பாடல், இசை சொல்லிக்கொடுக்கும் அந்த கணப்பொழுதே எனது மிகவும் மகிழ்ச்சியான தருணம் எனலாம். இது எனது வாழ்வில் எல்லா காலத்திற்கும் பொருந்தும். கொரோனா ஊரடங்கில்கூட மனரீதியாகவும், பொருளாதார நிலையிலும் மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்கிறேன். ஆனால், இப்போதும் குழந்தைகளுக்குப் பாடல் சொல்லிக்கொடுக்கும் தருணமே அனைத்து  அழுத்தங்களில் இருந்தும் என்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது.  குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுக்கும்போது சில மணி நேரம் அனைத்தையும் மறந்து வேறொரு உலகத்திற்குச் சென்றுவிடுவதாக உணர்வேன். அந்த உணர்வுதான் என்னை இதுநாள் வரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. பாடலும் இசையும் இல்லையென்றால் நான் எப்போதோ தவிடு பொடியாகியிருப்பேன் என பலநேரங்களில் நான் உணர்ந்ததுஉண்டு.

ஏழாண்டு காத்திருப்பு! கரு.பழனியப்பன்

நான் காதலித்த தகவலை முதன் முதலாக என் வீட்டில் சொன்னபோது என் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோல் நான் காதலித்த பெண்ணின் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் எங்கள் மீது பெற்றோர் வைத்திருந்த அன்பாகத்தான் இருந்தது. இதுவரை நாம் தானே எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தோம். இம்முறை இவர்களாகவே பார்த்துக்கொண்டார்களே.. இது சரியாக வருமா என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. இருக்காதா பின்னே...? நான் மொழி, நாடு எல்லாம் தாண்டிப்போய் அல்லவா ஒரு பெண்ணை காதலித்திருக்கிறேன் ! அவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். வேற்று மொழிக்காரர்.

நாங்கள் இருவருமே ஒன்றில் உறுதியாக இருந்தோம். எங்கள் திருமணம் நடந்தால் இருவீட்டார் சம்மதத்துடன் தான் நடக்கவேண்டும் என்பதுதான் அது! நாங்கள் ஏழு ஆண்டுகள் காத்திருந்தோம்.  எங்கள் உறுதியைப் பார்த்து, ஒரு வழியாக இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டார்கள். என் திருமண மேடையில் எங்கள் இருவரின் பெற்றோர்களை மட்டுமே ஏறச் செய்வது என்பதில் உறுதியாக இருந்தேன். வந்திருந்த எல்லோரும் சிறப்பு அழைப்பாளர்களாக எதிரே அமர்ந்திருக்க, எம் பெற்றோர்கள் மேடையில் அருகிருந்து வாழ்த்த, எங்கள் திருமணம் சிறப்பாக நடந்த அந்த தருணத்தின் மகிழ்ச்சி மிகத்தலையாயது!

பயணம் புதிது - காலச்சுவடு கண்ணன்

புதுதில்லி உலகப் புத்தகச் சந்தையில் இரண்டாம் முறையாக 2004இல் காலச்சுவடு அரங்கு அமைத்திருந்தேன். அங்கு பிராங்பர்ட் புத்தகச் சந்தையிலிருந்து வந்து ஓர் ஆலோசனை முகாம் நடத்தினார்கள்.  பிராங்பர்ட் சந்தைக்கு பயனுள்ள முறையில் வந்துசெல்ல அவசியமான முன்தயாரிப்புகளை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்  அதிலிருந்து மனம் பிராங்பர்ட் புத்தகச்சந்தைக்குச் செல்வதில் குவிந்திருந்தது.

கேரளத்தில் டி. சி. புக்ஸில் ( மலையாளம், ஆங்கிலப் பதிப்பகம்) எடிட்டராக இருந்த என் நண்பர் வி. சி. தாமஸ் 2005 ஆம் ஆண்டு Book Fair Fellowship Programme என்ற திட்டத்தில் பங்கேற்றுவிட்டு எனக்கும் அதைப் பரிந்துரைத்தார். 2006இல் நான் விண்ணப்பித்தேன். அது பிராங்பர்டில் இந்தியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆண்டு. கடும் நெருக்கடியாக இருந்ததால் அடுத்த ஆண்டுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். மீண்டும் விண்ணப்பித்தேன். தேர்வுசெய்யப்பட்டேன். அதீத மகிழ்ச்சி அடைந்த நாள் அது. சென்னை சென்று விசாவுக்கு விண்ணப்பித்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பா செல்வதால் நண்பர்களைப் பார்க்கும் ஆர்வம் இருந்தது. சில நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று திட்டமிட்டேன்.

நிகழ்ச்சிக்கு முதல் நாள் சென்று நிகழ்ச்சி முடிந்த நாளே திரும்புவதே விசா வழங்குவோரின் வரையறையாக இருந்தது. எனவே விசா மறுக்கப்பட்டுவிட்டது.

இது பேரதிர்ச்சியாகத் தாக்கியது. அன்று மாலையே ஊர்திரும்பிவிடுவது என்ற முடிவோடு ப்ரஸன்னா ராமஸ்வாமியை அழைத்தேன். ஊர்திரும்பவேண்டாம் என்றும் மீண்டும் விண்ணப்பிக்குமாறும் ப்ரஸன்னா பரிந்துரைத்தார். அன்றைய இரவு பெரும் மன நெருக்கடியில் கழிந்தது. பின்னிரவில் எங்கள் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடன் தொடர்புகொண்டார். மீண்டும் விண்ணப்பிக்க ஒழுங்கு செய்வதாகவும், பயிற்சித்திட்ட காலத்திற்கு மட்டும் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவ்வாறே விண்ணப்பித்து விசாவை பெற்றுக்கொண்டேன். நிம்மதி.

இத்தாமதத்தால் நான் பிராங்பர்ட் பயணிக்கும் நாளை ஒரு நாளுக்குத் தள்ளிப்போடவேண்டிவந்தது. பிராங்பர்டில் எங்கள் குழுவுடன் பிராங்பர்ட் புத்தகச்சந்தையின் தலைவர் சந்திக்கும் முக்கியமான இரவு விருந்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தேன். பிராங்பர்டில் இறங்கி நான் தங்கவேண்டிய இடத்திற்கு இரவு வந்துசேர்ந்தேன். எங்கள் குழுவினர் விருந்துக்குச்  சென்றுவிட்டார்கள்.

சிறிது ஓய்வெடுத்துவிட்டு பின்னிரவு நாங்கள் தங்குமிடத்திலேயே இருந்த உணவகத்திற்குச்  சென்றேன். உணவருந்துகையில் சிலர் என்னிடம் வந்து, நான்தான் திட்டத்திற்கு வந்திருக்கும் இந்தியப் பதிப்பாளர்  கண்ணனா என்று வினவினார்கள். எங்களுக்குள் ஓரளவு  பரிச்சயம் மின்னஞ்சல் வழி ஏற்பட்டிருந்தது. ஆம் என்றதும் ஒரு குழுவாக அமர்ந்திருந்த வட்டத்திற்கு இட்டுச்சென்றார்கள். உலகப்பதிப்பாளர்கள் 18 பேர் அடங்கிய குழு அது. விருந்துமுடித்து கூடி மகிழ்வதற்காக அங்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் பரவசத்துடன் இணைந்துகொண்டேன். என் பதிப்பாளர் வாழ்க்கை ஒரு திருப்புமுனையில் இருப்பதை  உணரமுடிந்தது. புதிய பயணத்திற்கான வேகம் மனதில் நிறைந்தது.

மகள் கொடுத்த மகிழ்ச்சி! - போஸ் வெங்கட்

என் வாழ்வில் எனக்கு மிகப்பெரிய உணர்தலையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது எனக்கு மகள் பிறந்ததுதான். முதல் குழந்தை பெண்ணாக பிறந்தது எனக்கு பல்வேறு மனமாற்றங்களை ஏற்படுத்தியது. ஆச்சரியமும் நெகிழ்வும் நிரம்பிய உணர்வுகளால் நான் அப்போது மகிழ்ந்திருந்தேன். எந்த மகிழ்ச்சியான நிகழ்வுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும். ஆனால் என் மகளின் பிறப்பு கொடுத்த மகிழ்ச்சி, இப்போது எங்கேயும் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குச் சென்று அவரைப் பார்க்கும்போது அப்படியே தான் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 28 - ஆம் தேதி என் மகளின் 11 - வது பிறந்தநாளைக் கொண்டாடினோம்.

எலி வேட்டை - வா.மு.கோமு

எண்பதுகளின் இறுதிகளில் அணில், எலிகளை வேட்டையாட நண்பர்களுடன் காடுகளில் அலைவது விடுமுறை ஞாயிறுகளில் எனது வழக்கமாயிருந்தது. அப்படிக் காடுகளின் வேலியோரங்களில் அலைந்து திரிகையில் நண்பர்கள் விளார்களிலும், ஒண்டி வில்லிலும் அடித்த எலிகளை ஊணாங்கொடியில் எலிகளின் கால் எலும்புகளில் சதையை விரிவாங்கி கோர்த்து தூக்கி வரும் வேலையை எனக்கு அளித்து விட்டார்கள்.

என்னால் காடுகளில் உயிர்பயத்தோடு ஓடும் அவற்றை ஊஞ்சவிளாரால் சரியாக  அடித்தெடுக்க முடியவில்லை. இந்த சோகம் தொடர்ந்த சமயமொன்றில் ஒரு நாளின் முதல் வேட்டையில் நான் கையில் வைத்திருந்த விளாரில் என்னை நோக்கி பாய்ந்து வந்த ஓர் அணிலை அடித்து வீழ்த்திவிட்டேன். விளாரால் அடிபட்ட அணில் பக்கத்து காட்டின் வரப்பில் போய் விழுந்து கிடந்தது.

உண்மையிலேயே நண்பர்கள் பாராட்டியது மகிழ்வாய் இருந்தது. ஆனால், ‘கிரிக்கெட் மட்டையால் அடிப்பது போன்றல்லவா அடித்தாய்.. அதனால் அணிலின் மண்டை கசங்கிவிட்டது!' என்றார்கள். பிந்தைய காலங்களில் எளிதாக நண்பர்களைப் போன்றே எந்தப் படபடப்புமில்லாமல் நிதானமாக துரத்தியோடி அடிப்பதில் கைதேர்ந்தவனாகி விட்டேன் என்றாலும் அன்று 17 அணில்கள், ஏழு எலிகளை ஒரே வடைச்சட்டியில் வறுத்து அனைவரும் பகிர்ந்துண்கையில் நான் அடித்த அந்த முதல் அணிலின் பின்னந்தொடையோ அல்லது நெஞ்சுப்பகுதியையோ என் இலையில் இருந்ததாக எண்ணி உண்டேன்.

அந்த மகிழ்வு அன்றைய இரவும் தொடரவே, நானே தனியாளாக வேட்டைக்குச் சென்று ஊஞ்சைவிளாரால் பின்னிப் பெடலெடுத்து எண்ணற்ற அணில்களை அடித்து வந்து வடைச்சட்டியில் வறுத்து நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்த கனவும் கூட வேடிக்கையாகவே இருந்தது.

சைக்கிளைப் பஞ்சர் ஆக்கினோம்! - பாரத தேவி

கிராமத்தில் சிறுவயதில் தொடங்கி மாடு மேய்த்துக்கொண்டிருந்த அனுபவங்களே எனக்கு அதிகம். ஒருமுறை எங்களது பிஞ்சையில் நானும் எனது தம்பியும் பாசி நெத்து, தட்டை நெத்து போன்ற பயிர்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஈன்று இரண்டு & மூன்று நாட்களே ஆன ஒரு கன்றுக்குட்டியை சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டிக்கொண்டு, ஒரு நபர் எங்கள் பிஞ்சையை ஒட்டியிருக்கும் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அதனை மங்கம்மா சாலை என்பார்கள். சைக்கிளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த தாய்ப்பசு பின்னால் ஒடிவந்துக்கொண்டிருந்தது. கன்றை ஈன்ற அந்தப் பசு மிகவும் சோர்வடைந்து ஓட முடியாமல் மூச்சிரைத்துக் கொண்டு துவண்டது. அது பங்குனி மாதம், வெயில் தாங்க முடியாமல் அந்த நபர் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் கமலை வைத்து நீர் இறைத்துக்கொண்டிருந்த கிணற்றுக்கு தண்ணீர் குடிக்க ஓடினார். அந்த மாடு முற்றிலும் தளர்ந்து சைக்கிளின் அருகிலேயே சுருண்டு படுத்துக்கொண்டது. எனக்கும் என் தம்பிக்கும் அதைப் பார்க்கவே மிகவும் பாவமாக இருந்தது. மீண்டும் சைக்கிளுக்குப் பின்னால்

அந்த பசுவால் ஓடமுடியாது என்பதைப்புரிந்துகொண்டோம். தண்ணீர் குடிக்க சென்ற அந்நபர் வருவதற்கு முன்னர், அங்கிருந்த பெரிய காக்கா முட்களினால் சைக்கிளின் இரண்டு டயரையும் குத்தி விட்டு எதுவும் தெரியாததுபோல பிஞ்சைக்கு வந்துவிட்டோம். அந்த நபர் திரும்பிவந்து படுத்துக்கிடந்த மாட்டை எழுப்பத் தொடங்கினார். மாடு எழும்ப முடியாமல் ம்மா.. என்றது. அப்போதும் விடாத அவர், தீக்குச்சியை பற்ற வைத்து மாட்டின் வாலில் சூடு காட்டி எழுப்பினார். அதன்பிறகே சைக்கிளில் காற்று இறங்கியிருப்பதை கவனித்தார். அவருக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. ‘‘தாயோ**... சைக்கிளு கண்டாரவோ** சைக்கிளு'' என்று நல்லவேளையாக சைக்கிளை மட்டும் வசவினார். அங்கிருந்து ஊருக்குள் செல்ல 2கிமீ தூரம். இனி அவர் நடந்துதானே சென்றாக வேண்டும். நாங்கள் அருகில் சென்று எதுவும் தெரியாததுபோல, பாவம் மாட்டிற்கு தண்ணீர் தேவைபோலிருக்கிறது, தண்ணீர் காண்பித்து அழைத்து செல்லுங்கள் என்றோம். அவர் வேறு வழியின்று மாட்டிற்கு தண்ணீர் காண்பித்து மெதுவாக நடத்தி அழைத்துச் சென்றார்.

அந்த மாட்டுக்கு உதவி செய்தது மிகவும் சந்தோஷம் தந்த நிகழ்வுகளில் ஒன்று!

புனேவில் கிடைத்த பூரிப்பு - மு.தமிமுன் அன்சாரி ச.ம.உ

சென்னை புதுக்கல்லூரியில் மாணவர் பேரவைச் செயலாளராக வெற்றி பெற்ற நிகழ்வு, பின்னர்  சட்டமன்ற உறுப்பினராக நாகப்பட்டினத்தில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்ற நிதழ்வு ஆகியவை எனது பொது வாழ்வில் மறக்க முடியாதவை.

எனினும் நானும், என்னோடு உள்ளவர்களும் சேர்ந்து மகிழ்ந்த சாதனைமிகு நிகழ்வு கடந்த பிப்ரவரி 22, 2020  அன்று நடந்தது.

இந்தியாவிலேயே சிறந்த முன் மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற விருதை, மராட்டிய மாநிலம் புனேயில் செயல்படும் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான சர்வதேச அமைதிப் பல்கலைக்கழகம் எனக்கு வழங்கியது.

டெல்லியில்  நடைபெற்ற அந்நிகழ்வில் நாடெங்கிலுமிருந்து பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள்,பன்னாட்டு அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என சகலரும்  திரண்டிருந்தனர்.

அந்த விருதை வழங்கியபோது அரங்கம் அதிர்ந்தது.

உலகமெங்கும்  காணொளி வழியே இதை பார்த்து  எமது  மனிதநேய ஜனநாயக கட்சியினர் பேரானந்தம் அடைந்தனர். பலர் கண்கலங்கினர். எனது தொகுதியை சேர்ந்தவர்களும், எனது  குடும்பத்தினரும், நண்பர்களும், ஊர் மக்களும்  மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்தியா முழுவதும் உள்ள 4123 சட்டமன்ற உறுப்பினர்களில் சிறந்த முன் மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியை ஒரு தமிழர் பெற்றது சிறப்புமிக்கது என பலரும் பாராட்டினர். ஊடகங்களும் இச்செய்திக்கு முன்னுரிமை தந்தன.

நானும் மகிழ்ந்து, எல்லோரும் மகிழ்ந்த அந்த நிமிடங்கள் விவரிக்க முடியாதவை.

மின்னும் நட்சத்திரங்களும், பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும், பள்ளத்தாக்குகளில் மணக்கும் பூக்களும் என்னை அலங்கரித்ததாகப் பூரித்த அந்த நிமிடங்களை என் வாழ்வில்  மறக்க முடியாது.

இரண்டு பவுன் மோதிரம் - திண்டுக்கல் ஐ.லியோனி

1998 - ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு பட்டிமன்றம் நடத்துவதற்குச் சென்றிருந்தோம். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘‘தமிழ் மொழி  வளர்ச்சிக்கு திரைப்படப் பாடல்கள் துணை புரிந்ததா? துணை புரியவில்லையா?'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினோம். அந்த தலைப்பில் தமிழ் மொழியினுடைய சிறப்புகளை நான் வரிசையாக சொல்லிக்கொண்டே வந்தேன். திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றையெல்லாம் சொல்லி, ‘‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்'' எனக்கூறி முடித்தேன். தமிழுக்கு இணையான தொல் மொழிகள் எல்லாம் இன்று பேச்சுவழக்கில் இல்லை, எழுத்துவழக்குக்குச் சென்றுவிட்டன.

எகிப்து, பாரசீகம், கிரேக்கம் போன்ற மொழிகள் மட்டுமின்றி, இயேசுநாதர் பயன்படுத்திய ஈப்ரு மொழியும் இன்று வழக்கத்தில் இல்லை. அந்த காலக்கட்டத்தில் தோன்றிய மொழிகளில் தமிழ் மட்டுமே 10 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசக்கூடிய ஒரே மொழியாக இருக்கிறது என பேசி முடித்தவுடன் அரங்கிலிருந்த ஒருவர் எழுந்து மேடைக்கு வந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து என் விரலில் இரண்டு பவுன் மோதிரத்தை மாட்டிவிட்டு சென்றார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் யார் என தேடினேன், இதுவரை அவரை நான் மீண்டும் பார்க்கவே இல்லை. அந்த சம்பவம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியைச் தந்தது. இனி தமிழ் மொழியின் சிறப்பை நாம் பங்கேற்கும் அனைத்து மேடைகளிலும் பேச வேண்டுமென்கிற உற்சாகத்தை அந்த நிகழ்வு எனக்கு வழங்கியது!

சாவி அழைத்தார்! - சுப்பையா ராஜசேகர் (சுரா)

அப்போது நான் மதுரையில்  காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். இலக்கிய வாசிப்பில் முழுமையாக ஈடுபட்டதோடு, மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வேலைகளையும் நான் அப்போதே தொடங்கிவிட்டேன். 

அச்சமயம் குங்குமத்தில் இருந்து வெளியே வந்துவிட்ட சாவி, அவரது பெயரிலேயே சாவி பத்திரிகையைத் தனியாக தொடங்கினார். அந்த இதழைப் படித்தேன்.  உடனே சாவியில் புதிதாக என்னென்ன விஷயங்களை செய்யலாமென 20 யோசனைகளை பட்டியலிட்டு கடிதம் அனுப்பினேன். பிறகு கடிதம் அனுப்பியதையே மறந்துவிட்டு வழக்கமான பணிகளைச் செய்துக்கொண்டிருந்தேன். இரண்டு வாரங்கள் கழித்து எனக்கொரு கடிதம் வந்தது. சாவியே தனது லெட்டர் பேடில் கைபட எழுதியிருந்தார்.

‘‘அன்புள்ள திரு சுரா அவர்களுக்கு வணக்கம், உங்களது கடிதம் கிடைத்தது. உடன் சென்னைக்கு வர முடியுமா... சில விஷயங்களை பேசி முடிக்கலாம் அன்புடன் சாவி''.

அவர் எதற்கு அழைக்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை எனினும் உடனடியாக சென்னை புறப்பட்டேன்.

அவரை சந்தித்தபோது விசாரித்துவிட்டு ‘‘நீங்கள் பிரியப்பட்டால் சாவி ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றலாம்'' என்றார். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. சென்னையில் வேலை, அதுவும் பலகாலம் முயற்சித்துத் தேடுபவர்களுக்குகூட கிடைக்காத பத்திரிகைத் துறையில்... என்பது என்னைத் திகைப்படையச் செய்தது. எப்போது? என்றேன். நாளையிலிருந்தே வேலைக்கு வரலாம் என்றார். இவ்வாறு சாவியில் இணைந்த இந்த நிகழ்வுதான் என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணம்.

அந்த பாராட்டு! - சி.மகேந்திரன்

1975 ஆம் ஆண்டு. அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த காலமது. அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான், அதற்கு முந்தைய வாரம் ஜனசக்தியில் தஞ்சை நிலப்பிரச்னை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

ஜனசக்தியில் கல்லூரி மாணவர்களின் கட்டுரை வருவது அப்போது மிக அபூர்வம். மாநாட்டில் ஒரு முக்கியமான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், என் பெயரைச் சொல்லி அழைத்தார். முக்கியமான தலைவர் நம்மை அடையாளம் கண்டு அழைக்கிறாரே என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னை சந்தித்த அந்த தலைவர், கட்டுரையை மிகவும் சிறப்பாக எழுதியிருப்பதாகவும், மிகவும் போற்றுதலுக்குரிய கட்டுரை எனவும் பாராட்டி என்னைப் பற்றி நிறைய விசாரித்தார். என்னை யாரென்றே அவருக்கு தெரியாது, ஆனால் ஜனசக்தியில் வந்த கட்டுரையை படித்துவிட்டு அழைத்து பாராட்டியிருக்கிறார்.

இப்படி என்னை அழைத்து பாராட்டிய தலைவர், தோழர் ஆர். நல்லக்கண்ணு. வாழ்க்கையில் நல்லக்கண்ணு அவர்களுடன் அன்று ஏற்பட்ட அந்த முதல் தொடர்பானது, இளைஞனாக இருந்த எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் தொடர்ந்து எழுதுவதற்கும், இயக்கத்தில் மேலும் உயர்வதற்கும் முதல் ஊக்கமாக அந்த சம்பவம் இருந்தது. அதன் பிறகு நான் மாணவர் மன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற இடங்களில் பணியாற்றிவிட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்குச் சென்றேன். அங்கு மாணவர் மன்றம், இளைஞர் பெருமன்றத்தில் பொறுப்பு வகித்தேன். அதில் அவர் செயலாளராகவும், நான் துணைச் செயலாளராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றும் சூழல் அமைந்தது.

விடுதலை தந்த மகிழ்ச்சி! - விடுதலை ராஜேந்திரன்

பெரியாரியல் பயணம் என்பதே மனநிறைவான வாழ்க்கைப் பயணம் தான். இப்பயணம் மிகப்பெரிய அளவிற்கு மன அழுத்தத்தை குறைத்தது. சரி எது? தவறு எது? என தீர்மானிப்பதற்கான சரியான வெளிச்சத்தைக் கொடுத்தது. நுகர்பொருள் கலாசாரத்திலிருந்து விடுபட்டு தேவைகேற்ப வாழ்க்கை வாழ பெரியாரின் பாதை வழிகாட்டுகிறது. இதனால் மனச்சுமை, தேவையற்ற நிதிச்சுமை குறைகிறது.

குடும்ப உறவுகளை ஒரு நட்பு ரீதியாகவும், தோழமை ரீதியாகவும் பேணுவதற்கு பெரியாரியல் சிந்தனை உதவி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்குகிறது. ஒரு பிரச்னையை எப்படி அணுகுவது? மாறுபாடுகளை எப்படி சுமுகமாக தீர்த்துக் கொள்வது, மாறுபாடுகள் முரண்களாக மாறாமல் எப்படித் தடுப்பது? என்பதற்கான வெளிச்சங்களை பெரியாரியல் சிந்தனை தருவதால் வாழ்க்கை இனிமையாகிறது.

பெண்களை எப்படி மதிப்பது? அவர்களை சமத்துவத்துடன் நடத்துவது போன்ற அணுகுமுறைகள் குடும்ப வாழ்க்கைக்குப் பயனுள்ளவையாக இருக்கிறது.

பொது வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் நேர்மை, ஏற்றுக்கொண்ட கருத்தில் உறுதியுடன் பயணித்தல் மேலும் மற்ற தத்துவங்களில் இல்லாதவற்றைக் கூட பெரியாரியல் மிக எளிதாக சொல்வதால் தனி மனிதனின் இனிமையான வாழ்க்கைக்கு இந்த சிந்தனை அவசியம். பெரியாரியலுக்கு நான் எப்படி வந்தேன் என்று சொன்னால் நானே சிந்தித்து, படித்து பெரியாரியல் பாதைக்கு வரவில்லை. 1950&களில் நான் வாழ்ந்த இடம், சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே பெரியாரியவாதிகள் நிறைந்த பகுதிகளாக  இருந்தது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் சந்தித்தது, பேசியது, பழகியது அனைத்துமே இவர்களுடன் தான். அவர்கள் பேச்சில் இருப்பதெல்லாம் பெரியார் மட்டும் தான்.

அப்போதெல்லாம் ஒரு சிந்தனை ஓட்டம் இல்லாமலேயே பெரியார் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டேன். பின் கல்லூரி சென்ற நாட்களில் தான் சிந்தனை ஓட்டத்துடன் பெரியாரியல் கருத்துகளை மிக ஆழமாக படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு  ஏற்படுத்திக் கொடுத்தது திராவிட கழகத்தின் விடுதலை நாளிதழ் தான். கல்லூரிப் படிப்பை முடித்த அடுத்த ஆண்டே விடுதலை பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அங்கு தான் படிப்பது, எழுதுவது போன்ற துறைகளில் என்னை வளர்த்துக் கொள்வதற்கும் பெரியாரை மேலும் மேலும் படிப்பதற்குமான வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அந்தத் துறையிலேயே என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவனாக இருக்கிறேன்.

அதேபோல என்னுடைய திருமண முறை வாழ்க்கை முறை எல்லாவற்றிலுமே பெரியாரியல் பாதை தான்.  என்னுடைய திருமணம் சாதி மறுப்பு திருமணம், குழந்தைப் பேறு இல்லாத வாழ்க்கை என நானும் என் துணைவியாரும் பெரியார் பாதையில் தான் அமைத்துக் கொண்டோம்.

சமூகத்திற்காக, சக மனிதனுக்காக சிந்திக்கிற பெரியாரியல் பாதையில் பயணிக்கிற விஷயம் என்பது மன அழுத்தமில்லாத, நிம்மதியைத் தரக்கூடியதாக இருப்பதால் எனக்கு அனைத்துமே மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயமாக தான் இருக்கிறது. 1971&ஆம் ஆண்டு விடுதலை பத்திரிகை பணிக்கு வந்தேன், அதுமுதல் 1996 வரை அந்த பத்திரிகையுடனான என் பயணம் இருந்தது. பணியில் சேர்ந்த 6 மாதத்தில் பத்திரிகையை கவனித்து நிர்வகிக்கக் கூடிய பொறுப்பு எனக்கு கிடைத்தது. இளைஞனாக இருந்த என்னிடம் சில திறமைகள் இருப்பதைக் கண்டுபிடித்த ஆசிரியர் வீரமணி அவர்கள், எனக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தார்.

எனக்கு அதற்கு முன் பத்திரிகை அனுபவம் கிடையாது, அங்கு சென்ற பின் அனுபவத்தின் வழியாக கற்றுக்கொண்டவை ஏராளம். அதற்கான முழு சுதந்திரம் எனக்கு கொடுக்கப்பட்டது. விடுதலையில் நான் சேர்ந்தது எனக்கு திருப்புமுனை கொடுத்த மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.

விடுதலைக்கு நான் வருவதற்கு காரணமாயிருந்த இருவருக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், எனக்குப் பொறுப்பைக் கொடுத்து வாய்ப்பளித்தார், மற்றொருவர் சகோதரர் கலி பூங்குன்றன் என்னைத் தொடர்ந்து ஊக்குவித்தார், இவர்கள் இருவருக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்கின்றேன்!

அருவியை பார்க்கும் சிறுத்தை - மனுஷ்ய புத்திரன்

ஒருமுறை வனப்பகுதியில் உயர்பொறுப்பிலிருந்த காவல் துறையைச்சார்ந்த எனது நண்பர் ஒருவரை பார்க்கப்போயிருந்தேன். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பொழுது இருட்டிவிட்டது. இரவு எட்டு மணிக்கு காவல்துறை நண்பர் ,‘‘இங்கே இருக்கும் வன அருவியில் நாம் குளிக்கச்செல்லலாமா?'' என்று கேட்டார். அந்தப்பகுதியில் மாலை 5 மணிக்குமேல் நடமாட்டம் இருக்காது. ‘‘இப்போது குளிக்கப்போவதா?'' என வியப்புடன் கேட்டேன். ‘‘வாருங்கள் போகலாம். நான் ரோந்து செல்லும் நேரம்தான்'' என்றார். அங்கிருந்து கிளம்பி அவரது காரில் சென்றோம். எங்களுடன் இரண்டு ஜீப்புகளில் காவலர்கள் உடன் வந்தனர். அந்த செங்குத்தான மலைப்பாதையில் நாங்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றோம். வழி எங்கும் இருள். கானகத்தின் அச்சுறுத்தும் ஓசைகள். வினோதமான பூச்சிகளின் ரீங்காரம் அருவியை அடைந்தோம். வெறும் இரைச்சலுடன் அருவி வீழ்ந்துகொண்டிருந்தது. எங்கும் இருட்டு. நான் சக்கர நாற்காலியில் அருவியை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டேன். ஆடைகளைக் கழற்றி தூர எறிந்தேன். அருவியின் ஈர வாசனையும் பேரிரைச்சலும் கானக இரவின் ஏகாந்தமும் எனக்கு பித்தேற

வைத்தது. அருவிக்குள் சென்றேன். முதல் சில நிமிடங்கள் குளிரில் உடல் நடுங்கியது. அதற்குப்பின் ரத்தம் சூடாகத்தொடங்கியது. ஆனந்தத்தின் ததும்பலில் உரக்கக்கத்தினேன். பாடினேன். மூர்க்கமாக விழுந்துகொண்டிருந்த அருவியை கைகளிலும் தலையிலும் தோளிலும் மாறி மாறித் தாங்கினேன். அது வாழ்வில் ஒரு முழுமையான குளியல். நள்ளிரவில் அந்தக் காட்டருவியில் நான் ஒருவன் மட்டும் ஒரு மணி நேரம் குளித்து முடித்தேன்.

 பிறகு மெதுவாக அருவியிலிருந்து படியேறி மேலே வந்தபோது உடல் காற்றைப்போல லேசாகியிருந்தது. மனம் அதைவிட லேசாக இருந்தது. என்னுடன் வந்த காவல்துறை நண்பர் என்னைப்பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தார். சுற்றிலும் துப்பாக்கியேந்திய காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த கானகத்தில் என்னைச்சுற்றி இத்தனை காவலர்கள் அந்த இருளில் நின்றுகொண்டிருந்த காட்சியைக் கண்டு நான் என் நண்பரிடம் சிரித்துக்கொண்டே கேட்டேன். ‘இப்போது என்னை என்கவுண்டர் செய்யப்போகிறீர்களா?' எல்லோரும் சிரித்தார்கள். அப்போது என்னுடன் இருந்த ஒரு வனத்துறை அதிகாரி தன்னுடைய செல்போனை எடுத்து அதிலிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினார். அதில்  சிறுத்தை ஒன்று,  சிறிய பாறையில் அமர்ந்து  அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தது. ‘‘ நீங்கள் இப்போது குளித்த அருவிதான் இது. இந்தப் புகைப்படத்தை நேற்று மாலை நான் எடுத்தேன் '' என்றார். முதுகுத்தண்டு சில்லிட்டது. மகிழ்ச்சி என்பது சாகசத்திற்கும் சவாலுக்கும் இடையே இருப்பது!

மலையோரத்தில் - ஓசை செல்லா

2010 ஆம் ஆண்டில் கேரளா தமிழக எல்லையை ஒட்டியுள்ள வரகம்பாடி எனும் மலைக் கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கே தாற்காலிகமாக ஓர் இயற்கை வாழ்க்கைமுறையான ‘‘குறைதாக்க வாழ்க்கைமுறை'' எனப்படும் Low Imapct Farmstay Experience எனும் ஆய்வில் இறங்கினேன். அந்த மலைக்கிராமத்திலேயே தங்கி அங்கு சிறுவீடு ஒன்றையும் அங்கு கிடைக்கும் பொருட்களையும்

மறுசுழற்சியாக்கப்பட்ட மரங்களையும் உபயோகித்து வெறும் 200 சதுர அடியில் ஒரு படுக்கையறை, சமையல் மற்றும் உணவருந்தும் அறை, குளியல் மற்றும் கழிவறை போன்றவற்றை கட்டி சூரிய மின்சாரம் மற்றும் ஒரு மின்விசிறியை டைனமோவாக்கி (மீச்சிறு காற்றாலை)  எனக்குத் தேவையான ஆற்றலையும் நானே உருவாக்கி என் செல்போன் லேப்டாப் போன்றவற்றை இயக்கி வாழ்ந்தேன். தேவையான காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை என் 10 சென்டுக்கும் குறைவான இடத்திலேயே விளைவித்து (தானியங்களை மட்டும் வெளியே வாங்கினேன்) நானும் என்னைச் சந்திக்க வரும் நண்பர்களும் உண்டு, இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த, அந்த மலைக்கிராம வாழ்க்கையே இன்றும் என் மனதுக்கு இனிமையானதாக இருக்கிறது எனலாம். பத்தாண்டுகள் கழிந்து விட்டிருந்தாலும்.

வாழ்வின் கனவு - தேவிபாரதி

கட்டுக்கதைகள் விசித்திரமான இயல்புகளைக் கொண்டவை. வாழ்க்கையைப் பற்றிய கனவுகளுக்கு நம்பமுடியாத இடந்தருபவை. குறிப்பாக என் பால்யம் இதுபோன்ற கனவுகளால் நிரம்பியது. அதுதான் நான் அதிகபட்ச மகிழ்ச்சி நிரம்பிய காலம் என்பேன்.

அப்போது நான் வசித்த கிராமம் பறவைகளால் சூழப்பட்டிருந்தது. ஆக்காட்டிகளும் செம்போத்துகளும் அக்காக் குருவிகளும் தத்தித்திரிந்த அந்த ஊரில் கவலைகளற்றுச் சுற்றித் திரிந்த நாட்களை நினைத்துக்கொள்கிறேன். பிறகு அங்கிருந்து வேரோடு பிடுங்கி வீசப்பட்டேன் அறிமுகமற்ற ஊருக்கு. அறிமுகமற்ற மனிதர்களிடையே கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள்.

பிறகு பள்ளி வாழ்க்கை. ஐந்தாண்டுகள் வரை திரைப்படக் கொட்டகையொன்றில் டீ, காபி, மிக்சர்,முறுக்கு விற்றுக்கொண்டிருந்த பதினான்கு வயதுச் சிறுவன். பிறகும் முடிவற்ற நீண்ட வாழ்க்கை. இந்தக் கதை உங்களுக்கு அவ்வளவு பிடித்தமில்லாமல் போகலாம். அப்படியானால் வேறு கதைகள் உண்டு. அவை சாகசங்கள் நிரம்பியவை.

அப்போது எனக்குக் கிட்டத்தட்ட நாற்பது வயது முடிந்திருந்தது. புகழ்பெற்ற திரைப்படமொன்றின் வசனகர்த்தா. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட நாளில் நான் எனது தயாரிப்பாளரின் உதவியுடன் அந்த டூரிங் டாக்கீசுக்குப் போனேன். நான் சிறுவனாக டீ, காபி, முறுக்கு விற்றுக்கொண்டிருந்ததாகச் சொன்னேன் அல்லவா... அதே டூரீங் டாக்கீஸ். ஒரு கதாசிரியராக அவர்கள் முன் நின்றது மகிழ்ச்சியாக இருந்தது. வரவேற்பும் வாழ்த்துகளும். பிறகு திரையரங்கைப் பார்வையிடச் சென்றோம்.

திரைச் சீலைக்கு எதிரே வேடிக்கை பார்க்கத் திரண்டிருந்தவர்களுக்கிடையே நான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன்.

சொல்லி வைத்தாற்போல் பதினான்கு வயது. நான் அவனைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்ததேன் வெகு நேரம் வரை. உண்மையைச் சொன்னால் வெகு காலம் வரை.

அழியாச் சித்திரங்கள் - ராஜா சந்திரசேகர்

மகிழ்வான தருணம் என்பது அந்த நேரத்தில் நிகழ்ந்து, அந்த நேரத்தில் கடந்துவிடுவதல்ல; நினைக்குந்தோறும் மகிழ்வையும் நெகிழ்வையும் தருவது.

வடபழனி ஃபோரம் மாலில் லிஃப்ட் ஆப்ரேட்டராக இருப்பவர் போஸ். நடிக்க வந்து இப்படி ஒதுங்கிவிட்டவர். வாய்ப்புக் கிடைக்கும்போது படங்களில் தலையைக் காட்டுவார். நல்ல மீசை.சிரித்த முகம். சலிப்படைந்து அவரைப் பார்த்த தில்லை. யூனிஃபார்மில் கம்பீரமாகத் தெரிவார். லிஃப்டில் யாருமில்லாதபோது சில வசனங்களைப் பேசிக்காட்டுவார்.

‘நாலு புடி வயித்துக்கு; நாலு வார்த்த அன்புக்கு.போதும் சார்.சமயத்துல அதுகூட கெடைக்கமாட்டுது,' இது அவர் சொன்னதில் எனக்குப் பிடித்தது.

கொரோனா ஊரடங்கின்போது போன் செய்தார். தடுமாற்றத்துடன் பேசினார். வரச்சொல்லி, சின்ன உதவி செய்தேன். நன்றி சொன்னார். கவனமாக இருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.

இப்போது ஃபோரம் மால் திறக்கப்பட்டுவிட்டது. உற்சாகத்துடன் அதைச் சொன்னார். ‘நேரம் கெடைச்சா வாங்க சார், பையனுக்கு வேல கிடைச்சிட்டா கொஞ்சம் பாரம் குறைஞ்சிடும்' என்றார். குடும்பத்தில் எல்லோரும் விசாரித்ததாகச் சொன்னார்.

அவரைப் பார்க்கவாவது ஃபோரம் மால் போய் வரவேண்டும். இது போன்ற அன்பான மனிதர்கள் நினைவில் கலந்துவிடுகிறார்கள்.சின்னப் புன்னகை,சில சொற்கள் இவற்றால் அழியாச் சித்திரங்களாகிவிடுகிறார்கள்.

அன்பை பகிர்வதே மகிழ்ச்சி! - சுதா ரகுநாதன்

என்னைப் பொறுத்தவரையில்  நாம் வாழும் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் மகிழ்ச்சியானவை தான். தனிப்பட்ட அல்லது எனது சொந்த வாழ்க்கையில் எனது மகன் கௌசிக் பிறந்த தருணம் தான் மிக மகிழ்ச்சியானது. பெண் என்ற சுதா, தாயாக ப்ரமோட் ஆகிறாள். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. 

என் கலைப்பணி தொடர்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பத்ம ஸ்ரீ விருது கிடைத்ததைச் சொல்லலாம். இப்போது பத்மபூஷன் விருது கிடைத்திருந்தாலும் கூட, பத்மஸ்ரீ விருதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களிடம் பெற்ற போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு கர்நாடக இசை கலைஞருக்கு இது போன்ற பெரிய விருது கிடைப்பது மிகவும் அரிது. கோடிப்பேர்களில் வெகு சிலருக்கு தான் கிடைக்கும். அந்த வெகு சிலரில் நாமும் இருக்கிறோம் என்ற சந்தோஷம் இருந்தது. மேலும், இவ்வளவு நாள் நடந்து வந்த பாதை சரியான பாதை தான் என்ற அங்கீகாரம் கொடுப்பதாய் பத்ம ஸ்ரீ விருது போன்ற மத்திய அரசு தரும் விருதுகள் இருக்கின்றன.

ராஷ்ட்ரபதி பவனில் அப்துல் கலாம் சாரை நோக்கி நடந்து சென்ற தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. ரகுநாதனும் அப்போது என்னோடு இருந்தார்.  அப்துல் கலாம் சார் அருகில் சென்றவுடன் அவர்  சொன்னார் ‘நான் உங்கள் சங்கீதங்களைக் கேட்டிருக்கிறேன். ரொம்ப சந்தோஷம்‘ என்று தமிழில் பேசினார். இதை என் வாழ்வில் முக்கிய மகிழ்ச்சியான தருணமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

தவிர, நான் தற்போது பல சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகிறேன். சமுதாயா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை ஆரம்பித்து அதற்கு 21 வயது ஆகிறது. அதன் மூலம் நிறைய குழந்தைகளுக்கு உதவியிருக்கிறோம். ஸ்கூல் பஸ் வாங்கி தந்திருக்கிறோம், 100 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவியிருக்கிறோம், பீடியாட்ரிக் கேன்சரால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறோம்.

இது போல பல குழந்தைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்கும்போது அவர்கள் நம்மைப் பாசத்துடன் பார்ப்பது  இதெல்லாம் மிகவும் நெகிழ்வானவை. அன்பைப் பகிர்வதே  மகிழ்ச்சி!

மூன்று தருணங்கள் - சல்மா

ஓர் எழுத்தாளராக என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது என் வாழ்வின் முக்கியமான ஓர் தருணம். புத்தகம் வெளியானாலும் அந்த மகிழ்வை வெளிக்காட்டிக்கொள்ள முடியாத சூழல் எனக்கிருந்தது. யாருக்கும் தெரியாமல் வெளியிட வேண்டிய நிலையில் இருந்தேன். புத்தகம் வெளியான பிறகு கலைஞர் கொண்டுவந்த பெண்களுக்கான ஒதுக்கீடு மூலம் பஞ்சாயத்து தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். வெளிப்படையாக பொதுவாழ்க்கையில் இயங்குவதற்கும், என்னுடைய புத்தகங்களை பெருமிதமாக  சொல்லிக்கொள்வதற்கும் பொன்னாம்பட்டி பஞ்சாயத்துத் தேர்தல் வெற்றி எனக்கு வாய்ப்பாக அமைந்தது. அதன் பிறகு திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். வேட்பாளர் நேர்காணலின்போது, ‘‘இவர் கனிமொழியுடைய தோழி, பேரூராட்சி தலைவர்'' என்று சொல்லி தளபதியிடம் கலைஞர் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது, ‘‘உங்களது தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடப்போவதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஜெயலலிதா போட்டியிட்டால் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடுவீர்களா?'' என்று என்னிடம் தளபதி கேட்டார். ‘‘எனக்கு எந்த பயமும் இல்லை. திண்ணைப் பிரசாரம் செய்தாவது நான் வெற்றிபெறுவேன்,'' என பதிலளித்தேன். இதைக் கேட்ட கலைஞர், ‘‘ரொம்ப தைரியம் தான்'' என சொல்லி சிரித்தார். இந்த மூன்று விஷயங்களையும் என் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மகிழ்ச்சியான தருணங்களாக பார்க்கிறேன்.

ஜாமூன் முத்தம் - இரா.முருகன்

நான் வசித்த ஹாலிபாக்ஸ் என்ற பிரிட்டானியச் சிறு நகரில் ஒரு குளிர்காலம். விடிகாலையில் தொடங்கி கனமான பனிப் பொழிவோடு ஞாயிற்றுக்கிழமை ஊர்ந்து செல்ல,  நான் மடிக் கணினியில் அக்கறையாக 'அரசூர் வம்சம்' நாவலின் இறுதி அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருந்தேன். மாயச் சுழலாக கதைப்போக்கு என்னை அடித்துப் போக,  ஜன்னல் திரை விலக்கிப் பார்த்தபோது  வெளியே இன்னும் பெய்யும் பனி.

தொலைக்காட்சியை இயக்கினேன். ராத்திரி ஒன்பது மணி செய்தி அறிக்கை. அடித்துப் பிடித்து பாகிஸ்தானி உணவு விடுதியான கம்ரான் மாடிப்படி ஏறினேன். பியரர் அகமத் ஷட்டரை இறக்கிக் கொண்டிருந்தார்.

‘‘முதலாளி பிராட்ஃபோர்ட்லே உறவில் விசேஷம்னு போயிருக்கார்.  நீங்க வந்து போனதும் கடையடைக்கச் சொன்னார். வாங்க, பெஷாவரி 'னான்' செய்து வச்சிருக்கு. பிண்டி மசாலாவும் உண்டு. சூடாக்கி கொடுத்திடறேன்''.

நன்றி சொல்லி உட்கார்ந்தேன். மனம் முழுக்க மகிழ்ச்சி. நாவல் நல்லபடியாக வளர்ந்து முடிந்திருக்கிறது. விரைவில் அச்சுக்குக் கொடுத்து விடலாம்.

''என்ன சார், ஆபீஸ் வேலையா? சாப்பிடறபோது கூட கம்ப்யூட்டரோடு இருக்கீங்க''.

ரொட்டி கொண்டு வந்த அகமது கேட்டார். ''நாவல் எழுதி முடிச்சிருக்கேன் அகமது'' என்று சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

''எதைப் பத்தி சார்?''

''என் முன்னோர் பற்றி எழுதியிருக்கேன்''.

''என் பூர்வீகம் பற்றியும் நாவல் எழுதறீங்களா?''

அகமது வெண்டைக்காயை வைத்துவிட்டுக் கேட்டார். சிரித்தேன். 

 அகமது உள்ளே போனார். ஸ்டெயின்லெஸ் டப்பாவோடு திரும்பியவர்

எடுத்துக்குங்க என்று டப்பாவைத் திறந்தார். குலாப்ஜாமூன்.

''லாகூர்லே இருந்து என் குடும்பம் அனுப்பியது. ஒவ்வொரு ஜாமூனுக்கும் ஒரு முத்தம்னு என் அஞ்சு வயசு மகள் சாய்ரா எழுதியிருக்கா. நாவல் எழுதி முடிச்ச அங்கிளுக்கு ரெண்டு முத்தமாவது தரவேண்டாமா அவள் சார்பிலே?''

அந்தச் சிறுமி கொடுத்த குலாப்ஜாமூன்களோடு அரசூர் வம்சம் நிறைவு பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடினோம். அகமதுவை  அடுத்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக்கத் தீர்மானித்தேன். அகமது இன்னும் என் நாவல்களுக்குள் வரவில்லை. குலாப்ஜாமூன்களோடு அவர் தன் மகளின் குழந்தைகளை மகிழ்ச்சியாகக் கொஞ்சிக் கொண்டிருப்பார். அவரும் நாவல் எழுதுவாரோ!

எனக்கொரு பெயர்! - கனகா வரதன்

‘கனகா' என்பது எனக்கு நானே சூட்டிக்கொண்ட பெயர். இப்போது வரை எனக்குரிய அதிகாரப்பூர்வ பெயராக அது இருக்கவில்லை. முகநூல் உள்ளிட்ட இணையதளத்தை தாண்டி, கனகா எனும் பெயர் எனது அடையாளமாக மாறவில்லை. இத்தகைய சூழலில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு பெண்ணிய மாநாட்டில் ‘‘இந்திய திருநங்கைகளும் பெண்ணியமும்'' என்கிற தலைப்பிலான என்னுடைய கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அதில்  கட்டுரையை எழுதியவர் ‘கனகா' என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவே கனகா என்கிற எனது பெயர், ஏதோ ஒரு தளத்தில் ஏதோ வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் நிகழ்வு. அது மிகவும் மகிழ்வளித்த தருணம்.

இரண்டாவதாக என்னுடைய தம்பி என்னை ஏற்றுக்கொண்ட நிகழ்வு. இப்போதும் என்னை முழுவதுமாக புரிந்துக்கொண்டார் என சொல்ல முடியாது. புரிதலுக்கான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். அது என்னை மிகவும் மகிழ்விக்கிறது. அதிலும் சில ஆணாதிக்க கண்ணோட்டம் இருந்தாலும் இப்போதைய அவரது மனமாற்றம், என் மீது செலுத்தும் அக்கறை ஆறுதல் அளிக்கிறது.

போராட்டம் பெற்ற வெற்றி - பாலபாரதி

2003 - 2004 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. திண்டுக்கல் குடிநீர் பிரச்னைக்காக காவிரிக் கூட்டுக்

குடிநீர் திட்டம் அமல்படுத்தக்கோரி பல போராட்டங்களை நடத்தி

சட்டமன்றத்தில் 2001இலிருந்து வலியுறுத்திவந்தோம். ஆனால் அத்திட்டம் குறித்து அரசுத் தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லாதிருந்தது. இத்திட்டம்குறித்து ஆய்வுசெய்து முடித்திருந்த குடிநீர் வடிகால்வாரியத்தின் உயரதிகாரிகளைச் சந்தித்து கேட்டபோது 104கோடி ரூபாய் திட்டமிது. அரசு அனுமதித்து பட்ஜெட்டிலே நிதி ஒதுக்கீடு செய்தால்தான் திட்டம் அமலுக்கு வரும் என்றார்கள். அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டுசென்ற பிறகும்கூட ஏன் அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடைகாண முடியாமல் இருந்தது. திண்டுக்கல் பகுதியில் இத்திட்டம் வருமா வராதா என்பதுகுறித்து விவாதங்களும் எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதால் வராது என்றும் பேசிக்கொண்டிருந்தனர்.

 இத்தகைய சூழலில் ஊராட்சி மற்றும் நகராட்சி குறித்த மானியக் கோரிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கோரிக்கையின் முன்வடிவ நூலில்

திண்டுக்கல் காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்டம் 104 கோடியில் இந்த ஆண்டு பணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு இருந்தது. அவை எழுத்துகளாகத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் பட்டாம்பூச்சிகளாகவே தெரிந்தது.  மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தேர்தல் வெற்றி தந்த மகிழ்ச்சியைவிட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகையில் கிடைக்கிற மகிழ்ச்சியே உண்மையானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருக்கும் என்பதை உணர்த்திய தருணம் அது. எங்கு திரும்பினாலும் தண்ணீர்ப் பிரச்னைகளோடு இருந்த திண்டுக்கல் நகருக்கு இத்திட்டமே முக்கியமானதாக இருந்தது என்பதால் அந்த மகிழ்ச்சியை இப்போதும் கூட என்னால் விளக்கிக்கூற முடியவில்லை. மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி அது. அப்போராட்டத்தில் நானும் இருந்தேன் என்ற மகிழ்ச்சியே அது.

மறக்க முடியாத போராட்டம் - பா.ஏகலைவன்

ஒருவருக்கு மகிழ்ச்சியான& மறக்க முடியாத நாள் என்ற பட்டியல் நீளும். அதில்சிறப்பானதொன்றே நிலைத்திருக்கும். அப்படியொரு நாள்தான் 2017 ஜனவரி 7. இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு  பழைய இசைக்கல்லூரி மாணவ&மாணவிகள் சந்தித்துக்கொண்ட நாள். இப்போது கலை பண்பாட்டுத்துறையில் அதிகாரியாக இருக்கும் சக கல்லூரி மாணவர் ஹேமநாதன் முன்னெடுப்பில், சேகர்,இளங்கோ தேனிசை செல்லப்பா, சிற்றரசு, ஷீலா, அபிராமி, ரகமத்துல்லா, பிரபாகரன் போன்றோரின் முயற்சி-உழைப்பில் அது நடந்தது.

இதைக்குறிப்பிட்டுச் சொல்ல காரணம் உள்ளது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி'', சுதந்திரம் பெற்றபோது தொடங்கிய, பாரம்பரியமிக்க ஒன்று. ஆனால் அங்கே சமஸ்கிருதம், தெலுங்கில்தான் பாடலும்&பாடமும் இருந்தது.  1987-ல் அங்கு சேர்ந்தேன். 1990-91-ல் மாணவர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது முதல் கோரிக்கையே, தேவாரம், திருவாசகம் உள்பட, தமிழில் பாடத்திட்டம் வேண்டும்; நாட்டுப்புறக் கலைகளையும் பாடத்திட்டமாக இணைக்க வேண்டும் என்பதுதான். இதற்காகத் தொடங்கிய  உள்ளிருப்புப் போராட்டம், வலுப்பெற்றது. கைது, சிறை என்றெல்லாம் நடந்தேறியது. போராட்டம் ஓயவில்லை.

இரண்டாம் ஆண்டிலும் போராட்டம் தொடர்ந்தது. அப்போது செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வர். கலை பண்பாட்டுத்துறை செயலாளர்&அமைச்சர் வரை பேச்சுவார்த்தை நடத்தது. இறுதியில் தமிழிசைப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளும் பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக உறுதியளித்து, அதன்படியே அரசு செய்தது. மாணவர்களின் ஒற்றுமையே அதை சாத்தியமாக்கியது.

மறக்கவே முடியாத போராட்டம். மறக்கவே முடியாத வெற்றி. வரலாறாய் நிலைத்திருக்கிறது அந்த நாள்!

மகள் தந்த மகிழ்ச்சி! - யாழினி முனுசாமி

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி மருத்துவமனையின் காத்திருப்பாளர் அறையில் பதற்றத்துடன் காத்துக்கொண்டிருக்கிறோம், நானும் என் குடும்பத்தினரும். காரணம், என் மனைவி பிள்ளை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பலமணிநேரம் ஆகியும் குழந்தை பிறந்த பாடில்லை. வயிற்றில் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதனால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனக்கோ பதற்றமாக இருந்தது. பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்டது. ஆனால் செவிலியர் வந்து வேறு பெண்ணுக்குக் குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தார்.மேலும் ஒரு மணி நேரம் கழித்து என் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை.

செவிலியர் சற்று நேரத்தில் குழந்தையை வெள்ளைத் துணியில் அழகாகச் சுற்றி கொண்டு வந்து என் கைகளில் கொடுத்தபொழுது நான் மகிழ்ந்தது என்றைக்கும் மறக்க முடியாததாகும். குழந்தை பிறந்த அன்று மருத்துவமனையின் அறையில் கட்டிலில் என் மனைவியும் அவரருகில் குழந்தையும் பக்கத்தில் பெஞ்சில் நானும் படுத்திருக்கிறோம். என் குழந்தை நான் படுத்திருப்பதைப் போல  கன்னத்தில் கை வைத்துக்கொண்டு படுத்து இருந்ததைச் சுட்டிக்காட்டி என் மாமியாரும் மனைவியும் மகிழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அதைச் சொல்லுவார்கள்.

வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் என்றால் என் பிஞ்சுக்குழந்தையைக் கையில் ஏந்திய அந்தத் தருணம் தான். அதன்பிறகு 2008 இல் இளைய மகள் பிறந்து கைகளில் ஏந்தியபொழுதும் அதே மகிழ்ச்சியை மீண்டும் அடைந்தேன்.

லவ்யூ லாக்டவுன் - சோனியா அருண்குமார்

தொடர்ச்சியாக அலுவலக வேலையும் குடும்ப வேலையும் என ஏழு வருஷம் போனதே தெரியல.'Long Vacation‘ வேணும்;  வீட்ல இருக்கணும்ன்னு பல நாள் தொடர்ச்சியாக சிந்தனை வந்து வந்து போகும். ஆனாலும் வேலையை விட துணிச்சலாக முடிவெடுக்க முடியாமல் அப்படியே போய்க் கொண்டிருந்த சமயத்தில்தான் இந்த கொரோனா லாக்டவுன் வந்தது. முழுதாக 5 மாதங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம். என்னுடைய வேலை முழுக்க முழுக்க டிஜிட்டல் வேலை என்பதால் வீட்டில் இருந்தபடியே என்னால் வேலை செய்ய முடிந்தது. வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப், இன்ஸ்டாக்ராம் எல்லாம் தான் நம்முடைய வேலைக்கான களம். ஒரு தொலைக்காட்சி, லேப்டாப், இண்டர்நெட் வசதி இருந்தால் போதும். எங்கிருந்து வேண்டுமானாலும் வேலையை செவ்வனே செய்யலாம். லாக்டவுன் வந்தாலும் வந்தது தினம் தினம் புது புது ரெசிப்பி, புது புது அழகுக்குறிப்பு, புது புது வெப் சீரிஸ், படங்கள் என இத்தனை ஆண்டுகள் இழந்திருந்த எல்லாத்தையும் செய்துட்டேன். குடும்பத்தோட நேரம் செலவழிக்க முடியலன்னு இருந்த பெரிய ஏக்கத்தையும் இந்த லாக்டவுன் தீர்த்தது. வாங்கின பல பொருட்களை எல்லாம், அட இதெல்லாம் வாங்கினோம்லன்னு கண்டுபிடித்து ஆசை தீர உபயோகப்படுத்தினேன்.

கடந்த ஆண்டு வீட்டை வெள்ளையடித்து ஹாலில் சோஃபாவை எல்லாம் மாற்றி திவான் வாங்கிப் போட்டு அழகுப்படுத்தி இருந்தேன். வேலை பளுவால் அந்த திவானில் அமர்ந்து டிவி பார்க்கக்கூட நேரமில்லாமல் இருந்தது. ஆனால் இந்த லாக்டவுன் முழுக்க அந்த திவான் தான் எனக்கு ஆஃபீஸ் டெஸ்க். டிவியில் செய்தியை பார்த்துக்கொண்டே அந்த திவானில் கால் நீட்டி உட்கார்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி! சொல்லப்போனா இப்ப ஐ ரியல்லி மிஸ் யூ லாக்டவுன்!

சிவப்பு கம்பள வரவேற்பு! - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

விடுதலைப்புலிகளில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன்  எனக்கு இருந்த நெருங்கிய பழக்கம் அனைவருக்கும் தெரிந்ததே. 1983 என்று நினைக்கிறேன். இந்திரா காந்தி அப்போது பிரதமராக இருக்கிறார். சென்னையில் வழக்கமான ஒரு சந்திப்பின் போது பிரபாகரன் என்னிடம்,' ராதா அண்ணே,  தமிழ் ஈழம் ஒரு நாள் நிச்சயம் மலரும். அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க இந்திரா காந்தி அவர்கள் ஈழத்துக்கு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்குவார். அந்நிகழ்வுக்கு நெடுமாறன், நீங்கள், அனிதா பிரதாப் ஆகியோர் விமான நிலையத்தில் வந்து இறங்கும்போது சிவப்புக் கம்பள வரவேற்பை அளிப்பேன்' என்று சொன்னார். இந்திரா அவர்கள் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை பிரபாகரன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ( 15-11-84 என என் டைரியில் குறித்துள்ளேன்)  முன்பு என்னிடம் முன்பு

சொன்னதை நினைவுகூர்ந்து இந்திரா அவர்களை நினைத்து கண்ணீர்விட்டார். ‘இந்திராம்மாவின் ஆசியுடன் நிச்சயம் தமிழ் ஈழம் பிறக்கும். நீங்களும் வருவீர்கள்!' என்றார்.

என் வாழ்வில் அவரது இந்தச் சொற்களில் நானும் இடம்பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்த தருணங்களில் முதன்மையானது!

நம்பவே இல்லை நான் நடிப்பேன் என்று!

பட்டிமன்ற ராஜா

நான் படித்த காலத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஒரு நிரந்தரமான வேலை கிடைக்காமல் 1980 - களில் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் ஒரு மரியாதையான, நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டுமென்பதே எனது ஒரே சிந்தனையாக இருந்தது. அப்படியொரு வேலை கிடைத்த நாள் ரொம்ப சந்தோஷமான நாள். அதன் பிறகு பட்டிமன்றத் துறைக்குச் சென்று பட்டிமன்றத்தில் பேசிவிட்டாலே மகிழ்ச்சி என்று முதல் மேடை ஏறிப் பேசிய போது நினைத்தேன்.

ஆனாலும் உங்கள் கேள்விப்படி மிகவும் சந்தோஷமாக இருந்த நாள் எது என்று கேட்டால், முதல் முறையாக என் முகத்தை பெரிய திரையில் பார்த்த அந்த நாள் தான் என சொல்லலாம்!

சிவாஜி திரைப்படத்தில் நான் நடிப்பதாக முன்னதாக எந்த ஒரு ப்ளானும் இல்லை. திடீரென ஒரு நாள்  என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். அப்போது நான் நம்பவேயில்லை நான் நடிப்பேன் என்று. சில நாட்கள் மட்டும் வைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால், ஆறு வாரங்களுக்கு ஷூட்டிங் நடந்தது.

ஒரு வழியாக 2007-ல் படம் ரிலீஸானது. முதல் நாள் முதல் காட்சியை சென்னையிலுள்ள சத்தியம் திரையரங்கில்தான் பார்த்தேன். அந்த பெரிய திரையில் நாம் ஒரு உருவமாய் இருக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து பார்க்கிறார்கள். ஒரு சின்ன தொலைக்காட்சிப் பெட்டியில் முகத்தைக் காட்டி வந்து போனவன் நான். இப்போது பெரிய திரையில் புகழ்பெற்ற சூப்பர்ஸ்டார் பக்கம் நின்று நடிப்பது என்பது வெகுவான மகிழ்ச்சியைக் கொடுத்தது. படம் ரிலீஸாகி 13 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைக்கும் எங்கு சென்றாலும் அந்தப்படத்தை நினைவில் வைத்துள்ளார்கள்.

தமிழ் மொழியே தெரியாதவர்கள் கூட சினிமா என்ற மீடியத்தால் என்னைக் கண்டுகொண்டு வந்து பார்த்து பேசுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும்.

மற்றவர்களுக்கு உதவுவதிலும், மகிழ்விப்பதிலும் தான் மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது என்று நான் நினைப்பதுண்டு.

என்ன பண்ணிட்டு இருக்கேன் - ராஜேஷ்குமார்

1980 களில் நான் ஒரு எழுத்தாளனாக மாறிக்கொண்டிருந்த ஆரம்பகட்ட காலம் அது. என்னைப் பார்க்கின்ற  நண்பர்கள், உறவினர்களெல்லாம் ‘என்ன, கதையெல்லாம் எழுதுற அளவுக்கு வளர்ந்துட்ட போலிருக்கு?‘ என்று கேட்பார்கள்.

இந்தக் கேள்வியை மேலோட்டமாய் பார்க்கும்போது அவர்கள் பாராட்டுவது போல் தோன்றினாலும் அதில் ஒருவிதமான கேலியும் கிண்டலும் பொதிந்திருக்கும். அதை உணரும் போது மனசுக்குள் ஒரு வலி பிறக்கும்.

என்னோடு  படித்த நண்பர்களில் பலர் டாக்டர்களாகவும் , பொறியியல் வல்லுனர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், அரசு ஊழியர்களாகவும் மாறிவிட்ட நிலையில் நான் மட்டும் வாழ்க்கையின் அடித்தட்டில்  இருப்பது பலருக்கு ஒருவித ஏளனத்தை உண்டாகியிருந்தது.

எழுத்தாளன் என்பவன் பொருளாதார ரீதியாய் வெற்றிகரமாக இருக்க முடியாது என்று அவர்கள் எண்ணியதே அதற்குக் காரணம்.

1980 ஆம் வருடம்  நான் கல்கண்டு வார இதழில் ஒரு தொடர்கதை எழுதிக்  கொண்டிருந்த பொழுது கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும்  விநாயகர் கோயிலுக்கு போயிருந்தேன். விநாயகரை வழிபட்டுவிட்டு வெளிப் பிரகாரத்தை சுற்றி வரும்போது என் பெயரைச் சொல்லி யாரோ அழைத்தார்கள்.

‘ராஜகோபால்‘ ( இது என் இயற்பெயர்) திரும்பி பார்த்தேன். தேவாங்க உயர் நிலைப்பள்ளியில் நான் மாணவனாக இருந்த போது, எனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்த ராமசாமி வாத்தியார் நின்றிருந்தார்.

‘ஸார்....‘ உணர்ச்சி வசப்பட்டு அவரருகே சென்று

‘ வணக்கம்‘ சொன்னேன். என்னை ஒரு கனிவுப் பார்வை பார்த்த படி என்  தோள்மீது கையை வைத்தார்.

‘ என்ன பண்ணிட்டு இருக்கே.....?‘

‘அப்பாவோடு சேர்ந்து ஹேண்ட்லூம்  பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்  ஸார்'

‘ கதையும்  எழுதற போல இருக்கு?'

‘ஆமா சார்‘

‘பார்த்தேன்.... கல்கண்டு பத்திரிகையில் உன் போட்டோவோடு விளம்பரம் போட்டு இருந்தாங்க. பார்க்கவே பெருமையா இருந்தது. என்னோட ஸ்டூடண்ட்  ஒருத்தன் எழுத்துலகில் அடி எடுத்து வைத்து இருப்பதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.  இப்படி பக்கத்தில் வா‘ என்று சொன்னவர் என்னை இழுத்து அணைத்தபடி சொன்ன வார்த்தைகள் இன்னமும் என் காதோரம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

‘என்கிட்ட படிச்ச ஒரு ஸ்டூடண்ட்  டாக்டராய்  வரலாம். இன்ஜீனியராய் உருவாகலாம்.  ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்யற பெரிய தொழிலதிபராக வலம் வரலாம். ஆனா ஒரு ஸ்டூடண்ட் எழுத்தாளனாக உருவாவது ரொம்ப ரொம்ப அபூர்வம். உனக்குள்ளே கதை எழுதுகிற திறமை இருக்குன்னா அந்த கல்விக் கடவுளான சரஸ்வதியே உன்னை தேடி வந்திருக்கான்னு அர்த்தம். ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் சிறுகதை வர்றதே பெரிய விஷயம். உனக்கு தொடர்கதை எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கிறது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கிட்டு  நீ பெரிய எழுத்தாளராக வரணும், வளரணும்.'

இந்த வார்த்தைகளைச் சொல்லி, என் தலையில் கையை வைத்து, அவர் ஆசிர்வதித்த போது, நான் நெக்குருகிப் போய், அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினேன்.

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். நான் ஓர் எழுத்தாளனாக வரவேண்டும் என்று, ஏற்கெனவே என்னுடைய தாயும் தந்தையும் விருப்பப்பட்டு, ஆசிகள் வழங்கிய பின், என்னுடைய குருவான ஆசிரியர்  ஒரு கோயிலில் வைத்து, அதுவும் ஞானத்தை அருளும் விநாயகப் பெருமானின் சன்னதியில்  வைத்து என்னை ஆசிர்வதிக்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியான தருணம்!

இதுதான்  என் வாழ்க்கையில் நான் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களில் எவரெஸ்ட்!

வேலை கிடைத்தது! - தியோடர் பாஸ்கரன்

அப்போது, நான் கிராமத்திலிருந்து வந்த எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன். எம்.ஏ வரலாறு படிப்பை முடித்தவுடன் சென்னை ஆவண காப்பகத்தில் தாற்காலிகமான பணி ஒன்றில்   சேர்ந்தேன்.  சிவில் சர்வீஸ் எழுத விண்ணப்பித்தேன். அப்போதெல்லாம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 5 தாள்களில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதில் அஞ்சல் துறை போன்றவற்றிற்கு மட்டும் தான் மூன்று தாள்கள்.

மிகக் கடுமையாக உழைத்து படித்தேன்.  வேலைக்குச் சென்று வந்து விட்டு மாலை 6:30 மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பித்து விடுவேன். தேர்வு நேரம் வந்தது. எனது மேலதிகாரி மிகவும் ஸ்ட்ரிக்ட். விடுப்பே தரமாட்டார். ஒரு வழியாகப் போராடி விடுப்பு எடுத்துக் கொண்டு முதல் மூன்று தாள்களை எழுதி முடித்தேன். அதன் பின் அடுத்த இரண்டு தாள்களுக்கான தேர்வு நாள் வந்தது. எவ்வளவோ கேட்டும் என் மேலதிகாரி விடுப்பே தரவில்லை. எனவே, அந்த இரண்டு தாள்களை எழுத முடியவில்லை.  திடீரென ஒரு நாள் எனக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு தபாலில் வந்தது. எனது மேலதிகாரிக்கு ஆச்சரியம்!

அன்றைய நாளில் 'மெயில்' என்ற மாலை நேர பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. நான் அந்த பத்திரிகைக்கு அவ்வப்போது கட்டுரைகள் எழுதி கொடுத்து வந்தேன். அழைப்பு தபாலை பார்த்ததும் உடனடியாக அங்கு ஓடினேன். பத்திரிகை

அச்சாகி கொண்டிருக்க அதிலிருந்து ஒன்றை எடுத்து தேர்வு முடிவுகளை இதயம் துடிக்கத் துடிக்கப் பார்த்தேன்.

இத்தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 1964 & இல் அஞ்சல் துறையில் பணிக்கு சேர்ந்த நாள் முதல் பணி ஓய்வு பெற்றது வரை முழுமையாக, நிம்மதியாக என் பணிகளை செய்துள்ளேன். எந்த ஓர் உதவியும் இல்லாமல். முழுக்க முழுக்க என் சொந்த உழைப்பிலும், முயற்சியிலும் நான் பெற்ற அந்த வெற்றியை நண்பனோடு அன்று பத்திரிகை அலுவலகத்தில் கைகளில் தவழ, பார்த்த அந்த தருணம், என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று!.

பவாவுக்கு என்ன குழந்தை வேணும்? - பவா செல்லதுரை

ஷைலஜாவுக்கு முதல் குழந்தையாக வம்சி பிறந்தபோது சில நாள் கழித்து அவருக்கு வலிப்பு வந்துவிட்டது. இதனால் அவர் மறுமுறை கருவுற்றபோது பெரிய  அச்சத்துக்கு உள்ளானோம். மருத்துவர்களும் வலிப்பு நோய் வந்திருந்ததால் இம்முறை  குழந்தைப் பேறு கஷ்டமாக இருக்கலாம் என்று சொல்ல, என்னைப் பெரும் அச்சம் சூழ்ந்தது. இதையடுத்து சென்னையில் முக்கியமான நரம்பு நிபுணர் ஒருவரிடம் காண்பித்தோம். அவர் இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை என்று ஆறுதல் அளித்தார். பிரசவத்தன்று வேலூர் சி.எம்.சி.யில் பிரசவ வார்டுக்கு முன்னால் இரவெல்லாம் காத்திருந்தேன். மலையாளம் பேசும் செவிலியர்கள் குழந்தைகள் பிறக்க பிறக்க,  உள்ளே இருந்து வந்து தந்தையர்களின் பெயரைச் சொல்லி அழைத்து குழந்தைகளைக் காட்டிவிட்டு உள்ளே சென்றுகொண்டிருந்தனர். வலிப்பு அபாயம் இருப்பதால் ஷைலஜாவுக்கு கூடுதல் கவனம் செலுத்தி இரவுப் பணிக்கு முதுகலை மருத்துவ மாணவர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இரவு ஒரு மணிக்கு மேல், பவா செல்லதுரை என்று அழைப்பு வந்தது. என்னவோ ஏதோ என்று பதறி ஓடினேன். என்ன குழந்தை வேணும் செல்லதுரைக்கு என்றார், ஒரு மலையாளத்து தேவதையான நர்ஸ். பெண் குழந்தைதான் என்றேன். அப்போதுதான் பிறந்திருந்த குட்டி பூப்போல் இருந்த மானஸியைக் காட்டினார்! மிக மிக மகிழ்வான தருணம் எனக்கு! முன்னதாக பிரசவம் முடிந்ததும் சோர்வில் அரை மயக்கத்தில் இருந்த ஷைலஜாவிடமும் மருத்துவர் என்ன குழந்தை வேணும் உங்களுக்கு என்று கேட்டிருக்கிறார். அவரும் பெண் குழந்தை என்று கேட்க, இதோ பாருங்கள் என்று மானஸியைக் காட்டியிருக்கிறார்கள்!

முதல் முழுக்கால் சட்டை - மதியழகன் சுப்பையா

ஓர் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் அம்மா சமையல் வேலை செய்து வந்தார். அவ்வீட்டில் வின்ஸி என்ற வின்செண்டுக்கு திருமணம். அதற்காக எனக்கு பேண்ட் தைக்க துணி வாங்கித்தந்தார்கள்.  ஃபுல் பேண்டுக்கு அளவும் கொடுத்து விட்டேன். ஆனால் துணியை வீணாக்க வேண்டாமென இரண்டு கால்ச்சட்டைகளைத் தைக்கும்படி அம்மா சொல்லி விட்டார்கள்.

அழுது ஒன்றும் ஆகவில்லை. இதைத் தெரிந்து கொண்ட வின்ஸி அங்கிள் தன் அக்கா மகனின் பழைய பேண்ட் சட்டையை லாண்ட்ரியில் கொடுத்து, அதை வாங்கிக்கொள்ள ரசீதையும் கொடுத்தார்.  அட்வான்ஸ் போக மீதி பத்து ரூபாய் கொடுக்க வேண்டுமென லாண்ட்ரியில் விரட்டினார்கள். பத்து ரூபாய் ஏற்பாடு செய்ய அம்மாவுக்கு மூன்று நாட்கள் ஆனது.

வெள்ளையில் நீலநிறக் கோடுகள் போட்ட தூய்மை மணக்கும் சட்டை. கருப்பு நிற டெரிக்காட்டன் பேண்ட். சட்டை லூசாய் இருந்தாலும் அழகாய் இருந்தது. பேண்ட்க்கு என் இடுப்பைப் போல் இன்னொரு இடுப்பு இருந்தால் நிற்கும் என்று அடம் பிடித்தது. அம்மா பச்சை வண்ண நூலால் பேண்டின் இடது வலது இரண்டு பக்கமும் இறுக்கித் தைத்தார். பேண்ட் இடுப்பில் இருந்து கொண்டது. தங்கையும் இந்தச் 'சட்ட நல்லா இருக்குண்ணே' என்றாள்.

மைதானம் முழுவதும் விருந்தினர்கள். அள்ளிக் கொட்டிய வெளிச்சம். காதைக் கிழிக்கும் இசை. மடக்குச் சேரில் உட்கார்ந்து இருக்கும் போதுதான் ஹெலன் ஆன்ட்டி அவசரமாகக் கூட்டிப் போனார். ஜிப்புக்கு கீழேயிருந்து பின்னால் வரைக்கும் தையல் விட்டிருந்ததை நானோ அம்மாவோ கவனிக்கவில்லை. ஸ்டாப்லர் பின் மூலம் பேண்ட்டின் பின் பகுதியில் பத்து பின்களை அடித்து விட்டார். பிறகு நான் என்சோட்டு பிள்ளைகளுடன் ஆடிய ஆட்டம் கண்டு அம்மா கண்கள் கலங்கினார். அந்த ஆடையை உடுத்திக் கொண்டு உறங்கிப் போனது, மகிழ்விக்கும் பசுமை நினைவு.

பச்சை மையி ஜிங்குச்சா - பெ.கருணாகரன் கல்கோனா

கல்லூரியில் தமிழிலக்கியம் இளங்கலை முடித்து, முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கான விண்ணப்பம் வெளியானது.   அதில் அவர்கள் கேட்ட தகுதிகள் எதுவும் என்னிடம் இல்லை. போட்டோ, டைப் ரைட்டிங் ,சுருக்கெழுத்து...தெரியாது சார்களே.  அவர்கள் கேட்ட கூடுதல் தகுதிகளில் ஒன்று கூட இல்லாத நிலையில், ஏன் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்து, விண்ணப்பிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் நெருங்கிய நிலையில்,  நண்பர்கள் இரா. துரையப்பனும், கி. நாகராஜனும் எனக்கு நம்பிக்கையளித்து, அவர்களே விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அனுப்பி வைத்தார்கள்.

அடுத்து, திருச்சியில் எழுத்துத் தேர்வு. அதில் ஜெயித்தேன். அடுத்து சென்னையில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு.  முதன்முறையாக குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைக்குள் குளிர்க்காய்ச்சல் வந்த கோழி போல நடுங்கிக்கொண்டே பதில் சொன்னேன்.

ஒருவாரம் கழித்து, விகடன் மாணவப் பத்திரிகையாளர்  1987-88 திட்டத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், சென்னை தி.நகர் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெறும் மூன்று நாள் முகாம் நிகழ்வில் கலந்துகொள்ள வரவேண்டும் என்றும் விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் பச்சை மையில் கையொப்பமிட்ட கடிதம் பதிவுத் தபாலில் வந்து சேர்ந்தது.

அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்த நொடியில் நான் அடைந்ததைப் போல ஒரு மகிழ்ச்சியை இதுவரை அடைந்ததே இல்லை. அன்று முழுக்க உணவும் இறங்கவில்லை. உறக்கமும் தழுவவில்லை.

எப்போ கவிதை எழுதப் போகிறீர்கள்? ம.நவீன்

2006 இல் முதன் முறையாக எழுத்தாளர் ஜெயமோகனைச் சந்தித்தபோது என் கவிதை நூலை அவரிடம் வழங்கினேன். அதைப் பெற்றுக்கொண்ட அவர் மறுநாள் காலையில் 'நவீன் எப்போது கவிதை எழுதப்போகிறீர்கள்?' என்றார். நண்பர்களின் சிரிப்புக்கு மத்தியில் நான் அவமானத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தேன்.

 2010இல் மீண்டும் அவர் மலேசியா வந்தபோது புதிதாக எழுதிய இரு சிறுகதைகளை அவரிடம் வாசிக்க வழங்கினேன். இது போன்ற விஷப்பரீட்சையெல்லாம் இரவில்தான் செய்வது. மறுநாள் காலையில் அக்கதைகளை மீண்டும் என் கையில் கொடுக்கும்போது நழுவி நேற்றைய மழைச்சகதியில் விழுந்து அவை நனைந்தன. நான் பதறிப் போனேன். ஜெயமோகன் ' அனல்வாதம் புனல்வாதம் கேள்விப்பட்டுள்ளீர்களா? தரமற்றது நெருப்பாலும் நீராலும் கொண்டு செல்லப்படும்' என சிரித்தார். நண்பர்களும் சிரித்தனர்.

அதன் பின்னர் நான் சுயமாக வலைப்பக்கம் ஆரம்பித்த பின்னர் அவர் பார்வைக்கு சில படைப்புகளை அனுப்பினேன். 'மொழி மொண்ணையாக உள்ளது' என்று நிராகரித்தார். அதன் பிறகு சில முறை அவர் மலேசியா வந்தாலும் எனது புனைவுகளைப் பற்றி ஒன்றும் சொன்னதில்லை.

2018இல் வல்லினத்தில் வந்த என் 'யாக்கை' சிறுகதையை தன் தளத்தில் பகிர்ந்து ‘உருவிய வாள்போல் வடிவம் கொண்டிருக்கிறது' எனக்குறிப்பிட்டு எழுதியிருந்தார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஜெயமோகன், ‘நான் நம்பிக்கை வைக்கும் இன்னொரு தலைமுறை எழுத்தாளரை எப்போதும் கவனித்துக்கொண்டே இருப்பேன்,' எனச் சொல்வதுண்டு. அந்தச்சொல் உண்மையென உணர்ந்த தருணம் நெகிழ்ச்சியானது.

மகிழ்ச்சியின் வாழ்முறை! - வினோதினி வைத்தியநாதன்

ஒவ்வொரு தருணமும் அனுபவிக்க வேண்டிய அரிய பொக்கிஷம் என்று நினைப்பவள் நான். ஒரு புத்தாண்டு, எனக்கு அப்பொழுது ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் & வீட்டு வாசலில் நின்று ‘பழையது போ போ, புதியது வா வா‘ என்று என் தந்தை சிரித்தபடி சொல்லிக் கொடுக்க, தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்திய ஞாபகம். அன்றிலிருந்து இன்று வரை காலையில் என் பால்கனியில் புதிதாய்ப் பூக்கும் ஒற்றை ரோஜாவிலிருந்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் புது மனிதர்களைச் சந்திப்பது, சக கலைஞர்களோடு அரட்டை அடித்து, தேவையான சீனில் நடிப்பது என்று, இரவு வேலை முடிந்து ராஜா

 சார் பாட்டைக் கேட்டுக் கொண்டே கார் ஓட்டி, வீடு திரும்பும் நேரம், தூரத்தில் தெரியும் முழுநிலவு வரை அனைத்தையும் ரசித்தவளாகவே, முழுமையாக அனுபவிப்பவளாகவே இருக்கிறேன்.

Happiness is a state of mind என்று படித்திருப்போம். சந்தோஷம் ஒரு மனநிலை. ஆனால் நான் சொல்வது & அது ஒரு மனநிலை மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறை. ஒரு மார்க்கம்.

எப்படிப்பட்ட இருட்டிற்குப் பிறகும் வெளிச்சம் பிறந்துதான் ஆக வேண்டும். எல்லா அனுபவங்களும் சந்தோஷத்தை அளிக்கும் வல்லமை படைத்தவை. பார்ப்பவர்களின் பார்வையில் தான் இருக்கிறது.

இந்த பூமியில் வாழும் மிகச் சிறிய காலத்தில் மகிழ்ச்சியான தருணங்களைத் தேடித் தேடிச் சேகரிக்கும் யாசகனாய் இருப்பதை விட, மகிழ்ச்சியை வாழ்முறையாக்கினால் எங்கேயும் எப்போதும் மகிழ்ச்சியின் உருவாகத் திகழலாம். போகுமிடமெல்லாம் அதை மற்றவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகலாம்.

ஆட்டுவித்தல் - இசை

என் மகிழ்ச்சிகளுக்கான ஆயுள் குறைவு.  ஆயினும் எழுத்து சார்ந்த மகிழ்ச்சிகள் சற்றே அதிகம் துடிப்பவைதான். எழுத்துக்குள் இருக்கையில்தான் பதற்றம் கூட மகிழ்ச்சியாக பொருளாகிறது. ஓர் எழுத்தாளனாக அது போன்ற ஒரு தருணத்தைத்தான் நான் மகிழ்ச்சி என்று வரையறுக்க முயல்வேன்.

பாடல்கள் எப்போதும்  என்னுள்ளே இருப்பவை. அதிலும் அந்த இசை என் கவிதைக்குள் நுழைகையில் கழிமுகம் போல் மனம் செழித்துவிடுகிறது.

சமீபத்தில்   கேட்க நேர்ந்த  எம்.எஸ்.வி யின் ‘சம்போ..சிவ சம்போ'‘ பாடல்  என்னைப் பற்றி ஆழத்துள் உள் நுழைந்து , ஆயிரம் பூக்களாக என் உயிரை மலர்த்திவிட்டது. முன்னும் பல முறை கேட்ட  பாடல்தான். ஆயினும் இந்த முறை என்னவோ ஆகிவிட்டது. அந்தக் கள்வெறியைத் தாங்க இயலாது அதைக் கவிதையில் இறக்கி வைக்கும் முயற்சியாக ‘ ஆட்டுவித்தல்‘ என்கிற கவிதை ஒன்றை எழுதினேன். கோவையிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் புறவழிச் சாலையில்  இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒன்றரை மணி நேரப்பயணத்தில் அந்தக் கவிதையை எழுதி முடித்தேன். வண்டியை எம்.எஸ்.வி தான் ஓட்டினார். நான் சும்மா சீட்டின் மேல் இருந்தேன் அவ்வளவே. சமீபத்தில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த தருணம் என்று  அதைச் சொல்லலாம். நான் மனிதன் என்கிற பாவனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குரங்கின் நிலைக்கு வளர்ந்து கொண்டிருந்தேன். என் ஆக்டிவா அப்பாடலின் தாளத்துக்கு ஆடிக் கொண்டிருந்தது. அந்தத் தாளம் கன்டெய்னர் லாரிகளைத் தாண்டி காற்றெனப் பறந்து கொண்டிருந்தது. வெகு நிச்சயமாக அந்நாளை சாக்கடையில் பூத்த ஒரு ரோஜா என்பேன்.

சரியான தருணம்! - ஜெ.பிஸ்மி

சென்னைக்கு வருவதற்கு முன் எனது சொந்த ஊரான திருத்துறைப் பூண்டியில் நண்பர்களுடன் சேர்ந்து இலக்கிய வட்டம் ஒன்றை ஆரம்பித்து அதில் கவியரங்கம் போன்ற சில நிகழ்வுகளை நடத்தி வந்தேன்.  அதே சமயம் 'தொட்டில்' என்ற கையழுத்து பத்திரிகை ஆரம்பித்து நடத்தி வந்தேன்,  இன்னொருபுறம் 'வளர்பிறை' என்ற மற்றொரு கையெழுத்து பத்திரிகை ஒன்றிற்கும் எழுதிக் கொடுத்து பங்களிப்பு செய்து வந்தேன். அதன் பிறகு ஜனரஞ்சக பத்திரிகைகளில் வாசகர் கடிதத்தில் ஆரம்பித்து ஜோக்குகள், துணுக்குகள், சிறுகதைகள் வரை என் எழுத்துகள் நீண்டன. அந்த சமயத்தில் எனக்குள் இயக்குநராகும் வேட்கை உருவானது. உடனே கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டேன்.  உதவி இயக்குநராக அலைந்து திரிந்து ஒரு வழியான பின் சினிமா பத்திரிகையாளனாக என் வாழ்க்கை பயணிக்கிறது.

ஆனாலும், என் மனதில் சினிமா ஆசையில்  நம் வாழ்க்கை பலியாகிவிட்டதோ? என்ற உறுத்தல் எனக்குள் இருந்தது. மேலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக இருப்பதில் இந்த சமூகத்திற்கு என்ன லாபம்? இதனால் சமூகத்திற்கு என்ன நன்மை? சினிமாகாரர்களை புகழ்பாடுவதைத் தவிர வேறென்ன செய்தோம்? என்ற கேள்விகள் என் மனதை தொடர்ந்து துளைத்து கொண்டிருந்தது.

இந்தச்சூழலில் பல நாட்கள் கழித்து என் சொந்த ஊருக்கு செல்லும் போது, அங்கு எனது அம்மா என்னுடைய சில  பொருட்களை எல்லாம் ஒரு பெட்டியில் எடுத்து பத்திரப்படுத்தி  வைத்திருந்தார்.  அந்த பெட்டியை நான் எடுத்துப் பார்த்த போது நான் நடத்திய 'தொட்டில்' மற்றும் 'வளர்பிறை' கையெழுத்துப் பத்திரிகைகளின் பிரதிகள் இருந்தன. அதை நான் பிரித்துப் பார்த்த போது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்!

விகடன், குமுதம் போன்ற வெகுஜன பத்திரிகையின் வடிவமைப்பு மற்றும் தரத்திற்கு இணையாக அன்றே நான் எனது கையெழுத்து பத்திரிகைகளை நடத்தி வந்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனாக ஆனதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டோம். ஆனால், நமக்குள் இருக்கும் பத்திரிகையாளனின் விதை எப்போதோ நம்மாலேயே போடப்பட்டது என்பதை அந்த புத்தகத்தை அந்த தருணத்தில் பார்க்கும் போது தான் கிடைத்தது. அது எனக்குள் இருந்த வருத்தத்தைப் போக்கி மகிழ்ச்சியை அளித்தது! ஒருவேளை அதை அந்தத் தருணத்தில் நான் பார்க்கவில்லையென்றால் வேறொரு பாதையைக் கூட தேர்ந்தெடுத்திருப்பேன்.

வெறுங்கால் வீரர்களின் கால்பந்து வெற்றி! - பூகோ சரவணன்

எனக்குச் சிறுவயதிலிருந்தே நாளிதழ்களுடன் வெளியாகும் சிறுவர் மலர் போன்ற இதழ்களை படிக்கும் வழக்கம் இருந்தது. நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சமயம் சுட்டி விகடனில் 'சுட்டி Quiz Wiz' என்ற போட்டியை அறிவித்திருந்தார்கள். எனக்கு அதில் கலந்துகொள்ள ஆசை, நண்பர்கள் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கினோம்.

ஒரு வழியாக போட்டிக்கு எங்கள் குழு தயாராகி பயணித்தோம். பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பெரிய பள்ளியில் வைத்து போட்டிகளை நடத்தினர். அதுவரை எங்கள் வாழ்நாளில் அத்தனை கார்களை மொத்தமாக ஒரு வளாகத்தில் பார்த்ததேயில்லை. 700 முதல் 800 மாணவர்கள் அந்த போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். போட்டிக்காக அவர்கள் எடுக்கும் பயிற்சிகளையும், அவர்களைப் பயிற்றுவிக்க வந்த ஆசிரியர்களையும் பார்க்க பிரமிப்பாய் இருந்தது. எங்கள் தரப்பில் நாங்கள் மட்டுமே, துணைக்கு மட்டும் ஒரு மாணவனின் பெற்றோர் வந்திருந்தனர்.

இந்தியாவிற்குள் இன்டெர்நெட், மொபைல் போன், கூகுள் என தொழில்நுட்பங்கள் புதிதாக படையெடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. எங்களுக்கு கணினியில் தெரிந்ததெல்லாம் பெயிண்ட், டாஸ் கேம்ஸ் மட்டும் தான். கணினியைப் பயன்படுத்தி படிக்க முடியும், தகவல்கள் சேகரிக்க முடியும் என்பது பற்றியெல்லாம் அப்போது அறிந்திருக்கவில்லை.

எங்கள் தரப்பில் நாங்கள் படித்ததெல்லாம் ‘கையளவு களஞ்சியம்' என்ற  புத்தகத்தை மட்டும் தான். தவிர போட்டிக்குத் தயாராவதெற்கென வேறெந்த முயற்சிகளையும் செய்திருக்கவில்லை. அதைப்பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை.

போட்டி தொடங்கியதும் முதல் சுற்றுக்கு 40 கேள்விகள் உள்ள வினாத்தாளை தந்தார்கள். அதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருந்தன. நாங்கள் படித்தது ஆங்கில வழிக்கல்வி தான் என்றாலும் தமிழுக்கே பிரதானம் இடம் கொடுத் தனர்.

எனவே, முதல் சுற்று சிறிது சாதகம் தான் என்றாலும் மற்ற சுற்றுகள் கடினமே. முதல் சுற்றில் 'கையளவு களஞ்சியம்' 16 வினாக்களை பரிசாகத் தந்தது. மற்றவற்றை நண்பர்கள் கலந்தாலோசித்து முடித்தோம்.

முதல் சுற்றின் முடிவுகளை அறிவிக்க ஆரம்பித் தார்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்த முதல் 8 அணிகளை, தலைகீழ் முறையில் மேடைக்கு அழைத்தனர்.

அதன்படி 2 வது அதிக மதிப்பெண் பெற்ற அணியை அழைத்த போது, எங்களுக்குள் நாங்கள் முடிவு செய்துகொண்டோம் இனி நமக்கு வாய்ப்பில்லை என்று. ஸ்டேடியத்தை விட்டு வெளியேற எழுந்து செல்கையில் எங்கள் பள்ளியின் பெயரை அழைத்தனர்.

எங்களுக்கு மிகுந்த ஆச்சரியம்! 40 க்கு 31 மதிப்பெண்கள் எடுத்து முதல் சுற்றில் முதலிடத்தை பிடித்தோம். அங்கு வந்த மற்ற பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த எந்த பயிற்சியும் இல்லாமல் எங்கள் சொந்த முயற்சியிலேயே நாங்கள் பிடித்த இடம் அது. கால்பந்துப் போட்டியில் வெறுங்கால் வீரர்கள் பெற்ற வெற்றி போல.

அடுத்த சுற்றில் ஆங்கிலத்தில் வினாடி வினா, வீடியோ கேள்வி பதில் என அதுவரை எதிர்கொண்டிராத முயற்சிகளில் நான்காவது இடம் பெற்று வெளியேறினோம். ஆனால், முதல் சுற்றில் முதல் அணியாக நாங்கள் மேடையேறிய அந்த சம்பவம் அளவில்லாத ஆனந்தத்தைத் தந்தது. போட்டி முடிவில் எங்களுக்கு ஜெர்கின் பரிசாக கொடுக்கப்பட்டது. அதை கிட்டத்தட்ட 11 வருடங்கள் பத்திரமாக வைத்திருந்தேன். அதை ஒரு வெற்றியின் நினைவுச்சின்னம் என்று சொல்லமாட்டேன். ஆனால், அது வாழ்வின் புதிய சவால்கள், முயற்சிகளை எதிர்கொள்ள உத்வேகம் அளித்து கொண்டிருந்தது.

எழுத்துதான் இனி உனக்கு - பாஸ்கர்சக்தி

தொண்ணூறுகளில் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு ஆண்டு தோறும் இலக்கிய மலர் வெளியிட்டது. இலக்கிய வட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தவை அந்த மலர்கள். 1995&இல் அந்த மலருக்காக ‘அறிமுக எழுத்தாளர் போட்டி' ஒன்று அறிவிக்கப்பட்டது. எனது முதல் கதையை மனதுக்குள் தேட ஆரம்பித்தேன்... கொசுக்களின் துணையுடன் ஓரிரவில் அதை எழுதி முடித்தேன்... அனுப்பவிருந்த கடைசி நிமிடத்தில் எழுத்தாளரின் பெயரைப் பார்த்தேன். பாஸ்கர். முக்கோணக் காதல் சினிமாவில் வருகிற ஹீரோ பெயர். அந்தப் பெயருடன் ஜெமினி கணேசனும், ஜெய்சங்கரும் நடித்த படங்களை டென்ட் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.  அதனால் வேண்டாம். மாற்றலாம். ஆனால் என் பெயரை நானே ஒதுக் கினால் எப்படி? எனவே பாஸ்கர் இருக்கட்டும். கூட ஒரு சக்தியைச் சேர்க்கலாம்(யார் இந்த சக்தி? காதலியா? எனும் பொறாமையையும், யூகங்களையும் தூண்டலாம். அடடே ! ) என்று  சேர்த்தேன். பாஸ்கர் என்ற வெட்டியாபீஸர் பாஸ்கர்சக்தி எனும் எழுத்தாளனாக மாறிய தருணம் அது.

மும்பையில் இருக்கும் என் அண்ணனைப் பார்ப்பதற்காக ரெயிலில் போய்க் கொண்டிருந்தேன். நடுவே காண்ட்வா எனும் ஒரு ஊரில் இறங்கி இன்னொரு ட்ரெயினைப் பிடிக்க வேண்டும். அங்கே இறங்கி அப்பாவுக்கு ஃபோன் செய்தபோது  எனது சிறுகதை இந்தியா டுடே போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருப்பதாகச் சொன்னார். அப்பாவின் குரலில் இருந்த மகிழ்ச்சி அது வரை நான் அறியாதது... அதன் பின் ரயிலேறி மும்பை செல்லும் வரை  ஏதோ கனவுலகில் வாழ்ந்து விட்டு வி.டி. ஸ்டேஷனில் இறங்கி ஹிக்கின் பாதம்ஸ் தேடி ஓடி ...அங்கே இருந்த இந்தியா டுடே இலக்கிய மலரை வாங்கி, என் முதல் கதையைப் பார்த்த அந்த நொடி மிக முக்கியமான தருணம்.  எழுத்துதான் இனி உனக்கு என்று என் வாழ்வின் போக்கை நிர்ணயித்த அந்தத்  தருணம் பேரானந்தமானது.

நினைந்து நினைந்து - ரவிபிரகாஷ்

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்... இரவு மணி 10 இருக்கும்; எனக்கு ஒரு போன்கால் வந்தது. ஏதோ புதிய எண். நான் எடுக்கவில்லை! பதினைந்து நிமிடங்களுக்குப் பின் என் இனிய நண்பர் இயக்குநர் விஜய்ராஜ் அழைத்தார்.

‘‘ ஐயா உங்களோடு பேசணும்னு ஆசைப்பட்டாரு! உங்க நம்பர் கொடுத்திருந்தேன். ‘ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன். எடுக்கலேப்பா. நம்பர் சரிதானா?'ன்னாரு. அதான் கேட்டேன்'' என்றார் விஜய்ராஜ். ‘ஐயா' என்று விஜய்ராஜ் குறிப்பிட்டது, என் அபிமான பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களை.

 நான் உடனே அந்த எண்ணை அழைத்தேன். ‘‘வணக்கமய்யா, வணக்கமய்யா... அன்பு ரவிபிரகாஷ்! உங்க கடிதத்தை முழுக்கப் படிச்சேன். ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. உங்களை மாதிரியான உண்மையான ரசிகர்களாலதான்யா இந்த வயசுலயும் நான் ஆரோக்கியமா, உற்சாகமா இருக்கேன்...'' என்று மகிழ்வும் நெகிழ்வுமாகத் தொடங்கி, ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தார் ,அந்த மாபெரும் இசைக் கலைஞர், ஏழிசை மன்னர் டி.எம்.எஸ். அன்றுதான் அவரின் பிறந்த நாள்.

நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் டி.எம்.எஸ்ஸின் அதி தீவிர ரசிகன். அன்றைய தினம் காலையில்தான் ‘சொல்லின் செல்வன்' திரு.பி.என்.பரசுராமனுடன் டி.எம்.எஸ்ஸின் இல்லத்துக்குச் சென்று, அவரை முதன்முறையாக நேரில் சந்தித்துப் பேசி, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அளவளாவிவிட்டு வந்திருந்தேன். அத்துடன் என் மனதில் உள்ளவற்றையெல்லாம் கொட்டி, ஒரு கடிதமாக ‘ஏ&4' தாளில் ஐந்தாறு பக்கங்களுக்கு டைப் செய்து வைத்திருந்ததை, நேரில் அவரிடம் தந்துவிட்டு வந்திருந்தேன். அதைப் படித்துவிட்டுதான் இரவு தொடர்புகொண்டு பேசினார், அந்த மாமனிதர்.

நினைந்து நினைந்து என் நெஞ்சம் மகிழ்வது, பாட்டுத் தலைவனை நேரில் சந்தித்துப் பேசி மகிழ்ந்த அந்த முதல் நாள் நிகழ்வைத்தான்!

42B LF தெரு சாத்தூர்! - பாரதி கிருஷ்ணகுமார்

30 ஏப்ரல் 1990. அப்போது நான் கிராம வங்கி ஊழியன். அதன் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர். அகில இந்திய அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர். நாடெங்கிலும், கிராம வங்கி ஊழியர்களின் ஊதியம், பணி நிலைமைகள் என எல்லாவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். ஏற்றத்தாழ்வுகள். மிகவும் இழிவான நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்கள். என் கவனம் முழுவதையும் அவர்கள் பக்கம் திருப்பினேன். அவர்கள் பணிநிலைமையை மாற்ற, எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதையும் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. பொறுக்க முடியாமல், 28.04.1986 அன்று ஒரு நீண்ட கடிதத்தை உச்ச

நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதினேன். 13.06.1986 அன்று பழுப்பு நிற உறையில், அரக்கு வண்ணத்தில் உச்சநீதிமன்றத்தின் இலச்சினையோடு கூடிய கடிதம் வந்தது. எனது கடிதம் மனுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கடிதம் சொன்னது. நான் வழக்காடத் தயாரானேன். நீதியரசர் கே. சந்துரு அப்போது எங்கள் சங்கத்தின் வழக்கறிஞர். அந்தச் சமயத்தில், கிராம வங்கி ஊழியர்களின் ஊதியம், பணிநிலைமைகள் குறித்து விசாரிக்க ஒரு தீர்ப்பாயத்தை உச்சநீதிமன்றமே அமைத்தது. எங்கள் வழக்குகள் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டன. மூன்றாண்டு கால விசாரணைக்குப் பிறகு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்தியாவிலேயே முதன் முறையாகப் பணி நிரந்தரம் நடந்தது, பாண்டியன் கிராம வங்கியில் சராசரியாக ரூ 20,000 வரை பழைய ஊதிய பாக்கியை அவர்கள் பெற்றார்கள். பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் பதவி உயர்வு பெற்று, காசாளர்கள், மேலாளர்கள் ஆகிப் பணி ஓய்வும் பெற்றார்கள். நாகரீகமான ஓய்வூதியமும் இன்றைக்குப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி ஒரே ஒரு நாள் மகிழ்ச்சியல்ல; எனக்கு மட்டுமான மகிழ்ச்சியல்ல; தொடர் மகிழ்ச்சியும் கூட. 28.04.1986 அன்று சாத்தூரில் 42ஆ. ஃஊ தெருவில் இருந்து எழுதின கடிதம் தந்த மகிழ்ச்சி அது. அந்த இடத்தை, எழுதிய தருணத்தை இப்போதும் நினைக்கிறேன். மகிழ்கிறேன்.

நான் பனிரெண்டாம் வகுப்பு பாஸ்! - வேடியப்பன்

எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் முக்கியமானது  நான் 12&ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதே. எங்கள் ஊரில் பங்குனி உத்திரம் மிகவும் கொண்டாட்டமான விழா. பதினொன்றாம் வகுப்பு பரீட்சை சமயத்தில்  நான் காலையில் திருவிழாவை சிறப்பித்துவிட்டு, மாலையில் தேர்வெழுதப் போனேன். போனேனே தவிர ஏதும் எழுதவில்லை என்பது தேர்வு முடிவு வரும்போதுதான் தெரிந்தது. குறிப்பாக கணக்குப் பாடத்தில் ஒரே ஒரு தாள்தான் நான் எழுதினேன். பூஜ்ஜியம்தான் மதிப்பெண்.  ஆல்பாஸ்தான் போட்டார்கள். ஆனால் எனது தேர்வு முடிவினை மட்டும் நிறுத்தி வைத்திருந்தார்கள்.

பள்ளி திறந்ததும் நம்பிக்கையோடு 12ம் வகுப்பிற்குப் போனேன். வருகைப் பதிவேட்டில் எனது பெயர் இல்லை. அலுவலகம் அழைக்கப்பட்டேன். அப்பாவை அழைத்துவரச் சொல்லி விட்டார்கள். அழைத்துப்போனேன். கண்டிப்பாக இன்னொரு வருடம் 11ம் வகுப்பு படித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். விருப்பமில்லை என்றால் டிசியை வாங்கிகொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டது. அப்பா, இப்போ என்ன பண்ணலாமென்று கேட்டார். நான் ஒரு நொடிகூட யோசிக்காமல் டிசி வாங்கிடலாம் என்றேன். 11&ஆம் வகுப்பில் கணக்கை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த நான், டிசி வாங்கிக்கொண்டு வந்து, வரலாற்றுப் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து, வீட்டிலிருந்தே தனித்தேர்வுக்கு விண்ணப்பித்தேன். ஆங்கிலம் மற்றும் பொருளியல் பாடங்களை மட்டும் டுடோரியல் சென்டர் ஒன்றுக்குச் சென்று படித்தேன். மற்ற பாடங்களை நானே படித்துக்கொண்டேன்.

ஒரு வருடம் முடிவில் தனித் தேர்வராக தேர்வெழுதினேன். அனைத்துப் பாடத்திலும் வெற்றிபெற்றேன். நான் படித்த டுடோரியல் வாத்தியார், எனது மதிப்பெண் பட்டியலையும், எனது புகைப்படத்தையும் பெரிய பேனராக அச்சடித்து அடுத்த சில ஆண்டுகள் அந்த டுடோரியல்

 சென்டரின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்! இது பெரும் சாதனையாக எனக்குத் தோன்றி மகிழ்ச்சியை அளித்தது!

நவம்பர், 2020.