கலைஞருடன் சுப.வீரபாண்டியன் 
சிறப்புப்பக்கங்கள்

தந்தையின் குரல்!

சுப.வீரபாண்டியன்

தொடக்கத்தில் சிறுவயதில் காரைக்குடியில் கலைஞரின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். என் தந்தையார் இராம சுப்பையா, திமுக  தொடங்கியதிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர். ஆகவே திமுக பேச்சாளர்கள் எல்லோரையும் கூட்டங்களிலே நின்று கேட்டுள்ளேன். ஆனால் நான் எம்ஜிஆர் ரசிகன்.

அவருடைய நாடோடிமன்னன் படத்தை எழுத்தெண்ணிப் பார்த்துள்ளேன் எனச் சொல்லலாம். நான் திமுக அபிமானியாக இருந்தாலும் 1972&இல் எம்ஜிஆர் விலகிச் சென்றபோது திமுக மீதிருந்த பற்றைவிட எம்ஜிஆர் மீதான பற்றுதான் அதிகமாக இருந்தது. அப்போது நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தட்டச்சராக பணி செய்துகொண்டிருந்தேன். அச்சமயம் நெருக்கடி நிலைகாலம் வந்தபோது, அதை எம்ஜிஆர் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. எனக்கு ஏமாற்றம். அதை எதிர்த்து நின்றவர் கலைஞர்தான். எனவே அவரைப் பார்க்க வேண்டும் என்று என் தந்தையாரிடம் சொன்னேன். அவர் மகிழ்வோடு அழைத்துச் சென்றார். ஆக, நான் கலைஞரைப் பக்கத்தில் இருந்து பார்த்தது 1976 - இல் நெருக்கடி நிலை காலத்தில்.

அதன் பிறகு கலைஞருடன் எந்த தொடர்பும் இல்லை. 1985 -இல் நானும் என் திராவிட இயக்க நினைவுகளும் என்ற என் தந்தையின் நூலை வெளியிட கலைஞர் வந்தபோது அவருக்கு வணக்கம் சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான்.

பின்னால் 1987 - இல் ஈழத்தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் பல தரப்பை சேர்ந்தவர்கள் இணைந்திருந்தோம். அதன் ஒருங்கிணைப்பாளராக நான் தெரிவு செய்யப்பட்டேன். அந்த அமைப்பின் சார்பில் கலைஞரை சந்தித்துக் கொண்டிருந்தோம்.

1990 - இல் இனி என்றொரு ஏட்டை விடுதலைக்குயில்கள் அமைப்பின் சார்பாகத் தொடங்கினோம். அதன் முதல் இதழ் வெளியானபோது விளம்பரம் கொடுப்பதற்காக முரசொலி அலுவலகம் போயிருந்தோம். அப்போது தலைவர் இருக்கிறார் எனத் தெரிந்து, அவரைப் பார்க்கலாம் என ஓர் ஆசை. அழைத்தார். ‘பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இனி என்கிற இப்பெயரை வினைச் சொல்லாகவும் வைத்துக்கொள்ளலாமா?' என்று கேட்டார். அந்த கேள்வியே அப்போது சட்டென எங்களுக்குப் புரியவில்லை. அழு என்பதுபோல் இனி என சொல்லலாமா என்பது போல் கேட்டார்.

2002இல் நான் பொடாவில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகாலம் சென்னை மத்திய சிறையில் இருந்தேன். அப்போது பரிதி இளம் வழுதி  சிறையில் இருந்தார்கள். பரிதியைப் பார்ப்பதற்காக கலைஞர் சிறைக்கு வந்தார். அப்போது ஒரு காவலர் என்னிடம்' உங்களை சிறைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைக்கிறார்கள்' எனச் சொன்னார். எதற்கென்று தெரியாமல் போனபோது கலைஞர் பரிதியைக் காணவருகிறார். உங்களையும் அழைக்கச் சொல்லியிருக்கிறார் என்றார்கள்.

சிறையில் ஜெயிலர் அறையில் கலைஞர் அருகே ஒரு நாற்காலி காலியாக இருந்தது. பரிதி நின்றுகொண்டிருக்க, நான் அமர்ந்து கலைஞரிடம் பேசினேன். இதுபற்றி நான், ‘ஒரு மதிப்பு காரணமாக பரிதி நின்றுகொண்டிருந்தார். ஒரு  பாசம் காரணமாக நான் பக்கத்தில் அமர்ந்துவிட்டதாக நினைக்கிறேன்' என என் வாழ்க்கைக் குறிப்பு நூலில் எழுதியிருக்கிறேன்.

‘எப்படி இருக்கிறே?' என்று அவர் கேட்டார். 2003, பிப்ரவரி 6 ஆம் தேதி அவர் வந்த நாள் என்னால் மறக்க முடியாது.

பிறகு 2006 ஏப்ரல் 17 ஆம் தேதி அவரைச் சந்திக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இது என் அரசியல்வாழ்வின் திருப்பம். நான் ஈழ ஆதரவாளனாக, தமிழ் தேசிய செயற்பாட்டாளனாக மாறிய பின்னர் தலைவர் கலைஞருக்கு எதிராகப் பேசியிருக்கிறேன். கலைஞருக்கு எதிரான கருத்து 90 முதல் 2002 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் என் மனதில் பதிந்திருந்தது. என் தந்தைக்கு அதில் வருத்தமுண்டு. 2002 இல் பொடாவில் சிறையில் இருந்தபோது என் சிந்தனைப்போக்கில்  மாறுதல் ஏற்பட்டது. அப்போது நெடுமாறன் நடத்திய தமிழர் தேசிய இயக்கத்தில் பொதுச்செயலாளர்களில் ஒருவனாக நான் செயல்பட்டேன். சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் கலைஞரைப் பார்த்தோம். 2004&இல் நெடுமாறனுடன் சேர்ந்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க தேர்தல் பிரசாரத்தில் முதல்முதலாக ஈடுபட்டேன். 2006 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது மீண்டும் திமுகவை ஆதரிக்கவேண்டும் என்று நான் சொன்னபோது அய்யா நெடுமாறன் உட்பட யாரும் ஏற்கவில்லை. நான் விலகிவிட்டேன்.

இந்த செய்தியைப் பார்த்த நக்கீரன் கோபால், திமுகவுக்கு ஆதரவாகத்தான் வெளியேறி இருக்கிறீர்கள். தலைவரைப் பார்க்கிறீர்களா? எனக் கேட்டார். நான் பார்ப்பேன். அவர் பார்ப்பாரா எனத் தெரியாதே... பல ஆண்டுகள் அவரை எதிர்த்துப் பேசியவனாயிற்றே? என்றேன்.

கோபால் அதெல்லாம் ஒன்றுமில்லை. பார்க்கலாம் எனச் சொல்லி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது நக்கீரன் காமராஜ், பேரா. நாகநாதன் இருவரும் உடனிருந்தார்கள். ‘என்ன செய்யலாம்னு இருக்கே?' என்று கலைஞர் கேட்டார்.

‘கட்சியில் சேர்ந்துவிடுகிறீர்களா?'எனவும் கேட்கப்பட்டது. நான் கட்சிக்கு வெளியே இருந்தே பிரசாரம் செய்கிறேன் என்றேன். அப்படியே செய் என ஒப்புக்கொண்டார் கலைஞர். ஒரு படம் எடுத்துக்கொள்ளலாம் என சொன்னபோது, கலைஞர் பனியன் மட்டுமே அணிந்திருந்தார். எனவே தலைவர் இன்னும் தயார் ஆகவில்லை என்று நக்கீரன் காமராஜ் கூறினார். அச்சமயம் கலைஞர் சொன்ன வார்த்தைகள் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன. ‘பரவாயில்லை எடுத்துக்கலாம். உங்க அப்பா இப்படித்தானே இருப்பார். எடுத்துக்க..' என்றார். அப்போது அப்பா உயிருடன் இல்லை. அவர் இருந்திருந்தால் இதைவிட மகிழ்வான  தருணம் அவருக்கு இருந்திருக்காது.

அந்தப் படத்தை நான் மிகப்பத்திரமாக வைத்திருக்கிறேன். அன்றைக்குத் தொடங்கி இன்றுவரை அவரை என் நெஞ்சை விட்டு ஒரு துளிகூட விலக்காமல் வைத்துள்ளேன்.

முதல் பரப்புரைக்காக வெளியூர் சென்றபோது உங்களுக்கு கார் வேண்டுமா என்று கழகத்தில் கேட்கப்பட்டது. ‘அவருக்கு ஏதாவது வேண்டுமானால் மட்டும் செய்யுங்கள். இல்லையெனில் கார் கொடுத்து அவரை விலைக்கு வாங்கிவிட்டதாகச் சொல்வார்கள். அவர் விருப்பப்படி விட்டுவிடுங்கள்' என்று கலைஞர் சொன்னார்கள்.

2009 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக எல்லா கட்சியினரும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அறிவாலயத்தில் தலைவர் அறையில் நான் தொல். திருமாவளவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் இருந்தோம். அப்போது எண்ணித் துணிக கருமம் என்கிற அறிஞர் அண்ணாவின் உரை நூலை  கலைஞர் அளித்தார். அப்புத்தகம் 1963 - இல் அண்ணா எழுதி வைத்து ஆற்றிய உரை. அந்த உரையை அவர் பேசி முடித்தபின் கலைஞரிடம் கொடுத்துள்ளார். அதை நாற்பது ஆண்டுகள் பத்திரமாகவைத்திருந்து, அதே கையெழுத்தில் நூலாகக் கொண்டுவந்துள்ளார் கலைஞர். அடுத்த தலைமுறையான உங்கள் மூவருக்கும் அரசியலில் ஏதாவது சிக்கல் வந்தால் அதை எப்படி அணுகவேண்டும் என இது வழிகாட்டும் என்றார். அண்ணாவின் கையெழுத்தில் வந்திருக்கும் இந்நூலில் தங்கள் கையெழுத்தும் இருந்தால் நன்றாக இருக்கும் என வைரமுத்து கேட்க, அதில் கையெழுத்திட்டு அவர் கொடுத்தார். நான் மிகப்பெரிய சொத்து என வைத்திருக்கும் நூல்களில் அதுவே முதன்மையானது.

பிறகு எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். நானும் வெளியே வந்தபோது உடனே ஒருவர் வந்து அய்யா அவர்கள் அழைக்கிறார்கள் எனக் கூப்பிட்டார். வந்தேன். ‘நீ தேர்தல் பரப்புரைக்கு தனியாகச் செல்கிறாய்... மற்ற கட்சிக்காரர்களுக்கு இதற்கான பயிற்சியும் அனுபவமும் இருக்கும். உனக்கு இருக்காது. நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மற்ற கூட்டங்களில் பேசுவதுபோல் அல்ல தேர்தல் கூட்டம். உங்கள் பேரவை சார்பாகவே கூட்டங்களை நடத்திக்கொள்ளுங்கள். எந்தந்த ஊரில் கூட்டம் என்பதை எழுதிக்கொடுத்துவிடு. அங்கங்கே மாவட்ட செயலாளர்களிடம் சொல்லி உனக்கு பின்புலத்தில் பாதுகாப்பு அளிக்கச் சொல்கிறேன்' என்றார். என் தந்தையின் குரலைக் கேட்பதுபோலவே இருந்தது.

என்னோடு காரில் வா என்று பலமுறை அழைத்துச் செல்வார். அவருடன் உரையாடிக் கொண்டே செல்லும் வாய்ப்பு என் வாழ்வில் கிடைத்த பெரும்கொடை.

ஒருமுறை அவர் என்னைக் கடிந்துகொண்ட சம்பவமும் உண்டு. 2015 - இல் சென்னையை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. என் வீடும் வெள்ளத்தில்  சிக்கிக்கொண்டது. வெளியே வரமுடியவில்லை. அதனால் கலைஞரையும் சென்று பார்க்கவில்லை. வெள்ளம் வடிந்து, நான் போய் கலைஞரைப் பார்த்தேன். அவர் என்னிடம் முகம் கொடுத்தே பேசாமல்,' இத்தனை நாள் எங்கே போனாய். இவ்வளவு வெள்ளம்.. இவ்வளவு மக்கள் கஷ்டப்படறாங்க.. உன்னை ஆளையே காணோம்' என்று சினந்துகொண்டார். என்னைப் பேசவே விடவில்லை. உண்மையில் என் வீடும் வெள்ளத்தில் சிக்கியது அவருக்குத் தெரியாது.

இது மதியம் 12 மணிக்கு நடந்தது. எனக்கு பெரும் மனவருத்தம்.  அன்று முழுக்க நான் சாப்பிடாமலேயே இருந்துவிட்டேன். மறுநாள் அமைச்சர் வேலு தொலைபேசியில் அழைத்து சிஐடி காலனி இல்லத்துக்கு வரும்படிக் கூறினார். அவருக்கு தலைவர் கடிந்துகொண்டது தெரியும். நானும் போனேன். கனிமொழி, தலைவரிடம் என் வீட்டில் வெள்ளம் சூழ்ந்துகொண்டதைக் கூறி, ஏன் அவரிடம் கோபம் கொண்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதன் பின்னர்தான் என்னைக் கூப்பிட்டு விட்டிருக்கிறார்.

‘ஏன் வெள்ளம் வந்ததை என்னிடம் சொல்லவில்லை?' என்றார். நான் சொல்லவந்தேன், நீங்கள் சொல்லவிடவில்லை என்றேன். ‘சரிசரி..வருத்தப்படாதே.. கோபத்தில் சொல்லிவிட்டேன் கனிமொழி சொல்லித்தான் எனக்குத் தெரியும்...' என்று தட்டிக் கொடுத்தார். முதல்நாள் சாப்பிடாமல் இருந்த களைப்பு அந்த நிமிடத்தில் நீங்கிவிட்டது.

தமிழ்நாடு முழுக்க சமச்சீர்கல்வி குறித்து கூட்டங்கள் நடத்தப்பட்டபோது யார் யார் எங்கே பேசவேண்டும் என்ற பட்டியல் வெளியானது. அதில் என் பெயரைத் தேடினேன். காணவில்லை. அறிவாலயம் நிர்வாகியைத் தொடர்புகொண்டு என் பெயரைக் காணவில்லையே எனக் கேட்டேன்.

‘ நல்லா பாத்தீங்களா?' என்றார்.  ‘பாத்தேனே...' ‘தலைவர் பெயருக்கு அருகில் உங்கள் பெயர் உள்ளது பாருங்கள்' என்றார். சென்னை மயிலாப்பூரில் நடந்த கூட்டத்தில் கலைஞருடன் நானும் பேசுவதாக இருந்தது. என்னோடு சுபவீயைப் போடுங்கள் என அவர் சொல்லி இருக்கிறார். எனக்கு பெரும் ஆச்சரியம்!

மேடையில் கலைஞரிடம், நான்  பேசுவதற்கு பதினைந்து நிமிடம் எடுத்துக்கொள்ளவா எனக் கேட்டேன். ‘எனக்கு தொண்டை சரியில்லை. நீ அரை மணி நேரம் பேசு' என்றார்.

கூட்டத்தில் எங்கோ நின்று அவர் பேச்சைக் கேட்ட நான், அன்று அவருடன் மேடையில் அமர்ந்து அரை மணி நேரம் பேசியது என்பது மிகப்பெரிய பேறு. அன்றைக்கு அவர்தான் கோபாலபுரத்தில் இருந்து என்னை தன்னோடு வருமாறு கூறி காரில் அழைத்தும் சென்றார். திரும்புகையில் சொன்னார். ‘அண்ணன்(என் தந்தை) இருந்திருந்தால் உன் பேச்சைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்' என்றார்.

‘பேச்சைக் கேட்கவேண்டியதில்லை. உங்கள் அருகில் அமர்ந்ததைப் பார்த்தாலே மகிழ்ந்திருப்பார்'என்று நெஞ்சுருகிச் சொன்னேன்.

கடைசியாக அவர் இயங்க முடியாதபோது பார்த்தேன். சுபவீ பார்க்கவந்திருக்கிறார் என்று செல்வி அவர்கள் சொல்ல, என்னைத் திரும்பிப்பார்த்து லேசாகக் கையைப் பிடித்துக் கொண்டார். சிரித்தார். ‘அப்பாவோட கவிதை ஏதாச்சும் காதருகே சொல்லுங்க' என்றார் அங்கிருந்த தளபதி மு.க. ஸ்டாலின்.

ஓர்  இடைத்தேர்தலில் அதிமுகவிடம் திமுக தோற்றபோது கலைஞர் எழுதிய கவிதையை நான் சொன்னேன்:

‘ராமச்சந்திரன் வென்றான்

வாலி தோற்றான்

ஆனாலும் வரலாற்றில்

வாலிதானே நிற்பான்

இது துரோகம்தானே..

என்று செல்கிற கவிதை அது. புரிந்ததற்கு அடையாளமாக சிரித்துக்கொண்டார்.

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)