நடிகர் சிங்கம் புலி 
சிறப்புப்பக்கங்கள்

"எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கு... இன்னுமா பேர் வைக்கல?''

நடிகர் சிங்கம் புலி

சுந்தர்.சி சார்கிட்ட பல படங்கள் வேலை செஞ்சி முடிச்சி அடுத்து தனியா படம் டைரக்ட் பண்ணலாமுன்னு ட்ரை பண்ணிக்கிட்டிருந்த சமயம். இப்படி ஒரு செய்தி லேசா காத்துல கசிஞ்சாலே நம்ம கிட்ட அசிஸ்டெண்டா வேலை பாக்க மக்கள் குமிஞ்சிருவாங்களே அப்படி ஒரு ஏழெட்டுப் பேர் கொண்ட ‘ லாலா லாலல லாலலா’  குருப் தினமும் தேடி வந்து அப்பாயிண்ட் ஆகிக்கிட்டாங்க.

நான் காலைல கிளம்பி கதை சொல்லப்போயி சாயந்திரம் ரூமுக்குத் திரும்புறப்ப என்னோட அசிஸ்டெண்டுன்னு நம்பிக்கிட்டிருக்குற குரூப் கே.கே. நகர் பார்க்ல காத்திருப்பாங்க. அன்னைக்கு என்ன நடந்துதன்னு அப்டேட் குடுப்பேன். அப்புறம் கொஞ்சம் கதையடிச்சிட்டு பிரிஞ்சிடுவோம்.

அப்படி ஒரு நாள், அஜித் சாரைப் பாத்து கதை சொல்லப் போக அவர் , ‘நீங்க நேரா நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி சாரைப் பாத்து கதை சொல்லி ஓ.கே வாங்குங்க. அப்புறம் நான் கேக்குறேன்’னு சொல்லிட்டார். சிலபல நாட்கள் நடையாய் நடந்து ஒருவழியா சக்ரவர்த்தி சாரை மீட் பண்ணி ஒரு கதையை ஓ.கே. பண்ணி ‘ரெட்’ படம் மூவ் ஆகுற சமயம். திடீர்னு ஒரு நாள் என்னை உத்துப்பாத்தவர், ‘சிங்கம்புலிங்குற பேர் ஒரு டைரக்டருக்கு கெத்தா இல்ல. நான் உங்க பேரை மாத்தப்போறேன். அது என்ன பேர்னு ரெண்டு மூனு நாள்ல சொல்றேன்னுட்டார். எனக்கோ பேரதிர்ச்சி. ‘சார் இந்தப் பேர்ல பல படங்கள் உதவி, இணை இயக்குநரா வேலை செஞ்சிட்டேன். இப்ப மாத்துனா சரியா இருக்குமான்னு கேக்குறேன். அவர் தன்னோட முடிவை மாத்திக்கிறதா இல்லை. சர்தான் நம்மள நம்பி ஏழெட்டுக் கோடி செலவு பண்ணப்போறார். பேர்தான பிறகு பாத்துக்கலாம்னு ஓ.கே சொல்லிட்டேன்.

ரூமுக்குத் திரும்பி வந்து அசிஸ்டெண்டுகள்கிட்ட தகவலைச் சொன்னதும் ஒருத்தன், ‘சார் உடனே ஒரு அம்பது ரூபா குடுங்கன்னு வழிப்பறி பண்ணிட்டு மத்தவங்களைக் கூப்பிட்டு வேகமா வெளிய ஓடுறான். பத்து நிமிஷம் கழிச்சி, பூ, மலர், புஷ்பங்கள், தேங்காய் கொண்ட பூஜை தட்டோட திரும்பி வந்தவனுங்க, ‘வாங்க சார் உங்க புதுப் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடலாமுன்னு பக்கத்துல இருக்கிற அம்மன் கோயிலுக்கு கூப்பிடுறாங்க.   

“அடே இன்னும் பேர்தான் வைக்கலி

யேடா ?’’ -நானு

“அட வாங்க சார் வைக்கப்போற பேருக்கு இப்பவே அர்ச்சனை பண்ணிடலாம்” – அவனுங்க.

ஆறுக்கு அணை போடலாம். ஆர்வக் கோளாறுக்கு போட முடியுமா?

ஒருவழியா அசிஸ்டெண்டுகள் பட்டாளத்தோட அம்மன் கோயிலுக்கு என்ட்ரி.

“ அய்யரே எங்க சார் பேருக்கு ஒரு அர்ச்சனை’’

 “சாருக்கு இன்னும் பேர் வைக்கலை. அப்படி வைக்கப்போற பேர் நல்ல பேரா அமையணும்னு அர்ச்சனை பண்ணிடுங்க “

அய்யருக்கோ பெருங்குழப்பம். பக்கத்துல சாமி கும்பிட வந்திருக்க பெண்மணிகளோட, ‘எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கு இதுக்கு இன்னுமா பேர் வைக்கலை’ங்குற மைண்ட் வாய்ஸ் எனக்கு தெளிவா கேக்குது. வாட் டு டூ. மானங்கெட்டு பேசாம நிக்குறேன்.

அய்யருக்கு இன்னும் குழப்பம் தீரலை. ஒருத்தன் துணிஞ்சி அவர்கிட்ட போய், ‘அய்யரே ஓவரா கன்ஃபியூஸ் ஆகாதீங்க. உங்களுக்கு என்ன தோணுதோ அதன்படியே அர்ர்சனை பண்ணிடுங்க’ன்னு சொன்னவுடனே அய்யர், ‘ சாருக்கு நல்ல பேர் அமையணும் தாயே’ன்னு ஆரம்பிச்சி அடுத்து எங்களுக்கு எதுவும் புரிஞ்சிடாதபடிக்கு ஒரு பலத்த அர்ச்சனையைப் பண்ணி வெளியே அனுப்பி வச்சார்.

அடுத்த ரெண்டாவது நாள் என்னை நேர்ல வரவழைச்ச சக்ரவர்த்தி சார் ராம் சத்யான்னு பேர் வச்சார். சாயந்திரம் ரூமுக்குப் போய் அசிஸ்டெண்டுகள்கிட்ட விபரத்தைச் சொன்னதும் உடனே ஒருத்தன், ‘ சார் ஒரு அம்பது ரூபா குடுங்க. ராம் சத்யாங்குற பேருக்கு அர்ச்சனை பண்ணிடலாம்’னு பிட்டைப் போட்டான்.

“அடேய் முதல்நாள் ஷூட்டுங்ல பேட்டா தருவாங்க. அதுல அர்ச்சனை பண்ணிக்கோ. இப்ப கைவசம் நயா பைசா நஹிடா’ என்று அர்ச்சனைக்கு அணைபோட்டேன்.

காஞ்சி சங்கராச்சாரியாரும்

காஞ்சி்போன  உதவி இயக்குநர்களும்…

வருடம் ஞாபகமில்லை. உதவி இயக்குநராக இருந்த காலம். ஃபிலிம் சேம்பர்ல ஒரு ஃபெஸ்டிவல். ‘ஒயிட் ஹீட்’னு படம் பாத்து முடிக்கிறப்ப மணி ராத்திரி 11. நாங்க அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் ஆறு பேர். அதுல ரெண்டு பேர் இன்னைக்கு கோடிகள்ல சம்பளம் வாங்குறவங்க. ஆட்டோ புடிக்கலாம்னு பாத்தா 100 ரூபா கேக்குறாங்க. எங்க ஆறு பேர்கிட்ட மொத்தம் இருந்தேத 50 ரூபாதான். டிபன் சாப்பிடக்கூட பத்தாது. ஆக கே.கே.நகருக்கு நடராஜாக்களாகவே போகலாம்னு முடிவெடுத்து கிளம்பிட்டோம்.

எங்க ரூமுக்கு ஒரு தெரு முன்னால இருந்தது சரவணபவன் அண்ணாச்சி ஹோட்டல். அதை நெருங்குன சமயம் ஒரு இன்ப அதிர்ச்சி. எங்களை கிராஸ் பண்ணிப்போன ஒரு தெய்வம், ‘தம்பிங்களா அண்ணாச்சி இன்னைக்கு ஃப்ரியா சாப்பாடு போடுறார். போய் சாப்பிட்டுட்டுப் போங்க’ன்னு ஒரு தெய்வ வாக்கை வழங்கிட்டுப் போறார்.

‘அடடே வாட் எ ஸ்வீட் ட்விஸ்ட். மெல்ல சாப்பாட்டு டேபிளை நெருங்குனப்ப ஹோட்டல் ஊழியர் ஒருத்தர், ‘தம்பிங்களா சட்டையைக் கழட்டிட்டு வந்து சாப்பிடுங்க’ன்னு ஒரு இன்ஸ்ட்ரக்‌ஷன். நாங்கதான் கதையத் தவிர மத்த எல்லாத்துலயும் லாஜிக் தேடுறவங்களாச்சே? அந்த சட்டை கழட்டலுக்கும் இலவச சாப்பாட்டுக்கும் என்ன லாஜிக்னு விசாரிச்சப்ப, அண்ணாச்சியைப் பாக்க காஞ்சி சங்கராச்சாரியார் வந்திருக்காருன்னும், அவரு சார்பாதான் இந்த இலவச சாப்பாடுன்னும் வயிறு காஞ்ச ஆச்சார்யர்களான எங்களுக்குப் புரிஞ்சது.

அப்புறம் என்ன…தடபுடல் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டி, இருக்கிற காசுக்கு பகுமானமா சிகரெட்டை வாங்கிக் கொளுத்திட்டு ரூமுக்குக் கிளம்பினோம். ரூமுக்குள்ள நுழையிறப்ப முகத்துல பசி தாண்டவமாட ப்ளட்டி அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் 4 பேர் கதை பேசிக்கிட்டு இருக்கானுக. யாம் பெற்ற இலவச சாப்பாடு அவங்களுக்கும் கிடைக்கட்டுமேன்னு விபரத்தைச் சொன்னவுடனே வேகமா சட்டையைப் போட்டு கிளம்புனானுங்க.

‘தம்பிகளா தேவையில்லாம சட்டைகளை மாட்டிக்கிட்டு நேரத்தை வீணடிக்காதீங்க. சட்டை இல்லாம போனாத்தான் அங்க சாப்பாடே போடுறானுங்க. சீக்கிரமா கிளம்புங்க’ன்னவுடனே, லுங்கி, டவுசரோட பறந்தானுங்க.

அன்றைய தேதிக்கு எங்க பேர்ல பல அரிசிகள்ல பேரை எழுதி வச்ச இறைவன் அவனுகளை மறந்துட்டார்போல. பாவம் அவனுக போறதுக்குள்ள பந்து முடிஞ்சி போயி கடையவும் சாத்திட்டாங்க.

சோதனை அத்தோட முடியலை. ஏமாற்றத்தோட தெருவுல இறங்கி வந்துட்டிருந்தவனுங்களுக்கு எதிர்ல திடீர்னு போலீஸ் ஜீப். ‘என்ங்கடா இது நடு ராத்திரியில வெறும் உடம்போட திரியிறீங்க. அடுத்து உடம்புல எண்ணெய் தேய்ச்சிட்டு வீடு புகுந்து திருடுற ப்ளானா? கே.கே. நகர்ல கொஞ்ச நாளா ராத்திருட்டு ஜாஸ்தியாயிருச்சி. அந்த கும்பல் நீங்கதானான்னு போலீஸ் அவனுகளை ஜீப்ல அள்ளிட்டுப்போய், மறுநாள் காலைல கொண்டு வந்து, கொலைப் பட்டினியோட ரூம்ல இறக்கிவிட்ட கதையை வாழ்நாள் முழுக்க மறக்க முடியுமா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram