முதன் முதலில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் க்ளினிக்கல் வகுப்புக்களுக்குள் நாங்கள் நுழைந்திருந்த காலம் அது. வயிற்றுப்பகுதியைப் பரிசோதிப்பது குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஒரு பேராசிரியர்.
அப்போது அந்தப் பக்கமாக வந்த நபர் ஒருவரைக் கூப்பிட்டு எங்களிடம் காட்டி, 'Examine his abdomen' என்றார். அந்த நபரிடம் அவரின் உடல்நலம் பற்றி கேள்விகள் கேட்டோம், தனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை என்றார். பரிசோதனை செய்தோம்.. எங்கள் சிற்றறிவுக்கு எட்டிய வரை எந்தக் குறைபாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை, தொப்பை ஒன்றைத் தவிர. அதைச் சொன்னால் பேராசிரியர் திட்டுவாரோ என்ற எண்ணத்தில் சொல்லாமல் விட்டு விட்டோம்.
நாங்கள் திருதிருவென்று விழிப்பதைப் பார்த்த பேராசிரியர், it is a of EPND என்றார். அப்படி ஒரு வியாதியை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அப்போது கூகுள், விக்கிபீடியா எதுவும் கிடையாது என்பதால் கையிலிருந்த மருத்துவப் புத்தகங்களைப் புரட்டினோம். கண்டுபிடிக்க முடியவில்லை. பேராசிரியர் சென்றபின் அந்த நபரைப் பிடித்து, 'உங்க ரிப்போர்ட் இருந்தா குடுங்க.. உங்களுக்கு என்ன வியாதி?' என்று கேட்டோம். ‘நான் என் மச்சானுக்கு துணைக்கு வந்தவன்ங்க.. எனக்கு ஒண்ணுமே இல்லை' என்றார் அவர். ஹாஸ்டலுக்குத் திரும்பி, நடந்த விஷயங்களை எங்கள் சீனியர்களிடம் சொன்னோம், ‘ஹா ஹா! அந்த ப்ரொஃபசரா? குறும்புக்காரராச்சே அவர்.. "EPND னா Ever Pregnant Never Delivered" என்று அதற்கான முழு வடிவத்தைச் சொன்னார்கள்.
இப்போது பலர் அந்த சொல்லாடலை சகஜமாகக் கூறுவதைக் கேட்கிறேன். சமீபமாக தோழி ஒருத்தியின் பிரெக்னென்ஸி ஃபோட்டோஷூட்டில் கணவனின் தொப்பையைப் படம்பிடித்து உகNஈ என்று போட்டிருந்தார்கள். அதில் அவள் கணவர் சங்கோஜத்துடன் சிரித்துக்கொண்டிருந்தார்.
சொல்லப்போனால் உலகில் இன்று பலருடைய மனக்கவலைக்குரிய விஷயமாக இந்த EPND இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு.
நன்கு பரிச்சயமான பெண் நோயாளிகளை மேடிட்ட வயிறுடன் பார்க்கையில், 'போன தடவை பார்த்த போதும் வயிறு இதே மாதிரி இருந்துச்சே.. இன்னுமா குழந்தை பிறக்கல?' என்ற சந்தேகம் எனக்கு வந்ததுண்டு. சற்று நேரம் பேச்சுக் கொடுத்தால் வந்திருக்கும் பெண்ணும் அதையே சொல்வார், 'பிள்ளை பிறந்து ஒரு வயசு ஆச்சு இன்னும் வயிறு குறைய மாட்டேங்குது' என்று. அதிக உடல் எடையால் நடக்க, வேலை செய்ய சிரமப்படுவதையும், பின்னாளில் வேறு உடல் உபாதைகளால் அவதிப்படுவதையும் தாண்டி, பழைய உடைகள் பொருந்தாமல் போவதும், பழைய தோற்றத்தை இழப்பதும் பெண்களிடம் உளவியல் ரீதியாக அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தொப்பையுடன் அவதிப்படும் பல நடுத்தர வயதுப் பெண்கள், ‘டெலிவரி ஆன உடனே வயித்துல பெல்ட் போட சொன்னாங்க.. நான் போடாம விட்டுட்டேன். அதுதான் வயிறு விட்டுப் போச்சு' என்பார்கள். போதுமான உடற்பயிற்சி இல்லாததாலும் தவறான உணவுப் பழக்கத்தாலும் கொழுப்பு சேர்கிறது என்பதே நூற்றுக்கு நூறு சதம் உண்மை. வயிற்றின் சுற்றளவைக் குறைப்பதில் பெல்ட்டுக்கு மிகக் குறைந்த பங்கே இருக்கிறது.
தொப்பை ஏன் வருகிறது, அதாவது மற்ற உறுப்புகளை விட வயிற்றுப் பகுதியில் பலருக்கு ஏன் கொழுப்பு படிகிறது என்ற கேள்விக்கு மனித உடலின் ஒருசில இயக்கங்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உணவு பெரும்பாலும் சர்க்கரையாக மாறியே செரிமானம் ஆகிறது என்பது உங்களுக்குத் தெரியும். காலையில் நான்கைந்து இட்லிகள் சாப்பிட்டு விட்டு உடனடியாக வயலில் வியர்க்க விறுவிறுக்க வேலை பார்த்தீர்கள் என்றால் அந்த நான்கு இட்லிகளும் தந்த குளுக்கோஸ் உடனடியாக காலியாகிவிடும். அந்த சூழலில் தொப்பையை உருவாக்கும் இயக்கங்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் பொங்கல், வடை, சாம்பார், சட்னி என்று கலந்து கட்டி அடித்து விட்டு கணினியின் முன் போய் அமர்ந்து கொண்டால் உங்கள் உணவிலிருந்து வெளியேறிய குளுக்கோஸின் மேல் உங்கள் உடலின் இன்சுலின் வேலை செய்து அதைக் கொழுப்பாக மாற்றி, பிற்பாடு தேவைப்படும் என்ற எண்ணத்தில் உடலின் பல பகுதிகளில் சேமித்து வைக்கிறது.
பின்னாளில் என்றாவது உபயோகப் படுத்தப்படும் பட்சத்தில் அந்தக் கொழுப்புக்கள் கரைந்துவிடும். உடல் உழைப்பு இல்லாமல் தினமும் உணவை ஒன் வே ட்ராஃபிக்காக உள்ளே மட்டும் செலுத்திக் கொண்டே இருந்தால் கொழுப்பு உடலில் சேர்மானம் ஆகும் நிகழ்வுகள் மட்டும் நடைபெறுகின்றன, கரைவதில்லை. இந்த கொழுப்பை சேமிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வயிற்றுப் பகுதியின் மேல் தனி பிரியம் உண்டு. அதனால் கைகள், தொடைகள், இடுப்பு... இப்படி பல உறுப்புகளில் கொழுப்பு சேர நேர்ந்தாலும், வயிற்றுப் பகுதியில் அதிகமாகக் கொழுப்பு சேர்கிறது.
உணவின் மூலம் கிடைத்து, உடனடியாக ஆற்றலாக மாறாத க்ளூக்கோஸை 'பிக்கப்' செய்து தோலுக்கு அடியில் கொழுப்பாகப் படிய வைக்கும் 'டாக்சி டிரைவராக' இன்சுலின் செயல்படுகிறது. ஒவ்வொரு முறை அதிக இன்சுலின் சுரக்கும் போதும் இந்த பிக்கப்- டிராப் வேலை நடக்கிறது. நாம் உண்ணும் உணவின் தன்மையும் இன்சுலின் வெளியேற்றத்தைத் தீர்மானிக்கும். அதிக மாவுச்சத்து உள்ள பொருட்களை உட்கொண்டால் உடனடியாக அதிக இன்சுலினை நமது கணையம் வெளியேற்றும். காலை ஒன்பது மணிக்கு உணவு உண்கையில் ஒரு டோஸ், ஓரிரு மணி நேரம் கழித்து ஸ்வீட் காரம் காபி சாப்பிடுகையில் அடுத்த டோஸ் என்று நாளொன்றுக்கு பல இன்சுலின் 'Spikes' நிகழ்கின்றன. இதுவே அதிக புரதச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு அடங்கிய உணவுகளை உட்கொள்கையில் இன்சுலின் சுரப்பு குறைவாகவே நிகழும்; அதனால் கொழுப்பு சேரும் எதிர்வினையும் குறைவாக இருக்கும்.
பல ஹார்மோன்கள் சேர்ந்து கச்சேரி வாசிக்கும் நம் உடலில் இன்சுலினுடன் சேர்ந்து பக்க வாத்தியம் வாசிக்கும் இன்னொரு ஹார்மோன் அட்ரினலின். இதற்கு Stress hormone என்ற பொதுப்பெயரும் உண்டு. மனிதன் ஏதாவது ஒரு நெருக்கடியான தருணத்தை சந்திக்க நேர்கையில் அவன் உடலில் அட்ரினலின் அதிகளவில் சுரக்கிறது. ஆதி மனிதன் தன் உயிரை விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் பிடிக்கும் போதும், சக மனிதனுடன் உணவுக்காக சண்டை போடும் போதும் இந்த அட்ரினலின் ஹார்மோன்கள் தாராளமாக சுரந்தன. (இதை fight or flight reaction). அப்படி சுரந்த அட்ரினலின் கொழுப்பை சேமித்து வைத்திருக்கும் செல்களின் மேல் செயலாற்றி, உடனடியாக ஆற்றலை வெளியேற்றச் செய்தது. கற்கால மனிதன் ஓடியும், மரமேறியும், சண்டையிட்டும் அவன் உடலில் படிந்திருந்த கொழுப்பை குளுகோஸாக மாற்றிக் காலி செய்தான்.
ஆனால் இன்றைய உலகில் நாம் எதிர்கொள்வது உடல் ரீதியான நெருக்கடியை அல்ல. பணிச்சூழல், குறுகிய நேரத்திற்குள் நிறைய பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயங்கள், போட்டி நிறைந்த உலகில் பரபரப்பாக இயங்குவது இவைதான் இன்றைய மனிதன் சந்திக்கும் நெருக்கடிகள். அதே fight - fight எதிர்வினை காரணமாக இன்றைய மனிதனின் உடலிலும் அட்ரினலின் சுரக்கிறது; அதிகபட்ச அட்ரினலின் சுரப்பினால் செல்களிலிருந்து ஃப்ரீ ஃபேட்டி ஆசிட்கள் வெளியேறுகின்றன. உடல் உழைப்புக்கு உதவுவதற்காக வெளியேறிய FFAக்கள் வேலை இல்லாமல் சும்மா சுற்றிக் கொண்டிருக்க, அவற்றிற்கு வழி செய்கிறேன் பேர்வழி என்று கார்டிசால் என்ற ஹார்மோனை நம் அட்ரினல் சுரப்பி சுரந்து தள்ளுகிறது. சாதாரண நிலையில் உறக்கம், உணவு செரிமானம், இரத்த அழுத்த சமன்பாடு இவற்றை சீர் செய்வது இந்த கார்டிசால் தான்.
இரத்தத்தில் FFAக்கள் அதிகமாக இருக்கும் போது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து வெளியேறிய கொழுப்பையும் சேர்த்து வயிற்றுப் பகுதியை நோக்கி கார்டிசால் அனுப்பி வைக்கிறது. உடல் இயக்கத்தைப் பொருத்தவரை கார்டிசால் ஒரு மிகச்சிறந்த வேலைக்காரன். அதன் பணித்திறமை காரணமாக தொப்பை திவ்யமாக வளர்கிறது.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் 'டாக்டர், ஆனால் நான் காலையில் சாப்பிடுறதே இல்லையே.. மொத்தமா மத்தியானம் தான் சாதம் சாப்பிடுவேன்.. நடுவுல ஒன்னு ரெண்டு டீ குடிப்பேன், அப்புறம் ஏன் தொப்பை வருது?' என்கின்றனர் சில இல்லத்தரசிகள். அந்தப் பழக்கத்தால் தான் உங்களுக்கு தொப்பை அதிகமாக வளர்கிறது என்பேன் நான். ஏனென்றால் 8 மணிக்கு கொடுக்க வேண்டிய உணவை நீங்கள் 9 மணிக்கு கொடுத்தால் கூடப் பரவாயில்லை, ஒரேடியாக 12 மணிக்கும் ஒரு மணிக்கும் உணவு கொடுத்தீர்கள் என்றால், நம் உடலில் வேறு சில செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்து நீங்கள் சாப்பிட்ட உணவை ஆற்றலுக்கு பயன்படுத்தாமல் கொழுப்பாக மாற்றி சேமித்து கொள்ளும். இதுவும் ஆதிகாலத்திலிருந்து உடலில் இருக்கும் ஒரு எதிர்வினை தான். காலநிலை மாற்றம், பஞ்சம் போன்ற நேரங்களில் உணவு கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருப்பதால் கிடைக்கும் உணவை விரயமாக்காமல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உடலின் வெளிப்பாடு தான் அது. பாலைவனத்தில் வசிக்கும் ஒட்டகங்களுக்கு திமில் இருப்பது இந்தக் காரணத்தினால் தான். உடலுழைப்பு, பஞ்சம் இந்த இரண்டையும் அவ்வளவாக பார்த்தறியாத இந்த தலைமுறைக்கும் ஆதிகாலத்து உடல் இயக்கங்கள் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுவதன் ஒரு பக்க விளைவே அதிகரித்து வரும் உடல் எடை ஏற்றம்.
நவீன மருத்துவம் பிள்ளைப் பேற்றுக்குப் பிறகான காலத்தில் சுகப்பிரசவம் என்றால் 15 நாட்களிலும், அறுவைச்சிகிச்சை என்றால் 30 நாட்களிலும் உடற்பயிற்சிகளைத் தொடங்கலாம் என்கிறது. எல்லா விஷயங்களிலும் மக்கள் நவீனத்தை ஏற்றுக் கொண்டாலும் பிரசவம், பேறுகால பின் கவனிப்பு போன்ற விஷயங்களில் மட்டும் பாட்டிமார்களும் பக்கத்து வீட்டு, எதிர்த்த வீட்டு ஆன்ட்டிகளும் சொல்லும் அறிவுரைகளைத் தான் கேட்கின்றனர். பிள்ளை பிறந்த உடனே வேலை செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் பெரும்பாலான நேரம் ஓய்வில் இருப்பதாலும், பால் கொடுப்பதற்கென தேவையற்ற கலோரிகளை உள்ளே தள்ளுவதாலும் எடை ஏற்றமும் தொப்பை விழுதலும் நிகழ்கிறது. பின்னாளில், இதன் விளைவாக அறுவை சிகிச்சை செய்த தழும்பில் குடலிறக்கம் (incisional hernia) ஏற்படலாம். தொப்புள் பகுதியிலும் குடலிறக்கம் நேரலாம் (Umbilical hernia). உடலின் நடுப்பகுதியில் சேரும் கொழுப்பின் காரணமாக (truncal obesity) சர்க்கரை நோய், இதய நோய் இவை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
கருவுற்ற காலம், அதற்குப் பின்னான தாய்ப்பாலூட்டும் காலம் இரண்டிலும் உடல் பாசிட்டிவ் நைட்ரஜன் பேலன்ஸில் இருக்கும். அதாவது சக்தியை விரயமாக்காமல் சேர்த்து வைக்கவே முயலும். அந்த நேரத்தில் எங்கெங்கு கொழுப்பு சேர வாய்ப்புள்ளது என்பதை அனுமானித்து அதற்கான உடற்பயிற்சிகளையும் சீரான உணவுகளையும் உட்கொண்டால் தொப்பை வருவதை எளிதில் தடுக்கலாம். மாதவிடாய் நேரத்தில் சிலருக்கு ஒட்டுமொத்தமாக எடை அதிகரிக்கா விட்டாலும் வயிற்றுப் பகுதியில் மட்டும் எடை அதிகரிப்பதை கவனித்திருப்பீர்கள். ஈஸ்ட்ரஜன் சுரப்பு குறைவதால் இது நிகழ்கிறது. இதற்கும் குறிப்பிட்ட உணவு முறைகள், தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனையுடன் ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி இவை உதவலாம்.
இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் உடலின் மற்ற பகுதிகளைவிட, உடற்பயிற்சியால் எளிதாக குறைந்துவிடக்கூடியது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பு தான்.
மற்ற எல்லா தொற்றா நோய்களையும் போல இந்த பிரச்சனையிலும் மரபணு போன்ற Non modifiable risk ஐ மாற்றுவது நம் கையில் இல்லை. Stress Sugar ஆகிய இரண்டு 'S'களை அண்ட விடாமல் விரட்டினால் என்றும் சிக்ஸ் பேக் தான்!
ஜூன், 2022