சிறப்புப்பக்கங்கள்

எல்லாரும் ஃப்ராடுப் பசங்க!

அராத்து

ஃபேஸ்புக்கில் அவ்வப்போது இன்பாக்ஸ் சென்று பார்ப்பதுண்டு. ஒரு நாள் ஒரு நீண்ட மெசேஜ், ஒரு பெண் அனுப்பியிருந்தார். என் புத்தகங்கள், என் போஸ்டை எல்லாம் சுருக்கமாக சிலாகித்து எழுதப்பட்டு இருந்தது. எழுத்தாளனின் கொடூர வீக்நெஸ் இது. தன் எழுத்தைப்பற்றி யாரேனும் ஏதேனும் எழுதி இருந்தால் வீழ்ந்து விடுவான். அனைத்து ஆன்லைன் ஜீவராசிகளும் செய்வது போல நானும் அந்த பெண்ணின் ப்ரொஃபைல் சென்று பார்த்தேன். வழக்கத்துக்கு மாறாக நல்ல அழகுடனும், அருமையான டிரஸ்ஸிங் சென்ஸ் உடனும், அதை விட ஆச்சரியகரமாக ஸ்லிம்மாக சிக் என்று இருந்தார்.

மும்பையில் இருக்கிறார். லாயர்.

லாயர் என்றதும் கொஞ்சம் ஜெர்க் ஆனது. நாம் எந்த சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைச் செய்யவில்லை என்றாலும், பழக (!) நினைக்கும் பெண்கள் லாயர், போலீஸ் என்றால் ஏனோ ஜெர்க் ஆகிறது. இது ஒருவித ஆண்களின் ஜெனிடிக் பிரச்னையாக இருக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து பொதுவாக சில நாட்கள் அவ்வப்போது பேசிக்கொண்டு இருந்தோம்.

திடீரென்று ஒரு நாள், நான் இப்ப எங்க இருக்கேன் சொல்லுங்க என ஒரு மெசேஜ். தொடர்ந்த உரையாடலில் “மும்பை ஏர்போர்ட்'' என பதிலளித்தார். சென்னை வருவதாகச் சொன்னார். என்னை பார்ப்பதற்குதான் வருவதாகவும் சொன்னதால் எனக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாக இருந்தது.

இதுக்காக வரணுமா? வேற வேலயா சென்னை வர்ரப்ப சந்திச்சா போதாதா என்றெல்லாம் நான் பேசி முடிப்பதற்குள் விமானம் கிளம்பி விட்டது. சென்னை அமேதிஸ்டில் சந்திக்க முடிவாகிச் சென்றேன்.

நேரில் பார்த்ததும் எனக்கு கொஞ்சம் புஸ் என்று ஆனது. போட்டோவுக்கும், நேரில் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம். எப்படி இருந்தால் என்ன? நல்ல வாசகர், தோழிதானே என சமாதானப் படுத்திக்கொண்டு கை கொடுக்கப் போனேன். மேல் நாட்டு நாகரீகப்படி மெல்ல அணைத்தார். அவர் போட்டிருந்த அதீத மேக்கப்பால என் மனம் ஏற்கனவே கொஞ்சம் எதிர்ப்புணர்வு கொண்டிருந்தது. இப்போது அவர் போட்டிருக்கும் அளவுக்கதிகமன பர்ஃப்யூம் கொஞ்சம் கடுப்பேற்றியது.

சம்பிரதாயமாக கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து விட்டு, “எங்க வீடு'' என்றார் .

“கிண்டிங்க” என்றேன் .

“இந்தங்க, நொங்க எல்லாம் வேணாம். வா போன்னு சொல்லு'' என்றார்.

“வா போ'' என மொக்கையாக ஜோக் அடித்தேன்.

“ஹாஹ்ஹா தட் ஈஸ் அராத்து'' என சிலாகித்தார்.

“ஸ்விம்மிங் பூல்லாம் நீயே மெயிண்டெயின் பண்றியா'' என்றார்.

“எந்த ஸ்விம்மிங் ஃபூல்? நான் ஏன் மெயிண்டெயின் பண்ணனும்''

“ சாரி, போர் அடிக்கறேன் இல்ல, ஹார்லீலயா வந்த?”

“இல்ல கார்லதான் வந்தேன், ஏன்?”

“ஹார்லீல வந்திருந்தா, ஜாலியா ஈசிஆர் ல ஜாலியா ஒரு ரவுண்ட் போயிருக்கலாம்” என்றவர் “சரி, எனக்கு ஓக்கே …நேர்ல பாத்துட்டு சொல்லலாம்னுதான் வந்தேன். எனக்கும் இந்த லவ், ரிலேஷன்ஷிப், கல்யாணத்துல எல்லாம் நம்பிக்க இல்ல. லிவ் இன் தான் பெஸ்ட். ஆனா அதுல ஹானஸ்டா இருக்கணும். எனக்கு உங்கிட்ட புடிச்சது என்ன தெரியுமா? உன் ரைட்டிங்க விட ரியல் லைஃப்லயும் எவனப் பத்தியும் கவலப்படாம போல்டா, பேசற, எழுதற …அதான்'' என்றார்.

எனக்கு லைட்டாக உறைக்க ஆரம்பித்து இருந்தது.

“எவன் இப்டி ஓப்பனா எழுதுவான். எனக்கு உங்கூட கம்பானியன்ஷிப் ஓக்கே. நான் மெட்றாஸுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துடறேன்”

இப்போது எனக்கு எல்லாம் தெளிவானது.

நான் மாதம் இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறேன். சென்னையில் தனி வீடு, லான் + குட்டி ஸ்விம்மிங்க் பூல் வசதியுடன் உள்ளது. தனியாக வசிக்கிறேன். 2 கார்கள் மற்றும் ஒரு ஹார்லீ டேவிசன் உள்ளன.

எனக்கு திருமண உறவுகளில் நம்பிக்கை இல்லை. எமோஷனல் / செண்டிமெண்ட் அட்டாச்மெண்ட்கள் எரிச்சலையே தருகின்றன.

இருக்கும் ஒரு வாழ்கையை ஜாலியாக, சுதந்திரமாக வாழ ஆசைப் படுகிறேன்.

எனக்கு 25 - 29 வயதிற்குள், 55 கிலோவிற்குள் க்யூட்டான பெண் கம்பேனியன் தேவை. பழைய வாழ்கையைப் பற்றி கவலையில்லை. இருவருக்குள்ளும் எந்த விதிகளும் தேவையில்லை. பிடிக்கவில்லையெனில் அடுத்த கணமே விலகிக்க்கொள்ளலாம்.

வேர்ல்ட் டிராவல் செய்ய பிடித்தமான பெண்ணாக இருந்தால் நல்லது. குடும்பத் தொந்தரவுகள் இல்லாமல், நன்கு சம்பாதித்துக்கொண்டு இருக்கும் பெண்ணே என் தேர்வு.

இன்பாக்ஸ் செய்யுங்கள் ! காஃபி ஷாப்பிலோ, பப்பிலோ சந்தித்து மேற்கொண்டு பேசலாம். சியர்ஸ்!

-----------------------

விரைவில் மின்னம்பலத்தில் உயிர் மெய் - 2 ! விரிவான கேன்வாஸில் விரைவில் சந்திக்கிறேன் - அராத்து.

இப்படி ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் ஏழெட்டு வருடங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன். இதை ஒரு ஃபேஸ்புக் பதிவாக நினைத்துப் படித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

மின்னம்பலம் என்ற இணையப்பத்திரிகையில் உயிர் மெய் என்றொரு தொடர் எழுதிக்கொண்டு இருந்தேன். முதல் பாகம் முடிந்ததும், சிறிது இடைவெளி விட்டேன். இரண்டாம் பாகம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு டீஸர் போல இந்தப் பதிவைப் பகிர்ந்தேன். இதைப்படித்து விட்டுத்தான் இந்த அம்மணி நான் எனக்காக எழுதிய பதிவாக நினைத்துக்கொண்டு கிளம்பி வந்திருக்கிறார்.

அந்தப் பதிவுக்கு வந்த கமெண்டிலும் சிலர் இவர் போன்றே புரிந்துகொண்டு கமெண்ட் இட்டிருந்தனர். இவ்வளவுதான் நம் ஆட்களின் கம்யூனிகேஷன் ஸ்கில் மற்றும் புத்திசாலித்தனம். இதைப்போன்ற மண்ணாந்தைகளோடுதான் நாம் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறோம்.

நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி,

“இல்லீங்க, அந்த போஸ்ட் என்னோட உயிர் மெய் நாவல் ரெண்டாம் பாகத்துக்கான டீஸர். அதுலயே கடைசி லைன்ல தெளிவா போட்டிருக்கேனே'' என்றேன்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவருடைய மேக்கப் ஒழுகி ஊற்ற ஆரம்பித்து இருந்தது. அவரது ஏமாற்றத்தை அவரால் மறைக்கவே முடியவில்லை. எனக்கும் அவரை எப்படித் தேற்றுவது என்றே தெரியவில்லை.

கொஞ்ச நேரம் கடுப்பாக இருந்தவர்,

“இவனுங்க எல்லாமே இப்டித்தான். லவ் பண்ணவனும் அப்டித்தான். கல்யாணம் கட்னவனும் அப்டித்தான். சரி, கம்பேனியன்ஷிப் ஓக்கேவா இருக்கும்னு வந்தா அதுவும் இப்டித்தான். எல்லாரும் ஃப்ராடுப் பசங்க'' என்றார்.

எனக்கு நான் என்னம்மா பண்ணேன், நான் ஒண்ணுமே பண்ணலையே என்றிருந்தது.ஆனாலும் என்னை நானே லைட்டாக ஃபிராடு, ஏமாற்றுக்காரன் என நம்பும்படி ஆக்கிக்கொண்டிருந்தன அவருடைய முக பாவங்களும் செயல்பாடுகளும்.

ஏமாற்றத்தில் இருப்பவரிடம் ஏதும் எதிர்ப்பேச்சு பேச வேண்டாம் என அமைதியாக இருந்தேன்.

பில் வந்தது. நான் தான் கொடுத்தேன் !

இருவரும் எழுந்துகொண்டோம்.

“நாளைக்கிதான் போறேன். செண்ட் ஆஃப் பண்ணவாச்சும் வறியா?” என்றார்.

“வரேன்” எனக்கூறி விடை பெற்றேன்.

ஆனால் போகவில்லை.

அடுத்த நாள் இரவு மெசேஜ் வந்தது.

“நீ வர மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா நீயும் ஒரு சீட்டர்,

 ஃபிராடுதான் “

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram