சிறப்புப்பக்கங்கள்

தமிழ்நாட்டில் தலித் அரசியல் கொலைகள்

பேரா.ஸ்டாலின் ராஜாங்கம்

பொதுவாக சாதி வன்முறை என்பதை ஒரு சமூகக் குழுவின் மீது நடைபெறுவதாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு குழுவை பிரதிபலிக்கும் அல்லது ஒரு குழுவின் அடையாளத்தோடு தொடர்பு கொண்டிருக்கும் தலைமையானவர்களை தாக்குவது -கொலை செய்வது என்பதும் கூட அதில் அடங்கும். குழுவிற்கு தலைமையேற்போரில் இரண்டு வகையுண்டு. ஒருவர் நிலவும் அரசியல் அதிகாரத்தோடு தொடர்பிலிருந்து இயங்குபவர். மற்றொருவர் உள்ளூர் என்னும் வட்டத்தோடு நின்று விடுபவர். இன்றைய நவீன அரசியல் சொல்லாடல்கள் பெரும்பாலும் இரண்டாம் வகையிலிருப்பவர்களை பேசுவதில்லை.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டு தலைவராயிருந்த கே. ஆம்ஸ்ட்ராங் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அது தலைநகரை மட்டுமல்ல தமிழகத்தை உலுக்கிய கொலையாக மாறியிருக்கிறது. தொடக்கத்தில் முன்விரோத கொலை போல கருதப்பட்ட அதில் வெவ்வேறு அரசியல் கட்சிக்காரர்களுக்கும் தொடர்பிருப்பது தெரியவரும் போது பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆம்ஸ்ட்ராங் தேசிய அளவிலான தலித் இயக்கமொன்றின் தலைவராக இருந்தார் என்பது மட்டுமல்ல சென்னை வாழ் தலித்துகள் பலரின் (சிலவேளைகளில் கட்சிகளை கடந்தும்) மதிப்பை பெற்றவராகவும் இருந்தார். இந்த மதிப்பே அவர் கொலையை அரசியல் சாயலோடு பார்ப்பதற்கு காரணமாக்கியிருக்கிறது. இவ்வாறு மக்களின் மதிப்பு பெற்ற தலைவர்கள் மீது அரசதிகாரமும் ஊடகங்களும் குற்றப்பின்னணியைக் காட்ட முயன்றாலும் மக்கள் அதைப் பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. சொல்லப்படும் ‘குற்றத்தை'கூட அவர்கள் குற்றமாகவே பார்ப்பதில்லை. இது போன்ற தலைவர்கள் அரசோடு கொண்டிருந்த தொடர்பைக் காட்டிலும் மக்களோடு கொண்டிருந்த நெருக்கம் அதிகம். இவர்கள் தேசம் / மாநிலம் தழுவிய பெரிய அரசியல் பிரச்சினைகளை விடவும் அன்றாடத்தோடு தொடர்புடைய சிறிய பிரச்சினைகளை பேசியவர்களாக இருப்பார்கள். இப்பிரச்னைகள் பெரும்பாலும் உள்ளூர் அளவிலானவை. எனவே உள்ளூர் பிரச்னைக்கேயுரிய சண்டை சாடிகளோடு இணைய வேண்டியவர்களாக இருந்து விடுகிறார்கள். இதனாலேயே ‘வெளியே'இருப்பவர்களுக்குத் தெரிவதைக் காட்டிலும் உள்ளூர் மக்களுக்கு தெரிந்தவர்களாக இருந்து விடுகிறார்கள். இவ்விடத்தில் அவர்கள் மீது அரசும் ஊடகங்களும் தரும் அர்த்தங்களிலிருந்து விலகி தங்களுடைய உள்ளூர் அனுபவத்திலிருந்து வேறோர் அர்த்தத்தை தருகிறார்கள். இந்நிலையில் தான் தமிழகத்தில் இது போன்று நடந்த சில படுகொலைகளை உடனடியாக தொகுத்துப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டு சமூக வரலாற்றில் இன்றுவரையிலும் தொடருகின்ற விளைவுகளை ஏற்படுத்திய படுகொலை என்று சுதந்திரத்திற்கு பிறகு 1957 ஆம் ஆண்டு நடந்த இம்மானுவேல் சேகரனின் படுகொலையை குறிப்பிடலாம். ராணுவத்திலிருந்து திரும்பியிருந்த இம்மானுவேல் சேகரன் அதன் வழி பெற்றிருந்த நவீன சீர்திருத்தவாத எண்ணங்களை தாம் வாழ்ந்த பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டார கிராமங்களில் பரப்ப எண்ணினார். எனவே அவர் தேவேந்திரர்களின் வட்டாரத் தலைவர் போன்ற இடத்தை அடைகிறார். அம்மக்கள் சிறுசிறு ஆனால் இன்றியமையாத பிரச்சினைகளுக்காக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தட்ட உதவுகிறார். அவர் கொலையுண்ட காரணம், கொலையாளிகள் பற்றி இன்றைக்கு இருதரப்பிலும் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன என்றாலும், ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்வி தான் அவர் கொலையுண்டதற்கு முதன்மை காரணமாகியிருக்கிறது. முதுகுளத்தூர் பகுதியில் நிலவி வந்த சமூக மோதல்களைத் தடுக்க சமூக தலைவர்களின் பெயர்களிட்ட பிரசுரங்களை வெளியிடுவது என்று மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்த போது தேவேந்திரர்களின் பிரதிநிதியாக ‘புதியவரான' இம்மானுவேல் சேகரன் வருகிறார். அன்றிரவு தான் அவர் படுகொலை செய்யப்படுகிறார். அக்கூட்டத்தில் அவர் அங்கீகரிக்கப்பட்ட சாதித் தலைவர்களுக்கு முன்னால் கால்மேல் கால் போட்டதால் தான் படுகொலை செய்யப்பட்டார் என்ற வழக்காறும் மக்களிடையே பரவலாக இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களிலும் இருப்பது ‘மீறலும் பிரதிநிதித்துவமும்’ தான். இம்மானுவேல் படுகொலைக்குப் பிறகு உருவானது தான் முதுகுளத்தூர் கலவரம். இன்றைக்கு இம்மானுவேல் தென் தமிழக ஒடுக்கப்பட்ட வர்களின் குறியீடு ஆகியிருக்கிறார்.

சங்காரன் என்ற பெயரில் இதழ் நடத்தியவரும், சென்னைவாழ் கைரிக்க்ஷா ஓட்டுவோர் நல சங்கத் தலைவருமாக இருந்தவர் ஆரிய சங்காரன். 1950, 60களில் சென்னைவாழ் தலித்துகளின் முக்கியமான தலைவராக வலம் வந்தவர் இவர். 1973 ஆம் ஆண்டு திடீரென ஒரு விபத்தில் இவர் இறந்தார். சென்னையில் பெரும் கூட்டம் கலந்துகொண்ட இறுதி ஊர்வலங்களில் ஒன்றாக அது அமைந்தது. அந்த விபத்து பற்றி பெரும் சந்தேகம் எழுப்பப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடந்தே பங்கேற்ற எம்ஜிஆர் கூட விபத்து பற்றிய சந்தேகத்தை எழுப்பினார்.

1968, 1978 ஆகிய பத்தாண்டு இடைவெளிகளில் கீழ்வெண்மணியில் 44 பேரும், விழுப்புரத்தில் 13 பேரும் கொல்லப்பட்டனர். விழுப்புரத்தில் பிந்தைய நாட்களில் உள்ளூர் தலைமைகளாக இருந்த ஜோதிலிங்கம், லோகநாதன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

1979 ஆம் ஆண்டு இன்றைய சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் கோயில் குதிரை எடுப்பு மறுப்புக்கு எதிரான போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவை சமூக வன்முறைகள். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் கட்சியாகவும், தனியாகவும் ஆவேசம் கொள்ள இச்சூழல் உந்தியது. 1970 களிலிருந்தே தேவகோட்டை பகுதியில் நிலவிய நாடு கட்டமைப்பு என்னும் சாதியக் கட்டுப்பாட்டு அமைப்பை எதிர்த்து CPIML லிபரேஷன் கட்சி வெகுஜன அளவில் போராடி வந்தது. மாடக்கோட்டை சுப்பு அந்த அமைப்பின் செயற்பாட்டாளராயிருந்து போராடி வந்தார். 1994 ஆம் ஆண்டு வழக்கொன்றில் ஜாமீன் பெற்று வெளிவந்திருந்த போது கூலிப்படைகளால் அவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

1987 ஆம் ஆண்டு மதுரை மேலூருக்கருகில் வஞ்சி நகரம் என்னும் கிராமத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக போராடிய கந்தன் என்ற இளைஞர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். ஊரின் நடுவில் ஒரு கல்லை நட்டு அதில் அவர் உருவத்தை வரைந்து நடுகல் போல இன்றும் மக்கள் அவரை வணங்கி வருகிறார்கள். அவர் ஆதிக்க வகுப்பினருக்கு இணையாக கல்குவாரி ஏலத்தில் ஈடுபட்டவர் என்பது கொலைக்கான காரணங்களில் முக்கிய தரவாகிறது. இவரின் படுகொலைக்கு எதிராக அப்போது உருவாகியிருந்த தலித் பேந்தர் ஆப் இந்தியா (DPI) அமைப்பின் அமைப்பாளர் மலைச்சாமி தலைமையில் மிகப்பெரிய பேரணி ஒன்று மேலூரில் நடைபெற்றது. இத்தகைய கந்தனை போற்றும் வழக்காற்று பாடல் இன்றும் அவ்வூரில் பாடப்பட்டு வருகிறது.

1990களில் வன்முறைகள் வேகமெடுத்தன. அப்போதெழுந்த புதியவகை தலித் அமைப்புகளுக்கு இவை எதிர்வினையாக எழுந்தன என்பதோடு, தலித் அமைப்புகள் உருவாக வேண்டியதற்கான நியாயத்தையும் இந்த வன்முறைகள் கட்டமைத்தன. 1992 ஆம் ஆண்டு மதுரை மேலூர் அருகேயுள்ள சென்னகரம்பட்டியில் கோயில் நிலத்தை குத்தகை கேட்ட அம்மாசி, வேலு ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1997 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்கள் என்பதற்காக முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக தலைநகரில் தலித் அமைப்புகள் பெரும் பேரணியை ஒருங்கிணைத்தன. மேலவளவு தியாகிகளை அரசியல் உரிமை போராளிகள் என்றழைத்து ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 1990 களில் சாதி வன்முறைகளை ஒட்டி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செயற்பாடுகள் பரவலாயின. வன்முறைக்கு எதிரான திருமாவளவனின் ஆவேசமான பேச்சுகளும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலும் அவர்கள் மீதும் "ரவுடிகள், வன்முறையாளர்கள் " என்கிற முத்திரைகளை குத்த ஏதுவாயிருந்தன. அக்கட்சியின் கிடைமட்ட தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டனர்.  பின்னாள்களில் அக்கட்சி தேர்தல் அரசியலுக்கும் வந்தது. அக்கட்சி போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் (2001) திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார். அதற்கடுத்த மாதமே கட்சியின் பொருளாளர் மதுரை முடக்காத்தான் பாண்டியன் வெட்டிக் கொல்லப்பட்டார். தொடர்ந்து உள்ளூர்ச் செயற்பாடுகள் சார்ந்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சேட்டு, தமிழினியன் போன்றோர் கூலிக்கும்பல்களால் வெட்டப்பட்டனர். தலித் தலைவர்களும் கூட அத்தகு தாக்குதல்களிலிருந்து தப்பிய வரலாறு இருக்கிறது.

தென் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜான்பாண்டியனும், பசுபதி பாண்டியனும் பல்வேறு விமர்சனங்களைக் கடந்து அந்தந்த பகுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடையாளங்களாக பார்க்கப்பட்டனர். இதில் பசுபதி பாண்டியன் கொலைக்கு முன்பும் பின்பும் பழிவாங்கல் கொலைகள் நடந்தன. 2006 இல் அவரைக் கொல்ல முயன்று அவர் மனைவி ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் அவரே கொல்லப்பட்டார். பழிவாங்கல் கொலைகளாக மாறியிருந்தாலும் இதன் தொடக்கம் 1990 ஆம் ஆண்டு தூத்துக்குடி புல்லாவெளி கிராம உப்பளத் தொழிலாளர்களுக்குப் பரிந்து பேச போய் நாளடைவில் சாதி மோதலாக மாறியதென்பதுதான்.

இதேபோல 2017 ஆம் ஆண்டு சிவகங்கை வேம்பத்தூர் முருகன் என்பவர் ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். 2006 முதல் 2011 வரை வேம்பத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்த போது ஏற்பட்ட விரோதம் காரணமாக முதலில் அவரின் தம்பி கொல்லப்பட்டார். ஆறுமுறை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த முருகன் ஏழாவது முறை கொல்லப்பட்டார். திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயற்பாட்டாளராக இருந்த ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அண்மையில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளராக அறியப்பட்ட தீபக்ராஜா கொல்லப்பட்டார்.

இக்கொலைகள் சார்ந்த வழக்குகளில் வெகுசில தவிர மற்றவற்றில் குற்றவாளிகள் ஜாமீன் பெற்றனர் அல்லது விடுதலை பெற்றனர். அரசு முறையாக இத்தகைய வழக்குகளை கையாண்டதில்லை. சில கொலைகள் பழிக்கு பழி என்று மாறிவிட்டன. இக்கொலைகளில் அரசியல் உரிமை கோருதல்களும், சில வேளைகளில் குற்றப் பின்னணியும் செயற்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றை அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆகியவை சாதி என்னும் ஓர்மையை நீக்கி பார்க்கவில்லை.

இவற்றையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டோர் சார்பில் இறந்தோர், மக்களின் நன்மதிப்பை பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதை அவர்களுக்கு நடந்த இறுதி ஊர்வலங்கள் காட்டுகின்றன. தீபக்ராஜாவின் இறுதி ஊர்வலம் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு 14 மணி நேரம் நடந்தது. ஆம்ஸ்ட்ராங்கின் ஊர்வலம் மாலையில் தொடங்கி நடுநிசிவரை தொடர்ந்தது. இந்த விவரங்கள் எல்லாம் கவனத்திற்கு வந்தவை மட்டுமே. இன்னும் நிறைய உண்டு. அதேபோல மக்கள் தங்கள் புரிதலுக்கேற்ப நினைவு கூர்கின்றனர் என்பதையும் பார்க்கிறோம்.

குற்றப் பின்னணி கொண்டவர்கள் எல்லா சமூகங்களிலும் இருக்கிறார்கள். ஆனால் அவற்றிலிருந்து அப்படியே நகர்ந்து அடுத்தடுத்த நிலையில் ‘மதிக்கத்தக்க' இடத்தை அடைந்து விடுகின்றனர். அவ்வாறு அடைவோரில் பெரும்பாலானோருக்கு சாதி அடையாளம் உதவியிருப்பதைப் பார்க்கலாம். இந்த வாய்ப்பு ஒடுக்கப்பட்டோருக்குக் கிடைப்பது அரிதினும் அரிது. இங்கு தவறுகளும் குற்றங்களும் பிரச்சினையில்லை. ஆனால் யாருடைய குற்றம் - தவறு மட்டும் சொல்லப்படுகிறது, பிரச்சினையாக்கப்படுகிறது என்பதை அறிவது முக்கியம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram