சிறப்புப்பக்கங்கள்

நெருக்கடிகளைத் தாங்கும் உறுதி வேண்டும்!

மாலன்

புலனாய்வு இதழியல் மூன்று விதங்களில் செய்யப்படுகிறது எனலாம். வெறும் ஆவணங்கள் அடிப்படையில் நடத்தப்படும் புலனாய்வு ஒருவகை. இரண்டாவது ஸ்டிங் ஆபரேஷன்கள் மூலம் செய்யப்படுவது.

மூன்றாவது நமக்குக் கிடைக்கும் லேசான தகவல்களைப் பின் தொடர்ந்து புலனாய்வு செய்து வெளியிடுவது.

1989 - ல் இந்தியா டுடே தமிழில் வெளியானபோது அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்த நான் முதல் இதழிலேயே ஆவணங்கள் அடிப்படையிலான புலனாய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டேன். அது எம்ஜிஆர் எழுதிய உயில் படி நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்பது. என் சி ராகவாச்சாரி என்ற வழக்கறிஞர்தான் எம்ஜிஆரின் உயிலை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர். சில விஷயங்களை சரிபார்த்துக்கொள்வதற்காக அவரிடம் பேட்டி எடுத்தோம். பல தகவல்கள் புதிதாகக் கிடைத்தன. ஆற்காடு சாலையில் இருக்கும் எம்ஜிஆர் வீடு நினைவகமாக உள்ளது. அங்கே அவரை பலர் சந்தித்திருக்கிறார்கள். எனக்கே கூட அவரை அங்கே சந்தித்த அனுபவம் உண்டு. ஆனால் அந்த வீடு அவர் பெயரில் இல்லை. வருமான வரி சோதனையின் போது அவர் அவ்வீட்டை ஜானகி அவர்களுக்கு விற்றுள்ளார் என்ற தகவல் கிடைத்தது. இதுபற்றிய விரிவான கட்டுரை முரசொலியில் வெளியாகி இருந்தது.  அதற்கான ஆவணங்களைத் தேடியது எளிதாக இருந்தது. ஏனெனில் எம்ஜிஆர் அன்றைக்கு சமகாலத்து தலைவராக இருந்தார். ஆனால் இன்னும் பழைய விஷயங்கள் என்றால் மிகவும் சிரமமாக இருந்திருக்கும். ராஜிவ் காந்தி இறந்தபோது கொலையாளிகள் யார் என்பது பற்றிய புலனாய்வுகளை வெளியிட்டோம்,. அதை டெல்லியில் இருந்த செய்தியாளர்கள் சிபிஐயில் கிடைத்த தகவல்களை ஆராய்ந்து எழுதினர்.

 ஒரு புலனாய்வுக் கட்டுரை வெற்றிகரமாக அமையவேண்டுமென்றால் அது செய்தியில் இல்லாத விஷயமாக அமையவேண்டும் என்று நினைக்கிறேன். எம்ஜிஆர் உயிலைப்பற்றி எழுதியபோது அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றிய புகழாஞ்சலிகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் அவர் காதுகேளாதார் பள்ளிக்கு நிலம் கொடுக்கிறேன் என்று சொன்னாரே அது நிறைவேறியதா என்ற சாதாரண கேள்வி தோன்றி அதைப்பற்றி விசாரித்தோம். இது அப்போது யாரும் பேசாத விஷயமாக இருந்தது. செய்திகளில் அடிபடும் விஷயங்களைப் பின் தொடர்ந்து புலனாய்வு செய்கிறபோது செய்திக்கான ஆதாரங்கள் போதாமை, பத்திரிகையின் டெட்லைன் அழுத்தங்கள் ஆகியவற்றால் அது சரியாக அமையாமல் போவதும் உண்டு.

நான் ப்ளோரிடாவில் இதழியல் படித்தபோது ஒரு நீதிபதியைப் பற்றி விசாரித்து ஒரு கட்டுரை எழுதுமாறு எனக்குப் பணிக்கப்பட்டது. ஆனால் நான் இந்த ஊருக்குப் புதியவன். இதெல்லாம் ஆகாது என்று சொல்லிப்பார்த்தேன். ஆனால் என் பேராசிரியர், உன் பத்திரிகை உன்னை இங்கே வேலைக்கு அனுப்பி இருந்தால் என்ன செய்வாய்? என்று கேட்டு அந்த கட்டுரையை எழுதவைத்தார். இதற்காக ஆவணங்களை ஆராய்ந்து அந்த நீதிபதி பற்றிய கட்டுரைகளை எழுதினேன். அவர் வேலைபார்த்த அலுவலகத்திலேயே அவர் பற்றிய ஆவணங்களைப் பார்க்க அனுமதித்தது பெரிய ஆச்சரியம். ஆனால் இந்தியாவில் அதெல்லாம் மிகச்சிரமம். அரசு ஆவணக்காப்பங்களிலேயே கூட அணுகுதல் சிரமமாக இருக்கும்.

இப்போதெல்லாம் தகவலறியும் உரிமைச்சட்டம் வந்திருக்கிறது. ஆனாலும் முழுமையான தகவல்களைப் பெறமுடியுமா என்றால் கேள்விக்குறிதான். நான் புதிய தலைமுறையில் பணியாற்றியபோது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறவர்கள் எவ்வளவு பேருக்கு தண்டனை அளித்திருக்கிறீர்கள் என இச்சட்டம் மூலம் கேட்டேன். எங்களிடம் அந்த  தகவல் இல்லை என சம்பந்தப்பட்ட துறை சொன்னது. மேல்முறையீடு செய்தேன். அப்போது சுமார் 30 மாவட்ட அலுவலகங்களின் முகவரிகளை அளித்து அங்கே போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்கள். இதையும் ஏற்றுக்கொள்ளாமல் மேல்முறையீடு செய்தபோது எனக்கு தகவல் ஆணையம்  விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. எதற்காக இந்த தகவல் உங்களுக்குத் தேவை என்று கேட்டார்கள். நான் கட்டுரை எழுதவேண்டும் என்று பதில் சொன்னேன். இருதரப்பையும் விசாரித்துவிட்டு தகவல்களை அளியுங்கள் என்று உத்தரவு போட்டார்கள். மூன்று வாரங்கள் கழிந்தபின்னர் சில புத்தகங்களை ப்ளாஸ்டிக் கயிறால் கட்டி அலுவலகத்தில் கொடுத்துவிட்டுச் சென்றனர். அவற்றைத் தேடி நாம்தான் தகவல்களை எடுத்துக்கொள்ளவேண்டுமாம்!

 இதுபோலத்தான் தகவலறியும் சட்டம் நம் ஊரில் உள்ளது. அரசுக்கு அசௌகரியமான விஷயங்களை அதன்மூலம் நாம் கேட்டறிந்துவிட முடியாது.

இப்போது புலனாய்வு இதழியல் என்ற பெயரில் அவதூறு பரப்பும் விஷயங்களும் நடக்கின்றன என்றும் சொல்லவேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு நிர்மலாதேவி விவகாரத்தில் வெளியாகும் வாக்குமூலங்கள். புலனாய்வு இதழியலை பரபரப்புக்காகப் பயன்படுத்தும்போது அது கூர்மையை இழக்கிறது.

தமிழில் தராசு, ஜூவி, நக்கீரன் போன்ற பல பத்திரிகைகள் அரசியல் புலனாய்வு இதழ்களாக உருவெடுத்தன. அதற்கு நம் மக்களின் அரசியல் மயப்படுத்தப்பட்ட தன்மைதான் காரணம். கடுமையான இயற்கை சீற்றங்களின்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல்தான் பேசுகிறார்கள். அத்துடன் வதந்திகள் மீது நமக்கு தனி ஆர்வம் உள்ளது. நம்மிடம் எதையோ மறைக்கிறார்கள் என்ற எண்ணம் மக்களிடம் உண்டு. அதற்குச் சரியான காரணங்களும் உண்டு. ஏனெனில் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ மக்களால் அணுகமுடியாத இடத்தில்தான் இருந்தார்கள். அமைச்சர்களிடம்கூட இண்டர்காம் மூலமாகத்தான் பேசியதாகச் சொல்வார்கள்.

குமுதத்தில் பணியாற்றியபோது சசிகலா& ஜெயலலிதா ஆகியோர் நகைகளை அணிந்து போஸ் கொடுத்த போட்டோ கிடைத்தது. அதை வெளியிட்டபோது பெரும் பரபரப்பு உண்டானது. நம்பகமான ஓர் இடத்திலிருந்து அந்த படம் கிடைத்தாலும் அதை சரிபார்த்துதான் வெளியிட்டோம். அச்சமயம் ஜெயலலிதா சிறையில் இருந்தார். அவரது இல்லத்துக்குச் சென்று பார்த்து பல விஷயங்களைச் சரிபார்த்துத்தான் வெளியிட்டோம்.

இந்தியா டுடேவில் ஜெயலலிதா அவர்களின் ஹைதராபாத் திராட்சைத்தோட்டத்தைப் படம் எடுத்து வெளியிட்டோம். அதற்கு மிரட்டல்கள் வந்தன. என் வீட்டுக்கு போலீஸ் காவல்கூடப் போடப்பட்டது. அரசு தரப்பில் இருந்துகூட சில சமயங்களில் தகவல்கள் கிடைக்கும். ஆனால் அவற்றை அப்படியே வெளியிடமுடியாது. சரிபார்க்கவேண்டும்.

புலனாய்வு இதழியலைத் தொடர்ந்து மேற்கொள்ள நெருக்கடிகளைத்தாங்கும் உறுதி வேண்டும். இதற்கு உதாரணம் நக்கீரன் இதழ். அவர்கள் எல்லா அரசுகளிடம் இருந்தும் நெருக்கடிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்கொண்டனர். அரசியல்வாதிகளிடமிருந்து மட்டுமல்ல, அதிகாரிகளிடமிருந்தும் கூட. இதைத் தாக்குப் பிடித்து உச்சநீதிமன்றம் வரை சென்று பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்யும் முக்கியமான ஒரு தீர்ப்பை (ஆட்டோ சங்கர் வழக்கில்) வாங்கிவந்தார்கள். ஆனால் எத்தனை பேரால் நக்கீரன்போல் இவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பது கேள்விக்குறி.

 (நம் செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

டிசம்பர், 2018.