ராஜா, பட்டிமன்றப் பேச்சாளர் 
சிறப்புப்பக்கங்கள்

அவர உள்ளே விடுங்கய்யா!

ராஜா, பட்டிமன்ற பேச்சாளர்

இது நடந்தது 1994 அல்லது 95 ஆக இருக்கலாம். மதுரை வடக்கு மாசி வீதியில் பொங்கல் விழா. அதை நடத்தியவர்கள் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள். வீதியில் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் மேடையை மிக உயரமாக போட்டிருந்தார்கள். பேச்சாளர்கள் எல்லாம் மேடை ஏறிவிட்டார்கள். நான் கடைசியாக ஏறுகிறேன். அங்கு பயில்வான் மாதிரி நின்றிருந்த இருவர்,’படிச்சவங்கலாம் மேலே போறாங்க… நீ எங்கய்யா போற… ஓரமா நில்லுய்யா…’ என தடுத்து நிறுத்திவிட்டார்கள். கீழிருந்து கத்தினால் அசிங்கமாகிவிடும்  என நினைத்து நான் கத்தவில்லை. நான் கீழே இருப்பதை யதார்த்தமாக பார்த்துவிட்ட சாலமன் பாப்பையா, ‘ஏ… நீயென்னபா கீழே நிக்குற’ என மைக்கில்  அழைத்தார். ’என்னை ஏறவிடமாட்டுறாங்கய்யா’ன்னு’ கத்தினேன்.  ‘ஏய்… அவர உள்ளே விடுங்கய்யா… அவரும் ஒரு பேச்சாளர்யா’ என்றார்.

நான் படி ஏறும்போது என்னைத் தடுத்த ஆள், ஏற இறங்க பார்த்தார். அதுக்கு என்னத்தெரியுமா அர்த்தம்? ‘நீயெல்லாம் பேசி... நாங்க கேட்கணும்னு தலையெழுத்தா’ என்பதுதான். மேடையில் போய் உட்கார்ந்ததே பெரிய பாடு.

தொலைக்காட்சியில் முகம் காட்டிய பிறகு இந்த நிலை, வேறொன்றாக மாறியது. பொது இடங்களுக்கு செல்லும்போது செல்போனில் செல்ஃபி எடுக்கும் தொந்தரவு வந்துவிட்டது. ஒருமுறை பாண்டியன் எக்ஸ்பிரசில் மதுரையிலிருந்து சென்னை வந்து கொண்டிருக்கிறேன். இரவு பதினோரு மணி இருக்கும். பாத்ரூம் போய்விட்டு வந்து தூங்கலாம் என்று பாத்ரூம் போனேன். கடமையை முடித்துவிட்டு கதவைத் திறக்கிறேன், ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். உற்றுப் பார்த்தவர், ‘நீங்க என்ன சார் இங்கிருந்து வர்றீங்க...?’ என்றவர் என்னைத் தூங்கப்போகவிடாமல், அவசர அவசரமாக அவர் மனைவிக்கு கால் பண்ணிக் கொடுத்தார். நான் ஹலோ என்றதும், ‘ஏன் இப்படி நடுராத்திரியில கால் பண்ணி தொந்தரவு பண்றீங்கனு’ கத்தினாங்க. யார் பேசுறாங்கனுகூட சொல்லாத மனுஷன், அந்தம்மாவைத் திட்டித்தீர்த்தார். நான் கிளம்புறேனு சொன்னதும், ஒரேயொரு செல்ஃபி எடுத்துக்குறேன் என்றார். முகத்தோடு முகம் வைத்து செல்ஃபி எடுக்கும்போது ரயில் ஆடிவிட்டது. போட்டோ சரியாக வராததால், மீண்டும் எடுத்தார்.

யப்பாடா ஆளவிட்டா போதும்டா சாமினு கிளம்புறேன், ’சார்.... ஒரே ஒரு கேள்வி உங்க பெயர் என்ன சார்?’ என்றார்.

பட்டிமன்றம் ராஜா, சொற்பொழிவாளர்