சிறப்புப்பக்கங்கள்

ஆற்காடு மக்கன்பேடா!

தா.பிரகாஷ்

பாலாற்றின் கரையில் இருக்கும் ஆற்காடு, நவாப்களின் தலைநகரமாக இருந்தது. பிரியாணிக்குப் புகழ்பெற்ற இந்த நகரம் மக்கன் பேடா என்னும் இனிப்புப் பண்டத்துக்கும் பெயர் பெற்றது. இருநூறு வருடம் பாரம்பரியம் கொண்ட மக்கன்பேடாவின் பிறப்பு ஆற்காடேதான்.

“என்னுடைய கொள்ளுத்தாத்தா வேலு நாயக்கர், மிகப்பெரிய சமையல் கலைஞர். இங்குள்ள செட்டியார், முதலியார், இஸ்லாமியர் வீட்டு விஷேசங்கள் என்றால் தாத்தாவின் சமையல்தான் இருக்கும். அவரை ஸ்வீட் செய்வதற்காகவே இஸ்லாமியர்கள் அழைத்து செல்வார்களாம்! அப்படி ஒருமுறை ஓர் இஸ்லாமியர் வீட்டில் அவர் செய்து கொடுத்த புதிய ஸ்வீட்டை சாப்பிட்டவர்கள், அந்த இனிப்பு தொண்டைக்குள் வெண்ணெய் போல நயமாக இறங்கியதால் அதை ‘மக்கன் பேடா’ என்று அழைத்திருக்கிறார்கள்’ என்கிறார் ஆற்காடு புதிய மிட்டாய் கடை உரிமையாளர் ராஜா.

”ஆற்காடு வந்த ஆங்கிலேயர்கள் பாதாம், முந்திரி, திராட்சை போன்ற பொருட்களை தாத்தாவிடம் கொடுத்து, புதுசா எதாவது ஸ்வீட் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அவரும் குளோப் ஜாமூன் செய்து, அதன் மீது இந்தப் பொருட்களைத் தூவிவிட்டிருக்கிறார். எதிர்பார்த்த மாதிரி ஸ்வீட் வரவில்லை. தொடர்ந்து புதிய ஸ்வீட் தயாரிப்பதில் ஆர்வம் காட்டிய தாத்தாவுக்கு அந்த இஸ்லாமியர் வீட்டு விஷேசம் திருப்புமுனையாக அமைந்தது.

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் பழமையான மக்கன் பேடாவை இப்போது எப்படி செய்கிறோம் என்றால், பாதாம், முந்திரி, திராட்சை, அத்திப்பழம், பேரீட்சை, வெள்ளரி விதை, சாரா பருப்பு, தர்பூசணி விதை, உலர் பழங்கள், குங்கும பூ, ஜாதிக்காய், ஏலக்காய், ஜாதிபத்திரி இவற்றையெல்லாம் சம அளவில் எடுத்துக்கொண்டு பால்கோவா, மைதா, சோடா மாவு, வனஸ்பதி சேர்த்து நெய்யில் பக்குவமாக பிசைந்து எண்ணெய்யில் சிவக்க வறுத்தெடுப்போம்.

பின்னர், சர்க்கரைப் பாகில் பத்து மணி நேரம் ஊற வைப்போம். இப்படிச் செய்தால் மக்கன் பேடா ஒரிஜினல் டேஸ்ட் கிடைக்கும். மக்கன் பேடாவில் சேர்க்கப்படும் பொருட்கள் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடலாம். நிறைய மூலப்பொருட்கள் அடங்கிய ஒரே ஸ்வீட் மக்கன் பேடாதான். இப்போது மக்கள் இனிப்பைக் குறைவாகக் கேட்பதால் டிரை மக்கன் பேடா தயாரிக்கிறோம்.

எங்கள் கடையில், மலாய் கஜா, மக்கன் பேடா, டிரை மக்கன் பேடாதான் பேமஸ். ஐந்து நாள் வரை வைத்து சாப்பிடலாம். ஒரு கிலோ ரூ.420. பத்து பீஸ் வரும்.

ஆற்காட்டுக்கு யார் வந்தாலும் மக்கன் பேடா சாப்பிடாமல் போகமாட்டார்கள். பெரியார், ராஜீவ்காந்தி தொடங்கி இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் வரை மக்கன் பேடாவை விரும்பி சாப்பிட்டுவருகிறார்கள்.

தாத்தாவை தொடர்ந்து அப்பா இனிப்பு கடை நடத்தினார். அவரைத் தொடர்ந்து இப்போது நானும் என் தம்பியும் கடை நடத்துகிறோம். அடுத்த ஆண்டுக்குப்பிறகு கூடுதலாகக் கடைகள் திறக்கலாம் என்று இருக்கிறோம்.

ஆற்காட்டின் அடையாளமாக மக்கன் பேடா இருப்பது எங்களுக்கு ரொம்ப பெருமை!’ என்கிறார் ராஜா.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram