சிறப்புப்பக்கங்கள்

அனல்மேலே பனித்துளி: என் உடல் என் ஆயுதம்!

ஜெ.தீபலட்சுமி

இந்தப் படத்துக்கு ஏன் இந்த தலைப்பு என்று சிந்தித்தேன். அப்படி நொடியில் கரையக்கூடிய பல பிரச்னைகளைச் சமூகம் மிகக் கொடூரமாய்ப் பெண்கள் தலையில் சுமத்தி வைத்திருக்கிறது. பெண் சக்தி சுட்டெரிக்கத் தொடங்கினால் அவர்களை அழுத்தும் பல பிரச்னைகள் பனி போல் விலகிவிடக் கூடும் என்று புரிந்து கொள்கிறேன்.

ஆண்ட்ரியா முக்கியப் பாத்திரமேற்று இருக்கும் இப்படத்தில் பெண்ணியத்தின் பல நுட்பங்கள் அழகாகப் பேசப்பட்டிருக்கின்றன.

பெண் நவநாகரிக உடையணிவதும் வண்டியோட்டுவதும் மேலாளர் பதவியில் இருப்பதும் மண்டையில் அடிப்பது போல் ஒரு வியப்பூட்டும் செயலாகக் காட்டிய படங்களைப் போலல்லாது மிக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரமான ஒரு பெண் என்றால் எப்போதும் ஆண்களுடன் மல்லுக்கு நிற்பாள், வெறுப்பாள் என்றில்லாமல் அவளுக்குக் காதல் திருமணம் மீதெல்லாம் இயல்பான ஆசைகளும் இருக்கும் என்று காண்பித்ததற்கே இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

கொடூரமான அந்த வன்புணர்வுக்கு ஆளான பின்பான காவல் நிலையக் காட்சிகள் படத்தின் பெரிய மைனஸ். திரைக்கதையில் லாஜிக் ஓட்டைகளும் ஆண்ட்ரியாவின் நடிப்பில் போதாமையும் படத்தை வலுவிழக்கச் செய்தன. இருந்தாலும் அதிலிருந்து மீண்டபின்பு மீண்டும் ஆண்ட்ரியாவின் பாத்திரம் செழுமையுறுகிறது.

நல்ல புரிதலும் அன்பும் உள்ள காதலன் அவளுக்குப் பக்கத்துணையாய் இருக்கிறேன் என்று கூறிய போதும், அவனிடம் முழுதும் சாய்ந்து விடாமல் அவனுக்குத் தைரியம் கூறி அனுப்பி வைப்பது அழகான இடம். அந்த விபத்து அவளது சுயத்தைப் பாதித்து விடவில்லை என்ற அளவில் அவள் எவ்வளவு வலிமையானவள் என்பதை உணர முடிந்தது.

பாலியல் வன்முறை என்பதைத் தாண்டி இது வரை எந்தப் படமும் பேசாத வகையில் உணர்வு ரீதியான அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்துப் பேசி இருப்பது தான் இப்படத்தின் பலம்.

சக்கைப் போடு போட்ட திருஷ்யம் படத்தின் அடிநாதமே மகளின் நிர்வாண வீடியோவை எடுத்தவன் அதை வைத்து மிரட்டுவதும் தாய் அவனைக் கை கூப்பிக் கெஞ்சுவதும் பின்பு கையறு நிலையில் அவனைக் கொலை செய்து விடுவதும் தான்.

லென்ஸ், எந்திரன் போன்ற படங்களும் கூட பெண்ணின் நிர்வாணம் அவளது உயிரைக் குடிக்கும் அளவுக்கு அச்சுறுத்தலானது என்கிற பிற்போக்குத்தனமான கருத்தை விதைத்துச் சென்றன.

அதற்கெல்லாம் சாட்டையடி கொடுப்பது போல் இப்படத்தில் ஆண்ட்ரியாவின் பாத்திரம் அந்த வீடியோ குறித்துத் துணிச்சலுடன் புகார் கொடுப்பதும், “என் உடலை எப்படி எனக்கே எதிரான ஆயுதமாக்க முடியும்? என் உடல் எனக்குத் தான் ஆயுதமாய் இருக்க வேண்டும்' என்று சொல்வதும் அரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பிக் கொண்டாட வேண்டிய காட்சி. தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை யாரும் நினைத்துப் பார்க்காத கட்டங்களை இந்த ஒரு காட்சி, வசனத்தின் மூலம் இயக்குநர் சப்தமில்லாமல் தாண்டி விட்டார்.

சிறு வயது முதல் எவ்வாறு பெண் குழந்தைகளுக்குத் தங்கள் உடல் குறித்த தேவையற்ற வெட்க உணர்ச்சியும் அச்சமும் படிப்படியாக விதைக்கப்படுகின்றன என்பதை ஒரு பாடலில் காட்சிப் படுத்தி இருப்பது சிறப்பு. ஆண்ட்ரியாவின் திரையுலகப் பயணத்தில் அனல் மேலே பனித்துளி அழகான மயிலிறகு என்பதில் ஐயமில்லை.

மார்ச், 2023