கோவை சத்யன் 
சிறப்புப்பக்கங்கள்

மக்களைப் பேச வைப்பேன்!

அ.தி.மு.க

Staff Writer

கோவை சத்யன்

‘இந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் பிரச்சாரத்தின் திசையைத் தீர்மானிக்கும். இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடும், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வரக்கூடிய அறிவிப்புகளும்தான் பிரச்சாரக் களத்தில் பேசுபொருளாக இருக்கும்' என நம்பிக்கையோடு சொல்கிறார், அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன்.

1996ஆம் ஆண்டில் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க.வில் சேர்ந்தவர் இவர். அப்போதிருந்தே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர தொண்டன் நான் என்கிறார்.

அரசியல் குடும்பமாக இருந்தாலும், இவரின் அரசியல் நுழைவு கார்ப்பரேட் பக்கம் போய் திரும்பி வந்ததுதான்.

‘பேனாசோனிக் நிறுவனத்தின் இந்திய மார்க் கெட்டிங் ஹெட்டாக இருந்தேன். வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் ஏர்போர்ட்டிலேயே போகிறது என்று நினைத்து, தனியாக ஒரு ஐ.டி. ஸ்டார்ட் - அப் தொடங்கினேன். 2014ஆம் ஆண்டு குளோபல் ஸ்டார்ட் - அப் போட்டி ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. அதில் இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே நிறுவனம் என்னுடையது. ஏழாவது இடம் வந்தது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. ஐ.டி.விங்கில் பொறுப்பு கொடுத்தார்கள்,' என்கிறார்.

பத்து ஆண்டுகள் கட்சியில் பணியாற்றியவருக்கு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொஞ்சம் களேபரமும் ஆகியிருக்கிறது.

செங்கல்பட்டில் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரம். முடிந்த அளவுக்கு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்றபடி இருந்திருக்கிறார்கள். இவர்களின் பிரச்சார வேன் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு முட்டு சந்து... வலப் பக்கம் திரும்ப வேண்டும்... திரும்பிப் பார்த்தால் தெருவின் எதிர்முனையில் தி.மு.க.வினர்... இந்தப் பக்கம் ஒரு முந்நூறு பேர், அந்தப் பக்கம் முந்நூறு பேர். நேருக்கு நேராக!

“பெரும் பதற்றம். யாராவது ஒருவர் வழிவிட் டால்தான், மற்றவர்கள் கடந்து போக முடியும். நான் இறங்கி முன்னால் ஓடிப்போய் தொண்டர்களைச் சமாதானப்படுத்தினேன். கொஞ்சம் விட்டிருந்தால் கைகலப்பு ஏற்பட்டு பிரச்னை ஆகியிருக்கும்.' என்றவர், 2019 மக்களவைத் தேர்தலில் வாணியம்பாடி பக்கத்தில் ஒரு கிராமத்தில் வேறொரு சம்பவத்தை எதிர்கொண்ட கதையையும் சொல்கிறார்.

‘வேனிலிருந்து பிரச்சாரம் செய்துகொண்டிருந்தோம். ஊர் மக்கள் எல்லாரும் பேசுவதைக் கேட் டுக்கொண்டிருந்தாகள். திடீரென கூட்டத்திலிருந்த ஒருவர் 'நான் பேசணும்னு' கத்த ஆரம்பித்துவிட் டார். பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம், அவர் தி.மு.க.காரராக இருக்கலாம். கூட்டத்தைக் கெடுத்துவிடப் போகிறார்' என்று சொன்னார்கள். நான் அவரை அழைத்து,ப் பேசவைத்தேன். பேசத் தொடங்கியவர், ‘எல்லாம் பொய் சொல்றாங்க. தனியார் வங்கி நகைக் கடனைத் தள்ளுபடி செய்றதா சொல்றாங்க. அதெப்படி முடியும்? இதைப் பேசாம, நீங்க வேற எதையோ பேசிட்டு இருக்கீங்க'னார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்துவிட் டது. 'கைகால்ல இருப்பதையெல்லாம் கழட்டி வைங்க. அடுத்த நம்ம ஆட்சிதான், தள்ளுபடி செய்யப்படும்'னு உதயநிதி பேசியதைச் சொல்லி விமர்சித்தார். அவர் பேசியது எங்களுக்கு ஆதரவான கருத்துதான் என்பதால் என் பதற்றம் தணிந்தது. பெண்களுக்கும் அதைத் தெரியப்படுத்த வேண்டும் என பேசினேன்,' என விவரிக்கிறார், கோவை சத்யன்.

பிரச்சாரத்துக்குப் போகும்முன் தலைவர்களின் வழிகாட்டுதல்களைத் தெரிந்துகொள்வது, சத்யனின் வழக்கமாம். தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமான விஷயம் என்ன? போகக்கூடிய பகுதிக்கான அறிவிப்பு என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பேன் என்கிறார்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் பரப்புரை சேலத்தில் நடைபெற்றது. அப்போது பேனர் வைப்பதில் கடுமையான போட்டி ஏற்பட, ‘அம்மா வருக வெல்க' என எழுபது அடிக்கு சத்யன் பேனர் வைத்துள்ளார். அதன் பிறகு பேனர் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை என்கிறார்.

“நீ என்னடா பெரிய வரலாறு பேசுற' என கட்சிக் காரர்களிலேயே திட்டியவர்களும் உண்டாம்.

அதேசமயம், மூத்த கட்சி நிர்வாகிகளே, “எப்படிங்க நீங்க இயக்கத்தோடு வரலாறு எல்லாம் இப்படி தெளிவாப்பேசுறீங்க' என வியக்கவும் செய்திருக்கிறார்கள்.

‘நான் எப்போது பிரச்சாரத்துக்கு சென்றாலும் மக்களை முதலில் பேச வைப்பேன். பேசுவதற்கு பதிலாக உரையாடலாக பிரச்சாரத்தை எடுத்துச் செல்வேன். வாகனப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் போன்றவைதான் மக்களிடம் நம்மைக் கொண்டுசெல்லும். நூறு நூற்றைம்பது பேரிடம் நாம் சொல்லும் விஷயம் சென்றுசேர்ந்தால் பெரிய மாற்றம் வரும்,' என்பது கோவை சத்யனின் நம்பிக்கை. 

குடும்பத்தில் ஒருவராக நடத்துகிறார்கள்!

சசிரேகா

நான் கல்லூரி படிக்கும் சமயத்திலிருந்தே அ.தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளேன். என்னுடைய முதல் வாக்கே இரட்டை இலைக்குத்தான் செலுத்தினேன். அது இன்று வரை தொடர்கிறது.

அ.தி.மு.க.வில் பேச்சாளர் ஆவதற்கு முன்னர், ஜெயா டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். நான் ஆர்.கே.நகரில் இருந்ததால் அங்கு ஜெயலலிதா அம்மா போட்டியிட் டபோது பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.

செய்தி வாசிப்பாளராக இருந்ததால் கட்சியின் சார்பில் நட்சத்திர பேச்சாளராக கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தேன். அதற்கான வாய்ப்பு ஜெயலலிதா ஏற்படுத்திக் கொடுத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு ஆண்டுகளாகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். வருடத்தின் பெரும்பாலான நாள்கள் பொதுக் கூட்டம், பிரச்சாரம் என சென்று கொண்டிருக்கிறேன். இப்போது கூட சேலம், கோயம்புத்தூர் சென்று வந்தேன். இன்று வேலூரில் இருக்கிறேன். இந்த வாரம் முழுக்க பிரச்சாரம் இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கின்ற பாதுகாப்பு உணர்வு, கட்சியினரிடமும் இருக்கிறது.

நாங்குநேரி சட்டப்பேரவைத் தேர்தலின்போது நெல்லையில் வாடகை வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் அம்மா, நான் தனியாக இருப்பதை பார்த்து, “நீங்க வேணும்னா கீழே வாங்க...

இல்லனா நான் மேலே வரேன்' என்றதோடு, “தேர்தல் முடிந்து போகிற வரை எங்க வீட்லதான் சாப்பிடணும்' என்றார். அவங்களுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். என் துணியை துவைத்து தருவதாகச் சொன்னார்கள். குடும்ப உறுப்பினராகவே என்னை நடத்தினார்கள். அந்த இடைத்தேர்தலுக்குப் போனது மறக்கவே முடியாது.

அதேமாதிரி, வாணியம்பாடிக்கு ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இஸ்லாமியர், அவர் வீட்டில் தங்கி ஓய்வு எடுப்பதுக்கு என்னை வலுக்கட் டாயமாக அழைத்துச் சென்றார். அவர் வீட்டில் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்து, ஓய்வு எடுக்க வைத்தார். மாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுப்பி, டீ, பிரியாணி எல்லாம் கொடுத்தார்கள். அசைவம் சாப்பிட மாட்டேன். இருந்தாலும் அவர்களின் அன்பிற்காக அன்று கொஞ்சம் பிரியாணி சாப்பிட்டேன். இன்று வரை அந்த குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

அம்மாவின் கொள்கையை அப்படியே மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோவை தொண்டாமுத்தூரிலிருந்து ஒரு சகோதரி பேசினார். அவருக்கு திக்குவாய் இருந்ததாகவும், என்னுடைய தொலைக்காட்சி விவாதத்தையும், நான் பேசுவதையும் பார்த்து, நல்லா பேச ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்.

இப்போதைக்கு நான் முழு நேர அரசியல்வாதி. என்னுடைய தொழில் வழக்கறிஞர் பணி. அதையும் சேவையாகவே பார்க்கிறேன்.

(தொகுப்பு: தா. பிரகாஷ்)