சிறப்புப்பக்கங்கள்

அது முந்திரியா? திராட்சையா?

சென்பாலன்

தமிழ்நாட்டு மக்களுக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து பத்து கிலோமீட்டரில் “நார்த் இண்டியா” ஆரம்பித்துவிடும். வடக்கு நண்பர்களுக்கோ ஈரோடும் சரி, தூத்துக்குடியும் சரி அது மதராஸ் தான். இந்த இரு தரப்புக்குமே வளைகுடா நாடுகள் எதுவாகினும் ‘துபாய்’ தான். அப்படி துபாய்க்கு தொடர்பே இல்லாத, ஆனால் இந்திய மக்களால் துபாய் என அழைக்கப்படும் ஒரு புறநகரத்தின் தொழிலாளர் குடியிருப்பில் நடந்த நிகழ்வு இது.

“லேபர் கேம்ப்” எனப்படும் தொழிலாளர் குடியிருப்பு என்பது ஊருக்கு வெளியே பெரிய கட்டுமானங்கள், வேலைகள் நடைபெறும் போது, அங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் தங்குவதற்காக தற்காலிக அறைகளை வைத்து உருவாக்கப்படும் ஒரு பெரிய சைஸ் சேவல் பண்ணை. அங்கு அனைத்து இந்திய மாநில மக்களையும் காணலாம். சில இடங்களில் பாகிஸ்தான், பங்களாதேஷ், அரிதாக பிலிப்பினோ மக்களும் கூட உண்டு. (இங்கு மக்கள் என்று எழுதினாலும் ஆண்கள் எனப் புரிந்து கொள்ளுங்கள்.)

இத்தனை மக்கள் இருந்தாலும் மொழி ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. ஆனால் நிச்சயம் சிறிய பிரச்சனையாக இருக்கும். மலையாளிகள் அனைத்து மொழிகளையும் மலையாளத்தில் பேசும் திறன் பெற்றவர்கள் என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை. அதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை தமிழர்கள். தர்த் என்றால் வலி என அறிந்து கொண்ட தமிழர், தனக்கு கழுத்து வலிக்கிறது என்பதை “கழுத்து கா தர்த் ஹே” என வடக்கிந்திய நண்பரிடம் விளக்கியதைக் கேட்டு சற்று மிரண்டு தான் போனேன்.

தமிழில் அவதி என்றால் தொல்லை, மலையாளத்திலோ அவதி என்றால் விடுமுறை. “நாள அவதியல்லோ” என மகிழ்ச்சியுடன் கூறிய மலையாள அறை நண்பரிடம் “லீவ் அன்னைக்கு நான் ரூம்ல இருந்தா உனக்கு என்னடா அவதி, பேப்பயலே” என சண்டைக்கு ஏறிய மதுரைக்காரர் நமக்கு வேண்டப்பட்டவர் தான்.

இந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்லும் போது பாஸ்போர்ட் இல்லாமல் கூட விமானத்தில் ஏறிவிட முடியும். ஆனால் கோடாரி தைலம் இல்லாமல் செல்ல முடியாது. முன்னரெல்லாம் பேரிச்சம்பழமும் செண்ட் பாட்டிலும் எதிர்பார்த்த உறவினர்கள் இப்போதெல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரி என அப்டேட் ஆகிவிட்டனர்.

ஊருக்குச் செல்லும் முன் கடைசி நேர கொள்முதலில் ஈடுபட்டிருந்த வேலூர்க்கார நண்பர் ஒருவர், புறநகர்ப் பகுதியில் இருந்து நகரத்தின் பேரங்காடிக்கு சென்ற நண்பரிடம் பாதாம், பிஸ்தா, முந்திரியில் தலா இரண்டிரண்டு கிலோ வாங்கிவருமாறு உதவி கோரியிருந்தார்.

பத்து மணிக்கு மேல் அவரது அறையில் “பெஹலம்” ஆரம்பமானது. சண்டையிடும் சத்தம் கேட்கவே அனைவரும் ஓடிச் சென்று பார்த்தோம். அங்கு இரண்டு கிலோ பாதாம், இரண்டு கிலோ பிஸ்தாவுடன் இரண்டு கிலோ பச்சை திராட்சை பளபளவென மின்னியது.

“முந்திரி மேடிக்கான் பறஞ்சது ஈ புள்ளியல்லோ, இப்போ வழக்கு பறையுன்னு” என கடைக்குப் போன கேரள சேட்டன் கோவத்தில் முகம் சிவந்து போய் இருந்தார். நமது வேலூர்க்கார நண்பரோ “முந்திரி வாங்கிட்டு வரச் சொன்னால் திராட்சையை வாங்கிட்டு வந்து இது தான் முந்திரின்னு சாதிக்குறார் இந்த சேட்டன், இதை எப்படி நான் ஊருக்கு எடுத்துட்டு போறது” என கத்திக் கொண்டிருந்தார்.

பிறகு தான் புரிந்தது மலையாளத்தில் திராட்சையை முந்திரி என்று தான் அழைப்பார்களாம். கடைசியில் அந்த சாலை இருவரையும் பலிவாங்கி விட்டது. கடும் சூழலிலும் சிரிப்பை எங்களால் அடக்க இயலவில்லை. இரவு முழுக்க சிரித்து, சிரித்து தொண்டைத் தண்ணீர் வற்றிப் போய் அந்த திராட்சையைத் தின்று பசியாறினோம்.

ஆமாம்… நாங்கள் தின்றது திராட்சையா, முந்திரியா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram