சிறப்புப்பக்கங்கள்

இனிக்கும் வெற்றிக்கதை!

அடையாறு ஆனந்த பவன்

முத்துமாறன்

மிகச் சிறியதாகத் தொடங்கி, மாபெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்த நம்காலத்து நிகழ்வுகளில் ஒன்று அடையாறு ஆனந்தபவன். இந்த வெற்றிக்கதையின் நாயகன் ராஜபாளையத்தைச் சேர்ந்த திருப்பதிராஜா.

மிகச் சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியே சென்று சென்னை, மும்பை நகர்களில் ஓட்டல்களில் சிறுசிறு வேலைகள் செய்ததுதான் அவருக்குக் கிடைத்த ஆரம்பகட்ட கல்வி. எல்லா வகையான இனிப்புகளையும் அவர் செய்யக் கற்றுக்கொண்டார்.

இளமைக் காலத்தை இப்படிக் கழித்துவிட்டு ஊருக்குத் திரும்பியவர் அங்கே குரு ஸ்வீட்ஸ் என்ற பெயரில் சிறிய இனிப்புக் கடையைத் திறந்தார். அவருடைய கைவண்ணத்தில் உருவான இனிப்பு சேவு, கோதுமை அல்வா, முந்திரி மைசூர்பாகு, மலாய் பால் போன்றவை பலரையும் கவரக்கூடியதாக இருந்தன.

அவரது அப்பா, ‘நாம் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாம் விவசாயத் தொழிலில் ஈடுபடுவதுதான் நல்லது’ என்று சொல்வார். எனவே விவசாயத்தையும் இனிப்புக் கடையையும் சேர்ந்தே பார்த்துக்கொண்டார்.

ஒரு கட்டத்தில் விவசாயத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டது. இயற்கைக் கால மாற்றத்தால் பயிர்கள் நாசமாயின.

இதை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து பெங்களூரு சென்று அங்கே ஶ்ரீநிவாசா ஸ்வீட்ஸ் என்ற கடையைத் திறந்தார். எண்பதுகளில் பெரிய பொருளாதார சிரமத்துக்கு உள்ளானார். “அம்மாவுடைய 25 பவுன் நகையை அடகு வைத்திருந்தார் அப்பா. அது ஏலத்துக்கு வந்துவிட்டது. மிகுந்த சோகத்தில் இருந்தார். அப்போது நான் மிகச் சிறுவன். இது போனால் என்னப்பா? நாம் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று அந்த அறியாத வயதில் நான் சொன்னது ஞாபகம் இருக்கிறது.” என்று நம்மிடம் தாங்கள் கடந்து வந்த பாதையை விவரித்தார் கே.டி. னிவாச ராஜா. இவர் திருப்பதி ராஜாவின் இளைய மகன். அண்ணன் கே.டி. வெங்கடேசனுடன் இணைந்து தந்தைக்குப் பின் இந்த இனிப்பு சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார்.

இன்று தமிழகம் இந்தியா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய ராஜ்யம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலுமாக சேர்த்து 182 கிளைகளுடன் பத்தாயிரம் பேருக்கும் அதிகமான ஊழியர்களுடன் கிளைபரப்பி விரிந்திருக்கிறது ஏ2பி என அறியப்படும் இந்நிறுவனம்.

“பள்ளிப்படிப்பை பத்தாவதுடன் நிறுத்திவிட்டு நானும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் அண்ணனும் அப்பாவுக்கு துணையாக கடைக்கு வேலைக்கு (1977) வந்துவிட்டோம். நான் கடைக்கு வந்தபோது எனக்கு 14 வயது. பின்னர்தான் தொலைதூரக் கல்வி மூலமாக பட்டங்கள் பெற்றேன். சில காரணங்களால் பெங்களூருவில் இருந்து நண்பர்கள் உதவியுடன் சென்னைக்கு இடம் பெயர்ந்த என் தந்தை பழைய வண்ணாரப் பேட்டையில் ஆனந்தபவன் ஸ்வீட்ஸ் எனத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து அடையாறு எல்பி சாலையில் 1988இல் தொடங்கியதுதான் அடையாறு ஆனந்த பவன்.

ஶ்ரீஆனந்தபவன் என்றுதான் பெயரிடச் சொன்னார்கள். அடையாறுக்கு அடையாளமே அங்குள்ள ஆலமரம்தான். குடும்பத்துடன் பலமுறை அடையாறில் இருக்கும் ஆலமரத்துக்குச் சென்றுள்ளோம். அடி மரம் விழுந்துவிட்டாலும் விழுதுகளால் தாங்கப்பட்டு இன்றும் அந்த மரம் உள்ளது. அதுபோல் வளர்ந்து

நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காகத் தான் அடையாறு ஆனந்தபவன் என்று பெயர் வைத்தோம். இதற்கு அடுத்த கடை புரசை வாக்கத்தில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரும்பிப்பார்க்க நேரமின்றி வளர்ச்சி.

ஆரம்பத்தில் ஸ்வீட், காரம் சாட் உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தோம். அனைத்து வயதிலும் இருக்கும் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கவேண்டும் என்பதற்காக முதலில் ஆவியில் அவித்த உணவு வகைகளை அளிக்கத் தொடங்கினோம். கொழுக்கட்டை, இடியாப்பம், ஆப்பம், அடை அவியல் போன்றவற்றை மாலை நேரங்களில் அளித்தோம். நல்ல வரவேற்பு இருந்தது.

2000இல் முதல் உணவகத்தை பாண்டிச்சேரியில் தொடங்கினோம். இனிப்பு வகைகளைத் தாண்டி உணவுவகைகளின் மீது கவனம் செலுத்தவேண்டும்; எல்லா தரப்பினரையும் ஈர்க்கவேண்டும் என்ற என் அண்ணனின் ஆலோசனையே இதற்குக் காரணம். அத்துடன் தரமான வட இந்திய உணவு வகைகளையும் சேர்த்து அறிமுகப்படுத்தவே வெற்றி கிடைத்தது.

நாங்கள் ஆரம்பத்திலேயே நகரங்களுக்குள் வராமல் முதலில் நெடுஞ்சாலைகளில்தான் தொடங்கினோம். அந்த உணவகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏ2பி என்ற பிராண்டாக அது உருவெடுத்தது. நெடுஞ்சாலைகளில் செல்கிறவர்கள் Just Break and Go என்று அங்கே நிறுத்தி வந்துவிட்டு செல்லவேண்டும் என்பதுதான் எங்கள் அணுகுமுறை. ஒவ்வொரு 200 கிமீயிலும் ஓர் உணவகம் என திட்டமிட்டோம். பிறகுதான் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப நகரங்களுக்குள் வந்து உணவகங்கள் தொடங்கினோம்.

அந்த காலகட்டம் என்பதும் தென்னிந்திய குடும்பங்கள் ஓட்டல்களுக்கு அதிக எண்ணிக்கையில் சாப்பிட வரத் தொடங்கிய காலம். நிறைய புதிய வகையிலான உணவுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. அப்படி வெரைட்டிகளைத் தரும் உணவகமாக எங்களுடையதை நாங்கள் வடிவமைத்தோம்.

்எங்களுக்கு மாதாமாதம் நிரந்தர செலவினங்கள் என்பவை அப்படியே இருக்கும். ஆனால் மாதா மாதம் விற்பனையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். நிரந்தர செலவினங்களான ஊழியர் சம்பளம், கட்டட வாடகை போன்றவை மாறாது. அவற்றை சரியாக கொடுத்துவிடவேண்டும். பண மதிப்பிழப்பு சமயத்தில் எங்களுக்கு இது தொடர்பாக பெரும் நெருக்கடி ஏற்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் நாங்கள் எதிர்கொண்ட பெரிய நெருக்கடி என்றால் கொரோனாவுக்கு முன் அதைத்தான் சொல்லவேண்டும். கோவிட் நேரத்தில் பெரிய சவால்தான். வங்கிகளில் கடன் வாங்கி, சரியான நேரத்தில் சம்பளம் வழங்கினோம். எங்கள் நோக்கமே பணியாளர் நலன், விவசாயிகள் நலன்தான். இவர்கள் ஆதரவில்தான் எங்களுடைய வளர்ச்சி.

வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடிவர முடியாத நேரம் கோவிட் நேரம். நாங்களே வாடிக்கையாளர்களின் குடியிருப்புகளுக்குத் தேடிச் சென்று விற்பனை செய்தோம். கொரோனா காலத்தில் மற்றவர்களைவிட அதிக கிளைகள் எங்களுக்குத் தான் இருந்தன என்பதால் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் இருந்தோம். ஆனாலும் கவலையே படவில்லை. அடுத்த மூன்றாம் மாதம் விற்பனை திரும்ப ஆரம்பித்துவிட்டது.

மொத்தத்தில் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட விற்பனை இலக்கை அடையாமல் போனால் இரண்டு மாதங்கள் பின் தங்கிவிடுகிற சூழல் ஏற்படும். இதுதான் நான் எதிர்கொள்கிற சவால். எதையும் நிரந்தரம் என்று இந்த தொழிலில் சொல்ல முடியாது” என்கிற னிவாச ராஜாவிடம் அவரது எதிர்கால இலக்கு என்ன என்று கேட்டோம்.

’நிறைய இளைஞர்களை தொழில்முனைவோர் ஆக்கவேண்டும் என்பதுதான் என் இலக்கு. படித்த திறமையான இளைஞர்கள் நிறையபேர் சம்பளத்துக்கு வேலை்க்குச் செல்கிறார்கள். அப்படி இல்லாமல் அவர்கள் சுயதொழில் தொடங்கி அதிகம் பொருள் ஈட்ட வழி செய்யவேண்டும் என்பதுதான் என் இலக்கு’ என்கிறார் பொதுப்படையாக.

சென்னை அம்பத்தூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். இந்த மிகப்பெரிய தொழிலகத்தில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள கடைகளுக்கு அனுப்ப இனிப்புகள், கார வகைகள் தயார் ஆகின்றன. இதேபோல் பெங்களூரு, கோவை, தஞ்சாவூர் போன்ற இடங்களிலும் சமையல் கூடங்கள் அமைந்துள்ளன. தானியங்கி இயந்திரங்களைக் கொண்டு பெரும்பாலும் கைபடாமல் தின்பண்டங்கள் தயார் ஆகின்றன. ஏ2பி உணவகங்களைப் பொறுத்தவரை அந்தந்த இடங்களில்தான் சமையல் நடக்கிறது.

குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையையும் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். மூத்தவரின் மகன் விஷ்ணு சங்கர், மகள் அபிராமி, இளையவரின் மகள்கள் பூஜா, பவித்ரா, பிரார்த்தனா ஆகியோர் நிர்வாகத்தில் உள்ளனர்.

‘தங்கள் இலக்கைக் கண்டறிந்து அதில் கவனம் குவித்து செயல்படுகிறவர்களுக்கு வெற்றிகள் குவிவதை நான் அனுபவபூர்வமாக பார்த்துவருகிறேன்’ என்று ஶ்ரீனிவாசராஜா விடைகொடுக்கிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram