சிறப்புப்பக்கங்கள்

2,250 ரஜினி படங்களை எடுக்க எவ்வளவு செலவாகும்?

அந்திமழை இளங்கோவன்

இந்த உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

பலசாலி எளியவனைத் தாக்குவது இனி நடக்காது. வேகமாகச் செல்வது, மெதுவாகச் செல்வதைத் தாக்குவதே நடக்கும் - ரூபர்ட் முர்டோக்.

 தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கும் புதிய இயக்குநர் ஒருவர், சினிமா வாசனையே இல்லாத ஒரு தயாரிப்பாளரிடம் போய்ச் சேருவார். அவரோ ஒரு மீன் வியாபாரி. இதில் இயக்குநர் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் கதை. இது, உப்புக் கருவாடு சினிமாவின் ஒன்லைன்.

தயாரிப்பாளராக எம்.எஸ்.பாஸ்கரும், டைரக்டராக கருணாகரனும் நடித்த 'உப்புக் கருவாடு' (2015) படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார்.

2019 இல் இந்திய திரையரங்குகள் மூலம் நடந்த வியாபாரத்தை விட, மீன் விற்பனை வியாபாரம் 13 மடங்கு அதிகம் என்பது கூடுதல் தகவல்.

திரையரங்கில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள் என்பதை திரைப்படம் என்பது மறக்க வைக்கவேண்டும் என்கிறார், இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி. திரையரங்கின் வெளிச்சமற்ற சூழலில், திரையில் நிகழும் மற்றொரு உலகு, நம் மனதை தன்னுடன் பயணிக்க அழைக்கும் போது அந்தத் திரைப்படம் பிடித்துப் போகிறது. திரையில் நிகழ்வது நிஜமல்ல என்று புரிந்திருந்த போதும் அங்கே ஒரு கதாபாத்திரம் துன்புறும் போது நம் கண்கள் கசியலாம் . துயரத்திலிருந்து கதாபாத்திரம் தப்பித்து விட வேண்டுமென்று மனசு பதறலாம்!

திரையரங்கின் இந்த அனுபவத்தை வரவேற்பறையில் இருக்கும் டிவியில் விரியும் ஓடிடி தள திரைப்படம் கொடுப்பதில்லை என்பது, சிலரது வாதம். ஆயினும் வசதி படைத்தவர்கள், தங்கள் வீட்டில் ஓர் அறையைத் திரையரங்காக மாற்ற முடியும்.

எழுத்தாளரும் நடிகருமான நண்பர் ஷாஜியின் மூவி ரூம் (movieroom.in) உங்கள் வீட்டிலேயே திரையரங்கை அமைத்துத் தரும்.

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 2018 இல் 8.34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நீண்டகாலக் கடனிருந்தது. அதாவது 62,550 கோடி ரூபாய் கடன்!

இந்நிலையில் புதிய சினிமாக்களும் வெப் தொடர்களும் தயாரிப்பதற்காக மேலும் 30,000 கோடி ரூபாய் கடன் வாங்கப் போவதாக நெட்பிளிக்ஸ் அறிவித்தது. உலக சினிமா தயாரிப்பிலிருந்தவர்கள் எல்லாம் இதைக் கேட்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்கள்.

ஆரம்பத்தில், ஹாலிவுட் படங்கள், தொடர்களின் உரிமைகளை வாங்கி நெட்ப்ஃளிக்ஸ் தன் தளத்தில் வெளியிட்டு வந்தது. இதன் வெற்றியை கவனித்த ஹாலிவுட் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், உரிமைக்கான விலையை உயர்த்தின. இதனால்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் வியூகங்கள் வேறாக இருக்க வேண்டுமென நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவுக்கு வந்தது.

‘‘ஹெச்பிஓ எங்களை எட்டிப் பிடிப்பதற்குள் நாங்கள் ஹெச்பிஓ ஆவது தான் எங்கள் இலக்கு'' என, நெட்ப்ளிக்ஸின் தலைமை உள்ளடக்க அதிகாரி டெட் ஸொரோண்டோஸ் என்பவர் 2013 - இல் கூறி இருந்தார். ஹெச்பிஓ அமெரிக்காவில் மிகப்பெரிய தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு தயாரிப்பு நிறுவனம்.

2014இல் தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரை நெட்பிளிக்ஸ் சுயமாகப் படங்கள் எடுக்க செலவழித்த தொகை 2,25,000 கோடி ரூபாய். அந்தக் காலகட்டத்தில் ஒரு ரஜினி படமெடுக்க உத்தேசமாக 100 கோடி செலவாகியதென்றால் 2,250 ரஜினி படங்களை எடுத்ததற்கு சமமான பணத்தை நான்கரை வருடத்தில் படங்கள், தொடர்கள் தயாரிப்பில் கொட்டியது, நெட்ப்ளிக்ஸ்.

ஓடிடி தளங்களின் வரலாற்றை இதன் பயணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

திரையரங்குகள் அவை தரும் கொண்டாட்ட அனுபவங்கள் மூலம் சினிமா ரசிகர்கள் மனத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் வியாபாரத்தில்?

2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் திரையரங்கின் மூலம் வரும் சினிமா வியாபாரம் 10,948 கோடிகள். இந்த வியாபாரம் நீண்ட காலமமாக வளர்ந்து வருகிறது. 2018 இல் 9,810 கோடிகளாக இருந்த வியாபாரம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் உள்ளே சென்று அலசும் போது அதிரலாம்.

இந்தியாவின் சினிமா வியாபாரத்தில் முதலிடம் ஹிந்தி சினிமாவிற்கு, தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு ஹாலிவுட் படங்கள் என்ற நிலை 2018 வரை இருந்தது. 2019 ஆம் ஆண்டு நிலவரம் : வியாபாரத்தில் ஹிந்தி சினிமா - 44%, ஹாலிவுட் - 17%, தமிழ் - 13%, தெலுங்கு - 13% மற்ற மொழிப் படங்கள் மீதமுள்ளவற்றைப் பங்கு போடுகின்றன.

உலக அளவை எடுத்துக்கொண்டால் 2020 - இல் உலகின் திரையரங்கு டிக்கட்டுகள் மூலம் வருமானம் 72 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது. காரணம், கொரோனா. ஆனால் வீடுகள், மொபைல் தொலைக்காட்சி பொழுதுபோக்கு மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளது (ரூ 5,16,000 கோடிகள்).

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மிகுந்த திட்டமிடுதலுடன் எடுத்து வெளியிடப்படுபவை. மார்ச் 2020-இல் வெளியாகியிருக்கவேண்டிய 'No Time to Die' நவம்பருக்குத் தள்ளிப் போய் , 2 ஏப்ரல் 2021 என்றாகி தற்போது 8 அக்டோபர் 2021-இல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கே இந்த நிலை என்றால், ஆயிரக்கணக்கான சினிமா தயாரிப்பாளர்களின் நிலை கவலைக்குள்ளானது.

திரையரங்குகளுக்கும் அதைப் பெரிதாக நம்பும் தயாரிப்பாளர்களுக்கும் இது மோசமான காலம்.

நிதர்சனம் புரியாமல் தமிழ்த் திரையுலகில் பலர், ஓடிடிக்கு படம் விற்ற சிலரை விமர்சித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்குகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் ஒரு பெரும் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளோம். அந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ள இந்த இதழில் வரும் ஓடிடி தளங்கள் மற்றும் தியேட்டர்கள் பற்றிய சிறப்புப் பக்கங்கள் உதவும்.

எதிர்காலத்தில் திரையரங்குகளும் மாறும் , ஓடிடி தளங்களும் மாறும். பொதுவாக ஓடிடி தளத்தில் படம் பார்க்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதம் சந்தாதாரர் ஆகவேண்டும். ஆனால் யூட்யூபில் மட்டும்தான் எந்தப் படம் பார்க்க வேண்டுமோ அதை மட்டும் வாடகைக்கு வாங்கிப் பார்க்க முடியும். எல்லா ஓடிடி தளங்களும் இந்த வசதியைக் கொண்டு வரும் காலம் வரும்.

ஓடிடி எல்லாம் இந்தியாவில் எடுபடாது என்று, இன்னும் அவநம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்காக ஒரு சம்பவம்.

பிளாக் பஸ்டர் என்ற நிறுவனம் அமெரிக்காவில் 1985இல் ஆரம்பிக்கப்பட்டது. வீடியோவை வாடகைக்கு விடுவது தான் இதன் வணிகம். ஆரம்பித்ததிலிருந்து 20 வருடங்களுக்கும் மேல் கொடி கட்டிப் பறந்தனர். இந்நிறுவன வாடிக்கையாளர்களில் ஒருவரான ரீட் ஹாஸ்டிங் என்பவருக்கு வாடகைக்கு எடுத்த வீடியோ கேஸட்டை தாமதமாகக் கொடுத்தால் விதிக்கப்படும் அபராதம் பிடிக்கவில்லை. அதனால், இவரும் இன்னொருவரும் இணைந்து, வீட்டிற்கு தபாலில் டிவிடி அனுப்பும் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். அந்த நிறுவனத்தின் பெயர் நெட்ப்ளிக்ஸ், ஆண்டு 1997.

இந்நிறுவன ஆரம்பகாலம், அவ்வளவு சுலபமானதாக இல்லை.

இரண்டாயிரமாவது ஆண்டில் ஒருமுறை ரீட் ஹாஸ்டிங், பிளாக் பஸ்டர் நிறுவனத் தலைவரை சந்தித்து தங்களோடு பார்ட்னர்ஷிப் வைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். கேலியான புன்னகையோடு அவர் மறுத்து விட்டார். மற்றொரு முறை 375 கோடிக்கு நெட்பிளிக்ஸை வாங்கும் வாய்ப்பும் பிளாக்பஸ்டருக்கு வழங்கப் பட்டது. அப்போதும் மறுத்து விட்டனர்.

பிளாக்பஸ்டர் நிறுவனம் 2010இல் திவாலானது.

375 கோடிக்கு வேண்டாம் என்று சொல்லப்பட்ட நெட்பிளிக்ஸின் தற்போதைய சந்தை சொத்து மதிப்பு, 17 லட்சம் கோடிக்கு மேல்!

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

மே, 2021 அந்திமழை இதழ்