சிறப்புப்பக்கங்கள்

1980-2000 – ரத்தக் கலைஞர்கள்

கருந்தேள் ராஜேஷ்

எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை” - ஜிந்தா, வெற்றிவிழா.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான வில்லன்களுக்கு ஒரு பட்டியல் போட்டால், அதில் முதல் சில இடங்களுக்குள் வரக்கூடியவன்(ர்) - வெற்றிவிழாவின் ஜிந்தா. சலீம் கௌஸ் அட்டகாசமாக அறிமுகம் ஆன படம். இந்தக் காலகட்டத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்தால், தமிழின் மறக்கமுடியாத வில்லன்கள் திரையில் பட்டையைக் கிளப்பிய காலகட்டமாக 1975 முதல் 2000 இருக்கும் என்று தோன்றுகிறது. இன்றும் தமிழில் வில்லனாக நடிப்பவர்கள் அறிமுகம் ஆன காலகட்டம் இது. புராண/சரித்திர/ப்ளாக் - ஒய்ட் காலகட்டத்தில் இருந்து மெல்ல மெல்லத் தற்போது பிரபலமாக விளங்கும் ஆக்‌ஷன் ஜானரை நோக்கித் தமிழ் சினிமா பயணப்பட ஆரம்பித்த கட்டம். அறுபதுகளில் ஜெய்சங்கர் இதனைப் பிரபலப்படுத்தியிருந்தாலும், அந்த ஜானரிலேயே பல படங்கள் நடித்து ‘ஆக்‌ஷன் கிங்’, ‘புரட்சித் தமிழன்’, ’புரட்சிக் கலைஞர்’, ’சூப்பர்ஸ்டார்’ என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்ட நடிகர்கள் அறிமுகம் ஆனதும் இதே காலகட்டம்தான்.

1975ல் இருந்து 2000 வரை தமிழ்ப் படங்களை நோக்கினால், தமிழில் மறக்கமுடியாத வில்லனாக இன்றும் கருதப்படும் ரஜினி அறிமுகமான வருடம் அது (அபூர்வ ராகங்கள்). ரஜினிக்குப் பிறகு தமிழின் சிறந்த வில்லனாக, சத்யராஜை அவசியம் சொல்லமுடியும். உண்மையில் இருவரது படங்களையும் ஒப்பிட்டால், சத்யராஜ் அதிகமாகவே ஸ்கோர் செய்வார். ரஜினிக்கு அவரது உடல்மொழி பிரத்யேகமாக அமைந்ததைப்போல், சத்யராஜுக்கு அவரது நக்கல் தெறிக்கும் அலட்சியமான வசன உச்சரிப்பு ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்தது. நம்பர் ஒன் ஹீரோக்களாக இருந்த ரஜினிக்கும் கமலுக்கும் பல படங்களில் சத்ய ராஜ்தான் வில்லன். சத்யராஜின் மறக்கமுடியாத வில்லன் கதாபாத்திரம் - 1986ல் வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சுகிர்தராஜா. நன்றாகக் கவனித்தீர்கள் என்றால், நகைச்சுவைக்கென்றே ஜனகராஜ் இருந்திருந்தாலும், ஒவ்வொரு காட்சியிலுமே ஆடியன்ஸை வெடிச்சிரிப்பு சிரிக்கவைக்கும் வசனங்களை உச்சரிக்கும் நபராக சத்யராஜே இருந்தார். ஆனாலும் அவரிடம் அந்தக் கதாபாத்திரத்துக்கே உரிய ஒரு குரூரமும் வெளிப்படும். ‘விக்ரோம்’ என்று கமலை அழைக்கும் அவரது பிரத்யேக உச்சரிப்பு தனித்துவமானது. இதேபோல்தான் ‘காக்கி சட்டை’யின் விக்கி, ‘ஜப்பானில் கல்யாணராமன்’ - நரேந்திரன், ‘மங்கம்மா சபதம்’ - பூபதி, ‘எனக்குள் ஒருவன்’ - ராஜதுரை என்று கமலுடன் நடித்த அத்தனை படங்களிலும் கமலுக்கு ஈடாகப் புகழ்பெற்றார். அதுவேதான் ரஜினியுடன் நடிக்கையிலும் ‘மூன்று முகம்’ - தாடி ராஜ், ‘மிஸ்டர் பாரத்’ - கோபிநாத் (இதில் சத்ய ராஜின் ‘என்னம்மா கண்ணு’ இன்றுவரை பிரபலம்), ‘நான் சிகப்பு மனிதன்’ - மோகன்ராஜ் என்று ரஜினிக்கும் சரிசமமாக வில்லனாக நடித்துப் புகழ்பெற்றார். கூடவே சத்யராஜின் பாத்திரங்கள் ‘24 மணி நேரம்’, ‘100வது நாள்’ படங்களிலும் மிகவும் பேசப்பட்டன.

சத்யராஜ் பிரபலமான இதே காலகட்டத்தில் எக்கச்சக்கமான படங்கள் நடித்து தமிழின் எண்பதுகளின் பிரத்யேக வில்லனாக இருந்தவர் ராதாரவி. இவரது படங்களின் டைட்டிலில் ‘ஒப்பனை: கஜபதி’ என்றே இவரது ஒப்பனைகளுக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும். சத்யராஜுக்குப் பின்னர் ரஜினிக்குப் பல படங்களில் இவர்தான் வில்லன். குணச்சித்திர வேடங்களிலும் ஏராளமாக நடித்தது இவரது விசேட அம்சம். எண்பதுகளின் துவக்கத்தில் இருந்து தொண்ணூறுகளின் முடிவு வரை ராதாரவிக்கான தனிப்பட்ட இடம் தமிழ்ப்படங்களில் வேறு யாராலும் நிரப்பப்படவில்லை.

போலவே அதே காலகட்டத்தில் எக்கச்சக்கமான படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களும் செய்தவர் வினு சக்ரவர்த்தி. இவருக்கும் இவரது குரலே ப்ளஸ் பாயிண்ட். அவரது குரலிலேயே இப்போது ‘ஜிகிர்தண்டா’ படத்தில் ‘டிங் டாங்’ என்ற வில்லனுக்குரிய பாடல் வந்திருப்பதே அவரது குரலை இன்னும் பலரும் மறக்கவில்லை என்பதற்குச் சான்று. ரஜினியுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ராதாரவி அவரது நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தமிழில் மென்மையான, உயரமான நடிகர் ஒருவர், தனது இருபத்தி நான்காம் வயதில் ‘ஏழாவது மனிதன்’ படத்தில் தமிழில் அறிமுகமானார். அவர் ரகுவரன். ஒன்றிரண்டு படங்கள் ஹீரோவாக நடித்துவிட்டு 1983ல் வெளியான ‘சில்க் சில்க் சில்க்’ படத்தில் வில்லனாக நடித்தார். பின்னர் மறுபடியும் சில படங்களில் ஹீரோ. இடையிடையே ‘சம்சாரம் அது மின்சாரம்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களும் செய்தார். 1983ல் இருந்து 1989 வரை இப்படி மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த அவருக்கு (இடையே வில்லனாக ‘பூவிழி வாசலிலே’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தும்கூட), 1989ல் வெளியான ஒரு தெலுங்குப்படம் அட்டகாசமான புகழைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இவரது பெயரான ‘பவானி’ என்பது ரசிகர்களின் மனதில் திகிலைக் கிளப்பியது எனலாம். அந்தத் தெலுங்குப்படம் - ‘ஷிவா’ (தமிழில் உதயம்). இந்தப் படத்துக்குப் பிறகு வழக்கமான அவரது பாணியில் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோ, வில்லன் என்று மாற்றிமாற்றி நடித்தார். பின்னர் 1994ல் ‘காதலன்’ மற்றும் ‘பாட்ஷா’ ஆகிய படங்களில் மறுபடியும் பிரமாதமாக வில்லனாக நடித்துப் பெயர் வாங்கினார். பின்னர் வழக்கப்படி குணச்சித்திர வேடங்கள். 1999ல் மறுபடியும் ‘முதல்வன்’ படத்தில் வில்லன் அரங்கநாதன் வேடம்.

ரகுவரன் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த சமயத்தில் அறிமுகமானவர்தான் நாஸர். முதல் படமே மணி ரத்னம் மற்றும் கமல்ஹாசன் என்ற ஹெவிவெய்ட்களுடன். இருந்தாலும் அவரது போலீஸ் வேடம் இன்றும் நினைவிருக்கும்படி சிறப்பாக நடித்திருந்தார். அதன்பின்னர் சரமாரியாக வில்லன் வேடம். அறிமுகமாகி ஏழே ஆண்டுகளில் நூறு படங்கள் நடித்தவர். ஒரு காலகட்டத்தில் தமிழில் வில்லனாக அதிகப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர். இவரது பிரத்யேக மூக்குடன் வந்து கோபமாகப் பார்த்துக்கொண்டே பேசும் வசனங்கள் மறக்கமுடியாதவை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என்று தனது தனித்தன்மையை விடாமல் பல மொழிகளில் நடித்துப் புகழ்பெற்றவர். நாஸரும் ரகுவரனும் ஆரம்பகாலங்களில் ஒன்றாக இருந்திருக்கின்றனர் என்பது ஆச்சரியமான பெட்டிச்செய்தி.

நமது தமிழ் சினிமா வில்லன் பாரம்பரிய வழக்கப்படி, ரகுவரன் மற்றும் நாஸர் தனது வில்லன் கதாபாத்திரங்களின் உச்சத்தில் இருந்தபோது தமிழில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். ரகுவரனைப் போலவே இவரும் பிரத்யேகமான உடல்மொழியில் ஒரு சைக்கோ வில்லனாகவே பல படங்களில் நடித்தார். இருவரும் சேர்ந்தும் சில படங்களில் நடித்தனர் (‘என் சுவாசக் காற்றே’ படத்தில் தனது தந்தையான ரகுவரனை இவர் ‘டேய்’ என்று அழைத்துப் புலம்புவது சிரிப்பை வரவழைக்கும்).

இவர்களைத் தவிர, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் பார்த்த ’ஜிந்தா’ சலீம் கௌஸ், ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் அறிமுகமாகி அதிரடி ‘கப்பர்சிங்’ நடிப்பால் புகழ்பெற்ற மன்சூர் அலிகான், ‘புலன் விசாரணை’யின் வில்லன் சரத்குமார், ‘ஊமை விழிகள்’ படத்தில் திகிலான வில்லனாக நடித்து இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த ரவிச்சந்திரன், எண்பதுகளின் இறுதியில் புலன்விசாரணையில் நடித்தபின் புகழ்பெற்ற வில்லனாக வலம் வந்த ஆனந்தராஜ், ‘முரட்டுக் காளை’யில் துவங்கி சில படங்களில் வில்லனாக நடித்த ஜெய்சங்கர், பின்னணிப்பாடகராகவும் பிரபல வில்லனாகவும் நடித்த மலேசியா வாசுதேவன், வில்லன், குணச்சித்திர வேடம் என்று கலந்து கட்டிய விஜயகுமார், ‘சத்யா’ படத்தில் வில்லனாக வந்த கவிஞர் வாலி என்று ஒரு பெரிய பட்டியல் போடலாம். ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தில் கார்த்திக்கும் இப்படிப்பட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். பாக்யராஜுமே வில்லனாக நடித்திருக்கிறார் (’கன்னிப்பருவத்திலே’). இந்தக் காலகட்டத்தில்தான் மணிவண்ணன், நெப்போலியன் ஆகியவர்களும் வில்லன்களாக அறிமுகமாயினர்.

தொண்ணூறுகளில் மலையாளத்தில் இருந்தும் சில வில்லன்கள் அறிமுகமாயினர். ‘சத்ரியன்’ படத்தில் திலகன் அப்படி வந்தவர்தான். அவரது ‘பழைய பன்னீர்செல்வமா வரணும்’ டயலாக்கை மறக்கமுடியாது. அதேபோல் ‘மகாநதி’யில் கொச்சின் ஹனீஃபா. அதே படத்தில் ஜெயிலராக நடித்த மகாநதி சங்கரின் கதாபாத்திரமும் பெரிதும் பேசப்பட்டது.

கமல்ஹாசனுமே சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். ‘ஒரு கைதியின் டைரி’, ‘கடல்மீன்கள்’, இந்தியன்’ போன்றவை அவற்றில் அடக்கம். ஆனால் இவையெல்லாம் நேரடி வில்லனாக இல்லாமல் ஆன்ட்டி-ஹீரோ என்று வில்லன்களைக் கொல்லும் பாத்திரம். அந்த வரிசையில் நிஜமான வில்லனாகக் கமல் நடித்த ‘சிவப்பு ரோஜாக்கள்’ குறிப்பிடத்தகுந்தது.

அதேபோல் சுமன் மற்றும் ரவீந்தரையும் அவசியம் குறிப்பிட்டே ஆகவேண்டும். இவர்கள் இருவரையும் தனியாகக் குறிப்பிடுவதன் நோக்கம் எண்பதுகளின் ஆரம்பகட்ட கமல் ரஜினி படங்களைப் பார்த்து வளர்ந்தவர்களுக்குத் தெரியும். அதேபோல் நாகேஷுமே சில படங்களில் இந்தக் காலகட்டத்தில் வில்லனாக நடித்துப் பிரமாதப்படுத்தியிருப்பார் (‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மௌனம் சம்மதம்’ போன்றவை).

எப்போதும் ஒரு திரைப்படம் வெற்றிபெறுவதன் சூட்சுமம், அதன் வில்லன் எத்தனை சக்திவாய்ந்தவன் என்பதில் இருக்கிறது. இதனால்தான் எம்.ஜி.ஆரின் படங்களில் வில்லன்கள் எப்போதும் அவருக்கு ஈடாக இருப்பது வழக்கம். அதே பாணிதான் ரஜினி, சத்யராஜ், ரகுவரன் ஆகியவர்களின் வில்லன் அவதாரங்களில் காணலாம். குறிப்பாக ரஜினி மற்றும் கமலுக்கு சத்யராஜ் வில்லனாக நடித்த காலகட்டம் தமிழ்ப் படங்களுக்கு மிக முக்கியமான காலகட்டம். வில்லனாக சத்யராஜின் ஆளுமை மறக்கவோ மறுக்கவோ முடியாதது. அதேபோல், கவனித்துப் பார்த்தால் நாஸர் நீங்கலாக நாம் பார்த்த அத்தனை வில்லன்களுக்கும் பிரத்யேகமான அம்சமாக அவர்களது குரலோ, உடல்மொழியோ, வசன உச்சரிப்போ, அவர்களுக்கென்றே எழுதப்பட்ட பஞ்ச் டயலாக்குகளோ இருந்திருக்கின்றன. இவை எதுவும் இல்லாமலேயே நம்பர் ஒன் வில்லனாக நாஸர் இருந்திருக்கிறார்.

கடைசியாக, தமிழில் 1975 துவங்கி 2000 வரையிலான காலகட்டம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், ஆரம்பகாலத்தில் இருந்து எழுபதுகளின் ஆரம்பம் வரை நீடித்த வில்லன்களின் ஆதிக்கம், எழுபதுகளில்தான் கொஞ்சம் நிஜவாழ்க்கைக்கு அருகே வந்தது எனலாம்.

ஆனால் ரஜினி துவங்கி நாம் மேலே பார்த்த எல்லா வில்லன்களும் ஒவ்வொருவரும் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக நடித்துப் பல ஹிட்களைக் கொடுத்தனர். எனவே, தமிழ் சினிமா எதிர் நாயகர்களின் பொற்காலமாக விளங்கியது இந்தக் காலகட்டம்தான் என்பதில் சந்தேகமில்லை.

ஜூன், 2014.