ஒரு தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்திருந்தார் தோழர் என். சங்கரய்யா. அவரிடம் ஒரு சிறப்பு நேர்காணல் எடுக்க விரும்பி என்னைத் தொடர்புகொண்ட ‘ஜூனியர் விகடன்' செய்தியாளரை, அப்போது நான் பணி செய்துகொண்டிருந்த ‘தீக்கதிர்' அலுவலகத்தில் சங்கரய்யா தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றேன்.
அன்றைய அரசியல் நிலவரம் தொடர்பான கேள்விகளுக்குப் பிறகு, சொந்த வாழ்க்கை பற்றிச் சொல்லக் கேட்டுக்கொண்டார் நண்பர். ‘‘இவ்வளவு நேரம் அதைத்தானே சொல்லிக்கொண்டிருந்தேன்,'' என்றார் சங்கரய்யா! ‘‘இல்லை, உங்களின் கல்லூரி வாழ்க்கையைச் சொல்லுங்கள்,'' என்றார் நண்பர். தனது படிப்பு நின்றுபோனது பற்றிச் சொன்னவர் அப்போது முன்னுக்கு வந்த விடுதலைப் போராட்டம், அதில் மாணவர்கள் பங்கேற்பு, போலீஸ் அடக்குமுறை என்று இறங்கிவிட்டார். பத்திரிகையாளர் விடாமல் ‘‘உங்களின் குடும்ப வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்,'' என்றார். மதங்கள் கடந்த தனது திருமணம் பற்றிச் சொல்லத் தொடங்கிய சங்கரய்யா அந்நாட்களில் கட்சி நடத்திய ஓர் இயக்கம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார்.
எனக்கு வேண்டிய தகவல்கள் நிறையக் கிடைத்தன, நண்பருக்கு ஏமாற்றமே. ஆயினும், ‘‘இயக்க வாழ்க்கை-யையும் சொந்த வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு தலைவரைச் சந்தித்தது பெருமிதமாக இருக்கிறது,'' என்று என்னிடம் நெகிழ்ச்சியோடு கூறினார். ஆம். நாட்டின் விடுதலைக்கான அன்றைய இயக்கம், விடுதலையை முழுமையாக்கிட சமுதாய சமத்துவத்துக்கான நேற்றைய இயக்கம், அதற்கான லட்சியங்களைத் தாங்கியுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான இன்றைய இயக்கம் ஆகிய முப்பெரும் இயக்கத்தின் அடையாளமாக இருப்பவரோடு நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எத்தகைய பேறு!
ஒரு வழக்குரைஞராக மகனை உருவாக்கும் விருப்பத்தோடு இவரை மதுரை அமெரிக்கன் கல்லூரி-- யில் சேர்த்துவிட்டிருந்தார் தந்தை. மூன்றாமாண்டு இறுதித் தேர்வுக்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில், விடுதலைப் போராளிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளைக் கண்டித்து எழுந்த போராட்ட அலை இவரை இழுத்துக்கொண்டது. ஆங்கிலேய அரசு இவரை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது. நீதிமன்றத்தில் கட்சிக்காரருக்காக வாதாடுகிற வழக்குரைஞராக முடியவில்லை, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்காக வீதிமன்றத்திலும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகச் சட்டமன்றத்திலும் வாதாடுகிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரராகப் பரிணமித்தார் சங்கரய்யா..
மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைமைப்பொறுப்புகளில் செயல் பட்டவரான அவர், ஆலைத் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் துறை சார்ந்தவர்களின் பிரச்சினைகளையும் அறிந்து, அவர்களுக்குத் தீர்வுக்கான வழிகளைச் சொல்கிறவராக விளங்கினார். கலை இலக்கியவாதிகள் கூட அவரோடு அமர்ந்து பேசி வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள். உள்ளடக்கமா, உருவமா என்ற இந்தக் களத்தினருக்கே உரிய விவாதம் முன்னுக்கு வந்தபோது, மார்க்சியப் பார்வையோடு இரண்டின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்திருக்கிறார்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு, சமத்துவ லட்சியங்களோடு போராடிய கம்யூனிஸ்ட்டுகள் மீது ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் நான்காண்டு, காங்கிரஸ் ஆட்சியில் நான்காண்டு என்று எட்டு ஆண்டுகள் சிறைவாசம்.
தியாகிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நேரு தலைமையிலான அன்றைய ஒன்றிய அரசு கொண்டுவந்தது. விடுதலைக்காகப் போராடும் கடமையை நிறைவேற்றியதற்கு ஓய்வூதியத்தை, மற்ற கம்யூனிஸ்ட்டுகளோடு சேர்ந்து இவரும் ஏற்க மறுத்தார். இது பற்றிக் கேட்ட ‘தினமணி' நாளேட்டிற்கு சங்கரய்யா அளித்த பதில்: ‘சுதந்திரத்திற்காக ஜெயிலுக்குப் போனதே பெரிய பரிசுதான்.'
தமிழக சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பணியாற்றியவர் சங்கரய்யா. 1967இல் திமுக முதன் முறையாக ஆட்சியமைத்தபோது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா தமிழ் ஆட்சி மொழித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதன் மீதான விவாதத்தில், ‘‘இந்தத் தீர்மானம் மட்டும் போதாது, குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் தமிழை நிர்வாக மொழியாக, பாட மொழியாக, நீதிமன்ற மொழியாக ஆக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்று வலியுறுத்தினார் சங்கரய்யா. அதற்கான ஒரு திருத்தத்தையும் முன்மொழிந்தார். முதலமைச்சரும் சட்டமன்றமும் அதை ஏற்க, அதுவே தமிழக அரசின் மொழிக்கொள்கையாக உருவெடுத்தது.
தொண்ணூறுகளின் முற்பகுதியில் வெடித்த சாதிய வன்முறைகள் தமிழகத்தை அதிரச் செய்தன. அதன் அடிவாரமாக இருப்பது, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமையும், மாவட்டங்களின் பின்தங்கிய பொருளாதார நிலைமையும்தான் என்று சட்டமன்றத்திலும், முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்தும் பேசினார் சங்கரய்யா. அது, பல மாவட்டங்களிலும் அரசின் முன்முயற்சியில் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளுக்கு இட்டுச் சென்றது. அவற்றில் பங்கேற்க சங்கரய்யாவையும் அழைத்துச் சென்றார் கலைஞர்.
‘தீக்கதிர்' சிறப்பிதழ்களுக்காக சங்கரய்யாவைப் பலமுறை பேட்டி கண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் பேட்டி முடிந்த பின், தாம் கூறியவற்றில் எதை முன்னிலைப் படுத்தினால் நன்றாக இருக்கும், எதைக் ‘கொட்டை எழுத்தில்' வெளியிட வேண்டும் என்று ஒரு பத்திரிகையாளராக மாறிவிடுவார். பத்திரிகையை நடத்தும் கட்சியின் தலைவராக மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சியில் தனிப்பட்ட முறையிலான பெருவிருப்பத்திலிருந்தும் இது வெளிப்படும். குடும்ப நிலைமை பற்றி விசாரிப்பதில் மெய்யான அக்கறை பொதிந்திருக்கும். ‘தீக்கதிர்' அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மற்ற ஏடுகளுக்குக் கூடுதலாகவே எழுதத் தொடங்கினேன். 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ‘இடதுசாரிகள் பேச வேண்டியது' என்ற தலைப்பில் இயக்கம் தொடர்பான விமர்சனத்தோடும் எழுதிய கட்டுரையை, ‘இந்து தமிழ் திசை' வெளியிட்டது. தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது எனப் பலரது வரவேற்பையும், இதை வெளிப்படையாகப் பேச வேண்டுமா எனப் பலரது கேள்வியையும் எதிர்கொண்ட கட்டுரை அது. அந்த ஆண்டின் ஜூலை 15 சங்கரய்யா பிறந்தநாளன்று வாழ்த்துப் பெறுவதற்காக வீட்டிற்குச் சென்றிருந்தேன். ‘டிவி விவாதமெல்லாம் பார்க்கிறேன். மத்த பத்திரிகைகள்லேயும் எழுதுறீங்க. புதிய விசயங்களை உங்க கண்ணோட்டத்தோட எழுதுறீங்க...' என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். சில நொடிகள் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருந்தவனிடம், ‘தொடர்ந்து எழுதுங்க,' என்றார். எனக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பாக வந்தன அந்தச் சொற்கள்.
மக்கள் பணியே தனது தகைமையாகக் கொண்ட தோழரின் நூற்றாண்டு அரசு விழாவாகவே கொண்டாடத்-தக்கது. ‘தகை சான்ற தமிழர்' என்ற புத்தம்புது விருதினை அறிவித்த மறுநாளே அது சங்கரய்யாவுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்து, அத்தகைய விழாவுக்கு வழி செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விருதுச் செய்தி வெளியான சில மணி நேரங்களில், அதனை நன்றியோடு ஏற்பதாகவும், அத்துடன் இணைந்த பத்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை, கோவிட்-19 தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்கு உதவிடத் தமிழக அரசு திரட்டிவரும் நிவாரண நிதிக்கு மகிழ்வோடு அளிப்பதாகவும் சங்கரய்யா கடிதம் அனுப்பியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில், தேச ஒருமைப்பாட்டிற்குப் பாடுபட்டதற்கான விருதுடன் வழங்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாயை, அக்கல்லூரியின் தலித், பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவி நிதிக்கு ஒப்படைத்தவராயிற்றே. தொண்டால் பொழுதளந்து செம்மையடைந்த மனசு!
ஆகஸ்ட், 2021