கடிதங்கள்

வாஸ்தவ வருத்தம்

Staff Writer

நக்கீரத்  தன்மையோடு உண்மைகளை உரக்கச் சொன்னது, திசையாற்றுப்படை. ஒரு முறை இசையமைப்பாளர் வி. குமாரை சந்தித்த போது வீட்டு வேலைகளை கவனித்த படி என்னிடம் பேசினார். ‘சமீபத்தில் தாங்கள் ரசித்த பாடல் எது?' என்று கேட்டேன். ‘பாலமுரளிகிருஷ்ணா பாடிய ’சுந்தரி  நீயும் சுந்தரன் ஞானும் பாடல்’ என்றார்.

நான் அதிர்ந்து‘ ஐயா, அது நடிகர் கமல்ஹாசன் பாடியது' என்றேன். அவர் என்னை விட அதிகமாக அதிர்ந்து ‘நிச்சயமாக தெரியுமா!' என்றார். ‘ சத்தியமாக' என்றேன். அவர் வியப்பிலிருந்து விலகவேயில்லை. ஆக, பாடகராக முயலும் நடிகர் தனுஷ்க்கு இரா. பிரபாகர் கமல்ஹாசனை முன்னுதாரணமாக்கியது சாலப் பொருத்தம். (ஆனால், ‘ஒய் திஸ் கொலைவெறி‘ தனுஷுக்கேற்ற பாடல் தானே!)  இரா. பிரபாகர் கூற்றுப்படி தலைசிறந்த பாடல்களுக்கு ரசிகர்கள் குறைவே. திருச்சி வானொலிக்கு இளையராஜா முதன்முதலாக பேட்டி கொடுத்த போது ‘தீபம் படத்தின் ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது' பாடல் ஹிட்டடித்த அளவு, எனக்கு மிகவும் பிடித்த ‘அந்தப் புரத்தில்  ஒரு மகாராணி'  பாடல் போய் சேர வில்லையே! என்று ராஜா வருத்தப்பட்டதும் ஞாபகம் வருகிறது.  முத்தாய்ப்பாக கடந்த 20 ஆண்டுகள் தமிழ் திரையிசையின் வறண்ட காலம் என்றது அவசர அத்யாவசியமாக சீர்திருத்த வேண்டிய....வாஸ்தவமான வருத்தம்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

கல்வெட்டு

மனித வாழ்வின் இருபெரும் தனித்துவக் கூறுகளாக விளங்கும் காதலையும் நட்பையும் மையப்புள்ளிகளாக்கி எழுதப்பட்டிருந்த எஸ்.ராமகி-ருஷ்ணனின் ‘இரவுக் காவலாளியின் தனிமை'  சிறுகதை அருமை. நெஞ்சில் கல்வெட்டாய் நிலைக்கும் சிறுகதை.

தி.வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி

பிரிவதே இல்லை

ஒவ்வொரு முறையும் அந்திமழை அடுத்த மாத இதழுக்காக ஆவலுடன் காக்க வைக்கிறது. பிரிவோம் சந்திப்போம் கவித்துவமானது. ஆம் சிலரைப் பிரிகிறோம். ஆனால் உண்மையில் பிரிவதேயில்லை.

குன்றத்தூர் ரெங்கநாதன்,  சென்னை

துயரம்

சாதாரண மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் துயரம், காதல் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில் குடை மேல் விழும் மழைபோல் நெஞ்சை ஈரமாக்கியது. வாழும் காலத்தில் எதிர்காலம் துயரமானது என்பதை மறந்தவர்கள் தான் காவல் பணிக்கு வருகிறார்கள்.

சில செக்யூரிட்டி கம்பெனிகள் காவலர்களைத் தரமாக நடத்துகின்றன. மற்றபடி பெரும்பாலானோர் ஏய் அந்த செக்யூரிட்டியை கூப்பிடு... நான் வரும் போது நீ எங்க போனே?  உனக்கு அறிவில்லை... இவ்வாறு திட்டு வாங்கிய காவலாளி மேலாளர் போன பின்பு இந்த மனுஷன் கிட்ட மகராசி எப்படித்தான் வாழ்கிறாரோ.. என நினைப்பார்.

இரவு கொடுமையானது. ஒருமுறை இரண்டு ஷிப்ட் பார்த்தவர் கருப்பு ஷூவையும் ஷாக்சையும் கழட்டி விட்டு ஹாயாக பெரு விரலை ஆட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்...டபக்கென்று தவளை என்று கருதி பெருவிரலை பாம்பு கடித்துவிட்டது... கதையில் தவராஜா, அந்தை பெண்ணை சந்திக்காமலே செத்தது துயரத்தை அதிகப்படுத்தியது.

எஸ்.பஞ்சலிங்கம்,  மடத்துக் குளம்

பிரிவு

தன் முனைப்பை வளர்த்து நிலைப்படுத்த முயல்வதால் தான் பிரிவுகள் நேர்கின்றன எனலாம். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக் கும் மணமுண்டு'  என்று பிறரின் திறமையை மதிக்கும் தன்மையும் ‘மறப்போம் மன்னிப்போம்'  என்ற மாண்பும் அற்றுப் போகாதிருப்பின் பல பிரிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆதாயத்தோடோ ஆதாயமின்றியோ அடுத்தவர்களைக் கெடுப்பதிலும் பிரிப்பதிலும் சிலர் அதிக ஈடுபாடுகாட்டுபவர்களாக இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இருசாரர் நேரில் சந்தித்து மனம் விட்டுப் பேசும் பட்சத்தில் துரோகிகளை இனங்கண்டு ஒதுக்கி வைத்துவிட இயலும்.

மு. இராமு, திருச்சி

வரவேண்டும்

அந்திமழை தரமான காகிதத்தில் தரமான அச்சு இதழாக வெளிவருவதில் மகிழ்ச்சி. பிரிவோம் சந்திப்போம் சிறப்புப் பக்கங்களில் ஒரு கட்டுரையில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை விட காதல் திருமணங்களில் விவாகரத்து அதிகமாக உள்ளது என சொல்லப்பட்டுள்ளது. உண்மையே! திருமணத்திற்கு முன்பு காதலர்கள் ‘எப்பொழுது சந்திப்போம்'  என ஏங்குவார்கள். அவர்களே திருமணத்திற்குப் பின்பு ‘ எப்பொழுதுடா பிரிவோம்'  என புலம்பும் நிலைக்கு தங்களை தாழ்த்திக் கொள்கின்றனர். என்ன காரணம்? விட்டுக் கொடுக்கும் தன்மையும், சகிப்புத் தன்மையும் இல்லாமல் போவதுதான். இந்த நிலை மாறி எப்பொழுதும் பிரியமாட்டோம்  என்ற நிலை வரவேண்டும். ‘வழி காட்டிய வழக்கு'  என்ற கட்டுரை எழுதிய வழக்கறிஞர், நல்ல  பல விஷயங்களை எடுத்துரைத்திருந்தார்.

டி.கே. கங்காராம், மதுரை

பாராட்டுகள்

அந்திமழை மாத

இதழ், இதழே இதழாம்.

சென்ற இடமெல்லாம்

சிறப்பு. கதை கட்டுரை

சினிமா நேர்காணல்

மாதம் தோறும் அளித்து

வாசகர்களை பெருமகிழ்வில் ஆழ்த்துகிறது.

அந்திமழை மாத இதழ்

ஆசிரியர், துணையாசிரியர்

வாசகர்கள் வாசகிகள் முகவர்கள் அனைவருக்கும்

கோடான கோடி பாராட்டுகள்.

கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்

தொடரட்டும்

எஸ்.ரா சிறுகதையில் வரும் ‘ஆண்களும் அழ விரும்புகிறார்கள். ஆனால் யார் முன்பு எதற்காக என்பதில் தான் மாறுபாடு இருக்கிறது‘ என்ற வைர வரிகள்... சில மணித்துளிகள் வாசிப்பதை நிறுத்தி வைத்து…சிந்திக்க வைத்தது. ‘செய்திச்சாரல்‘ ஆலங்கட்டி மழையாக அரிய செய்திகளை வழங்குகிறது. சாரல் தொடரட்டும்.

வெ.சின்னச்சாமி, மானூர் பழனி

கலங்க வைத்தீர்

பிரிவோம் சந்திப்போம் சிறப்புப் பக்கங்களில் இந்த மாதம் எவற்றை ஒருங்கிணைத்துள்ளார் என்ற விழைவோடு படித்தால் அறிமுகமே அசத்தல்! சில உறவுகளை இழக்கக் கூடாது, சில உறவுகளை இழந்தால் பரவாயில்லை. பிரியும் போது வலிதராமல் பிரிபவர்களை இழக்கக் கூடாது. விலகிப் போனாலும் வலியச்சென்று ஒட்டிக்கொள்ளலாம்'  பிரிவின் மனோநிலையை ஆழமாக கவிதையில் சொல்லிக் கலங்கச் செய்துவிட்டீர்!

அரசியலில் ஆளுமைகளாகக் கோலோச்சிய இரு பெரும் தலைவர்களின் உறவை, நட்பை, ஆழ்ந்த அன்பை, பிரிவை ஆழமாகப் பதிவு செய்திருக்கும் கட்டுரை ‘மடமடவென்று வெடித்த இரட்டைக் குழல் துப்பாக்கி.'  கொள்கை அளவில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பெரிய வேறுபாடு இருந்ததில்லை. இடையில் பிரிந்தது போன்ற தோற்றம் தான் இருந்ததே தவிர அது உண்மையான பிரிவு இல்லை எனக் கட்டுரையைத் தரமாக்கி அளித்திருக்கிறார் பேரா. சுபவீ!

பிரேமா அரவிந்தன், பட்டுக்கோட்டை

பயனுள்ளது

அட்டைப் படம் அருமை. அண்ணாவும் பெரியாரும் இருக்கும் படமும் ஓவியமும் அருமை! மடமடவென்று வெடித்த இரட்டைக் குழல் துப்பாக்கி கட்டுரை சூப்பர். மர்மக்கதை படிப்பது போன்று இருந்தது. அந்திமழை இளங்கோவனின் பிரிவோம் சந்திப்போம் கட்டுரை படிக்க படிக்க சிந்திக்க தூண்டியது.

கீதா இளங்கோவன் எழுதிய ஆண் பெண் உறவில் ஆரோக்கியம் கட்டுரை சூப்பர். கடைசி பத்து வரிகளை கொட்டை எழுத்தில் போட்டிருக்கலாம்.

அ.முரளிதரன், மதுரை

சுள்ளானுக்கு உரைக்கட்டும்

‘திசையாற்றுப்படை' யில் தனுஷ்-  நீங்க பாடித்தான் ஆகவேண்டுமா? என்ற கேள்வியோடு பிரபாகர் வறுத்தெடுத்த வரிகள் வெகு சுவை என்பதால் ‘தனுஷ்' ஷின் மைனஸை மறந்துவிட்டேன்! இரண்டாவதாகவும் வாசித்த போதுதான் கமலோடு தனுஷை கம்பேர் பண்ணி கம்போஸ் பண்ணியுள்ள மேட்டர்கள் என்னை இம்ப்ரஸ் பண்ண..  எதுக்கு தனுஷுக்கு இந்த வேண்டாத வேலைன்னு நினைத்தேன். இதைப் பார்த்தால் சுள்ளானுக்கு சுள்ளுன்னு உரைக்கட்டும்!

மருதூர் மணிமாறன், இடையான்குடி

தெளிவு

இரவுக் காவலாளியின் கதை சர்ச்சில் இரவு நேர காவலாளி பலர் தன் வயிற்றைக் காப்பாற்றப் பார்க்கும் தொழில். அதில் ஜோசப் வாழ்ந்த நிலையை எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பாக  பதிவு செய்துள்ளார்.  அரசியலில் திராவிடர் கழகமும் திமுகவும் எதிரும் புதிருமாக இருந்தன. ராஜாஜி பெரியார் நடைமுறைகளை இன்று வரை ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. தற்கால அரசியல் அம்பானி பற்றி அண்ணன் தம்பி பிரச்னையை தெளிவாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

ஈர்த்தது

*பெண்களுக்கான குடும்ப சட்ட உரிமைகளை விளக்கமாகத் தந்தது 'வழிகாட்டிய வழக்கு' கட்டுரைக்கு நன்றி.

*இரவுக் காவலாளியின் தனிமை இயல்பாகச் சென்று...தொலைந்து போனக் கனவுகளோடு தொலைந்து போனவனின் ஆற்றாமையை நமக்குள்ளும் புகுத்திய சொல்லாளுமை அருமை.

*  சிறப்புப் பக்கங்கள் தனித்துவமானவை. இப்படிப்பட்ட தலைப்பு என்றால் பலர் உடனே எடுத்துப் போடுவது பெரியாரிடமிருந்து ஈ.வெ.கி.சம்பத் விலகியது பற்றியது. தாங்கள் அதை தவிர்த்த விதமே மேலும் ஈர்த்தது.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89