இரா. முருகன் எழுதியிருந்த ‘நகுலம்' கட்டுரையும் கவிதை போலவே இருந்தது. சொல்லியிருந்த கருத்துகளும், சொல்லிய விதமும் நீல. பத்மநாபனின் ‘நகுலம்' கவிதைப் புத்தகத்தைப் படிக்கத் தூண்டுவதாக இருந்தது. மூத்த எழுத்தாளர் நகுலன் அவர்களின் இறுதிக் கால நோய்ப் படுக்கை விவரிப்பு (மிகக் கொஞ்சமாக இருந்தாலும்கூட) மனதில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. நகுலனுக்கு உதவிய 'புறுத்தை' மனதில் நிற்பதை உணர முடிந்தது. அவரது நூறாவது பிறந்த நாளுக்கு, உயரிய மரியாதையை அந்திமழை செய்திருந்த விதம் போற்றுதலுக்குரியது.
-பேரா. கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை
வருத்தம்
எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதை‘305 ஆம் எண் வீட்டில் ஒரு கிழவர்' வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை.சரசு நவீன புதுமைப்பெண். பிளாட்டில் நடைபெறும் கதை. யாருமில்லாத நிலையில் நிறைய பிளாட்களில் தனி நபர் வசிக் கின்றனர்.முடிவு சற்று வருத்தமாக இருந்தாலும் படிக்கும் போதே முடிவு இப்படி என்று யூகிக்க முடிந்தது
கவிச்சுடர்.எஸ்.வி.ரங்கராஜன்,
அம்பத்தூர், சென்னை
கண்ணீர் விடாது
ஏப்ரல் மாத அந்திமழை இதழில் பிரசுரமான சிறப்புப் பக்கங்கள் இமெயில் இல்லாத உலகு கட்டுரையில் கடிதத்தின் உணர்வையும், அதை இலகுவாக கடத்திக்கொண்ட இமெயில் பற்றியும் வாஞ்சையோடும், ஏக்கத்தோடும் எழுதியிருந்தார் ஜெ.தீபலட்சுமி, வாட்ஸப் இல்லாத உலகு தலைப்பில் அராத்து அவர்கள் இன்று எப்படியெல்லாம் வாட்ஸப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை எளிமையாகப் பொட்டில் அடித்தது போல உணரவைத்திருக்கிறார். கூகுள் இல்லாத உலகு கட்டுரையில் மருத்துவர் அகிலாண்டபாரதி, மக்கள் இணையத்தை எப்படி நம்புகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருந்தார். அட உண்மை தானே, நாமும் என்ன விஷயமாக இருந்தாலும் கூகிள் செய்து தானே தெரிந்து கொள்கிறோம் என்று நினைக்க வைத்தது. ஃபேஸ்புக் இல்லாத உலகு கட்டுரையில் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் முகநூலில் யாரும் அறியாத அரசியல் இருப்பதை அறிந்துகொண்டு, அதிர்ச்சியானேன். இப்படியாக எதுவுமே இல்லாமல் வாழ்ந்த நம்மை, எல்லா செயலியும் அடிமைப்படுத்தி அவை இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கையே இல்லை என்பதாக மாற்றி வைத்திருக்கிறது. எல்லாமே அளவோடு பயன்படுத்தி அன்பை விதைப்போம் நாம் மறைந்தபிறகு எந்த செயலியும் கண்ணீர் விடாது.
மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.
சவால் மிக்கது
சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விடும் நிகழ்வுகளை, ஆசிரியரின் தலையீடு அல்லது ஆசிரியரின் விளக்கம், அவரது கோணம் என எதுவும் இன்றி, அப்படியே பதிவு செய்யும் இயல்புவாத அழகியல் மிகவும் சவால் மிக்கது.
இந்த அழகியலுடன் எழுதப்பட்ட, 305ஆம் வீட்டில் ஒரு கிழவர் என்ற எம்.கோபாலகிருஷ்ணனின் சிறுகதை மிகச்சிறப்பான வாசிப்பு இன்பத்தை அளித்தது.
சில நிமிடங்கள் நிகழ்வுகளில் ஆசிரியர் எங்கும் தலையிடுவ தில்லை. முழுக்க முழுக்க வாசகன் தன் கற்பனையால் நிரப்பிக் கொள்ள ஏராளமான இடைவெளிகள் கிழவனை அருவெறுக்கக்கூடிய, பயந்த சுபாவம் கொண்ட சரசு, அனைவரும் பிணமாக பார்க்கும் ஒன்றை, ஒரு ‘உயிராக' பார்க்கும் தருணம், செருப்புக்காலுடன் உள்ளே வாங்க என்ற அழைத்தாலும் அக்கறையாக செருப்பைக் கழட்டி வைக்கும் மருத்துவர் , தோழி அவசரமாக அழைத்தபோது உடனே செல்ல முடியாமல் குறுக்கிடும் சமையல் வேலை என சில நிமிட நிகழ்வுகளில் பல குறுங்கதைகள்.
கிழவர், குடும்பம் மீதான ஒவ்வாமை, அவரை நேசிக்கும் ஒரே பெண் (தம்பி மகள் கன்யா), அக்கா மகன் என அவரைப் பற்றி ஒரு வரைபடத்தை வாசகன் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆசிரியர் திட்டவட்டமாக ஒரு ஓவியத்தை அளிக்கும் பாணியை விட இதில் வாசகனுக்கு சுவை அதிகம்.
அலுப்பூட்டும் சினிமா , அரசியல் செய்திகளைப் பார்த்தும் கேட்டும் அலுத்துப்போன வாசகர்களுக்கு அந்திமழை இதழ் இதுபோன்ற இலக்கிய விருந்தை மாதாமாதம் வழங்குவது அருமை.
அந்திமழையின் சிறப்பம்சம் இதுபோன்ற இலக்கியத்தரமான பகுதிகள்தான். இவற்றுக்கான பக்கங்களை அதிகரித்து , அரசியல் சினிமா பக்கங்களை குறைத்தால் மகிழ்வோம் என சொல்வது வாசகர்கள் கைகளில்தான் உள்ளது
பிச்சைக்காரன், சென்னை
அளவுக்கு மிஞ்சினால்
அந்திமழை ஏப்ரல் 2022 இதழ் காலத்திற்கேற்ற சிறப்புப் பக்கங்களாக ‘களவாடிய பொழுதுகள்' தந்த உண்மைகள் நம்மை சிந்திக்க வைக்கிறது.
1990களுக்கு முன்பான வாழ்க்கையை ஒப்பிடும்போது, இந்த டிஜிட்டல் உலகத்தில் நாம் நிறைய விஷயங்களை இழந்துள் ளோம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலமாக எண்ணற்ற செய்திகள் தினமும் நம்மை வந்து சேர, நாம் அதை யார் யாருக்கோ பகிர்வதன் மூலம் நம்முடைய சிந்திக்கும் திறனையும், சொந்தமாகக் கருத்துகளை உருவாக்குவதையும் இழந்து வருகிறோம். மேலும், நம் தாய்மொழியை நாமே சிதைத்து எழுதவும், படிக்கவும் செய்யும் நம் இளைய தலைமுறையை நினைத்தால் வருத்தமே மிஞ்சுகிறது.
ஒரு பக்கம் வாசிப்புப் பழக்கம் குறைந்து, புத்தக விற்பனையும் குறைந்து வருவதும், எவ்வளவு விலை கொடுத்தும் ஸ்மார்ட் போன் வாங்கி அதை ‘நாள் முழுவதும்' பயன்படுத்துவதை வாழ்க்கையின் போக்காக மாற்றிக் கொண்ட அவலம் மறுபக்கம்.
இந்த ‘டிஜிட்டல் உலகம்' வழங்கும் அமிழ்தத்தை நாள் முழுவதும் திகட்டத் திகட்டப் பருகி வருகிறோம். அளவுக்கு மிஞ்சினால்?
ஆர். மோகன், சேலம்
நல்வழிக் கட்டுரைகள்
இறந்த காலத்தை நினைவுகளால் திற/நிகழ் காலத்தை செயல்களால் திற...எதிர்காலத்தை நம்பிக்கையால் திற... எனத் தன் கட்டுரையின் இறுதியில் ராஜா சந்திரசேகரின் சிறந்ததோர் கட்டுரையினை இந்த புதிய பகுதியின் தொடக்கத்தில் தொடுத்திருக்கிறார்! அன்புக்கு பெயர் எதற்கு? கட்டுரையைப் படித்தவுடன், யாரைப் பார்த்தாலும் வணக்கம் சொல்வதும், சிரித்த முகமும் என் நெஞ்சின் அருகில் வந்து அமர்ந்து கொண்டன.
தொழில் முனைவோருக்கு எப்போதுமே வெற்றிக்கான வாசல் திறந்தே இருக்கிறது. அதற்கு அவசியமானது மன உறுதியே எனக் கூறிய “செல்வனின் கட்டுரை இளைஞர்களுக்கோ நல்ல வழிகாட்டியாக அமையும்!
இந்த மாத சிறப்புப் பக்கப் பகுதியைப் பொருத்த வரையில் (டிஜிட்டல் உலகம் களவாடிய பொழுதுகள்!) அதில் வந்த கட்டுரைகள் பற்றி தயவு செய்து யாராவது ஒருவர் தெளிவாக விளக்கிச் சொல்ல முடியுமா?...என்று தான் என் போன்ற 80 வயது தாண்டிய வாசகர்கள் நினைப்பார்கள்.
நமது பேரன், பேத்திகளது உலகம் அது. டிஜிட்டல் உலகத்தில் நல்லது, கெட்டது பார்த்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர்களுக்கு நல்வழிக் கட்டுரைகளாக அமைந்துள்ளன.
லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை- 20
வித்தியாசம்
ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் பேட்டி சூப்பர். அவரது ஒளிப்-பதிவைப் போலவே வித்தியாசமாக இருந்தது.
செய்திச்சாரல் பக்கங்கள் டபுள் சூப்பர். அகம்முகம் பகுதி சிறப்பு. வித்தியாசமான பேட்டிகளை வித்தியாசமாகத் தருகிறீர்கள்
அ.முரளிதரன், மதுரை - 03
ஏகப்பொருத்தம்
இன்னும் தமிழ் இலக்கியத்திலேயே முழுமை (வெற்றி) பெறாத பின் நவீனத்துவம், மேஜிக்கல் ரியாலி
சத்தை தமிழ் சினிமாவிற்குள் புகுத்திய அசாத்திய துணிச்சலுக்காக குதிரைவால் டீமை உச்சி முகரலாம். ஆனால், ரசனையால் இன்னும் தொலைக்காட்சியில் சீரியல்,
சினிமாவில் பேய், அலைபேசியில் வாட்ஸப்பை தாண்டாத நம் மக்களால் குதிரைவாலை ஜீரணிக்க முடியுமா! இந்த படம் பற்றி தயவு செய்து யாராவது ஒருவர் விளக்க முடியுமா! என்ற தலைப்பு கட்டுரைக்கு ஏகப்பொருத்தம். முதலில் சினிமாவை நவீனப்படுத்தி, தமிழரின் ரசனையை உயர்த்துவதா! அல்லது ரசிகனின் ரசனையை மேம்படுத்திவிட்டு நவீன படைப்பைக் கொடுப்பதா! என்ற முடிவில்லாத விவாதத்தை விட்டு, ஒவ்வொருவரும் அவரவர் ரசனையை உயர்த்திக் கொண்டே உயர்வது தான், சமூக மேம்பாட்டுக்கு அஸ்திவாரமாகும்.
மல்லிகா அன்பழகன், சென்னை - 78
அபத்தம்
ஷாஜியின் முள்ளரும்பு மரங்கள் தொடரும் அதற்கு வரையப்படும் ஓவியங்களும் சிறப்பாக உள்ளன. இந்த மாதம் ஜோக்கர் படம் பார்த்தது பற்றி அவர் எழுதி இருப்பது படு சுவாரசியம். களவாடிய பொழுதுகள் பகுதியில் அதிஷா, சொக்கன், பாமரன், அகிலாண்ட பாரதி, அராத்து, தீபலட்சுமி,
செல்வன் என எல்லோருமே நம் அன்றாட உலகின் அபத்தங்களை வரிவரியாக பதிவு செய்திருந்தார்கள். உலகமே ஒரு நாடக மேடை என்பர் ஆனால் நாடக மேடை அல்ல; அபத்த்தங்களின் களஞ்சியம் எனச் சொல்லத் தோன்றுகிறது.
கண்ணபிரான், புதுக்கோட்டை
மே, 2022