அந்தி மழை ஏப்ரல் இதழ் அழகு, முழுமை, அருமை, முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை எழுத்தாளர்கள் போட்டி போட்டு எழுதி உள்ளனர். ஆசிரியர் முயற்சி பாராட்டுக்குரியது. ஷாஜி சிறப்பு கட்டுரை தனித்துவம். சிறுகதை காட்சிப் பிழை யதார்த்தம். எழுத்தாளர் இமையத்திற்கு உரிய முக்கியத்துவம்.
‘புதிய அரசு என்ன செய்ய வேண்டும்'& காலத்திற்கேற்ற தலைப்பு. நிபுணத்துவ யோசனைகள. அற்புதமான அணிவகுப்பு. முக்கியமான துறைகளில் தேவையான மாற்றங்கள் காலத்தின் தேவை. கட்டுரையாளர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். செந்தமிழ் செல்வன் யோசனைகள்
சிறப்பு. பல துறைகளை ஒன்றிணைத்து கூட்டுறவு அமைப்புகள் மூலம் அபரிமிதமான வளர்ச்சி பெறலாம் என்பது சாத்தியம் என்பது மட்டுமல்ல, அவசரத் தேவையும் ஆகும். வல்லுநர்களின் வாதங்கள் அவரவர் துறைகளைப் பொருத்தவரை மிகச் சரி. அனைத்தும் சாத்தியம். எப்போது? செந்தமிழ் செல்வன் சொல்லும், ‘லஞ்சம் வாங்காத அமைச்சரும் செயலாளரும் துறைத் தலைவர்களும் நியமிக்கப்படும்போது‘ என்பது முத்தாய்ப்பு. நமது எதிர்பார்ப்பு!
அ. சங்கரலிங்கம், நொளம்பூர், சென்னை-37
மலர்ச்செண்டு!
ஏப்ரல் 2021 அந்திமழை இதழ், தானாக முன்வந்து வரும் புதிய அரசுக்கு ஓர் தலைசிறந்த ஆலோசனைக் குழுவினை அமைத்து தந்துள்ளதே!
அனைத்து துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தையும் பெற்று மிக அழகான முறையில் கொண்டு வந்துள்ளீர்கள். இப்படிப்பட்ட, பலதுறை சார்ந்த அறிஞர் பெருமக்களின் ஆலோசனைகள், வேண்டுகோள்கள் வரும் புதிய அரசு மேற்கொண்டால், சிறந்ததோர் ஆட்சி அமைய வழிகோலும்.
நான் ஆரம்ப பள்ளியில் படித்த காலத்தில் (1940-45), எங்கள் கிராம ஆரம்ப பள்ளிக்கு, வாரம் ஒருமுறை ‘‘ஞானரதம்'' என்ற நடமாடும் நூலக ஊர்தி வரும். அதில் நிறைய நூல்கள் இருக்கும். நாங்களெல்லாம் எங்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் பெற்று படித்துவிட்டு, அடுத்தமுறை வரும் அந்த நடமாடும் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு மீண்டும் புதிதாக நூல்களைப் பெற்றுக் கொள்வோம்.
அந்த ‘‘ஞானரதம்'' - நடமாடும் நூலகங்கள் தமிழகம் முழுவதும் மீண்டும் வலம் வரவேண்டும். வாசிப்பு பழக்கம் சிறுவயதிலேயே, ஏற்படச் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
ஷாஜியின் உணர்ச்சிகரமான நடையில் எழுதப்பட்ட சிறந்ததோர் கட்டுரை ‘பில்லி என்னும் பேரழகி' அவருக்கு ஒரு மலர்ச்செண்டு.
இந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத் தாளர் இமையத்திற்கு ஒரு பூங்கொத்து!
‘‘எஞ்சாய் எஞ்சாமி'' - இன்று எல்லோர் வீட்டிலும் விரும்பிக் கேட்கும் பாடல், அது கூறும் அறிவுரையை எச்சரிக்கையை அறிந்துகொண்டால், வருங்காலங்களில் நமது சுற்றுச் சூழலைப் பேணிக்காத்திட இயலும்.
லயன் கா. முத்துகிருஷ்ணன் - மதுரை
வரவேற்கத்தக்கது
வெல்வது யார்? அட்டைப்பட நாயகர்கள் அனைவரும் புன்னகை ததும்ப காட்சியளிக்கும் வண்ணம் படங்களை திரும்பத் திரும்ப பார்க்கும் வண்ணம் வரிசைப்படுத்தியிருந்தது அழகு! புதிய அரசு என்ன செய்ய வேண்டும்? சிறப்புப் பக்கங்களில் இடம் பெற்றிருந்த கட்டுரைகளும் கனமானவையே! சேவை பெறும் உரிமைச்சட்டம், லோக் ஆயுக்தா, அதிகாரமிக்க தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சைகள் கிராமங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கிட்ட வேண்டும் என்ற அறப்போர் ஜெயராமன் முன்வைத்திருப்பதை அமைய இருக்கும் அரசு செயல்படுத்த வேண்டும். பேராசிரியர் ஜனகராஜன் கருத்து வரவேற்கத்தக்கது. மேலும் பொருளியலாளர் ஜெயரஞ்சன், ஆர்.பாலகிருஷ்ணன், பூவுலகு சுந்தரராஜன், பொறியாளர் சா.காந்தி உள்ளிட்ட கட்டுரையாளர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கதே!
நவீன்குமார் - நடுவிக்கோட்டை
பாராட்டத்தக்கது
புதிய அரசு என்ன செய்ய வேண்டும் & என்று அறிஞர்களைப் பேசவைத்து அரசின் செவிகளுக்கு கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வமான செயலில் அந்திமழை இறங்கியிருப்பது பாராட்டத்தக்க செயல்.
பொன்விழா காணும் இலக்கிய அமைப்பின் சேவைகளை வாழ்த்தியதோடு‘இலக்கிய சிந்தனை'க்கு மகுடம் சூட்டும் தங்களது பணி தொடரட்டும்.
''சோழா'' புகழேந்தி - கரியமாணிக்கம்
ஆவணக்காப்பகம்
மனசைப் பிசைந்த பில்லி கதை, உத்வேகமூட்டும் ‘கோல்ப் டைகர்' வுட்ஸ் கதை, கணேஷ் விநாயகத்தின் வலியில் பிறந்த கதையென எதார்த்தமாய் சாகித்யம் தொட்ட இமையம் முதல் பாலியல் தொழிலாளிகள் சமூகசேவகர் என்ற கங்குபாய் வரை, சகலதுறைகளிலும் சஞ்சரித்து, பொதுத்தேர்தலையொட்டி, திருக்குறளை சுட்டிக்காட்டி, எப்படி வாக்களிக்க வேண்டுமென உணர்த்தியவர்கள் கதையுடன், புதிய அரசு என்ன செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பையும் கோரிக்கைப் பக்கங்களாக்கி, புதிய அரசு நல்லரசாக வழிகாட்டி, அடடா, அறிவுசார்ந்த ஆவணக்காப்பகத்தில் வாசித்த திருப்தியைக் கொடுத்தது ஏப்ரல் இதழ்.
மல்லிகா அன்பழகன் - கே.கே.நகர் சென்னை
கண்றாவிப் படங்களை வெளியிடாதீர்கள்!
எனது அபிமான எழுத்தாளர் இமையம் அவர்களைப் பற்றிய கட்டுரை சிறப்பாக உள்ளது. மதிமலருக்குப் பாராட்டு. இமையம் சமரசம் செய்து கொள்ளாத தனது தொழில்காரர்களான பள்ளிக்கூட ஆசிரியர்கள், பள்ளிக்கூட அலுவலர்களையும் சாடியவர் . புகைப்படம் மற்றும் தலைப்பை சிறிதாகப் போட்டு...நடிகைகள் காலைக் காட்டுவது, ‘க்ளிவேஜ்' காட்டுவது போன்றக் கண்றாவிப் படங்களைத் தயவு கூர்ந்து வெளியிடாதீர்கள், நல்ல பத்திரிகையான அந்திமழையில்.
ஓ.சுப்ரமணியன் , விழுப்புரம்
பொறுப்புணர்வு
தகராறு, வீரசிவாஜி போன்ற கமர்சியல் படம் கொடுத்த இயக்குநர் கணேஷ் விநாயகம், அதையே தொடர்ந்து வாழ்க்கையில் செட்டிலாகாமல் தேன் கொடுத்து, இன்றைய தலைமுறையிடம் இருக்க கூடிய பொறுப்புணர்வைக் காட்டியது. இறந்தால் ஏவிஎம் இடுகாட்டில் தான் என்னை புதைக்க வேண்டுமென்று அவர் சொன்னதில் சினிமா மீதான காதலை மீறிய வெறி தெறித்தது. தமிழ் சினிமா வாழும், உயரும் என்ற நம்பிக்கை பிறந்தது.
யாழினி பர்வதம், சென்னை
சிறப்பு
வலியில் பிறந்த கதை - கட்டுரை பிரமாதம். எழுத்தாளர் இமையம் தொடர்பான கட்டுரை சிறப்பாக, அவரது நாவலைப் படிப்பது போலவே இருந்தது மாபியா ராணி கட்டுரை, அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்க வைத்துவிட்டது.
அ.முரளிதரன் - மதுரை
நல்ல கருத்துகள்
இயக்குநர் கணேஷ் விநாயகம், நாட்டில் நடக்கும் கொடுமைகளை அப்பட்டமாக படம் எடுத்துள்ளார் தொடரட்டும் பணி. மும்பை சிவப்பு விளக்கு பகுதியின் கதை படமாக வந்தாலும் அதை மாற்ற எந்த அரசியல் அமைப்பும் செய்ய முடியவில்லை. புதிய அரசு என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் கல்வி சம்பந்தமாக சிறந்த யோசனைகள். கல்விக் கொள்கையை மாநில அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். தாய்மொழிக் கொள்கை அவசியம்.
இரா. சண்முகவேல் - கீழக்கலங்கல்
தற்குறிப் படைப்பாளர்கள்
காட்சிப் பிழை சிறுகதையின் நிறைவு வரிகள் மனதை நிம்மதி அடையச் செய்தன. ஒளி வட்டம் நிரந்தரம் என எண்ணும் சில தற்குறிப் படைப்பாளர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. காலத்தில் புதிய அரசுக்கு உணர்த்த வேண்டிய வழிகாட்டலை தக்கவர்கள் மூலம் வழங்கிய சிறப்புப் பக்கங்கள் அருமை. அனைத்து கருத்துகளும் கவனிக்கத் தக்கன. ஆனால், வழக்கமாக சிறப்புப் பக்கங்களின் முகப்புத் தோரணமாய் இடம் பெறும் நிறுவிய ஆசிரியர் குறிப்புப் படைப்பு இடம் பெறாதது வருத்தமே.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை-89
வலியும் வலிசார்ந்த கதையும்
நாம் அறியாத பெண்களின் வலிகளை எழுத்தில் கடத்தும் படைப்பாளி, நிகழ் கால நடப்புகளை எழுதி அதை இலக்கியத்தரம் ஆக்கியவர் இமையம். பழங்குடி மக்கள் இருப்பதால் மலை மாசு படுவதாக அரசும்; மலையை விட்டால் எப்படி வாழ்வது என மக்களும் என்ற இந்த முரண்பாட்டு போராட்ட வலிதான் தேன் திரைப்படம். இப்படி விருது பெற்ற எழுத் தாளர் இமையம், இயக்குநர் கணேஷ் விநாயகம் ஆகியோரை வெளிச்சம் போட்டுக் காட்டிய அந்திமழைக்குப் பாராட்டுகள்.
டாக்டர் குரு, சேலம்
மே, 2021