அரசியல் சிறப்புப் பக்கங்கள், கனடா சிறப்புப் பக்கங்கள் என அந்திமழை ஏப்ரல் 2018 இதழ் இரட்டைச் சிறப்பிதழாய் மலர்ந்து இதயத்தைக் கொள்ளை கொண்டது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் அந்த இரு புதிய நட்சத்திரங்களின் எதிர்கால அரசியலுக்கான எச்சரிக்கை மணியாக மட்டுமல்ல சிறந்த வழிகாட்டியாகவும் உதவக்கூடும்! டி.எம்.எஸ் குறித்த கட்டுரை மனதை ஈர்த்தது. தேர்ந்த சிற்பியின் கைவண்ணத்தில் மிளிரும் சிற்பம் போல அந்திமழையின் ஒவ்வொரு படைப்பும் எங்கள் அகம் மகிழ வைக்கிறது.
கொ.சி.சேகர், பெங்களூரு.
தாமிராவின் ‘சுகிர்தராணியும் சொர்ணமால்யாவும்' உண்மைக் கதை படித்தேன். இது போன்ற நல்ல கருத்துக்கள் எந்த வடிவில் வந்தாலும் சிவப்புக் கம்பளம் விரிக்க அனைவரும் முன்வர வேண்டும். ஜாதி என்ற அரக்கன் படிப்பு, சட்டம், நாகரிகம், பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றையும் தாண்டி மனிதனுக்குள் ஆங்காங்கே சப்தமில்லாமல் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறான். இது போன்ற கதைகள் அவர்களுக்கு சவுக்கடி கொடுக்கட்டும். மன மாற்றத்தை உண்டாக்கட்டும்.
க.பிரகாஷ், சோளிபாளையம்
அ.முத்துலிங்கத்தின் நேர்காணல் அருமை. அவருடைய பயணங்கள், எழுத்து, ஈழ அரசியல்,சங்க இலக்கியம் என்று பறந்து விரிகிறது நேர்காணல்.ஹார்வர்ட் தமிழ் இருக்கை குறித்த அரிய தகவல்கள் படிக்கக் கிடைத் தன. கனடா அரசு, தமிழுக்கும் தமிழருக்கும் அளிக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியளித்தது. நிறைவாக இருந்தது.
-கண்மணி, பெங்களூரு
வைகோ பற்றிய ‘ பாலையில் பொலிந்த நிலா' மாலனின் கட்டுரை வாசித்தேன். திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம் போன்றவர் வைகோ. 1993ல் தி.மு.க வெளியேற்றிய பின் ம.தி.மு.க கட்சியைத் தொடங்கிய அவர் சுயமரியாதை கருதித் தேர்தல் கூட்டணி மாறிமாறி அமைக்க நேரிட்டது உண்மைதான். அதற்கான விலையையும் கொடுத்து விமர்சனத்தையும் ஏற்றுக்கொண்டவர்தான். இன்று வரை ஈழத்தமிழர் நலன்காக்க இவர் உலக அளவில் செயலாற்றி வருவது சிறப்பு. வரலாற்று அறிவும், இலக்கியச் செழுமையும், மொழி ஆளுமையும் கொண்ட இவரது நாடாளுமன்ற உரைகள் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை. இவர் மட்டும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பின் தமிழகம் இன்று சந்திக்கும் பல ஜீவாதாரப் பிரச்சனைகளை முன்னெடுத்துப் புயலாகி நாடாளுமன்றத்தில் செயல்பட்டிருப்பார். ஆயிரம் சொல்லுங்கள் தமிழ்நாட்டின் துடிப்புமிக்க திராவிட அரசியல் ஆளுமையாகத் திகழ்பவர் வைகோ என்று உறுதியாகக் கூறலாம்.
-இரா.மோகனசுந்தரம்,
சென்னை.
அந்திமழை ஏப்ரல் 2018 - இதழ் வழக்கம்போல வாசகர்களுக்கு பல்சுவை விருந்து என்றால் மிகையல்ல. அதில் கமல், ரஜினி, கவனத்திற்கு ‘‘நாற்காலிக் கனவுகள்'' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகள் உண்மையிலேயே கமல், ரஜினிக்கு பயனுள்ளவை. அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர், பெரியவர் நல்லக்கண்ணு ஆகியோரைத் தோல்வியடையச் செய்த பெருமை பெற்றவர்கள் தமிழக வாக்காளர்கள். இவர்களை நம்பி இன்று கமல், ரஜினி அரசியலில் ஈடுபடுகிறார்கள். ‘ பாலையில் பொலிந்த நிலா' என்ற தலைப்பில் வைகோவின் நிறை குறைகளைத் துல்லியமாகப் பதிவுசெய்த மாலனின் கட்டுரை வைகோவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். கமல் ரஜினிக்கும் அரசியலில் ஜெயிக்கப் பெரிதும் உதவும்.
மேட்டுப்பாளையம், மனோகர், கோவை-14
ஏப்ரல் 2018 இதழ் புதிய கோணத் தில் சிறப்பாக இருந்தது. பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய ஆவணப்படம் தொடர்பான நினைவுகள், அந்த மாபெரும் கலைஞனின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது. மிகச் சிறந்த கலைஞர்களுக்கே உரிய தன்னம்பிக்கை அவரது ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் நினைவில் ஊருள்ள மனிதர்களாக தங்களின் சொந்த பூமி, உறவுகள், நண்பர்கள், இவற்றை மறக்க முடியாமல் புதிய சூழ்நிலையில் தங்களை வேறுவழியில்லாமல் பொருத்திக்கொண்டு அதிலும் தங்கள் உழைப்பால் போராடும் மனிதர்களின் நினைவுத் தொகுப்பு சிறப்பாக இருந்தது.
-ஆர்.மோகன், சேலம்-1
கட்சி தொடங்கி தோற்றவர்கள் என்றால் எல்லோருமே ஏன் சிவாஜியை மட்டுமே குறிப்பிடு கிறீர்கள்? அரசியலில் நடிக்கத் தெரியாத கலைஞர் சிவாஜி. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அரசியல் உலகில் ஒளிர்ந்த வேகத்திலேயே மங்கிப் போனவர் அவர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னான அந்தத் தேர்தலில் ஜானகி வென்றிருந்தால் சிவாஜி சுடர்விட்டிருக்கலாம். அரசியலுக்குத் தொடர்பில்லாத மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அடையாளம் இழந்த மனிதர் அவர். சரி தோற்றவர்கள் வரிசையில் ஏன் நாவலர் நெடுஞ்செழியனையும், குமரி அனந்தனையும் சேர்க்காமல் மறந்துவிடுகிறீர்கள். கனடா சிறப்புப் பக்கங்கள் மிக அருமை. கண் பட்டுவிடப் போகிறது. மனதைப் புரட்டிப் போட்டது சுகிர்தராணியின் திறந்த உண்மையும், சொர்ணமால்யாவின் ஏற்றுக்கொண்ட பண்பும்.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,
சென்னை-89.
டி.எம்.எஸ் & இளையராஜா, டி.ஆர்&டி.எம்.எஸ் பனிப்போர், கதிரவனைக் கண்டு விலகியது நன்று. ஆம், இசை& இசையமைப்பாளர் தொடர்பு என்றுமே தொடர்கிற ஒன்று. கலைஞர்களை இணைக்கப் பாடுபட்ட விஜயராஜ், அதை வெளியிட்ட அந்திமழைக்கு சம்பந்தப்பட்டவர்கள் சார்பாகவே என் நன்றி.
-நவீன் தாமு, பொன்னேரி.
ஏப்ரல் 2018 இதழில் முகப்புக் கட்டுரையான நாற்காலிக் கனவுகள், கட்டுரைகள் காலத்தின் கண்ணாடி. பிரபலமான எல்லோர் பின்னணியிலும் வேண்டுமென்றே ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு கும்பல் இருந்துகொண்டே இருக்கிறது எனத் தொடங்கி குறள் வழி நிறைவு செய்திருக்கும் அந்திமழை இளங்கோவனின் பார்வை நூற்றுக்கு நூறு சரியே. இவை களத்தில் குதித்திருக்கும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் புதியவர்களுக்கும் பாடம் புகட்ட வல்ல கட்டுரைகள் என்பேன்.
-நவீன் குமார், நடுவிக்கோட்டை.
நாற்காலிக் கனவுகளில் இருக்கும், இருந்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அனைத்துமே அரசியலில் ஈடுபட்டு முதல்வராக ஆசைப்படுவோர் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கைக் குரல். மற்ற கோள்களில்கூட கால் பதித்துவிடலாம். ஆனால் மக்கள் உள்ளத்தில் இடம்பெறுவது என்பது எளிதல்ல. இது இன்றைய நடிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. ஏப்ரல் 2018 இதழ் பாதுகாக்கப்படவேண்டுய ஒரு கருத்துக் கருவூலம்.
-நெய்வேலி க.தியாகராஜன். கொரநாட்டுக்கருப்பூர்.
அந்திமழை இதழுக்கு இதழ் பொலிவு மிகுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மூன்றும் திங்கள் மும்மாரி மழையாகப் பொழிகிறது. வேறு எந்த இதழ் போலும் இல்லாமல், தனித்துவம் கொண்டு திகழ்கிறது. நாட்டமில்லாதவர்களையும் நாடவைக்கும் அமைப்பு முறை, சிறப்பிதழ்கள் எல்லாம் பொருண்மை மிக்கவையாக உள்ளன. பாராட்டுக்கள்.
கவிக்கோ ஞானச்செல்வன், சென்னை- 94
ஏப்ரல் மாத இதழில் ‘சுகிர்த ராணியும் சொர்ணமால்யாவும்’ சிறுகதை படித்தேன். சுகிர்த ராணியின் மனவேதனை நெஞ்சில் பாறங்கல்லை வைத்து அழுத்தியது போல இருந்தது.
சாதிய உணர்வு ஒழிய மனமாற்றம் ஒன்றே வழி. பெரியவர்களிடம் அந்த மனமாற்றம் ஏற்படாது. இன்றைய தலைமுறை திருந்தாது. வருங்காலத் தலைமுறையைத்தான் திருத்த வேண்டும். இன்று நடைமுறையிலிருக்கும் கல்வி தன் முன்னேற்றக் கல்வி. முழுக்க முழுக்க தன்னலக் கல்வி. இது முற்றும் ஒழிக்கப்பட்டு மாந்தநேயக் கல்வியே குழந்தைப் பருவத்திலிருந்து வழங்கப்படுதல் வேண்டும்.
மாந்தர் தம்முள் எந்த வேறுபாடும் இல்லாமல் அன்பும் நல்லுறவும் கொண்டு வாழ்வதுதான் சரியான வாழ்க்கை. சரியான வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுப்பதுதான் சரியான கல்வி. அவ்வாறு கற்றுக் கொடுக்காத இன்றைய கல்வி சரியான கல்வி ஆகாது. இது வெற்று உலகியல் கல்வி. இது முழுக்க முழுக்கப் போலிக் கல்வி. நாம் கொடுக்க வேண்டியது வாழ்வியற் கல்வி.
பாடத்திட்டத்தில் சாதி வேறுபாடற்ற மாந்தநேயக் கல்வி சிறப்பிடம் பெறுதல் வேண்டும். நல்லவர்களும், உண்மையானவர்களும் சான்றோர்களும் இந்தக் கல்வியில் அக்கறை கொண்டு அதை நம் கல்வி நிலையங்களில் நடை முறைப்படுத்த வேண்டும். வேறுவழியில்லை.
ம.இலெ.தங்கப்பா, புதுவை-8.